1998-ம் வருடம் டிசம்பர் மாதத்தின் ஒருநாள் அதிகாலையில் எங்கள் வீட்டுத் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. காலை பதினோரு மணிக்குள் மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குச் சென்று தலைமைக் காவலர் ஒருவரைப் பார்க்க வேண்டும் என்ற தகவல் அந்த அழைப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

என் நண்பன் ஒருவன் டிசம்பர் 6 -ஐ ஒட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவனது கடைச் சாவியை என்னிடம் கொடுக்கச் சொல்லி அவன் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அவனுக்கும் எனக்கும் பொதுவான நண்பர் ஒருவருக்கு உடனே தொலைபேசியில் அழைத்தேன். “எனக்கும் அழைப்பு வந்தது” என்றார் அவர்.

நான் டிப்ளமா படித்து முடிந்திருந்த சமயம் அது. எனவே இயல்பாகவே எழுந்த பதட்டத்துடன் தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குச் சென்றோம். “ஒண்ணும் இல்லப்பா, சாதாரண அரஸ்ட்டுதான், நாலு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருவான் உங்க ஃபிரண்டு” என்று சொன்னபடியே அவனது கடைச் சாவியை எங்களிடம் ஒப்படைத்தார் அந்தக் காவலர்.

பிறகு, அவனது வீட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டு, அவனுக்கு நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகள், ஐநூறு ரூபாய் பணம், இரண்டு பீடிக் கட்டுகள் வாங்கித் தரச் சொன்னார். அவர் சொன்னதை அப்படியே செய்தோம். பிறகு இரண்டு நாட்கள் கழித்து, மதுரை மத்திய சிறையில் மனு போட்டு அவனைப் பார்க்கவும் செய்தோம். “ஒரு பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் அவன். நான்கு நாட்கள் அல்ல, எட்டு நாட்கள் கழித்து எந்த வழக்கும் இல்லாமல் வெளியே வரவும் செய்தான். பீடிக்கட்டும், ஐநூறு ரூபாய் பணமும் அவன் கேட்கவும் இல்லையாம், அவை அவன் கைகளுக்குப் போய்ச் சேரவுமில்லையாம். அந்த ஐநூறைப் புரட்டித் தந்த அவன் அம்மா, சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து சம்பாதித்த பணம் அது.

உண்மையில் நடந்தது இதுதான்… டிசம்பர் நான்காம் தேதி இரவு, கடை வேலைகளை முடித்துவிட்டு, நண்பர்களுடன் தெற்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிடப் போனவன் அவன். போனவர்களை வழியில் நிறுத்தி, அவர்களது பெயர்களை மட்டும் விசாரித்திருக்கிறார்கள். இவனது பெயர் இஸ்லாமியப் பெயர் என்பதால் preventive arrest -ல் தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். அவன் உள்ளே இருந்த எட்டு நாட்களுக்குள் மதுரை ஹாஜிமார் தெருவில் கிட்டத்தட்ட அனைத்து மத்திய வயது ஆண்களும் உள்ளே தூக்கி வைக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

படிக்க:
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

ஆனால், அவன் மேல் பதியப்பட்ட வழக்கு என்ன தெரியுமா? “டிசம்பர் நான்காம் தேதி இரவு, மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்குக் கீழே, இருட்டிற்குள் சில பேர் கூடி நின்று ‘இந்தியா ஒழிக’ என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர், மதுரை நகரில் டிசம்பர் ஆறாம்தேதி பல்வேறு வகையிலான கலவரங்களை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சதித் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினரைப் பார்த்தவுடன் அவர்கள் கலைந்து ஓடத் துவங்கினர், காவல் துறையினர் வைகை ஆற்றுக்குள் இறங்கி, ஓடிச் சென்று அவர்களை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்” என்பதுதான் அந்த வழக்கின் சாரம்.

உண்மைக்கும் இதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று அவனுக்கும் தெரியும், அவனோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும், அவனைக் கைது செய்த காவலர்களுக்கும் தெரியும், நீதி வழங்கிய நீதியரசர்களுக்கும் தெரியும். யாரும் ஒரு கேள்வியும் கேட்கவில்லை, கேட்க முடியாது, கேட்கப்போவதுவுமில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

காவல் துறையினரின் விசாரணை, முதல் தகவல் அறிக்கை, முக்கியமாக காவல் துறை ‘விசாரணையில்’ குற்றவாளிகள் தரும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ போன்றவற்றின் உண்மை நிலை இதுதான். அதனால்தான் காவல் துறையின் விசாரணையில் குற்றவாளிகள் கொடுத்த வாக்கு மூலங்களை நீதி மன்றங்களே நம்புவதில்லை.

இந்த லட்சணத்தில் காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாலே ஒருவர் குற்றவாளிதான் என்று நம்புபவர்களை என்ன சொல்ல? ஒரு நண்பர் எழுதியிருந்தது போலவே, என்னைத் தூக்கிப்போய் நாலு மிதி மிதித்தால், “காந்தியையே கோட்சே சுடவில்லை, நான்தான் சுட்டேன்” என்று கூடச் சொல்லுவேன்.

மேலே சொன்ன இந்த மொத்த சம்பவத்தின் விளைவு என்று நான் அறிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான். பள்ளி வாசல் பக்கத்திலேயே கடை நடத்தினாலும் அதுவரை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் கூட பெரிதாக ஆர்வம் காட்டாமலிருந்த என் நண்பன், அதன் பிறகு இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும், அதீத மத நம்பிக்கையுள்ள ஒருவனாக மாறிப் போனான்.

நன்றி : Elangovan Muthiah
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க