பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு

பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.

பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயிலின் மிச்சங்கள் இருப்பதாக இந்துத்துவ கும்பல் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தொல்லியலாளர்கள் சிலரைப் பயன்படுத்தி, பொய்யான தொல்பொருட்களை காட்டி, அதை ராமர் கோயிலின் மிச்சங்கள் எனவும் சாதித்தது இந்த கும்பல்.  2003-ஆம் ஆண்டு பாபர் மசூதியை ஒட்டிய பகுதிகளில் இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு முடிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்த சன்னி வஃக்பு வாரியம் இந்த அகழாய்வு முடிவு, ‘தெளிவற்ற மற்றும் உள்முரண்பாடுகளுடன் உள்ளது’ எனக் கூறியது.

பாபர் மசூதியில் ஒரு பகுதியில் நடந்த அகழாய்வில் வஃக்பு வாரியத்தின் சார்பில் பங்கேற்ற சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகியோர் 2010-ஆம் ஆண்டில் ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவு குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தனர். அந்தக் கட்டுரையில், முன்முடிவுகளை வைத்துக்கொண்டு இந்திய தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் ஆய்வில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.

அகழாய்வு.

“எந்தவொரு இந்திய தொல்லியலாளரோ, அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரோ அகழாய்வு நடத்த வேண்டுமெனில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன் அனுமதி பெற்றாக வேண்டும். இதனால் பலம் பொருந்திய அந்த அமைப்பை எதிர்த்தும் அதன் காலாவதியான அகழாய்வு முறைகள் குறித்தும் பேச எவரும் துணிவதில்லை” என அவர்கள் எழுதியிருந்தனர்.

2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தனது தோற்றுப்போன ஆட்சி நிர்வாகத்தினை மறைக்க மீண்டும் அயோத்தி பிரச்சினையை கையெலெடுத்துள்ளது இந்துத்துவ கும்பல்.  அண்மையில் ஒன்றுகூடிய பரிவாரங்கள், நீதிமன்றத்தைப் பொருட்படுத்தாது ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என முழங்கின.

இந்தச் சூழலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 26-வது கருப்பு தினம் வியாழன் அன்று நினைவு கூறப்பட்டது. இதையொட்டி ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளம், அகழாய்வில் பங்கேற்ற ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா வர்மாவின் நேர்காணலை வெளியிட்டிருந்தது.  அந்த நேர்காணலில் சுப்ரியா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வில் பல செயல்முறை குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.


படிக்க: இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !


“இப்போது பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததற்கான தொல்லியல் தடயங்கள் எதுவும் இல்லை. உண்மையில் பாபர் மசூதிக்கு அடியில் மற்றொரு மசூதியின் மிச்சங்கள்தான் உள்ளன” என்கிறார் சுப்ரியா.

இந்திய தொல்லியல் ஆய்வகம் அகழாய்வில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களாக  மூன்று விசயங்களை கூறியிருந்தது. அந்த மூன்றும் கேள்விக்குறியவை என விளக்குகிறார் சுப்ரியா.

1. மேற்பகுதியில் இருந்த சுவர்: “மேற்கு பகுதியில் சுவர் இருப்பது மசூதி கட்டுமானத்தில் உள்ள முக்கிய அம்சம். அந்த சுவரின் முன்புதான் தொழுகை நடத்துவார்கள். கோயிலில் இப்படியான அம்சம் இல்லை. கோயில் கட்டுமானம் முற்றிலும் வேறானது.”

2. ஐம்பது தூண்களைக் கொண்ட அடிகட்டுமானம்: “இது முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. பலமுறை இந்த புரட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் புகார் செய்திருக்கிறோம். தூண்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பு உடைந்த ஓடுகளால் ஆனது. அவற்றின் இடையே மண் நிரம்பி இருந்தது. வலிமையான கட்டடத்தைத் தாங்கும் தூண் எப்படி அவ்வாறு இருக்க முடியும்? என நீதிமன்றத்தில் வாதிட்டோம்”.

3. கட்டுமானத்தின் மிச்சங்கள்: “முக்கியமான கட்டுமான மிச்சங்கள் என 12 துண்டுகள் சமர்பிக்கப்பட்டன. இவை எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவை அல்ல. மாறாக, இவை பாபர் மசூதியின் சுண்ணாம்பு தரை தளத்தின் மேலே இருந்த கட்டிடக் கழிவுகள். அவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல, இது ஒரு கோயில், கற்களால் ஆன ஒரு கோயிலாக இருந்திருந்தால் இதைவிட பல ஆதாரங்கள், ஏன் கற்சிலைகள் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

சுப்ரியா வர்மா.

சுப்ரியா வர்மா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு, முன்பு நடந்த தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 1861-ஆம் ஆண்டும் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், பாபர் மசூதி இருந்த பகுதிகளில் ஆய்வுகள் செய்ததாக தெரிவிக்கிறார்.  அயோத்தியில் மூன்று பழமையான இடங்கள் இருந்ததாகவும் அவற்றில் இரண்டு புத்த ஸ்தூபிகளாகவும், ஒன்று விகாரையாகவும் இருந்ததாக கன்னிங்ஹாம் பதிவு செய்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பகுதி மக்கள் இங்கிருந்த சில கோயில்கள் இடிக்கப்பட்டதாக வாய்வழி கதைகளை சொன்னதாகவும் ஆனால், பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்பது குறித்து எவ்வித குறிப்பையும் கன்னிங்ஹாம் எழுதவில்லை என்றும் சுப்ரியா குறிப்பிடுகிறார்.

அதன் பின்பு 1969-ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை இரண்டாவது அகழாய்வை இந்தப் பகுதிகளில் (அயோத்தியில்) நடத்தியது. அந்த அகழாய்வு முடிவுகள் குறித்து தெளிவான அறிக்கைகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. கிடைத்த தகவலின்படி, அகழாய்வு நடந்த பகுதிகள் வரலாற்றின் தொடக்க மற்றும் மத்திய காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக இருந்திருக்கலாம்.

1975-1980 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த பி.பி. லால் இந்த அகழாய்வு திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தார். இந்துத்துவ அமைப்புகளின் புரட்டுக்கு ‘அறிவியல்’ சாயம் அடித்தவரும் இவரே.

சுப்ரியா சொல்கிறார், “அயோத்தி, மதுரா, வாரணாசி ஆகிய மூன்று இடங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டதாக 1988-ஆம் ஆண்டு விசுவ இந்து பரிசத் பிரச்சினையை கிளப்பியது. அந்த ஆண்டு, பி.பி. லால், 1975-1978ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் அகழாய்வு செய்த இடத்தில் கண்டெடுத்ததாக ‘கோயில் தூண்கள்’ எனக்கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏடான ‘மன்தன்’-இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதோடு, குரோஷியாவில் நடந்த உலக தொல்லியல் மாநாட்டில், இந்த புகைப்படத்தை சமர்பித்து அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என பேசினார்.

இந்த லால், ராமாயணம், மகாபாரத புராணங்களில் சொல்லப்பட்ட இடங்களை அகழாய்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டவர்.  இவர் கொடுத்த ‘புராண புரட்டு ஆதாரங்கள்’ பாபர் மசூதியை வைத்து பா.ஜ.க., மிகப்பெரும் அளவில் அரசியலை கட்டியெழுப்ப உதவியது. 1992-ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த பா.ஜ.க. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) ஆட்சியின் போது மீண்டும் அகழாய்வு செய்வது குறித்த பேச்சு எழுந்தது. பின்பு, அலகாபாத் நீதிமன்றம் 2002-ஆம் ஆண்டு அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு ஆணையிட்டது”

சுப்ரியா தன்னுடைய நேர்காணலில், அப்போது செய்யப்பட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் பல உண்மைகள் உள்ளன. உள்ளடக்கத்தில் பல தலைப்புகளில் வந்த கட்டுரையை எழுதியவர் யார் என்கிற விவரமும்கூட இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆய்வின் முடிவு பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ளது. முடிவுக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை என்கிறார் சுப்ரியா.

“முழு அறிக்கையையும் படித்தால், ஒரு இடத்தில் கூட கோயில் குறித்த பதிவு இடம்பெற்றிருக்காது. இது தரமான அறிக்கைதான். ஆனால், ஆகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள் மற்றும் மனித எலும்பு கூடுகள் குறித்த பதிவு அறிக்கையில் இல்லை. அதுகுறித்து அவர்கள் பதிவு செய்யவே இல்லை.  அவற்றை ஆய்வுக்கு அனுப்பினால் உண்மைகள் தெரிய வந்திருக்கலாம்.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


இறுதியாக மூன்றே மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெயர் போடாமல் ஆய்வின் முடிவு ‘பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது” என எழுதப்பட்டுள்ளது. மூன்றே வரிகளில் எழுதப்பட்ட முடிவுக்கு உள்ளடக்கத்தில் எங்கேயும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கில் சிறு மசூதிகள் இருக்கலாம் எனகிற முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்கிற சுப்ரியா முசுலீம் மக்களின் குடியேற்றத்துக்கு முன், இந்தப் பகுதியில் பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் என்கிறார்.

“அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதி பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் (அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பதிவு செய்திருக்கிறார்) என்றும் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டில் முசுலீம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அப்போது பழைய இடிந்துபோன பவுத்த கட்டுமானத்தின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டிருக்கலாம். அதன்பின் 1528-ஆம் ஆண்டும் பாபர் மசூதி, பழைய மசூதிகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது” என தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார் சுப்ரியா.

பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது திருட்டுப் பார்ப்பனிய இந்துமதம். வரலாற்று காலம் தொட்டு இந்த திருட்டுத்தனத்தை செய்துவரும் இவர்கள், பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது என சொன்ன புரட்டும் புஸ்வானமாகியுள்ளது.

செய்தி ஆதாரம்: Huffington Post


கலைமதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube