Sunday, August 1, 2021
முகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா பாபர் மசூதி வழக்கு : மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன் !

பாபர் மசூதி வழக்கு : மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன் !

-

உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்!

“இசுலாமியக் குடியரசான ஆப்கானிஸ்தானில், தலிபான் மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று அங்குள்ள அரசு விரும்புகிறது. பொதுமக்களும் அவ்வாறே விரும்புகிறார்கள். ஆனால் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கருத்து யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை” என்று வயர்-இன் இணையதளத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

உண்மைதான். இடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் இருந்த இடத்தில், இன்று அவற்றின் முழு உருவம் முப்பரிமாண ஒளியில் எழுப்பப்பட்டு அதனை ஆப்கன் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் திரள் திரளாக வந்து பார்க்கிறார்கள். தலிபான் ஆட்சிக்காலம் என்ற அந்த அருவெறுக்கத்தக்க வரலாற்றை இடிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் வழியாக வெறுப்புடன் நினைவு கூர்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் இருந்த இடத்தில் முப்பரிமாண வடிவில் ஒளிப்பரப்பப்படும் புத்தரின் திருஉருவம்.

இந்தியாவில் என்ன நடக்கிறது? இடிக்கப்பட்ட மசூதியின் கற்குவியல்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் ராமன் சிலைக்கு அயோத்தியில் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. மசூதி இடிப்பைத் தலைமை தாங்கி நடத்திய அத்வானி உள்ளிட்ட தலைவர்களை இக்குற்றத்திலிருந்தே அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவிக்கிறது.

வழக்கிலிருந்து திட்டமிட்டே இவர்களைத் தப்பவிட்ட மத்திய உளவுத்துறையைக் கண்டித்ததுடன், அடுத்த இரண்டாண்டுகளுக்குள் இவ்வழக்குகளை விசாரித்து முடிக்கவேண்டுமென்று இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 2017 ஏப்ரல் மாதம் சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன் பின்னரும், வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருகிறது சி.பி.ஐ.

உலகமே சாட்சியாகப் பார்த்து நிற்க, பகிரங்கமாக நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு என்ற குற்றத்துக்கு விசாரணையே நடக்காத நிலையில், எவ்வித சாட்சியமோ ஆதாரமோ இல்லாத இராம ஜென்மபூமி விவகாரத்தில், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 இல் தீர்ப்பளிக்கிறது.

400 ஆண்டுகளாக முஸ்லிம்களின் வழிபாட்டிடமாக இருந்து வந்த மசூதி இடிக்கப்பட்ட குற்றத்தின் விசாரணையே இன்னும் முடியாதபோது, மசூதிக்கு கீழே இருக்கின்ற நிலம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

முஸ்லிம் மக்களின் காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான தேதியாக, மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர்-5 ஆம் தேதியை தீர்மானிக்கிறது  உச்ச நீதி மன்றம்.

வழக்கு விசாரணையை 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது அரசியல் ஆதாயத்துக்கு மோடி அரசு பயன்படுத்துமென்பதால், விசாரணையை 2019 ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறும், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்குமாறும், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே, கபில் சிபல் ஆகிய வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நிராகரிக்கிறார்.

அந்த வழக்கறிஞர்கள் கூறியது உண்மையென மறுநாளே நிரூபிக்கிறார் மோடி. கபில் சிபல் காங்கிரசு கட்சியை  சேர்ந்தவர் என்பதால், முஸ்லிம்கள் தரப்பில் அவர் வழக்கறிஞராக ஆஜராவதைக் காட்டி, காங்கிரசு கட்சி கோயிலை ஆதரிக்கிறதா, மசூதியை ஆதரிக்கிறதா என்று கேட்டு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துவெறியை பகிரங்கமாகத் தூண்டுகிறார்.

பாபர் மசூதி இடிப்புக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, மீரட், மலியானா, ஹசிம்புரா முதல் மும்பை, குஜராத் வரை இந்தியா முழுவதும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் துயரமான நாள் என்று அத்வானியும் வாஜ்பாயியும் அன்று நடிப்புக்காகவேனும் பேசவேண்டியிருந்தது. இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குகின்ற தருணத்தில், நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் மோடி, நீ மசூதியை ஆதரிக்கிறாயா, கோயிலை ஆதரிக்கிறாயா என்று எதிர்க்கட்சியை மிரட்டுகிறார். இந்த மிரட்டல், வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்துக்கும் உரியது என்பதை நீதிபதிகள் அறியமாட்டார்களா என்ன?

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி என்பன போன்ற பீற்றல்களும், சொல்லிக்கொள்ளப்படும் இந்த உன்னதங்களைப் பாதுகாத்து நிற்கும் தூண்களான நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் போன்றவையும் உளுத்துப்போய் உதிர்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தத் தூண்கள் மீது இந்துத்துவம் ஒரு சங்கேத மொழியாய் ஒளிந்திருக்கிறது.

பார்ப்பன பாசிசத்தின் அதிகாரத்தைக் காத்து நிற்கும் சக்திகளில் முதன்மையானவை இந்தத் தூண்களா, மக்களின் வாக்குகளா என்று கேட்டால், இந்தத் தூண்கள்தான் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். வாக்குகளைப் பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்பட வேண்டும்.

எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து மக்களின் வெறுப்பை ஈட்டியிருக்கிறது மோடி அரசு. இடிக்கப்பட்ட மசூதி, கொல்லப்பட்ட அக்லக்குகளைப் போலவே, பண மதிப்பழிப்பு, நீட், ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்தையும் பழகிப்போன எதார்த்தங்களாக மக்கள் அங்கீகரிக்க வேண்டும். அல்லது அவை மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கப்பட வேண்டும். இன்னொரு முறை இராமனைத் தெருவுக்கு இழுத்து வருவதொன்றுதான் மக்களை வீழ்த்துவதற்கு மோடியின் முன் உள்ள வழி.

1992-இல் பாபர் மசூதியை இடிப்பதற்குத் தோதாக டிசம்பர் 6 அன்று கரசேவைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் மோடிக்கு உதவியிருக்கிறது.

விசாரணைக்கூண்டில் உச்சநீதிமன்றம் என்ற தலைப்பில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் பாபர் மசூதி வழக்கின் வரலாறு குறித்து விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கும் ஏ.ஜி.நூரானி, முன்னாள் அமெரிக்க நீதிபதி பெஞ்சமின் கார்டோசோவின் கீழ்க்கண்ட மேற்கோளுடன் தனது கட்டுரையை முடிக்கிறார். “நீதிபதி எத்தகையவர் என்பதற்கு மேல் நீதிக்கு வேறு உத்திரவாதம் ஏதுமில்லை”.

நீதி முட்டுச்சந்துக்கு வந்துவிட்டது. கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கலாம் என்று கருதுபவர்கள், 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் வெண்ணெய் உருகவில்லை என்ற உண்மையை இனிமேலாவது உணரவேண்டும். பார்ப்பன பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.

-சூரியன்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க