Tuesday, September 27, 2022
முகப்பு புதிய ஜனநாயகம் தலையங்கம் பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !

பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !

இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.

-

பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம் !!

ந்திய ‘‘ஜனநாயகம்” பாதுகாப்பான நான்கு தூண்களின் மீது நிற்கிறது என்ற பொய்மை, அதன் மீது நம்பிக்கை கொண்டவர்களே பயந்து அலறும் விதத்தில் மிக வேகமாக நொறுங்கிச் சரிந்து வருகிறது.

இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அதிர்ச்சியில் உறைந்திருக்கும் அறிவுத்துறையினரும் அரசியல் கட்சிகளும் ‘‘நீதிமன்றத்தை மதிக்கிறோம்” என்ற அவர்களுக்கேயுரிய சம்பிரதாயச் சொற்றொடரைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையின் வெளிப்பாடுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் ‘‘இம்பீச்மென்ட் மோஷன்” எனப்படும் பதவி நீக்கத் தீர்மானம்.

இதற்கு முன் நீதிபதிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானங்கள் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பானவை. தற்போதைய தீர்மானத்திலும் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இருப்பினும், ‘‘தீபக் மிஸ்ரா தலைமையிலான ஒரு நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் முழுவதையும் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொண்டு, மோடி அரசுக்குத் துணை நிற்கிறது” என்பதே தற்போதைய தீர்மானத்தின் மையப்பொருள்.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ‘‘ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று பிரகடனம் செய்தபோது, அது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத நிகழ்வு என்று அதிர்ச்சியுடன் பேசப்பட்டது.

இந்நடவடிக்கை தீபக் மிஸ்ராவுக்கும் மோடி அரசுக்கும் அரசியல்ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், இருவருமே சமரசத்துக்கு இறங்கி வரவில்லை.

மருத்துவக் கல்லூரி ஊழலில் சி.பி.ஐ.-இடம் கையும் களவுமாகச் சிக்கியிருக்கும் தீபக் மிஸ்ராவும், லோயா வழக்கில் ஆதாரபூர்வமாக சிக்கியிருக்கும் மோடி- அமித் ஷா கும்பலும் ஒருவரையொருவர் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலையில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர்.

வாரிசுரிமை, சாதி, அரசு ஆதரவு, ஊழல் போன்ற தகுதிகளால் பதவியைப் பெற்றிருக்கும் நீதிபதிகளோ, மோடி கூட்டணிக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே, நான்கு மூத்த நீதிபதிகளின் குமுறல் ‘‘பரபரப்பு செய்தி” என்ற அளவுக்கு மேல் பாரிய விளைவு எதையும் ஏற்படுத்திவிடவில்லை.

நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கப்பட்டதை நான்கு நீதிபதிகள் வெளிப்படையாகவே விமரிசித்ததால், அந்த வழக்கை தனது தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றிக்கொண்டார் தலைமை நீதிபதி.

லோயாவின் மரணம் நிகழ்ந்த சூழல் குறித்து எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமலேயே ‘‘மரணத்தில் சந்தேகப்பட ஏதுமில்லை” என்று தீர்ப்பு வழங்கியது இந்த அமர்வு. அதுமட்டுமல்ல, மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மனுதாரர்கள் ‘‘நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக” அவர்களை எச்சரித்தது.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளிலிருந்து மூத்த நீதிபதிகள் திட்டமிட்டே ஒதுக்கப்படுகின்றனர் என்பதும், அரசுக்குச் சாதகமான தீர்ப்பு வருவதை உத்திரவாதம் செய்யும் விதத்தில் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே அவை ஒதுக்கப்படுகின்றன என்பதும் தீபக் மிஸ்ரா மீது கூறப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு.

தீபக் மிஸ்ராவால் இதுவரை நியமிக்கப்பட்ட 7 அரசியல் சட்ட அமர்வுகளிலும் அவர் இருக்கிறார். ஒன்றில் கூட கொலீஜியத்தின் மற்ற நான்கு நீதிபதிகள் இல்லை. மற்ற பல மூத்த நீதிபதிகளும் ஓரங்கட்டப்பட்டு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஒதுக்கப்படுகின்றன.

செல்லமேஸ்வர் அமர்வு விசாரித்து வந்த ஆதார் வழக்கிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். ரஞ்சன் கோகோய் விசாரித்து வந்த சி.பி.ஐ. இயக்குநர் நியமன வழக்கு அவரிடமிருந்து மாற்றப்பட்டது.

பாபர் மசூதி வழக்கிலும் மற்ற மூத்த நீதிபதிகள் விலக்கப்பட்டனர். மோடிக்கு எதிரான சகாரா-பிர்லா ஊழல் வழக்கு, பா.ஜ.க.-வினருக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்டிருக்கும் அருண் மிஸ்ரா அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. குட்கா வழக்கைப் போல மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தும், அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து மோடியைக் காப்பாற்றினார் அருண் மிஸ்ரா.

வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பயன்படுத்தும் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்து ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கையும் தானே விசாரித்த தீபக் மிஸ்ரா, ‘‘தலைமை நீதிபதி அரசமைப்பு சட்டத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால், சட்டப்படி அவர் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்று தீர்ப்புக் கூறி, நிர்வாகி என்ற முறையில் தான் செலுத்திவரும் சர்வாதிகாரத்தை, தன்னுடைய தீர்ப்பின் வழியாகவே சட்டபூர்வமானதாக மாற்றிக்கொண்டார்.

‘‘சட்டப்படிச் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்” என்று நகைக்கத்தக்க முறையில் தனது நல்லொழுக்கத்துக்கு சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமை நீதிபதி, மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் இலஞ்சம் வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுபவர்.

யாரும் தனக்குத்தானே நீதிபதியாக முடியாது என்ற இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறி, தனக்கெதிரான வழக்கைத் தானே விசாரித்துத் தள்ளுபடி செய்தவர், அவ்வழக்கு பிற நீதிபதிகளிடம் விசாரணைக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, தனது உத்தரவின் தேதியைத் திருத்தி போர்ஜரி செய்தவர்.

தானொரு நிலமில்லாத ஏழை பிராமணன் என்று பொய் சத்தியம் செய்து ஒரிசா அரசிடமிருந்து இலவச நிலம் வாங்கி, பிறகு மோசடி நிரூபிக்கப்பட்டு பிடிபட்டவர். அந்தக் குற்றத்தை மறைத்து நீதிபதி பதவியைக் கைப்பற்றியவர். மேற்சொன்ன குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆளான தீபக் மிஸ்ராவைத்தான் உத்தமர் மோடியின் அரசு பாதுகாக்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியத்தால் ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டவருமான உத்தர்கண்ட் தலைமை நீதிபதி மாத்யூ ஜோசப்பின் பெயரை நிராகரித்திருக்கிறது மோடி அரசு. ஏனெனில், அவர் உத்தர்கண்டில் மோடி அரசுத்தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததைத் தனது தீர்ப்பின் மூலம் ரத்து செய்தவர்.

கோபால் சுப்பிரமணியத்தை நீதிபதியாக விடாமல் தடுத்ததில் தொடங்கி இஷ்ரத் ஜகான் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயந்த் படேலை ராஜினாமாவுக்குத் தள்ளியது வரை நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக வாயிற்புறம் வழியே நுழைந்து நீதித்துறையைக் கைப்பற்றும் வாய்ப்பு தவறிப் போனதால், கொல்லைப்புறம் வழியே நீதித்துறைக்குள் நுழைகிறது மோடி அரசு.

நீதிபதி பதவியில் அமர்ந்திருக்கும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகளும், பதவி வேட்டைக்காரர்களும் கொல்லைப்புறக் கதவைத் திறந்து பார்ப்பன பாசிசத்தை வரவேற்கிறார்கள்.

இதற்கு நன்றிக்கடனாக, ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மான நோட்டீசை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது” என்று நிராகரிக்கிறார் வெங்கையா நாயுடு. நாயுடுவின் முடிவை எதிர்ப்பதாயின், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும்.

‘‘அந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தீபக் மிஸ்ராவுக்கு உண்டு” என்று கூறும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறித்துவிடுமென்று” கவலைப்படுகிறார்.

‘‘தலையை வேண்டுமானால் சீவி விடலாம். ஆனால், அது நீதித்துறையைப் பிடித்தாட்டும் தலைவலிக்கு மருந்தாகுமா?” என்று பதவி நீக்க தீர்மானம் குறித்து கேள்வி எழுப்புகிறார் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே.

நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பு மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கு இது மறுக்கமுடியாத நிரூபணம். நெருங்கி வரும் பாசிசத்துக்கும் இது முன்னறிவிப்பு.

-புதிய ஜனநாயகம், மே 2018

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க