சில வார்த்தைகளைக் கூறும்போதே அவற்றை உருவகப்படுத்தும் விதமான உயிரினங்கள் நம் நினைவுக்கு வரும். உதாரணத்திற்கு, தந்திரம் என்றால் நரி தான் நம் நினைவிற்கு வரும். அடிமை என்றால் எடப்பாடியின் முகம்தான் நம் நினைவுக்கு வரும். இதில் கூட சில சமயங்களில் வெவ்வேறு உயிரினங்கள் நம் நினைவுக்கு வரலாம்.
ஆனால், தமிழ்ச் சமூக வலைத்தளங்களில் பரிச்சியமானவர்கள் அனைவருக்கும் எச்சை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மூளையில் தோன்றும் ஒரே உயிரினம் எச்(சை) ராஜா தான். அந்த அளவிற்கு “நரகலை மென்று முகத்தில் துப்பும்” தனது தனித் திறமையால் இழிபுகழ் பெற்றவர்.
சமீபத்தில் மோகன் ஜி எனும் “அக்கினிச்சட்டி” எடுத்த ருத்ரதாண்டவம் எனும் க(லை)ளைப் படைப்பின் முன் திரையிடல் நிகழ்வில் கலந்துவிட்டு எச்சையார், அர்ஜுன் சம்பத், பு.த கிருஷ்ணசாமி உள்ளிட்ட சனாதனிகள் அனைவரும் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர் தமிழ் சமூகத்தில் இந்து மதம் கொண்டுவரப்படுவதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்க ‘வாலண்டரியாக’ வந்து வண்டியில் ஏறினார், எச்சை ராஜா.
படிக்க :
எச்ச ராஜாவை நெருப்பாய் பொசுக்கும் தமிழ் பேஸ்புக் !
அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !
“இல்ல நான் கேக்குறேன்… உங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா ?, தமிழ் மொழி வாழ்கன்னு தமிழின் ‘ழ’கரத்தை சரியாக உச்சரிக்கத் தெரியாத ரொம்பப் பேரு தமிழ் பேசுறீங்க.. இந்துவும் தமிழும் வெவ்வேறுன்னு  சொன்னது யார்?”
“இந்து இல்லைன்னா தமிழ் எங்கய்யா வந்தது? என்ன பேசுறீங்க எல்லாரும்?. இதுதான் சொல்றேன்.. You all Media People.. Presstitutes..” என்றார். இந்து மதத்திலிருந்து தான் தமிழ் வந்ததாம். அதை மற்றொரு நாள் தனியாக கவனிப்போம்.
Press கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன Presstitute ? சங்கிகள், தங்களது பொய்க் கதைகளையும், தங்களது தலைவரது பொய்யுரைகளையும் எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகங்களை, பணத்துக்கு விலை போனவர்கள் என குறிப்பிட்டு அவர்களை விபச்சாரம் செய்பவர்களோடு ஒப்பிடும் வகையில் கட்டமைத்த ஒரு வார்த்தைதான் Presstitute. “ Press + Prostitute = Presstitute”

எச்சையார் ஊடகங்களை இப்படிப் பேசுவது புதிய சம்பவம் அல்ல. இப்படி எச்சைகள் பேசுவதை ஊடகங்களும் துடைத்துப் போட்டுவிட்டுப் போவதும் புதியது அல்ல. எச்சை ராஜா மட்டுமல்ல பாஜகவின் இதர உயிரினங்களும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் இப்படித்தான் வசை பாடி வந்திருக்கின்றனர்.
சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், பெண் ஊடகவியலாளர்கள் படுக்கையைப் பகிர்ந்துதான் ஊடகங்களில் பதவி உயர்வு பெறுகின்றனர் என்று பாஜக-வின் எஸ்.வி. சேகர் அருவெறுப்பாகப் பேசிய சமயத்தில், தமிழக ஊடகங்களில் பணியாற்றும் பெருவாரியான முதுகெலும்புள்ள பத்திரிகையாளர்கள் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தினர். எஸ்.வி. சேகரின் வீட்டிற்குள் கல் பறந்தது.
எஸ்.வி. சேகர் மீது புகார் அளிக்கப்பட்டும் அடிமை எடப்பாடியின் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சர்வ சாதாரணமாக போலீசு பாதுகாப்போடு பவனி வந்தார் எஸ்.வி. சேகர்.  எஸ்.வி. சேகரின் வீட்டு பால் பாக்கெட் கெட்டுப் போனதற்கு ஓடோடி சேவகம் புரிந்த அடிமை எடப்பாடியால் வேறென்ன செய்ய முடியும் ?
அதனைத் தொடர்ந்து நியூஸ் 18 மற்றும் பிற ஊடகங்களில் பணியாற்றிய பல முதுகெலும்புள்ள பத்திரிகையாளர்களை அந்த ஊடக நிர்வாகங்கள் பணியிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளியேற்றின. பாஜக ஆதரவு பத்திரிகையாளர்கள் தவிர பிற அனைத்து ஊடகவியலாளர்களும் ஏதேனும் ஒரு வகையில் குறி வைக்கப்பட்டனர்.
சரி, மீண்டும் நமது எச்சையார் விவகாரத்துக்கு வருவோம். ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் Presstitute என எச்சையார் சாடியதற்கு சென்னை பிரஸ் க்ளப் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜகவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.  வேறு சில முதுகெலும்புள்ள பத்திரிகையாளர்கள் இதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
அதைத் தாண்டி எந்த ஒரு ஊடக நிர்வாகமும் எச்சையாரை  கண்டிக்கவில்லை. தமது ஊடக “ஒழுக்க நெறியை” கொச்சைப் படுத்தியதோடு, பணத்திற்கு விலைபோகும் விலைமகனாக தம்மை தரம் தாழ்த்திப் பேசியிருக்கிறாரே என எவ்வித அறச் சீற்றமும்  இந்த ஊடக நிர்வாகங்களுக்கு வரவில்லை. எச்சையையோ அவரது கட்சியான பாஜக-வின் தலைமையையோ கண்டிக்கும் அளவிற்கு இந்த ஊடக  நிர்வாகங்களுக்கு முதுகெலும்பு இல்லை.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஜூலை மாத மத்தியில் ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் ஊடகங்களைப் பற்றி பேசியதை இங்கு நினைவுகூர்வோம்.

பாஜக-வைச் சேர்ந்த சங்கிகளிடம் பேசும் அண்ணாமலை, ஊடகங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். இன்னும் 6 மாதத்தில் அவை நமது கட்டுப்பாட்டில் இயங்கும். முருகன் அவர்கள் இத்துறைக்கான ஒன்றிய அமைச்சராக இருப்பதால் இதனை நம்மால் செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்.
தற்போது எச்சையார் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் “பிரெஸ்டிட்டியூட்” என விளிக்கும் போது ஊடக நிர்வாகங்கள் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பொத்திக் கொண்டு இருப்பதற்கும், அன்று அண்ணாமலை பேசியதற்குமான தொடர்பு புரிகிறதல்லவா?
தனது எஜமானன் அள்ளிப்போடும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் விசுவாசமிக்க அடிமைகளாக ஊடகங்கள் மாறிவிட்டன.  அடிமையாக மாறிய பிறகு எஜமானன் வீட்டு செல்ல நாய் கடித்தாலும், முகம் சுளிக்காமல் சகித்துக் கொள்ள வேண்டும்.
சங்க பரிவாரக் கும்பல் 2014 தேர்தலில் பெற்ற வெற்றி முதல் இன்றுவரையில் தமது இந்து ராஷ்டிர இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல எடுத்துள்ள வழிமுறையில் பிரதானமானது ஊடகங்களின் மீதான கட்டுப்பாடுதான்.
எதிர்க்கட்சிகளை கையாலாகாதவர்களாக சித்தரிப்பது முதல், எச்சிலைக்குக் கூட சமமாகாத பாஜக எச்சைகளை எல்லாம் ஊடக விவாதங்களில் முன் நிறுத்துவது வரையில் திட்டமிட்டு, சங்க பரிவாரக் கும்பலை இந்தியாவைக் காக்க வந்த ஆளுமைகளாக ஊதிக் காட்டும் பணியை இந்த ஊடகங்களைத் தனது  கட்டுப்பாட்டில் வைத்துதான் ஆர்.எஸ்.எஸ். செய்து முடித்தது.
படிக்க :
அண்ணாமலை : வெறும் சங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ சங்கியான கதை!
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
அதானி, அம்பானி கும்பலின் பணத்தால் ஊடகங்களை வளைப்பது,  பணியாத ஊடகங்களை முடக்குவது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டு விடுவது, சரிப்பட்டு வராத ஊடகவியலாளர்களை மிரட்டுவது, கொலை செய்வது, பணி நீக்கம் செய்வது அதற்கும் அடங்காதவர்களை பெகாசஸ் மூலம் கண்காணித்து மிரட்டுவது என சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளை பின்பற்றி இதைச் சாதித்திருக்கிறது.
தமிழக மையநீரோட்ட ஊடகங்களில் இதனை எதிர்த்து நிற்கும் வகையிலான ஊடகங்கள் வெகு சொற்பமே. தொழில் முடக்கம் எனும் அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்படும் போது, அவையும் வீழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமிழகத்தில் சங்க பரிவாரக் கும்பலின் பிடியில் இருந்து ஊடகங்களை மீட்கும் வாய்ப்பு ஊடகவியலாளர்களின் கையில்தான் இருக்கிறது. ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கொச்சையாகப் பேசிய எஸ்.வி சேகர், எச்சை ஆகிய இருவரும், ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப் போவதாக கூறிய அண்ணாமலையும் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை வழங்கப்படாத வரையில், அந்தக் கிரிமினல் கும்பலின் பத்திரிகைச் செய்தியை பதிவு செய்யவோ வெளியிடவோ மாட்டோம் என்று நிர்வாகத்திற்கு எதிராக கலகம் செய்வதுதான் ஒரே வழி!

சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க