பொன்னையா கைது:  ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலுக்கு பணியும் திமுக || மக்கள் அதிகாரம்

ன்னியாகுமரியில் கிருத்துவ நிகழ்ச்சியில் பேசிய பாதிரியார் பொன்னையா, இந்துமதவெறி அமைப்புகள் கொடுத்த மிரட்டல்கள் காரணமாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற போராட்டத்தில் பாரதமாதா, மோடி, ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி 7 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு அவரின் பிணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

”சர்ச்(சை) பாதிரியார் கைது, பாரதமாதாவை இழிவு படுத்தியவர் கைது, மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது” இவையெல்லாம், ஊடகங்கள் பொன்னையா கைது செய்திக்கு கொடுத்த தலைப்புக்கள். ஒரு கொலை நடந்தால் அதற்கு பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து கருத்து கந்தசாமிகளாக இருக்கும் ஊடகங்கள் இந்த சர்ச்சைப் பேச்சின்’ பின்னணி என்ன? என்பதைக் கூறவில்லை. பின்னணியை ஆராய்வது அவர்களின் வழக்கமாக இருந்தாலும் பொன்னையாவின்  பேச்சின் பின்னணியை ஆராய்ந்தால் அது ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராகப்போகும் என்பதால் அதற்குள் யாரும் போகவில்லை.

மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை

குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தின் அருகே உள்ள மலங்கரையில் 62 ஆண்டுகளாக இருந்த ஒரு குறுசபை எனப்படும் சிறு ஜெபக் கூடத்தை விரிவுபடுத்திக் கட்டி, அதன் திறப்பு விழாவும் சிறப்பு ஆராதனை விழாவும் ஜூன் 18-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவித்தனர் கிறிஸ்துவ சபையினர். ஜூன் 15-ம் தேதி இந்த அறிவிப்பு வந்ததும், அடுத்த நாள் ஜூன் 16-ம் தேதி கன்னியாகுமரி பாஜக எம்.எல்.ஏ.வான எம்.ஆர். காந்தி அந்த சர்ச்சின் முன் பாஜகவினரோடு திரண்டார். ”இந்த சர்ச் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதைத் திறக்கக் கூடாது”என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்

டி.ஆர்.ஓ. இந்த விவகாரத்தை விசாரித்தார். அப்போது கிறிஸ்துவ சபை தரப்பில் பல ஆண்டுகளாக இந்த சபை இயங்குவதற்கான ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை டி.ஆர்.ஓ.விடம் கொடுத்திருகிறார்கள். ஆனாலும் பாஜகவின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த வளாகத்தைச் சுற்றி பச்சை வண்ண பிளாஸ்டிக் சாக்கு கொண்டு மறைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, திறப்பு விழாவை தடை செய்துவிட்டனர். இது சிறுபான்மை மக்களை மேலும் சினமூட்டுவதாக அமைகிறது.

இந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையா பொறுப்பு வகிக்கும் ஜனநாயக கிறிஸ்துவ பேரவையும், அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் அருமனை கிறிஸ்துமஸ் குழுவினரும், தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து இந்த விவகாரம் தொடர்பாக அருமனையில் ஜூலை 18-ம் தேதி ஒரு கண்டன ஊர்வலம் நடத்த அனுமதி கோரினார்கள். இந்த விவகாரத்தில் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தகவல் அறிந்து பாஜக தரப்பினரும் அதே தேதியில் ஊர்வலம் ஒன்றை அறிவித்தார்கள்.  இதை சாக்காக வைத்துக்கொண்டு மோதல் ஏற்படும் என்று சொல்லி இரு தரப்பினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் அனுமதி கோரியது யார் என்றெல்லாம் காவல்துறையினர் பார்க்கவில்லை. அந்த வகையில் ஜூலை 18-ம் தேதி அருமனையில் கண்டன ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய கிறிஸ்துவ பேரவை, அருமனை கிறிஸ்துமஸ் அமைப்புக்கும் பாஜகவுக்கும் ஊர்வலம் போக தடைவிதிக்கிறது போலீசு.

ஊர்வல தேதிக்கு இரு நாட்கள் முன்னதாக அப்பகுதியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி அப்போராட்டத்தையே சென்ஸிட்டிவான ஒன்றாக மாற்றுகிறது.
இப்படி 62 ஆண்டுகளாக வழிபட்ட இடத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு சேர்ந்து முடக்கிய அரசு மீது சிறுபான்மை மக்களுக்கும் அமைப்புக்களும்  உணர்கிறார்கள்.

அதனால்தால் அப்போராட்டத்தில் பலரும் கோபத்தோடு தங்கள் உணர்வுகளை பதிவு செய்தனர். மண்டைக்காடு கலவரத்திற்கு முக்கியக் காரணமான எம்.ஆர்.காந்தி (தற்போது நாகர் கோயில் எம்.எல்.ஏ) தலைமையில் சிலர் மனு கொடுத்தால் சர்ச்சை மூடுவார்கள் என்றால் அரசின் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் பேசிய உடனே கைது செய்யப்படவில்லை. மாறாக , தமிழகம் முழுவதும் பாஜக கும்பல் ஆர்ப்பாட்டம் ரகளையில் ஈடுபட்ட பிறகு அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

நீதிமன்றத்தை இழிவாக கூறிய எச். ராஜா இதுவரை கைது செய்யப்படவில்லை . பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், அண்ணாமலை, அர்ஜுன் சம்பத், இராம ரவிக்குமார் ஆகியோர் ஒவ்வொரு நிமிடமும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களையும்  மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆளும் வர்க்க பகுத்தறிவு

பகுத்தறிவாளர்களும் ஊடகவியலாளர்களும் பொன்னையா கிருத்துவ பெரும்பான்மை வாதம் பேசுகிறார். எரிகிற எண்ணையில் தீ ஊற்றுகிறார். அதனால் கைது செய்தது சரியே என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள். கிருத்துவ பெரும்பான்மை வாதம் பேசுவதால் அவர் கைது செய்யப்படவில்லை. அதில் நமக்கு உடன்பாடும் இல்லை.  எரிப்பவன் மீது  இரண்டாவது பரிசீலனை. எண்ணை ஊற்றுபவன் மீது முதல் பரிசீலனை.   ஒரு இந்து,  இந்து மதத்தை விமர்சிப்பது தவறில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது

இது முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கண்ணோட்டமாகும். தவறாக இருப்பின் யாரும் யாரையும் விமர்சிக்க உரிமை படைத்ததுதான் ஜனநாயகம். பிறப்பால் ஆதிக்க சாதியில் பிறந்த ஒருவர் தலித் மக்களின் பிரச்சினைகளை – அதில் உள்ள பாகுபாடுகளைப் பேசக்கூடாதா? இயேசு பூமியை பாயாக சுருட்டிக்கொண்டு சென்றார் என்ற பழைய பைபிளின் முட்டாள்த்தனத்தை எப்படி கேள்வி கேட்க உரிமை உள்ளதோ அதே போல பூமிக்கு பிறந்த நரகாசுரனின் கதையை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உள்ளது.

ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்கள் சுசீந்திரம் கோயிலுக்கு சட்டையை கழற்றிவிட்டு ஏன் சொல்கிறீர்கள் ? என்ற நியாயமான கேள்வி எப்படி இரு மதங்களுக்கிடையில் பகையை உண்டாக்கும்? இதே வார்த்தையை திக, கம்யூனிஸ்டுகள் சொன்னால் பிரச்சினையில்லை பாதிரியார் சொன்னதுதான் பிரச்சினை என்று திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இவர்கள் தான் கந்தசஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் விமர்சித்தது தவறு என்றார்கள். சென்னை அரும்பாக்கத்தில் உழைக்கும் மக்களின் வீடுகள் கூவம் ஆற்றங்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 30கிலோமீட்டர் தொலைவிற்கு விசிறியடிக்கப் படுவதையும் நியாயம் பேசுகிறார்கள். நீட் தேவை உடனே ரத்து செய்ய முடியாதென்று வியாக்கியானம் தருகிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகுவதெல்லாம் உடனடி சாத்தியமில்லை என்கிறார்கள். இந்தப்பின்னணியில் தான் பொன்னையா ஜார்ஜ்-ன் கைதை நாம் கவனிக்க வேண்டும்.

ஜார்ஜ் பொன்னையா ஒரு மோசடிப் பேர்வழி என்று புகார் வருகின்றது. அதற்கு கைது செய்யப்பட்டாரா என்றால் இல்லை. சாமியார்களே போலிதான் என்பெதெல்லாம் வேறு ஒரு தளத்தில் விவாதிக்க வேண்டியவை. தனிப்படை அமைத்து ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு ஏன் ஏற்பட்டது?

இந்து விரோதி vs இந்து ஆதரவுவாதி

பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்றவுடன் முக்கியமாக சில விஷயங்களை பதிவு செய்தார்.
1.திமுகவுக்கு எதிர்கட்சி பாஜக தான்
2.திமுகவின் சித்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்தம் நாங்கள்தான்
3.தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை நாங்கள் மட்டுமே இருக்கிறோம்.

இனி திமுக ஒரு இந்து விரோத கட்சி என்ற பிரச்சாரத்தையே முதன்மையாக பாஜக மேற்கொள்ளும் . அதற்கு பதிலடியாக நாங்கள் இந்து ஆதரவு கட்சிதான் என்ற நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும். ஒரு கிராமத்தில் உள்ள ஜெபக்கூடப் பிரச்சினையை மாநில அளவிலான சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக மாற்றி அதன் மூலம் திமுகவை தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிட்டனர். பாஜக என்ன நிகழ்ச்சிநிரல் வைக்கிறதோ அந்த நிகழ்ச்சிநிரலுக்கு பதில் சொல்வதே இனி திமுகவுக்கு வேலையாக இருக்கும்.

திமுக மீது ஏற்படும் அனைத்து அதிருப்திகளையும் சிறப்பாக பாஜக இனி பயன்படுத்தும். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியே பாஜக வளர்வதற்கு ஏதுவான ஒன்று. ஏனெனில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத சூழலில் அரசின் மீதான அதிருப்தியை பாஜகவே அறுவடை செய்யும்.

தென்மாவட்டங்கள் தான் அவர்கள் முதல் இலக்கு. அதை நோக்கிய பயணமாக தான் இந்த அருமனை ஜெபக் கூட பிரச்சனையும் பொன்னையா கைதும். குமரி மாவட்டத்தில் கிருத்துவர்கள் அதிகமாக இருப்பதால் இதை வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் கலவரம் செய்ய முயல்வது நாம் அறிந்ததே.

திமுக அரசானது இந்துக்களுக்கு எதிரி என்ற பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்ளும். திமுகவோ இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பது தாங்கள் தான் என்பதை நிரூபிப்பதற்காக பாஜக சொல்கின்ற எல்லாவற்றையும் கேட்கும். கடந்த தேர்தல் அறிக்கையில் கூட முஸ்லிம்களுக்கு புனித யாத்திரைக்கு மானியம் கொடுப்பதுபோல இந்துக்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது தான் திமுக.

ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பல் ஜெபக் கூட்டம் நடத்தும் வீடுகளிலும் சர்ச்சைகளிலும் உள்ளே புகுந்து  பல இடங்களில் ரகளை செய்து வருகிறார்கள் . அப்படிப்பட்ட தாக்குதல்கள் மென்மேலும் வளர்வதற்கு இந்தக் கைது நடவடிக்கை பயன்படும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப் பற்றி கூறிய கருத்துக்களை வைத்துக் கொண்டு அவர் மீது தாக்குதல் நடத்த சங்கப் பரிவாரங்கள் முயன்றது நாம் அனைவரும் அறிந்ததே. அப்போதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை, அது அவரது சொந்தக் கருத்து என்று தெளிவாகக் கூறியதே தவிர அந்தக் கருத்து சரியானது என்று தெரிவிக்கவில்லை.

கந்த சஷ்டி கவசம் பிரச்சினையிலும் கருப்பர் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் நபர்கள் என்றார்கள். பகுத்தறிவுப் பிரச்சாரத்தை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு ஆட்சியை பிடிப்பது, ஆட்சியை பாதுகாக்க எவ்வித எல்லைக்கு செல்வதும் திமுகவிற்கு புதியதல்ல. ராமன் என்ன என்ஜினியரா? என்று கேட்ட கருணாநிதிதான் அதற்கு சில ஆண்டுகள் முன்னர் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம் என்றார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தன்னை திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்ததாகக் கூறிக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமோ தன் ஆட்சி மீது குற்றம் சுமத்திவிடக்கூடாது என்பதற்காகவும் இந்து மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்கு பயந்தும் பொன்னையாவை கைது செய்திருக்கிறது.

படிக்க :
♦ புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் – 2021 அச்சு இதழ் !
♦ துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..

சிறுபான்மை மக்களையும் கம்யூனிஸ்டுகள் மற்றும் நாத்திகர்களை மிக ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிவரும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினரை கைது செய்ய துப்பற்ற அரசு ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்துள்ளது.

இன்று பொன்னையாவுக்கு நடைபெற்ற இந்த நடவடிக்கை, நாளை பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தமிழகத்திலே  மேற்கொள்ளும் நம் மீதும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கந்தசஷ்டி கவசம்  பற்றி மணியம்மையாரும் பெரியாரும் பேசாததை யாரும் பேசிவிடவில்லை. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் ரகளைகளுக்குப் பின்னர் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலே முடக்கப்பட்டது. பெரும்பான்மை ஆதரவின்றி கருப்பர் கூட்டம் தனித்துவிடப்பட்டது. இப்போது ஜார்ஜ் பொன்னையா தனித்து விடப்பட்டு இருக்கிறார். இவர்கள் எல்லாம் திமுகவிற்கு ஓட்டு கேட்டவர்கள்; திமுக வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று முழங்கியவர்கள்.

ஒன்று அடக்கிவாசி அல்லது அமைதியாக இரு என்பதுதான் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு திமுக அரசு சொல்லும் செய்தி. காவிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்பதில் சென்ற ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் உள்ள வித்யாசம் ஏதுமில்லை என்பதை வருங்காலம் உணர்த்துவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

என்ன செய்வது?

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, அவர்களிடம் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சிநிரல் இருக்கும் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ”பெகாசஸ்.” 19 நாட்களில் 30க்கும் மேற்பட்ட மக்கள் விரோத மசோதாக்களை தாக்கல் செய்து அவற்றை சட்டமாக்க வேண்டும் என்பது  பாஜகவின் நிகழ்ச்சிநிரல்.

அம்மசோதாக்களின் தன்மையை மக்களிடத்தில்  கொண்டு மக்களிடத்தில் எழுச்சியை உருவாக்க வேண்டும் என்பதல்ல எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிநிரல். அவர்களிடம் கார்ப்பரேட் எதிர்ப்பு கொள்கை இல்லாததால் நாடாளுமன்றம் முடக்கம் என்பதற்கு மேல் எதுவும் செய்யப்போவதில்லை. அம்பலமான பெகாசஸ் விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற அமளியை  நன்றாக பயன்படுத்திக் கொண்டது பாஜக.

நீட், மேக்கேதாட்டு, மீன்வள மசோதா, டி.என்.ஏ மசோதா, சி.ஆர்.பி.சி திருத்தம், சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம். , தொழிலாளர் சட்டத்திருத்தம் என கார்ப்பரேட்  – காவி பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக குமபலின்  சதித்தனங்களை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்களை போராட்டங்களில் பங்கு கொள்ள வைக்கிறோமோ அந்த அளவுக்கே பாஜகவை துடைத்தெறிந்து விட்டு  தமிழகத்தை மீட்க முடியும் !!

கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்!

பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலை துடைத்தெறிவோம் !

மக்கள் அதிகாரம்

தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.

4 மறுமொழிகள்

  1. இந்த பாதிரியாரை கைது செய்த விடயத்தில் திமுக அரசு சரியாக செயல்பட்டது என சொல்வதை விட புத்திசாலித்தனமாக செயல்பட்டது என சொல்வதுதான் சரி. ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து பாஜக அகலும் வரை மாநிலத்தை ஆளும் திமுக மாதிரியான மாநிலக் கட்சிகள் இம்மாதிரியான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ள முடியும். மேற்படி பாதிரியாரும் பாரதமாதா அசிங்கம் என்றெல்லாம் மனம் போன போக்கில், நாட்டில் இருக்கும் அபாயகரமான அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொள்ளாமல், பேசியிருக்கிறார். அந்த வகையில் அவர் மீதான கைது நடவடிக்கை தவிர்க்க முடியாதது.

  2. மிகவும் அவசியமான பதிவு. பாசிசத்தை திமுகவை வைத்து தடுத்து விடுவதாக பம்மாத்து காட்டியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். பதில் சொல்லுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க