தமிழ்ச் சமூகத்தில் நீங்கள் அறிவாளியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அதற்கான தகுதிகளில் முதன்மையானது, நீங்கள் துக்ளக் வாசகராக இருந்திருக்க வேண்டும் என்பதுதான். முன்னாள் ‘வருங்கால முதல்வரும்’, ‘சிஸ்டம்’ எஞ்சினியருமான ரஜினிகாந்த் அவர்களால் வியந்தோதப்பட்ட ஒரே இதழ் ’துகலக்’ தான் (ரஜினி வாய்மொழியில்).
அத்தகைய பெருமை வாய்ந்த துக்ளக்கை அதன் நிறுவனர் சோ ராமசாமி நடத்திக் கொண்டுவந்த அதே ‘தரத்தில்’, அவருக்குப் பிறகும் நடத்திவருபவர் குருமூர்த்தி.
ஒருவேளை அவரைப் பற்றி கேள்விப்பட்டிராத, பாவஜீவியாக நீங்கள் இருப்பின், அன்னாரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ”ஆண்மைச்” சான்றிதழை பொதுவெளியில் வைத்து வழங்கியவர்தான் இந்த குருமூர்த்தி.
துக்ளக்கின் நடப்பு இதழில் (4-8-2021), கீழடி அகழாய்வு குறித்து ‘துர்வாசர்’ எழுதிய கருத்துக்கு சமூக வலைத்தளங்கள் முதல் தமிழ்நாட்டு அமைச்சர் பெருமக்கள் வரை அனைவரும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழன் பெருமை என்ற பெயரில், கோடிக்கணக்கில் பணத்தை அகழ்வாய்வில் விரயமாக்குவது சரியானதா? என்று கேட்டிருக்கிறார் குருமூர்த்தி. கொரோனா, மேகேதாட்டு பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருக்க கீழடியும், கொடுமணலும் தான் முக்கியமா எனக் கேட்டுள்ளார் குருமூர்த்தி. எவ்வளவு ‘தீர்க்கமான’ கேள்வி ?
படிக்க :
♦ ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !
♦ திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்
“ராமன் சிலை கிடைச்சிருந்தா, வாயமூடிட்டு இருந்திருப்ப?” என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேட்கிறார்கள். பூமிக்கடியில் எல்லாம் ராமன்சிலை கிடைத்தாலும் குருமூர்த்தி வகையறாக்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு மசூதிக்குள் கிடைக்கும் ராமன் சிலைதான் முக்கியமானது.
உண்மையிலேயே மக்கள் ‘நலனில்’ அக்கறை கொண்டு எழுதப்பட்ட அந்தக் கட்டுரையை ‘புரிந்து’ கொள்ளாமல், அனைவரும் குருமூர்த்திக்கு வயிற்றெரிச்சல் என்றெல்லாம் கூறி அவரை வாட்டி வதக்கியிருக்கிறார்கள்.
கீழடியில் கிடைக்கும் பண்டைய தமிழ் நாகரிகத்தைப் பார்த்து நவதுவாரங்களிலும் ஏன் எரிச்சல் வருகிறது என்றும் கேட்டிருக்கிறார்கள். அப்படிக் கேட்பவர்கள் ஒரு விசயத்தை சிந்திக்க வேண்டும்.
குருமூர்த்தி வகையறாக்கள் தங்களது பிறவி மேட்டிமைத்தன்மையைக் காட்டுவதற்கான புரட்டுகளுக்கெல்லாம் தொல்லியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் வரிசையாக ஆப்பறைந்தாலும் அதனைக் கண்டு அச்சப்படும் சூழ்நிலையை இப்போது அவர்கள் கடந்து விட்டனர். இந்து ராஷ்டிரத்தையும், போலி வரலாற்றுப் பாடங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். இனி அவாள் எல்லாம் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அரசுக் கட்டமைப்பு முழுவதிலும் நிறுவனமயப்பட்ட விதத்தில் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழலிலும், பண்டைய தமிழ்ப் பண்பாடு குறித்து வயிறெரிகிறார் என்றால் தலைக்கனமற்ற அவரது ‘எளிமையை’ பாருங்கள். அதை யாராவது பாராட்டுகிறார்களா ?

சமூக வலைத்தளங்களில் பலரும் மோடி அரசு சரசுவதி நதியைத் தேடுவதற்காக பலநூறு கோடிகளை செலவிடுவது பற்றி எடுத்துச் சொல்லி குருமூர்த்தியை கிண்டலடிக்கிறார்கள். இப்படி எள்ளி நகையாடுபவர்கள் அனைவரும் தொலைநோக்குப் பார்வையற்றவர்களாகவே இருக்கின்றனர்.
சரசுவதி நதி பூமிக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பூமிக்கடியில் இருக்கும் பாதாளச் சிறையில் இருந்து மோடியெனும் புனிதரால் விடுவிக்கப்பட்டுவிட்டால், தெற்கே கன்னியாகுமரி முனை வரைக்கும் அந்த ‘மாயநதி’யின் நீர் பாய்வதோடு, தமிழகமே ‘செழித்தொங்கும்’ என்பதைப் புரிந்து கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.
கீழடி விவகாரம் குறித்து ‘ஆன்டி இந்தியர்கள்’ பலரும் சமூக வலைத்தளங்களில் அலசிவிட்டபடியால் நாம் பேச வந்த முக்கியத் தலைப்பை நோக்கிச் செல்வோம்.
000
மேற்கூறிய துக்ளக் இதழின் தலையங்கத்தில் “விசாரணை தேவை, அராஜகம் கூடாது” என்ற தலைப்பில் பெகாசஸ் உளவுச் செயலி பிரச்சினை பற்றி எழுதியுள்ளார் குருமூர்த்தி.
தலையங்கத்தின் துவக்கத்தில் இந்தியாவில் எழுந்திருக்கும் பெகாசஸ் பிரச்சினையை இரத்தினச் சுருக்கமாக விளக்கிவிட்டு, என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸை தயாரித்த நோக்கத்தை விளக்குகிறார் குருமூர்த்தி.
பெகாசஸ் ப்ராஜெக்ட் எனும் திட்டத்தின் கீழ் அம்னெஸ்ட்டி இண்டர்நேசனலும், இதர அமைப்புகளும் சேர்ந்துகொண்டு இணையத்தில் ‘சர்வசாதாரணமாகக் கிடைக்கும்!?!!’ 50,000 அலைபேசி எண்களை வைத்துக் கொண்டு, அவற்றை பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்ட எண்கள் எனப் பித்தலாட்டம் செய்வதாகக் கூறி கொந்தளிக்கிறார்.
அந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள் குதூகலமாய், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இதே அம்னெஸ்ட்டி இண்டர்நேசனல் நிறுவனம் குறித்து காங்கிரஸ் கட்சி ‘கழுவி ஊற்றியதை’ ஆதாரங்களாக எடுத்துக் குவிக்கிறார். பின்னர், அம்னெஸ்டி இண்டர்நேசனல் நிறுவனம் எப்படி இந்திய அரசுக்கு எதிரானதாக இவ்வளவு நாள் இருந்திருக்கிறது என்பதையும் விவரிக்கிறார்.
கட்டுரையின் இந்த இடத்தில்தான், அன்னாரின் ‘நூலாயுதம்’ பளீரென எட்டிப் பார்க்கிறது.
கசிந்த அலைப்பேசி எண் பட்டியலுக்கும் என்.எஸ்.ஓ கண்காணிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற குருமூர்த்தியின் வாதத்திற்கு அம்னெஸ்ட்டி இண்டநேசனலும், ‘தி வயர்’ நிறுவனமும் ஏற்கெனவே பதிலளித்துவிட நிலையில், தர்க்கரீதியாக அம்னெஸ்ட்டியை எதிர்க்க முடியாத குருமூர்த்தியார், பெகாசஸ் உளவு குறித்து அம்பலப்படுத்திய அம்னெஸ்ட்டியின் பழைய வரலாற்றுக்குள் போய், “அம்னெஸ்டி என்ன யோக்கியமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
எதிராளியின் மீதான கடந்த கால அவதூறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து எதிரியை விழுமியங்கள் அற்றவராகக் காட்டி, எதிராளியின் வாதத்தை குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் பார்ப்பன வித்தையை குருமூர்த்திக்கு யாரேனும் சொல்லித் தரவா வேண்டும் ? ஒயிட் பெல்ட்டுகள் எல்லாம் அந்த விசயத்தில் பிளாக் பெல்ட் சாம்பியன்கள்தான்.
படிக்க :
♦ ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !
♦ அண்டப்புளுகன் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி !
தி வயர், அம்னெஸ்ட்டி ஆகிய இரண்டு நிறுவனங்களுமே மோடிக்கு எதிரானவை என்றும், என்.எஸ்.ஓ. நிறுவனமே குற்றத்தை மறுத்துவிட்டதால், குற்றம் நடக்கவில்லை என்றும் கம்பு சுற்றுகிறார். இறுதியில் முடிக்கும்போது, கண்காணிப்பு நடக்கவில்லை; இதற்கு விசாரணை வைக்கலாம்; ஆனால் நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை தான் வேண்டும் எனக் கேட்பது அராஜகம் என்று கூறி முடித்துள்ளார் குருமூர்த்தி.
மொத்தத்தில், அப்படி ஒரு கண்காணிப்பு நடக்கவேயில்லை. அப்படி நடந்ததாக சந்தேகம் இருந்தாலும் அதற்கு, மோடியே அவருக்கு ஏற்ற வகையில் விசாரணை கமிட்டி அமைத்துக் கொள்வார். இதுதான் தலையங்கத்தில் குருமூர்த்தி கூறவரும் கருத்து.
தலையங்கத்தில், பெகாசஸ் மூலம் உளவு பார்த்தல் என்பது நடக்கவே இல்லை என்ற வாதத்திற்கு ஒரு ஓட்டு குத்தியிருக்கிறது துக்ளக்.
000
அடுத்ததாக, 24-ம் பக்கத்தில் ஆர்.நடராஜன் என்பவர் ”உளவும் தேவையே” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் தனது கட்டுரையில் ஒன்றிய காங்கிரஸ் ஆட்சி முதல், மாநில ஆட்சிகள் வரை அனைத்துமே உளவு பார்த்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். இப்போது உளவு பார்க்கப்பட்டதைப் பற்றி குரல் கொடுப்பவர்கள், முதலில் தங்களது மாநிலத்தில் உள்ள உளவுத்துறையைக் களைத்துவிட்டு வந்து பேசட்டும் என்று தொடைதட்டி சவால் விடுகிறார், நடராஜன் .
உளவு பார்ப்பது அனைத்து அரசாங்கங்களும் செய்யும் விசயம்தான் என்றும், அது அவசியமானதும் கூட என்றும் குறிப்பிட்டு, அதற்கு திருவள்ளுவரையும் துணைக்கு இழுத்திருக்கிறார்.
இப்போது பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக புகார் கூறுபவர்கள், “குடும்ப விவகாரங்களை மட்டுமே அலைப்பேசியில் பேசுவார்கள்” என்றால் எதற்காகப் பயப்பட வேண்டும்? என்று ‘வேதாந்தப் பூர்வமான’ கேள்வியையும் ’வெள்ளை மனசோடு’ எழுப்பியுள்ளார்.
ஐயா நடராஜன் அவர்களின் தர்க்க நியாயத்தையும், வேகத்தையும் பார்க்கும்போது, நாளை முதல் மோடியும் அமித்ஷாவும் தங்களது அலைப்பேசி உரையாடலை மான் கி பாத்தில் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்பார் போலத் தெரிகிறது. மனமெல்லாம் அவ்வளவு வெள்ளை!
இவ்வளவு பெரிய தர்க்கஞானி, வெறும் துக்ளக்கோடு முடங்கியிருக்கிறார் என்பது காலம் அவருக்கு விதித்த சாபக் கேடா அல்லது துக்ளக்கிற்குக் கிடைத்த விமோச்சன ஒளியா என்பது தெரியவில்லை.
சுருக்கமாகச் சொன்னால், கண்காணிப்பு அவசியமானது. அரசு உளவு பார்த்தால், யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்று எழுதியிருக்கிறார். அந்தவகையில், “உளவு பார்ப்பேன்; பார்த்தால் என்ன தப்பு ?” என்ற கருத்துக்கு ஒரு ஓட்டு குத்தியிருக்கிறது துக்ளக்.
மொத்தத்தில், பெகாசஸ் உளவு பார்த்தல் என்பது நடக்கவே இல்லை என்ற வாதத்திற்கு ஒரு ஓட்டுக் குத்து, உளவு பார்ப்பது தவறு இல்லை என்ற வாதத்திற்கு ஒரு ஓட்டுக் குத்து என இரண்டு இடங்களிலும் குத்தியிருக்கிறது துக்ளக்.
“ஜனநாயகக் கட்டமைப்பையே உளவு பார்த்தாயா?” என சட்டப்படி கேள்வி கேட்டால் தலையங்கக் கட்டுரைதான் பதில் !! வேதாந்தப்படி கேள்வி கேட்டால் நடராஜன் கட்டுரை தான் பதில் !!
இரட்டை நாக்கு என்பது சங்க பரிவாரத்தினருக்கு பிறவியிலேயெ வாய்க்கப் பெற்ற ஒரு வரப்பிரசாதம் அல்லவா? துக்ளக்கும் குருமூர்த்தியும் மட்டும் என்ன விதிவிலக்கா ?
பின் குறிப்பு :
பெரும் ‘அறிவாளிகள்’ மட்டுமே படித்து புரிந்து கொள்ளக் கூடிய பத்திரிகையாகிய துக்ளக்கை படிக்கும் போது, ஐயா நடராஜனின் கட்டுரையில் ஒரு இடம் மட்டும் புரியவே இல்லை. அதனையும் குறிப்பிட்டாக வேண்டும். துக்ளக்கை புரிந்துகொள்ளத் தக்க அறிவாளிகள் இருந்தால் பதில் தரலாம்.
ஆர்.நடராஜ் தனது கட்டுரையில், வேவு பார்த்தால் தவறில்லை என்ற வாதத்தை கொஞ்சம் தர்க்கப்பூர்வமாக வைக்கையில், “மாநில முதல்வர்கள் சுயநலத்துக்காக, தங்கள் சின்ன வீட்டையும் வேவு பார்த்தது நியாயம் என்றால், தேசத்திற்காகச் சிலரை பிரதமரோ அவரைச் சேர்ந்தவர்களோ வேவு பார்ப்பதில் தவறென்ன?” என்று கேட்டிருக்கிறார்.
நமக்குத் தெரிந்த சமீபகால வரலாற்றில், மாநில முதல்வராக இருந்து தன் தனிப்பட்ட விவகாரத்துக்காக ஒரு இளம்பெண்ணை வேவு பார்த்த ஒரே முதல்வர், குஜராத்தை ஆண்ட நரேந்திர மோடி தான். மோடியும் அமித்ஷாவும் குஜராத்தில் ஒரு தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு இளம்பெண்ணை கண்காணித்தார்கள் என்று தானே இவ்வளவு நாளும் கேள்விப்பட்டிருக்கிறோம்!!
நடராஜ் என்ன புதுக்கதை சொல்கிறார் ?
சரண்