அனுப்புதல்
சு.ஜிம்ராஜ் மில்டன், வழக்கறிஞர்,
த.பார்வேந்தன், வழக்கறிஞர்,
கோ.பாவேந்தன், வழக்கறிஞர்.

பெறுதல்
காவல் ஆணையர் அவர்கள்,
சென்னை மாநகர காவல்துறை,
சென்னை மாநகர காவல் ஆணையரகம்,
வேப்பேரி, சென்னை – 600 006

மதிப்பிற்குரிய அய்யா,

பொருள் : துக்ளக் பத்திரிக்கை நடத்துவது என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு.குருமூர்த்தி என்பவர் மீது புகார் கொடுப்பது தொடர்பாக…

♦♦♦

ணக்கம், நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரிந்து வருகின்றோம். எனக்கு whatsapp மூலமாக நேற்று (28.11.2019) காலை திரு குருமூர்த்தி என்பவர் பேசியதாக 45 நொடிகள் கால அளவு கொண்ட வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில் மேற்படி திரு குருமூர்த்தி, தற்போதைய தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை, தான் ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று கேட்டதாக தெரிவித்து பேசியிருந்தார். இதுபற்றி அறிந்து கொள்ள நேற்று (28.11.2019) மாலை youtube-ல் பார்த்த போது மேற்படி திரு குருமூர்த்தி, திருச்சியில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் பேசிய 27 நிமிட வீடியோ இருந்தது. மேற்படி வீடியோவில் திரு குருமூர்த்தி பேசியதன் சாரம்சம் பின்வருமாறு;

”சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்தபொழுது ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் வந்தார். என்னை விழா மேடையில் துப்புரவு பணிகளை சூபர்வைஸ் செய்யச் சொல்லி அவமானப்படுத்துகிறார்கள்; அதிமுகவில் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். அதன் பிறகு போ போய் அந்த அம்மா சமாதியில் தியானம் செய் என்றேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது.”

”பிரிந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன்…”

”எடப்பாடி பழனிச்சாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ஜ.க-விடம் எனக்கு செல்வாக்கு இருப்பதால், அவர்களிடம் சொல்லி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என இங்குள்ளவர்கள் பேசினார்கள்.”

கும்பகோணத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் உரையாற்றும் குருமூர்த்தி.

“அரசியல் சாசனப்படி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால், அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தை மாற்றிவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.”

“அதிமுக-வை டிஸ்மிஸ் செய்தபின்பு நிச்சயம் பா.ஜ.க-வால் ஆட்சிக்கு வர முடியாது. அதே நேரம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது?” – என்று பேசியுள்ளார்.

மேற்படி திரு குருமூர்த்தியின் பேச்சில், தான் நினைத்தால் தனது செல்வாக்கின் மூலம் அரசியலமைப்பு உறுப்பு 356-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் தமிழக அரசினை கலைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த நபர் என்பதையும், அதிமுக கட்சியில் சாதாரண உறுப்பினராகக்கூட இல்லாவிட்டாலும் பிரிந்திருந்த அந்தக்கட்சியினை இணைக்கு அளவிற்கு அதிகார மையமாக செயல்படுவதாகவும், தமிழகத்தின் முதல்வரே தன்னிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ளதுடன், அவ்வாறு ஆலோசனை கேட்க வந்தவரை ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று ’உரிமையுடன்’ கூறும் அளவிற்கு நெருக்கமும், அதிகாரமும் படைத்தவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது மேற்கண்ட அரசியல் தரகு, திரைமறைவு வேலைகளைப் பற்றியும், தமிழக முதலமைச்சரையே ”நீங்க எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க” என்று பேசுவதையும் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பரித்து கைதட்டுகின்றனர்.

அரசியல் தரகர் குருமூர்த்தி.

திரு குருமூர்த்தி, தன்னை ஒரு அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், ஆடிட்டர், தற்போது துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் என்பதாக தமிழக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தினை ஏற்படுத்திக் கொண்டு அதிகார மையமாக திரைமறைவு வேலைகளைச் செய்து வருபவர் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகவே தெரிவித்துள்ளார். குறிப்பாக திரு குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் திரு ஓ.பன்னீர் செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ’தியானம் செய்ததும்’; அதிமுக கட்சியிலிருந்து வெளியேறியதும்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததும்; அதன் பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததும்; இதற்கிடையே ஆளுநர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது ஆளுநரின் செயலர் சட்டப்படி செய்ய வேண்டிய நடைமுறைகளை செய்யாமல் தாமதப்படுத்தியதும் ஆகியனவற்றின் பின்னணியில் தான் இருந்தது அவரது பேச்சின் மூலமாகவே பகுதியாக அம்பலமாகியுள்ளது.

திரு குருமூர்த்தி மேற்படியான சட்டவிரோத, திரைமறைவு நடவடிக்கைகள், ஆளுநரின் நேரடியான அதிகாரத்தில் தலையீடு செய்வதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை திரைமறைவு சதிச்செயல்கள் மூலம் தூக்கியெறிய முயற்சிப்பதும், அப்போதைய தமிழகத்தின் முதல்வரை ஆபாசமாக பேசுவதுமான குற்றச்செயல்களாகும்.

படிக்க:
சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !

ஏற்கனவே சென்னை மாநகர சைபர் க்ரைம் பிரிவினரால் சாராயத்தை எதிர்த்து பாடல் பாடியதற்காக திருச்சியைச் சேர்ந்த கோவன் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A-ன் கீழும், தமிழக ஆளுநரைப் பற்றி நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் திரு கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A-ன் கீழும் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஒப்பிடும் போது திரு குருமூர்த்தியின் குற்றச்செயல்கள் தீவிரத்தனமையும், மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். துக்ளக் பத்திரிக்கை நடத்துவதாக கூறிக்கொண்டு, அதன் ஆசிரியர் என்ற பெயரில் சட்டவிரோத, தேசத்துரோக, சமூக விரோத, திரைமறைவு வேலைகளைச் செய்யும் திரு குருமூர்த்தியின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், உரிய விசாரணை நடத்தி துக்ளக் பத்திரிக்கையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மேற்படி குற்றச்செயல்களில் அவருடன் உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,
சு.ஜிம்ராஜ் மில்டன், வழக்கறிஞர்,
த.பார்வேந்தன், வழக்கறிஞர்,
கோ.பாவேந்தன், வழக்கறிஞர்.

நாள் : 29.11.2019,
இடம் : சென்னை.


தகவல் : வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்,
தொடர்புக்கு : 9962366320
மின்னஞ்சல் : chennaiprpc@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க