ட்சிப் பொறுப்பேற்றவுடன், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுவது உறுதி” என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரியணை ஏறியவுடன், ‘எதார்தத்தை’ புரிந்துகொண்டு “முடிந்த அளவிற்கு முயற்சிப்போம், சட்டப் போராட்டத்தைத் தொடருவோம்” என்று மாற்றிப் பேசியது.
எப்படியும் தி.மு.க. நீட் தேர்வை இரத்துசெய்துவிடும் என்று தொடக்கத்தில், பலர் நம்பினார்கள். ஆனால் நீட் தேர்வும் சட்டப் போராட்டமும் ஒருசேர தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது முடிந்தபாடில்லை. அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. சட்டப் போராட்டத்தை மூர்க்கமாக நடத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், அவற்றால் மட்டுமே ஒருக்காலமும் நீட்டை இரத்து செய்ய முடியாது. இதை நாம் சொல்லவில்லை  சட்டப் போராட்ட அனுபவமே போதிக்கிறது!
000
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று மோடி அரசு அறிவித்தது. “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும்” என்று அறிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். நீட்டை இரத்துசெய்வோம் எனச் சொல்லிவிட்டு இப்படிப் பேசுகிறாரே என விமர்சனம் எழுந்தபோது, “நாங்கள் என்ன 24 மணிநேரத்தில் நீட்டை இரத்துசெய்வோம் என்றா வாக்கு கொடுத்தோம்” என்று பேசினார்.
படிக்க :
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பித்தது. நீட் தேர்வும் ஏ.கே.ராஜன் அறிக்கை வெளியாவதும் ஒரே காலத்தில் நடக்கிறது.
முந்தைய அ.தி.மு.க. அரசைப் போல சட்ட மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நீட் தேர்வை முறியடித்துவிட முடியாது என்ற அனுபவத்திலிருந்துதான் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஆய்வுக் குழுவை அமைத்தது தி.மு.க. அரசு.
பின்னர், நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பே தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார். நீட்டுக்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு முகம்கொடுக்கும் வகையில், அடுத்தநாளே சட்டமன்றத்தில் பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவோடு நீட் விலக்கு தனிச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அக்டோபர் 1-ம் தேதி (2021) நீட் தேர்வின் மூலம் சமூகநீதி பறிபோகின்றது, எனவே நீட்டை இரத்துசெய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மேற்குவங்கம், கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை இணைத்து கடிதம் எழுதினார் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மாதக்கணக்கில் நிலுவையில் வைத்துக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியது.
4 மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்றுவரை மசோதா குடியரசுத் தலைவரின் அலுவலகத்தை சென்று சேரவில்லை தமிழக சட்டப்பேரவைக்கும் திருப்பி அனுப்பப்படவில்லை. கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஒருமுறையும் நவம்பர் 27-ம் தேதி மற்றொருமுறையும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநரை நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒன்றும் அசையவில்லை.
கடந்த ஆட்சியில் நடந்ததைப் போலவே தேர்வு நடந்த அன்றைய நாளும் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து மாணவர்களின் தற்‘கொலை’ செய்திகளை நிரப்பியது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது போராட்டக்களமாக மாறும் தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எந்த பெரிய கள எதிர்ப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது.
எடப்பாடி ஆட்சிக் காலத்தில், நீட்டுக்கு எதிராகப் போராடிய பெரும்பாலான ஜனநாயக சக்திகள் தி.மு.க.வின் சட்டப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு தங்கள் கடமையை முடித்துக் கொண்டார்கள்.
அ.தி.மு.க.வின் “சடங்குத்தனமான சட்டப் போராட்டத்தை” ஒப்பிடும்போது தி.மு.க. நடத்துகின்ற “உணர்வுப்பூர்வமான சட்டப் போராட்டம்” நீட் தேர்வை இரத்துசெய்யப்  போதுமானது என்ற மயக்கம் நம்மவர்களை பீடித்திருந்தது. இதனால், அநீதியான நீட் தேர்வு இந்தமுறையும் நம் மாணவர்களின் குருதியைக் குடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
000
நீட் தேர்வு ‘இனிதே’ முடிந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றனர்.
டிசம்பர் 28-ம் தேதி குடியரசு தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, ராஷ்டிரபதி பவனிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவரின் இல்லத்தில் காத்திருந்தனர். கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்து செய்தார் அமித்ஷா. ஆனால் அவர்களை அலைக்கழித்த அமித்ஷா, கிட்டத்தட்ட 10 நாட்கள் காத்திருந்தும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை; சந்திக்க முடியாதது குறித்து தெரிவிக்கப்படவும் இல்லை.
இதுகுறித்து டி.ஆர்.பாலு பேசும்போது, “அமித்ஷாவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” என்றார். “மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது ஜனநாயக விரோதம்” என்றார் மு.க.ஸ்டாலின்.
நிலைமை இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் போதுதான், ஜனவரி 05-ம் தேதி நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் துவக்க நாளில், ஆர்.என்.ரவியை தங்களது கொள்கைப் பிரகடன அறிக்கையை “ஆளுநர் உரையாக” வாசிக்கவைத்தது தி.மு.க. அதில் “நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என அரசு உறுதியாக உள்ளது” என ஆர்.என்.ரவி முழங்கினார். தி.மு.க. ஆதரவு ஊடகங்களும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் “சம்பிரதாய” ஆளுநர் உரையை, ‘தமிழ்நாட்டு ஆளுநரை தி.மு.க. பணியச் செய்துவிட்டது போல’ மிகைப்படுத்திக் காட்டி, “பார்த்தீர்களா, தி.மு.க.வின் பராக்கிரமத்தை” என சிலாகித்தார்கள்.
அதே சட்டமன்றக் கூட்டத்தொடரில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் எனவும் ஆளுநரின் தமிழக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் தெரிவித்து ஆளுநரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள் வி.சி.க.வினர்.
அதேநாளில், மூன்றாவது முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக 7 நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் காத்திருந்தனர். அன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டி.ஆர்.பாலு, “அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்றார்.
அடுத்ததாக, ஆளுநருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனவரி 08-ம் தேதி மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது தி.மு.க. அதில் அமித்ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்காமல் தொடர்ந்து புறக்கணிப்பதையும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநரையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட்டை இரத்து செய்வது குறித்து பேசும்போது, “சட்டப்போராட்டம் தொடரும்” என்று சொல்லி தீர்மானத்தை முடித்துக் கொண்டார்கள்.
இங்கே நாம் ஒரு விசயத்தைப் பரிசீலிக்க வேண்டும். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வுக்குழு அறிக்கை; சட்டமசோதா; அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்; ஆளுநர், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தல் என பல வழிகளில் மூர்க்கமான சட்ட வழி போராட்டங்கள் நடத்தியாயிற்று. இனியும் சட்டப் போராட்டத் தொடர்கதையா?..
அமித்ஷாவை சந்திப்பதற்காக, டெல்லி சென்று நாட்கணக்கில் காதிருக்கும் தமிழக எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
“சட்டப்போராட்ட வழிமுறைகள் குறித்து வல்லுநர்களை ஆலோசித்து அடுத்தகட்ட முடிவெடுப்போம்” என்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன். சட்டத்தைக் கழிப்பறைக் காகிதமாகக்கூட மதிக்காத பாசிஸ்டுகளிடம்போய் சட்டப்போராட்டம் நடத்துவதன் மூலம் நம்மால் எதை சாதித்துவிட முடியும். இதுவரை 13 மாணவர்களை பலிவாங்கியிருக்கிறது இந்த சட்டப்போராட்டப் பாதை. இன்னும் சட்டப் போராட்டப் பாதைக்கு எத்தனை பேரை பலி கொடுக்கப்போகிறோம்? இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? அனிதா இறந்தபோது துடித்துப் போர்க்கோலம் பூண்ட தமிழகம், இப்போது எங்கே?
சட்டவழியில் தி.மு.க. எடுக்கும் முயற்சிகளுக்கு அமித்ஷாவும், பாசிஸ்டு படையணியின் உளவாளி ஆர்.என்.ரவியும் முட்டுக்கட்டை போடுவதும் அவமதிப்பதும், தி.மு.க. என்ற ஒரு கட்சிக்கான அவமானம் அல்ல. தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டின் இறையாண்மையை இழிவுபடுத்துவதாகும். இனியும் சட்டப் போராட்டப் பாதையை மட்டுமே தொடருவோம் என்பதற்கு, இந்த இழிவுகளை மேலும் சுமப்போம் என்பதே பொருள்.
தற்போது நீட் விசயத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, த.வா.க. போன்ற கட்சிகளின் அழுத்தம், இன்றளவும் கருத்தியல்ரீதியாக தமிழக மக்கள் நீட்டை வெறுப்பது, தொடர்ச்சியாக தேர்வுகளின்போது மாணவர் தற்கொலைகள் நடைபெறுவது ஆகியவற்றின் காரணமாகத்தான் இந்த சட்டப்போராட்ட முயற்சிகளைக்கூட தி.மு.க. எடுத்திருக்கிறது.
படிக்க :
நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?
நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!
ஆனால் இந்த நிலைகூட இப்படியே தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. திமுக-வைப் பொறுத்தவரையில் தன்னுடைய ஆட்சியை பிரச்சினை இல்லாமல் ஓட்டுவதற்கு உட்பட்டதுதான் அனைத்தும்.
நீட்டைப் போலவே, “புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம்” என ஆரம்பத்தில் முழங்கியது தி.மு.க. பின்னர் “அதில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்வோம்” என தாளம் மாறிப்பேசினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “எட்டுவழிச் சாலையை நிராகரிப்போம்” என்று பேசினார்கள், “நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை” என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோபித்துக் கொண்டவுடன் “வாருங்கள் ஒத்துழைக்கிறோம்” என வரிந்துகட்டிக் கொண்டு பதில் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு என்ற கிராமத்தில், மக்களை விரட்டியடித்துவிட்டு, சிப்காட்டின் மூலம் ‘வளர்ச்சியை’க் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு – ஜனநாயக சக்திகள் சட்டப்போராட்டப் பாதையில் தி.மு.க.வை நெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதை கைவிட்டுவிட்டு களப்போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, டெல்லிச் சலோ பாதையில் போராட்டங்கள் முன்னேற வேண்டும். தமிழ்நாட்டிற்கே உரிய சிறப்பு அதுதான்!

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க