மிழ்நாட்டில் நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவை கடந்த மாதம் ஒரு அரசாணை மூலம் நியமித்தது. .கே.ராஜன் குழுவின் நியமனத்திற்கு எதிராக பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரிகள் கட்டமைப்பை அபகரிக்கும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இருந்து விலக்கும் வகையிலும் நீட் தேர்வை கொண்டுவந்தது ஒன்றிய பாஜக அரசு.

நீட் தேர்வுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீட் தேர்வு முறை தொடரலாம் என உச்சநீதி மன்றத்தில் ஒரு இடைக்கால உத்தரவைப் பெற்று, நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது மோடி அரசு.

படிக்க :
♦ நீட் தேர்வு : சமூக நீதிக்கு எதிரானதா? || ஃபரூக் அப்துல்லா
♦ நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !

பொதுப்பட்டியலில் கல்வி இருக்கையில், அது தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு நீட்டிலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் சட்டத்தை இயற்ற முடிவு செய்தது. அதற்கான பரிந்துரைகளைப் பெறவும், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யும் வகையிலும் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான கமிட்டியை அமைக்க ஒரு அரசாணையை வெளியிட்டது. அந்தக் கமிட்டியும் மக்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு தொகுத்தது.

இந்நிலையில், பாஜகவின் பொதுச் செயலர்களில் ஒருவரான கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றிய பின்னர், அதுகுறித்து ஒரு ஆய்வுக் கமிட்டியை அமைக்க திமுக அரசு வெளியிட்ட அரசாணை தவறானது என்றும் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது குறிப்பிட்டார். மேலும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

தனது மனுவை அதோடு நிறுத்தவில்லை. கூடுதலாக,  நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால், சாதாரணர்களும் கூட மருத்துவர்கள் ஆகிவிடும் சூழல் அமைந்துவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இருநபர் அமர்வு, இது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது.

தமிழ்நாடு அரசு தமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்தான், நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்ததாகவும், அது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது என்றும், நீட் தேர்வு பாதிப்புகளைக் கண்டறியும் குழுவை அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

கல்வி என்பது மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்று. அந்த வகையில், கல்விச் சட்டங்களை இயற்றுவது குறித்து முடிவெடுக்கவும் ஆய்வு செய்யவும் ஒரு மாநில அரசுக்கு உரிமை உள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து குறைந்தபட்ச அறிவு கொண்டவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான்.

ஆனாலும் நமது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அது குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி வாங்கினீர்களா என்றும் அறிவார்ந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ஒருவேளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மேலானதாக உச்சநீதிமன்றம் இருக்கும் பட்சத்தில் வேண்டுமானால், உச்சநீதிமன்றத்திடமிருந்து அப்படி ஒரு அனுமதி தேவைப்படலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு அடிப்படை உரிமையை மாநில அரசு நிறைவேற்ற அப்படி ஒரு அனுமதி அவசியமில்லை.

இந்த வழக்கு தொடுத்திருப்பதன் மூலம் தனது உண்மையான முகத்தை மட்டுமல்ல, தனது மக்கள் விரோத வழிமுறைகளையும் காட்டியுள்ளது பாஜக.

கல்வி பொதுப்பட்டியலில் இருக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. அந்தச் சட்டமானது ஒன்றிய கேபினட்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றால் நடைமுறைக்கு வந்துவிடும். இதுவரையில் பொதுப்பட்டியலில் உள்ள பல்வேறு துறைகளில் மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் இந்த வகையில் தான் நிறைவேற்றப்பட்டன.

அதிகபட்சமாக, மாநில அரசு இயற்றும் சட்டங்களில் கூடுதல் விவரங்கள், சந்தேகங்கள் மற்றும் அரசியல்சாசனத்திற்கு எதிரான அம்சங்கள் ஆகியவை இருந்தால் மட்டும் ஒன்றிய அரசு அதுகுறித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளும். அதுதான் நடைமுறை. அப்படி பின்பற்றப்படுவதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு அழகு.

பார்ப்பன சனாதனத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் கல்வியில் கொண்டுவந்தே தீரவேண்டும் என துடிக்கும் பாஜக அரசு, தமிழ்நாடு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதை தடுத்தே தீரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு நீட்டிலிருந்து விலக்கு பெறும் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கு, தனக்குச் சாதகமான உத்தியைக் கையாளத் துவங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இழுத்தடித்து, பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து, அதற்குள் தமது நோக்கத்தை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதுதான் பாஜக அரசின் உத்தியாக கடந்த ஏழாண்டுகளாக இருந்துவருகிறது.

உதாரணத்திற்கு ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனிதர்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது எனத் தொடுக்கப்பட்ட வழக்கை கிடப்பில் போட்டு நீர்த்துப் போகச் செய்து, இடைக்காலத்தில் ஆதார் இருந்தால்தான் வாழ முடியும் என்ற நிலைமையை மறைமுகமாக ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியதை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆதார் எனும் தனி மனித அந்தரங்கத் தகவல் சேகரிப்புப் பணியை செய்வதற்கான மசோதாவை, நிதி மசோதா என ஒன்றிய அரசு கூறிய கித்தாப்புக் கதைகளை ‘அப்பாவியாக’ நம்பி, ஆதார் சட்டத்தை அனுமதித்தது உச்சநீதி மன்றம்.

படிக்க :
♦ ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !
♦ ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

நீட் தொடர்பாக தமிழ்நாடு தனிச்சட்டம் இயற்றினாலும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, மேலே சொன்னது போல கிடப்பில் போட்டு, பல ஆண்டுகளாக நீட்டை அமல்படுத்தி பிரச்சினை நீர்த்துப் போன பிறகு நீட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்க வாய்ப்பிருக்கிறது.

மோடி அரசின் இந்த உத்தியைத் தான் நீதிமன்ற உத்தியைத்தான் தற்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்திருக்கிறார் கரு நாகராஜன்.

மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு ஆகிய இரண்டு தரப்புக்குமான பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறையில் சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சமீபத்தில் நம் கண் முன்னே கண்ட உதாரணம் இருக்கிறது.

அது ஜல்லிக்கட்டு போராட்டம் தான். பொதுப்பட்டியலின் கீழ் வரும் விலங்குகள் கொடுமை தடுப்புச்சட்டத்தில் மாநில அரசு வேண்டிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு மறுத்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற மெரினா எழுச்சி தான், ஒன்றிய மோடி அரசை அடிபணியச் செய்தது.

திமுக அரசு வெறுமனே சட்டத்தை மட்டும் இயற்றிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கைக் காயப் போட்டு ஆதாரைப் போல நீட்டையும் அடுத்த தலைமுறையினர் மீது திணித்துவிடுவார்கள். இது தமிழக மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே அமைந்துவிடும்.

ஆகவே நீதிமன்றத்தையும், ஒன்றிய அரசையும் அடிபணியச் செய்யும் வகையிலான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், அனைத்து மாணவர்கள் மற்றும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் போராட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்ற வகையில் தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும்.

சரண்