Sunday, November 10, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

-

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 7

மின் தரவுகளின் அடிப்படையில் இந்தியர்களை உளவு பார்ப்பது, இந்திய மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன் மேல் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பிரயோகிப்பது, இதன் மூலம் மொத்த சமூகத்தையும் கண்காணிப்பிற்கும் கட்டுப்படுத்தலுக்கும் உட்படுத்துவது என்பது ஆளும் வர்க்கத்தின் திட்டம். யாருடைய கட்டுப்பாடு?

இணையம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? இன்னும் குறிப்பாகக் கேட்பதானால், உலகம் முழுவதையும் போர்த்தியுள்ள இணைய வலைப்பின்னல் உருவாக்கும் மின் தரவுகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன?

மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுகளுக்குத் தேவையான பிரதான கச்சாப் பொருளாக கட்டமைவற்ற மின் தரவுகளே (Unstructured Data) இருப்பதால், இவை உற்பத்தியாகும் மூலாதாரங்களைக் கட்டுப்படுத்துகின்றவர்களே மின் தரவுகளையும் கட்டுப்படுத்துகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஐ.பி.எம் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களே இந்த மின் தரவுகளைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருக்கின்றன.

மேலும், இணையம் என்கிற சிக்கலான வலைப்பின்னலில் பயணிக்கும் மின் தரவுகளைத் தொழில்நுட்ப ரீதியில் இடைமறிப்பதற்கும், மறையாக்கம் (Encrypt) செய்யப்பட்ட தரவுகளை மறைவிலக்கம் (Decrypt)  செய்வதற்குமான தொழில்நுட்பங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. வேறு வகையாகச் சொல்வதென்றால், இணையத்தில் மின் தரவுகளாகப் பகிரப்படும் எந்த ஒரு தகவலையும் அமெரிக்காவால் இடைமறித்து சேகரிக்க முடியும் – அவற்றைப் பகுப்பாய்வுக்கான கச்சாப் பொருட்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹேக்கர்கள் திருடர்கள் என்றால், அமெரிக்கா சீருடையணிந்த திருடன் என்று வைத்துக் கொள்ளலாம். தொகுப்பாகச் சொல்வதானால், தனியுரிமை (Privacy) என்பதே மெய்நிகர் உலகில் பொருளற்ற வார்த்தை தான்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான் கணினிமயமாக்கத்தை மையப்படுத்தப்பட்ட அளவில் கட்டுப்படுத்தும் துறையாக ஆக்கும் பொருட்டு “தேசிய தகவலியல் மையம்” (National Informatics Center) துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் என ஒவ்வொரு துறையாக கணினி மயமாக்கப்பட்டது. இந்தப் போக்கில் வருமானவரித்துறை, சுங்கத்துறை, கலால்துறை, நீதித்துறை மற்றும் நாடெங்கும் உள்ள மத்திய மாநில அரசுகளின் உளவுத் துறைகளும், காவல்துறையும் கணினி மயமாக்கப்பட்டன.

அரசின் ஒவ்வொரு துறையுடனும் இணைக்கப்பட்ட மக்களின் தகவல்கள் மின் தரவுகளாக பல்வேறு அரசு துறைகளின் கீழ் இருந்த கணினிகளில் சிதறிக் கிடந்தன – 2008 வரை. அந்த ஆண்டு நடந்த மும்பை தாஜ் நட்சத்திர ஓட்டல் தாக்குதலை அடுத்து நடந்த விசாரணைகளில் அந்த தாக்குதலுக்குத் திட்டமிட்ட டேவிட் ஹெட்லி அதற்கு முன் பல முறை இந்தியா வந்து சென்றிருப்பதும், குறிப்பான காரணங்களின்றி நடந்த அந்த பயணங்கள் உளவு அமைப்புகளுக்கு சந்தேகம் ஏற்படுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. ஒரு குறிப்பிட்ட நபர் தொடர்பாக வெவ்வேறு துறைகளால் சேகரிக்கப்படும் மின் தரவுகள் இவ்வாறு சிதறிக் கிடப்பதை உணர்ந்த பின்னரே, இவற்றை ஒருங்கிணைந்த முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டிய தேவையை உணர்ந்ததாக அரசு கூறியது.

நேட்கிரிட் (NATGRID – National Intelligence Grid) – என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வுச் சட்டகம் தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டதாக அரசு கூறியது. ஆரம்பத்தில் ரா, ஐ.பி, பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு (FIU) உள்ளிட்ட உளவு அமைப்புகளின் மின் தரவுகள் மற்றும் வருமான வரி, அமலாக்கத்துறை, போதைத் தடுப்புப் பிரிவு போன்ற 11 மத்திய அமைப்புகளின் மின் தரவுகளை நேட்கிரிட்டில் சேகரித்து பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேற்கண்ட துறைகளுடன் வங்கித் துறை, கடன் அட்டைகள், குடியேற்றத் துறை, இரயில்வே மற்றும் விமானப் பயண விவரங்கள், பல்வேறு மாநிலங்களின் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் என இருபத்தோரு துறைகளின் மின் தரவுகளை நேட்கிரிட் சேகரிக்கத் துவங்கியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்கிற முகாந்திரத்தில் துவங்கி பின்னர் மெல்ல மெல்ல உள்நாட்டு மக்களின் தனிப்பட்ட விவரங்கள் வரை மூக்கை நுழைக்கும் பகாசுர உளவுத் தகவல் சேமிப்புக் கிடங்காக நேட்கிரிட்டை விரிவு படுத்தியுள்ளார் மோடி.

சர்வாத்ர கண்கள் – அதாவது அனைத்தும் தழுவிய பார்வை கொண்டதாக நேட்கிரிட் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுவிடங்களில் உள்ள சி.சி.டிவி கேமராக்கள், சாட்டிலைட் படங்கள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் (CDR) உட்பட குடிமக்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை மின் தரவுகளாக பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்ப சாத்தியங்களை நேட்கிரிட் கொண்டுள்ளது (செல்பேசி குறுஞ்செய்திகள் மற்றும் VOIP அழைப்பு விவரங்கள் உள்ளிட்டு). இதன் மூலம் ஒரு தனிநபரின் இணையச் செயல்பாடுகளை மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் ஆற்றலை நேட்கிரிட் பெற்றுள்ளது.

மேலும் மத்திய கண்காணிப்பு அமைப்பு (CMS – Central Monitoring System) ஏற்கனவே செல்பேசி இணைப்புகளை இடைமறித்து உரையாடல்களைப் பதிவு செய்யும் வேலையைத் துவங்கி விட்டது. இவ்வமைப்பு சேகரிக்கும் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் மின் தரவுகளாக சேகரிக்கப்பட்டு நேட்கிரிட்டுக்கு அனுப்பப்படுகின்றது.

2011 -ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் சுமார் 3,400 கோடி ரூபாய் நிதி இதற்கென ஒதுக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் சுமார் 950 துறைகளில் இருந்தும் மின் தரவுகளைச் சேகரிக்கும் விதமாக நேட்கிரிட்டை விரிவு படுத்தும் திட்டமும் அரசிடம் உள்ளது. நேட்கிரிட் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகச் சொல்லப்படும் “ஒருங்கிணைந்த பார்வை” என்பதை முழுமையாகப் பெறுவதற்குத்தான் இவற்றுடன் ஆதார் எண்களை இணைத்தாக வேண்டும் என்று மோடி அரசு கொடுத்து வரும் நிர்ப்பந்தம். ஏற்கனவே அவ்வாறான ஒரு இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால் அதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை.

எனினும், அதிகாரப்பூர்வமாக நேட்கிரிட்டுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கேள்வி எழுப்பப்பட்ட போது, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவ்வாறான திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பேச்சு மாத்துக்களின் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அமைச்சரின் உறுதிமொழியையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு புறவாசல் வழியாக நுழைக்கப்படும் ஆதார் எதற்காகத் தொடங்கப்பட்டது? இதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விளக்கங்களை அரசு சொல்லி வருகின்றது. ‘குடிமக்கள் அனைவருக்குமான ஒருங்கிணைந்த அடையாள எண்’ என்பதில் தொடங்கி ‘நலத்திட்டங்களைச் சரியானவர்களின் கைகளில் சேர்ப்பதற்கு’ என்பது வரை பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டு விட்டன.

உண்மையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக அளிக்கப்படும் முகவரியை போலீசார் நேரடியாக வந்து சோதித்தறியவதைப் போல் ஆதார் எண் பெறுவதற்காக நாம் கொடுக்கும் முகவரி சோதிக்கப்படுவதில்லை. அதே போல், ஆதார் அட்டையில் அச்சிடப்படும் புகைப்படத்தின் தரம்  உருவ அடையாளத்திற்கான அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ளும் விதமாகவும் இல்லை. எனில், ஆதாரின் நோக்கம் என்ன?

“ஆதார் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அது ‘அடையாள செயற்தளம் (Identity Platform) என்று 2011 -ம் ஆண்டு பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் கருத்தரங்கு ஒன்றில் பேசும் போது நந்தன் நிலகேனி குறிப்பிடுகிறார். அதாவது, மொத்த அடையாளங்களின் ஒட்டுமொத்தமாக (Abstraction layer) ஆதாரை விரிவுபடுத்துவது அரசின் திட்டம். தொலைபேசி வலைப்பின்னலுடனான இணைப்பு, இணையத்துடனான இணைப்பு, வங்கி வலைப்பின்னலுடனான இணைப்பு, போக்குவரத்து, வருமான வரி, மருத்துவம், பொருட்களை வாங்குவதற்கான பணாப்பரிவர்த்தனை – என மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் எவற்றுடனெல்லாம், யாருடனெல்லாம், எதற்காகவெல்லாம் தொடர்பை ஏற்படுத்துகின்றனரோ அந்த அனைத்துத் தொடர்புகளுக்கும் மக்கள் முன் வைக்கும் அடையாளங்களின் ஒட்டுமொத்த இணைப்புப் புள்ளியாக ஆதாரை நிறுவுவது அரசின் நோக்கமாக உள்ளது. ஒரு தனிநபருக்கென இருக்கும் தனியுரிமைசார் வெளிகள் (Private Spaces) அனைத்தையும் ஆதார் எண் என்கிற நூலிழை கொண்டு இணைப்பதே ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக உள்ளது.

ஒருவர் தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் செலவிடும் முறையை மட்டும் கண்காணித்தால், அவர் யாருக்குப் பணம் கொடுக்கிறார், யாரிடம் வாங்குகிறார், எதற்காக கொடுக்கல் வாங்கல் நடக்கிறது, ஒருவரின் சம்பளம் எவ்வளவு, கடன் எவ்வளவு, வீட்டுச் செலவு எவ்வளவு, சேமிப்பு எவ்வளவு என சகலவிதமான பொருளாதார நடவடிக்கைகளையும் ஆராய்வதற்கான வாய்ப்பை இந்த ‘ஒருங்கிணைப்பு’ வாரி வழங்குகின்றது.

மேலும், தொலைபேசி மற்றும் இணைய நடவடிக்கைகளும் அரசின் கண்காணிப்பு எல்லைக்குள் இருப்பதால், ஒருவரது சமூக செயல்பாடுகள் மட்டுமின்றி தனிப்பட்ட செயல்பாடுகளையும் துல்லியமாக கண்காணிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒருவர் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் செலவிடும் நேரத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவரது தனிப்பட்ட ஆர்வம், ஆளுமை மற்றும் பண்புகளைக் கண்காணிக்க முடியும்.

நம்மிடம் இருந்து சேகரிக்கப்படும் மின் தரவுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிக் கணினிகளின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவது என்பது நமது நிகழ்கால நடவடிக்கையை உளவு பார்ப்பது என்பதோடு நிற்பதில்லை. நம்முடைய எதிர்கால நடவடிக்கைகளின் திசையைத் தீர்மானிக்கும் வாய்ப்பையும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் வழங்குகின்றது.

ஆதாரின் அமலாக்கத்திற்கு பல்வேறு விதவிதமான காரணங்களைப் பொதுவெளியில் சொல்லி வரும் அரசு, குறிப்பான சில காரணங்களை அதன் ஆவணங்களின் பக்கங்களுக்குள் சிக்கலான வார்த்தைகளின் பின் ஒளித்து வைத்துள்ளது. உயிரியளவு விவரங்கள் (Biometric information) பதிவு செய்யப்படுவது போலி அட்டைகளைத் தடுப்பதற்கே என்பது நீதிமன்றத்தில் அரசு முன்வைத்த விளக்கம்; ஏன் உயிரியளவு விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றது என்பதை நந்தன் நிலகேனியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “தேசியப் பாதுகாப்பு முக்கியமான விசயம் அல்லவா?” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், மக்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்கும் எதிர்காலத் திட்டம் அரசுக்கு உள்ளதாக அரசின் வழக்கறிஞரே தெரிவித்துள்ளார். இப்போது இந்தப் புதிரின் வெவ்வேறு பாகங்களை இணைத்து புரிந்து கொள்ள முடிகிறதா?

தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த தகவல் கிடங்கு (Database) ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பாதுகாப்புத் துறை மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளின் நீண்ட கால கோரிக்கை. மக்களின் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் இறுக்கத்தை இது உத்திரவாதப் படுத்தும் என்பது ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கை.

ஏற்கனவே நேட்கிரிட் பல்வேறு மூலங்களில் இருந்து வரும் தகவல்களைச் சேகரித்து வருகின்றது. மேலும் ஒவ்வொரு தனிநபரின் நிதி நடவடிக்கைகள் மற்றும் வங்கிச் செயல்பாடுகள் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகள் தொடர்பான மின் தரவுகள் தனியாக பராமரிக்கப்படுகின்றது. அதே போல், உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் போக்குவரத்து விவரங்கள், கைப்பேசி உரையாடல்கள் உள்ளிட்டு ஒருவரின் அனைத்து விதமான சமூக நடவடிக்கைகள் தொடர்பான மின் தரவுகளும் தனித் தனித் தீவுகளாக சேமிக்கப்பட்டுள்ளன. இப்போது ஆதார் எண் அந்த வெவ்வேறு தரவுமூலங்களுக்கான இணைப்புக் கண்ணியாக விளங்கும்.

இதன் சாத்தியங்கள் என்ன, சமூக விளைவு எப்படியிருக்கும் என்பவை குறித்து சிந்திக்குமுன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமானதொரு விசயம் இருக்கிறது. 130 கோடி இந்தியர்களின் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய இந்திய அரசு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதுவும் சொந்த முறையில் உருவாக்கப்பட்டவை அல்ல. பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கிய மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்களின் (Data Analytic Software) தயவைத் தான் இந்திய உளவு நிறுவனங்கள் சார்ந்துள்ளன. எனவே தரவுகளைத் திருடுவதற்கு வெளியில் இருந்து யாரும் ஹேக் செய்ய வேண்டிய தேவையே இல்லை. அவை பன்னாட்டுத் திருடர்களின் கைகளில்தான் பத்திரமாக இருக்கின்றன.

ஒரு மனிதன் தனது சொந்த உடலின் மீதும், தனிப்பட்ட வாழ்வின் மீதும், சமூக வாழ்வின் மீதுமான உரிமையை இழப்பதற்கு அடிமைத்தனம் என்பதைத் தவிற வேறு பொருள் இல்லை. மக்களுடைய உடலின் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை மறுப்பது பார்ப்பனியத்தின் மிக முக்கியமான குணாம்சம். இதனை இருபத்தோராம் நூற்றாண்டில் மீண்டும் நிலைநாட்ட வந்திருக்கிறார் மோடி.

மக்களுக்கு சூடு போடுவதையும் அவர்களைத் தொடர்ந்த கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதையும் மின்னணுவியல் முறையில் சாதிக்க மோடி தலைமையிலான இந்துத்துவ கும்பல் முனைவதால் நாம் இதை டிஜிட்டல் பாசிசம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான மின் புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

  1. அருமையான பதிவு ,
    இணைய பயன்பாட்டை குறைக்க முடிவு செய்திருக்கிறேன்.

  2. இனைய பயன்பாட்டை குறைப்து எல்லாம் நம் தனிமனித சுதந்திரத்தை மீட்கும் நடவடிகையாக நினைக்க முடியாது. ஆதார் , அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் அந்த ஆதாருடன் இணைக்கபட்ட மின் அஞசல் முகவரி, சமுக வளையதளங்கள் ஆகியவற்றை கொண்டு ஒரு மனிதனின் அனைத்து நடவடிக்கைகளும் அரசாளும் , வர்த்தக நிறுவனங்களாளும் கண்காணிக்கபடலாம் என்பதனை கடந்த சில நாட்களாக அனுபவபூர்வ்மாக உணர்துகொண்டு தான் உள்ளேன். பல் வலிக்கு சிகிச்சைக்கு நாம் எடுக்கும் சிகிச்சையின் போதே நாம் அளிக்கும் ஏதே ஒரு தகவல் மூலம் அதனை சார்ந்த வணிக நிறுவனங்களுக்கு செல்கிறது. அங்கிருந்து நாம் உள்ள சமுக வளைய தளத்துக்கு விளம்பரமாக வருகிறது…(நாம் நம் செல் எண்ணை கொடுப்பதன் முலம்). நாம் பயணிக்கும் போது இரயில் வண்டிகளில் மற்றும் விமானங்களில் இப்போது அஆதார் கட்டாயம் ஆகிறது அல்லவா? இதனுடாக ஒரு தனி மனிதன் எங்கே பயணிகின்றான், ஏன் பயணிகின்றான் போன்ற தனிபட்ட விவரங்கள் அரசு கணினியில் சேகரிக்கப்பட்ட வாய்புகள் அதிகம் உள்ளது.

  3. தனிநபர் உரிமைகள் மீது கைவைக்கும் மோடியின் ஆதார் பாசிச நடவடிக்கைகளை தன் கற்பனாவாத புனைவுகளின் ஊடாக தோலுரிக்கின்றார் எழுத்தாளர் பெருமாள் முருகன்…..

    பூனாச்சி (ஒரு வெள்ளாட்டின் கதை) நாவலில்….

    “எதுக்காயா ஆடுவளுக்குக் காது குத்தறாங்க?” இளம் பெண் ஆயாவை பார்த்து ரகசியாமாக கேட்கின்றாள்.

    “ஆடுவளுக்கு இது அடையாளம் பாத்துக்க….காதுகுத்தி அதில தொடு போட்டுடுவாங்க…
    அதில என்னமோ ஒரு எண்ணு இருக்கும்…அத வச்சி எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்கலாம்..”….ஆயா

    “அப்படியா ஆயா?”

    “ஆடுகளுக்கு கொம்பு இருக்குது இல்ல.. அதுங்களுக்கு எப்பவாது கோவம் வந்து ராஜாங்கத்துக்கு எதிரா கொம்பை ஆட்டிட்டா? அப்ப அதுங்களை அடையாளம் கண்டு பிடிக்கோணும் இல்லையா? அதுக்கு தான் காது குத்து….”

    “ஆமாமா, ஆடுங்க கூடுனா அபாயமுனு சும்மாவா சொல்றாங்க..?” என்றார் ஒருவர்

    “என்னவேணு னாலும் சொல்லுங்கப்பா என்னிக்கி ஆடுவ கூடிச்சி..கொம்ப தூக்கிகிட்டு முட்ட வந்துச்சி? கொம்பு இருகிறதே சொறிஞ்சிக்க தானே? ” மற்றவர்.

    குறிப்பு : ஆடுகளை ஆறறிவு உள்ள மிருகங்களாக யாரேனும் கற்பனை செய்துகிட்டு எங்க இனத்தை சிறுமை படுத்துறாரு என்று பெருமாள் முருகன் மேல கேசு கிசு போட்டா உங்களுக்கு வரும் கனவுகளில் ஆடுங்களை விட்டு முட்டவைப்பேன் தெரிஞ்சிக்கிங்க! ஆமாம்.. நான் சொல்றத சொல்லிபுட்டேன்…

    மாணவன் குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க