Sunday, March 26, 2023
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்தொழில்நுட்பங்களின் கண்காணிப்பில் மக்கள் !

தொழில்நுட்பங்களின் கண்காணிப்பில் மக்கள் !

-

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 6

ரு குறிப்பிட்ட சூழலை முன்கூட்டியே அனுமானிப்பதும் அதன் அடிப்படையிலான திட்டமிடலும் இன்றைய உலகத்தில் அதிசயிக்கத்தக்க புதிய விசயங்கள் அல்ல. இயற்கைப் பேரிடர்களை முன்னறிந்து அந்த சூழலில் எம்மாதிரியான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என்பதைக் கணித்து அதற்குத் தகுந்த பொருட்களை இருப்பு வைத்துக் கொள்வதும், அவற்றின் விலைகளைக் கூட்டி வைப்பதும் சில பத்தாண்டுகளுக்கு முன்பே வால்மார்ட் கண்டுபிடித்த வியாபார ‘நடைமுறை’ தான்.

அதே போல் சமூக செயல்பாட்டாளர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வதும் வழக்கமான போலீசு நடைமுறை தான். நவம்பர் 2009 -ல் அமெரிக்காவின் தேசிய நீதி மையமும், நீதி உதவிக்கான பணியகமும் இணைந்து, “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் முன்னறிப் புலனாய்வுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக” மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்தின. எதிர்காலத்தில் போலீசின் பணியானது “என்ன நடந்தது என்பதை ஆராய்வதைத் தாண்டி, என்ன நடக்கவிருக்கிறது என்பதைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவமாக இருக்கும்” என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இந்த அணுகுமுறையும் போலீசுக்குப் புதியதல்ல – இதில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு இணைந்திருப்பதும், அதனடிப்படையில் காவல், கண்காணிப்பு அமல்படுத்தப்பட இருப்பதுமே புதிய விசயங்கள். மேற்படி மாநாடு நடப்பதற்கு முன் 2007 -ம் ஆண்டு புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் அமெரிக்க பாதுகாப்புச் சட்டம் (Protect America Act) நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு முகமையால் (NSA) துவங்கப்பட்ட பிரிசம் (PRISM) என்கிற இரகசிய திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து மின் தரவுகளைச் சேகரிக்கும் பணியை அமெரிக்க அரசு துவங்கியது.

ஒலிக் கோப்புகள், தொலைபேசி அழைப்புகள், மின் அஞ்சல்கள், மின் கோப்புகள், இணையத்தேடுதல் விவரங்கள், முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகள், கைபேசியில் உள்ள பழைய பதிவுகள், இணைப்பு விவரங்கள் என பகுப்பாய்வு செய்யத்தக்க ஒவ்வொரு மின் தரவும் வெரிசான், கூகுள் போன்ற நிறுவனங்களிடமிருந்து அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டு ஊடா மாகானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மீப்பெரும் மின் தரவுக் கிடங்கிற்கு (Big Data lake) அனுப்பப்பட்டன.

மக்களின் ஒப்புதலின்றி அவர்கள் உற்பத்தி செய்த விவரங்களைக் களவாடிய அமெரிக்க உளவு நிறுவனம், அவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மொத்த சமூகத்தையும் கண்காணிக்கத் துவங்கியது. கூகுள், ஃபேஸ்புக், லிங்க்ட்- இன், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்தும், வெரிசான் போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட விவரங்களை மொத்தமாகச் சேமித்து தனித் தனி விவரங்களுக்கு இடையிலான இணைப்புகளை ஆராயும் பணி “பிரிசம்” திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

உதாரணமாக, முகநூலில் அரசுக்கு எதிராகப் பதிவிடும் நபர் அமேசானில் எந்தமாதிரியான நூல்களை வாங்குகிறார் என்பதையும் யூடியூபில் எந்த வீடியோக்களைப் பார்வையிடுகிறார் என்பதையும், அவரது கணினியில் எந்த பத்திரிக்கைகளைப் படிக்கிறார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவருடைய சிந்தனைப் போக்கு குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு வரமுடியும். இதனோடு அவர் செல்பேசியில் யார் யாருடன் பேசுகிறார், அவர்கள் ஒவ்வொருவரும் இதே போன்ற சிந்தனைப் போக்குகள் கொண்டவரா என்பதை அவர்களுடைய விவரங்களையும் அலசிப் புரிந்து கொள்ள முடியும். தொகுப்பாக, குறிப்பிட்ட சிந்தனைப் போக்கு உள்ளவர் எத்தனை பேர் உள்ளனர், இவர்களுக்கிடையே இணைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். இந்தப் புலனாய்வு விவரங்களைக் கொண்டு அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்கு உள்ளவர்களைத் தனியே பிரித்தெடுத்துக் கண்காணிப்பது சாத்தியமாகிறது.

கிடைத்த விவரங்களைச் சலித்தெடுத்து மக்களை வகைபிரிப்பதற்கு இது வகை செய்கின்றது. ஆபத்தில்லாதவர், நுகர்பொருள் மோகம் கொண்டவர், பாலியல் பலவீனம் கொண்டவர், அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்குள்ளவர், சுதந்திரமான லிபரல் சிந்தனை கொண்டவர், வலதுசாரி சிந்தனை கொண்டவர் என மொத்த சமூகத்தையும் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் மூலம் – பிரிசம் திட்டத்தின் மூலம் – தரநிர்ணயம் செய்தது அமெரிக்க அரசு. தனது சொந்த மக்களையே அமெரிக்க அரசு கள்ளத்தனமாக உளவு பார்த்து வந்ததையும், அதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த பிரிசம் திட்டத்தையும் 2012-ம் ஆண்டு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வர்ட் ஸ்னோடன்.

கைபேசிகள், கணினிகள், மருத்துவ உபகரணங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் என உலகம் முழுவதும் சுமார் 4.4 ட்ரில்லியன் மின் தரவு உற்பத்தி மூலங்களில் இருந்து 70.4 ட்ரில்லியன் குறுக்கு இணைப்புகள் உள்ளதாக பிரிசம் திட்டத்தின் வரைபடம் ஒன்று சுட்டிக்காட்டுகின்றது. பிரிசம் தவிர உலகம் முழுவதுக்குமான மின் தரவுப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், மின் தரவுகளை சேகரிக்கவுமான திட்டங்களை அமெரிக்கா வகுத்து செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் 2013 -ம் ஆண்டு வாக்கிலேயே சுமார் 97 பில்லியன் உளவுத் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் சேகரித்துள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது.

சேமிக்கப்பட்டுள்ள மின் தரவுகளைக் கொண்டு ஒரு நிகழ்வை முன்னறிவது துல்லியமானதா? அல்லது சரியானதா?

மனிதனின் சமூக வலைத்தள செயல்பாடுகள், அவன் பேசும் கருத்துக்கள், விரும்பும் வீடியோக்கள், பகிரும் புகைப்படங்கள், பங்கெடுக்கும் விவாதங்களைக் கொண்டு அவனது ஆளுமையில் விஞ்சி நிற்கும் கூறு என்னவென்பதை ஏறத்தாழ கணிக்க முடியும். ஆனால், அந்த ஆளுமை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேல் கையெடுத்து ஒரு சம்பவத்தை நிகழ்த்துமா இல்லையா என்பதை அது மட்டுமே தீர்மானிப்பதில்லை – அந்த மனிதனின் சமூகச் சூழலும் இன்னபிற காரணிகளும் சேர்ந்தே தான் தீர்மானிக்கின்றன.

உதாரணமாக, தினசரி ஐந்தாறு மணி நேரங்கள் பாலியல் சம்பந்தமான ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர் நிச்சயமாக பாலியல் வல்லுறவுக் குற்றமிழைப்பார் என்று கூறமுடியுமா? அந்த நபரை நம்பி வீட்டில் வயதான பெற்றோர்களோ, கான்சரில் பாதிக்கப்பட்ட மனைவியோ, ஊனமுற்ற குழந்தைகளோ இருக்கலாம் அல்லது, குற்றச்செயலில் ஈடுபடுவதற்கான துணிவு அவருக்கு இல்லாமலிருக்கலாம்.

மேலும், ஒரு நபர் பாலியல் வக்கிரச் செயலில் ஈடுபட ஒரு பொருத்தமான தருணம் அமையாமலே கூட போய் விடலாம். அல்லது அப்படி ஒரு தருணம் அமைந்தாலும் அவரது வக்கிரத்துக்கு இலக்காக கூடிய பெண்ணின் தோற்றம்; சம்பந்தப்பட்ட நபரின் தாயைப் போல அமைந்து அவரைத் தடுமாறச் செய்யலாம்.

ஜெயேந்திர சரஸ்வதியையும், சிம்புவையும் செயற்கை நுண்ணறிக் கணினியின் முன் நிறுத்தினால் முந்தையவரை மகாத்மாவாகவும், பிந்தையவரை காமக் கொடூரனாகவும் அது தீர்ப்பளிக்க கூடும். ஆனால், ஜெயேந்திரன் தான் எழுத்தாளர் அனுராதா ரமணனை பாலியல் துன்புறுத்தல் செய்தார்; சங்கரராமனைக் கொன்று பின் நீதியை விலைக்கு வாங்கினார். சிம்புவோ பீப் பாடலைத் தாண்டியதாகத் தெரியவில்லை.

கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களாகட்டும், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடுவதாகட்டும் – ஒருவர் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவாரா இல்லையா என்பதை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் அவரது செயல்பாடுகளில் இருந்து பெறப்பட்ட மின் தரவுகளின் பகுப்பாய்வுகளின் மூலம் மட்டுமே கணித்து விடமுடியாது.

தொழில்நுட்பங்களின் மூலம் மக்களை மேலிருந்து கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் தன்னளவிலேயே ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், ஆளும் வர்க்கம் அதைத் தான் விரும்புகின்றது. மந்தையில் உள்ள ஆடுகளுக்கு சூடு வைத்து அடையாளமிடுவது போல் மக்களின் மேல் அடையாளக் குறியிட்டு வகை பிரித்து வைக்கும் இந்நடவடிக்கையின் எதிர்கால சாத்தியங்கள் எவ்வாறானதாக இருக்கும்? இதை உலகின் இன்னொரு கோடியில் உள்ள சீன அரசாங்கம் மேற்கொண்ட முன்னோட்டத் திட்டம் (Pilot Project) ஒன்றின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

***

“இன்னும் மூன்றாண்டுகளில் எமது அரசாங்கம் நம்பகமானவர்களை சொர்கத்தின் கீழ் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும்; அதே நேரம் நம்பகமற்றவர்களை ஒரு அடி கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்கிறார் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர். மின் தரவுகளை அடிப்படையாக கொண்டு குடிமக்களுக்கு நன்மதிப்புப் புள்ளிகள் (Rating) வழங்கும் திட்டம் ஒன்று சீனாவில் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க முதலாளித்துவ அரசின் நிர்வாக எந்திரம் நீண்ட அனுபவம் கொண்டது என்பதால் அதன் கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் நுட்பமான முறைகளில் இருக்கின்றது –எதேச்சாதிகார சீனாவிலோ மிகவும் வக்கிரமான முறையில் மேலிருந்து திணிக்கப்பட்டுள்ளது.

மேற்குலகத் தயாரிப்புகளான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசாங்கம், தமது நாட்டுக்குள் சொந்தமுறையில் தயாரித்து வளர்த்தெடுக்கப்பட்ட சமூகவலைத்தளங்களையே ஊக்குவிக்கின்றது. பெரும்பாலான சீனர்கள் வெய்போ, வீசேட், ரென்ரென், டௌபன் போன்ற சமூகவலைத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். இது போன்ற தளங்களின் மூலம் சீன அரசாங்கம் மின் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு உட்படுத்துகின்றது.

ஜியாங்ஜூ மாகாணத்தில் உள்ள சூய்னிங் கவுண்டியில் முன்னோட்ட திட்டமாக (Pilot project) சமூக நன்மதிப்புப் புள்ளிகள் (Social Credit Rating) அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் செலவழிக்கும் விதம், ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்கிற விவரம், பொது இடங்களில் அவர்களது செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், சமூக வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மின் தரவுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் என பல்வேறு தகவல் மூலங்களில் பெறப்பட்ட தரவுகளையும் பகுப்பாய்வு செய்து சுமார் 1,200 அம்சங்களில் மதிப்பிட்டு அவர்களுக்கான நன்மதிப்புப் புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, சூய்னிங் கவுண்டியில் வாழும் குடிமகன் ஒருவருக்கு 1,000 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட நபர் போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவரது 1,000 புள்ளிகளில் இருந்து 20 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும். இணையத்தில் ஒருவரை விமர்சித்தால் 100 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும், அதே போல் குடிப்பழக்கம் இருப்பவர்கள் சில புள்ளிகளை அதற்காக இழக்க வேண்டியிருக்கும். எஞ்சிய புள்ளிகளின் அடிப்படையில் குடிமக்கள் A முதல் D வரை தரநிர்ணயம் செய்யப்படுவார்கள். D என நிர்ணயிக்கப்பட்டவர் அரசின் உதவியையோ, அரசு வேலைகளையோ பெற முடியாது. அவர்கள் சுதந்திரமாக உலவுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஏராளமான ஓட்டைகளுடன் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்தது – சீன ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரே கூட இத்திட்டத்தை விமர்சிக்கத் துவங்கினர். சாலையோரம் சிறுநீர் கழிக்கும் ஒருவர், லஞ்சம் கொடுக்க கூடாது எனும் சிந்தனை கொண்டவராக இருக்கலாம். அதே போல், குடிப்பழக்கம் கொண்ட ஒருவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக இருக்கலாம். ஒரு மனிதனின் மொத்த ஆளுமையின் ஒரு சிறு பகுதி தவறானதாக இருப்பதை வைத்தே அவர் மீதான மதிப்பீட்டைச் செய்ய முடியாது என்கிற அடிப்படை புரிதலின்றி சீன அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் தோல்வியைத் தழுவியது.

சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம், மக்களிடையே எதிர்ப்புகள் எழுந்ததை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாலும், மின் தரவுகளைச் சேகரிப்பதும் அதைப் பகுப்பாய்வு செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சூய்னிங் கவுண்டியில் கிடைத்த அனுபவங்களைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு 2020 -ம் ஆண்டு மேலும் சில திருத்தங்களுடன் நாடெங்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளாதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் தரவுப் பகுப்பாய்வும் செயற்கை நுண்ணறித் திறனும் கைகோர்க்கும் போது ஒவ்வொரு தனிநபரின் எதிர்கால நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்று கண்காணிப்பதற்கான வாய்ப்பை அது ஆளும் வர்க்கங்களுக்கு வழங்குகிறது. எனினும் சமூகத்தை மேலிருந்து நெட்டித் தள்ளுவது சமூகத்தின் எதார்த்த நிலைமைக்கு பொருத்தமற்றது என்பதும் மக்களின் உணர்வுக்கு எதிரானது என்பதும் ஆளும் வர்க்கம் அறியாததல்ல. இருந்த போதிலும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் என்ற குச்சி தனது கரங்களில் இருப்பதால், மக்களை சுய புத்தியற்ற வாத்துக் கூட்டமாக மேய்த்து விட முடியும் என்று முதலாளித்துவம் கருதுகிறது.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.

மின்னஞ்சல்
vinavu@gmail.com

 

 1. வரலாற்று நகைமுரண்

  ஜார்ஜ் ஆர்வெல், அக்ஸிலி போன்ரோர், கம்யுனிஸ சமுகம் வந்துவிட்டால் அது மக்களை கண்காணிக்கும், பெரிய அண்ணன் ஆட்சியில் தனிமனித சுதந்திரம் பறிபோய்விடும் என ஸ்டாலினை காட்டி பிற நாட்டு மக்களை பயமுறுத்தும் விதமாக நாவல்களை புனைந்தனர் (எம் ஐ இடம் பணம் வாங்கிக் கொண்டுதான்). ஆனால் வரலாறு அவர்களை ஜோக்கர்கள் ஆகிவிட்டது.
  உண்மையில் அவர்கள புனைந்த அனைத்தும் நடக்கிறது. ஆனால் முதலாளித்துவ அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும். இப்பொழுது தனி மனித சுதந்திரத்தை கேலிக் கருத்தாக்கியதும் அவர்கள் தான்.
  அண்மைய காலங்களில் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலை பொருவாரியாக அமெரிக்க மக்கள் மீண்டும் வாங்கி படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின், மாவோ காலத்து முதலாளித்துவ பொய்கள் அம்பலமாகி இருக்கும் இதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் பாஸிஸ முகம் வெளியே அம்பலமாகிக்கொண்டிருக்கிறது….

 2. ரஷ்யாவில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கசக்கி பிழியபட்டனர், மந்தைகளை போல் சிறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். அதனை எதிர்த்து உருவான பொல்ஷ்விக்குகள் தஒழிலாலர் நலனை உறுதி ச்ய்வதையும், தொழிற்சாலைகளை தொழிலாளர்களே நடத்த வெண்டும் என்பதை தான் முன் வைத்தார்கள். ஆனால் தொழிற்சாலைகள் மனித குல விரோதம் எனவெல்லாம் அவர்கள் கூறவில்லை… ஆனால் நீங்கள் தொழிநுட்பத்தையும் , அறிவியலையும் ஏதோ மனித குல எதிரி என்பது போல் கட்டுரை எழுதுகிறீர்கள் ? அடுத்தது என்ன “நம் முன்னோர்கள் என்ன முட்டாளா?” என்று கட்டுரை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  • பதிவில் எந்த இடத்தில இந்த கருத்து ஏற்பட்டது? தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. ஏனெனில் நாம் கட்டுரையின் தலைப்பை மட்டும் பார்த்தல் அப்படி தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது…

  • அறிவியல் எவ்வாறு முதலாளிகளால் பணயக்கைதியாக வைக்க பட்டுள்ளது மற்றும் மக்களுக்கு எதிராக பயன்படுத்த படுகிறது பற்றி தானே கட்டுரை பேசுகிறது.

  • //// ஆனால் நீங்கள் தொழிநுட்பத்தையும் , அறிவியலையும் ஏதோ மனித குல எதிரி என்பது போல் கட்டுரை எழுதுகிறீர்கள் ? //////

   கட்டுரையை ஆர்வெல் அண்ணாச்சி படிச்சீங்களா ? நல்லா படிங்க அண்ணாச்சி …

   அறிவியல் மனிதகுலத்தின் மாபெரும் முன்னேற்றத்திற்கான அடித்தளம். அதை மார்க்சியம் எப்போதும் மறுப்பதில்லை. அதனைத் தனது கைகளுக்குள் முடக்கி வைத்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை தொடர்ந்து முடக்கும் வேலையைச் செய்யும் முதலாளித்துவத்தைத் தான் கட்டுரை அம்பலப்படுத்துகிறது,

 3. அருமையான பதிவு மற்ற பாகங்கள் இதுவரை படிக்கவில்லை
  இனிமேல் தான் பின்னால் போய் ஓன்னாம் பாகத்திலிருந்து படிக்க வேண்டும் நான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க