ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !

பெரும்பான்மை மக்களின் நலன் என்ற பெயரில், மக்களின் அந்தரங்க உரிமை பறிப்பு சமூக யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் இந்த தீர்ப்பின் அபாயகரமான பகுதி.

மோடி அரசு இயற்றிய ஆதார் சட்டம் (2016), அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் வந்தது. இவ்வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் 10-ம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (26.09.2018) காலை 11 மணியளவில் வழங்கப்பட்டது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி, ஆகிய மூவரும் சேர்ந்து ஒன்றுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி அசோக் பூசன் அம்மூவரின் தீர்ப்பையும் ஏற்றுக் கொண்டு கூடுதலாக சில கருத்துக்களையும் சேர்த்து தனித் தீர்ப்பில் கூறியுள்ளார். நீதிபதி சந்திரசூட் இந்நால்வரின் தீர்ப்புக்கும் மாறுபட்ட கருத்துக்களோடு தனது தனித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இத்தீர்ப்பின் சாரம் என்னவெனில், ஆதார் சட்டம் ஒரு சில பிரிவுகளை நீக்கிவிட்டால் அரசியல் சாசனத்திற்கு ஏற்ற சட்டமாகிவிடும். அரசு குடிமக்களின் மின்னணு அடையாளங்களை எடுப்பது தவறானதல்ல. தனியார் கையில் அதனை ஒப்படைக்கக் கூடாது. மற்றபடி அரசு ஆதார் சட்டத்தை தொடரந்து செயல்படுத்தலாம்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர் மற்றும் சிக்ரி ஆகியோரின் ஒருமனதான தீர்ப்பு முதலில் ஆதார் சட்டத்திற்கும் அதனை செயல்படுத்திய விதம் குறித்தும் பின்வரும் புகழாரங்களைச் சூட்டுகிறது.

  • ஆதார் போலிகள் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஆதார் சேர்க்கை என்பது ஏமாற்ற முடியாதது.
  • இது விளிம்புநிலை சமூகத்தினருக்கு அதிகாரத்தைக் கொடுக்க வல்லது.
  • அடையாளங்காணுவதற்கான போதுமான பாதுகாப்பு கொண்ட பொறியமைவில் உச்சநீதிமன்றம் திருப்தியடைகிறது.

இதுதவிர இத்தீர்ப்பின் இதர விவகாரங்கள் பின்வருகின்றன

  • ஆதார் சட்டத்தின் பிரிவு 33(2) (தேசிய பாதுகாப்பு கருதி குடிமகனின் ஆதார் தகவல்களை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு தருவதற்கான அதிகாரம்), பிரிவு 57 (தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்கள் தருவதற்கான விதிமுறை), பிரிவு 47 (பிறர் நீதிமன்றங்களில் முறையீடு செய்யக் கூடாது) ஆகியவை நீக்கப்படுகின்றன.
  • 5 ஆண்டுகளுக்கு தகவல்களை சேமிக்கலாம் என்ற வரைமுறை 6 மாதத்திற்கு மேல் தகவல்களை சேமிக்கக் கூடாது என மாற்றப்பட்டுள்ளது. .
  • குழந்தைகளை ஆதாரில் சேர்ப்பதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி தேவை. அதே போல 18 வயதுக்கு பிறகு அக்குழந்தை தனது தகவல்களை நீக்கக் கோரினால் உடனடியாக நீக்க வேண்டும். பள்ளியில் சேர்ப்பதற்கு ஆதார் தேவையில்லை.
  • குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் எதற்கும் ஆதார் கேட்கப்படக்கூடாது.
  • தனியார் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள், வங்கிகள், ஆதார் கேட்கக் கூடாது.
  • பான் கார்டுகளோடு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும்.
  • ஆதார் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
  • நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னர்தான் ஆதார் குறித்த தகவல்களை ’தேச நலனுக்காக’ கூட வெளியிடமுடியும் (இதற்கு முன்னர் இணை இயக்குனரின் அனுமதி மட்டுமே போதுமானதாக இருந்தது)
  • இதுவரையில் தனி அடையாளங்களுக்கான ஆணையம் (UIDAI) மட்டுமே ஆதார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி இனி தனி நபர்களும் வழக்கு தொடுக்கலாம் என்றும் கூறியுள்ளது,

மேலும் தனிமனிதர்களின் அந்தரங்க உரிமை குறித்து நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில், ”மனிதர்களின் கண்ணியம் குறித்த கருத்தோட்டம் அந்தரங்க உரிமை குறித்த தீர்ப்பில் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளது. பெரும்பான்மையினரின் நலன் அல்லது அந்தரங்க உரிமை குறித்த நியதிகளை ஏற்படுத்திய பின்னரே, இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவு குறித்து முடிவு செய்ய முடியும்” என்கிறார்.

இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு இறுதியில் “கல்வி நம்மை கைநாட்டிலிருந்து கையெழுத்துப் போட வைத்திருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் நம்மை கையெழுத்திலிருந்து கைநாட்டிற்கு மாற்றியிருக்கிறது” என நடிகர் பார்த்திபன் பாணியிலான ’குண்டக்க மண்டக்க’ முத்துக்களையும் உதிர்த்துள்ளார் நீதிபதி சிக்ரி.

நீதிபதி சிக்ரி உள்ளிட்ட பெரும்பான்மை (3) நீதிபதிகளின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கும் நீதிபதி அசோக் பூசன் தமது தீர்ப்பில் கூடுதலாக “ஆதாருக்காக குடிமக்களின் உயிரியல் அடையாளங்களை எடுப்பது தனிநபர்களின் அந்தரங்க உரிமையைப் பறிப்பது ஆகாது. ஆதார் திட்டத்தின் வடிவமைப்பு கண்காணிப்பு வேலைகளுக்கு வசதி செய்துதருவதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நால்வரின் தீர்ப்பிலிருந்து மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி சந்திரசூட் வழங்கியுள்ளார். தமது தீர்ப்பில் ”டிஜிட்டல் இந்தியா” மக்களின் அடையாளங்களை மூழ்கடித்துவிடக் கூடாது. தொழில்நுட்பம் சுதந்திரத்தின் எதிர்காலத்திற்கு எதிரானதாக இருக்கிறது.ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்குத் தரக்கூடாது என்ற சிக்ரியின் தீர்ப்பை தாம் ஆமோதிப்பதாகவும், தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களிடமுள்ள வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும்என்றும் கூறியுள்ளார்.

ஆதார் சட்டத்தை பணச் சட்டமாக கொண்டு வந்திருக்கக்கூடாது என்று தனது கண்டனத்தைத் தெரிவித்தார் சந்திரசூட். “ஆளும் கட்சி ராஜ்ய சபாவில் போதிய பலமில்லாமல் இருக்கலாம். அதற்காக இச்சட்டத்தை பணச்சட்டமாக இயற்றியிருப்பது ஒரு தந்திரமான காரியம். இவ்வாறு ஜனநாயக நிறுவனங்களை உதாசீனப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது” என்றும் கூறியுள்ளார். இவர் மட்டுமே ஆதார் எனும் கண்காணிப்பு முறை  கொல்லைப்புற வாயிலாக கொண்டு வருவதை அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் இது சிறுபான்மை தீர்ப்பு என்பதால் உண்மையை ஒருவர் எடுத்து வைத்திருக்கிறார் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவமில்லை.

ஆதார் என்பதே மக்களை தன் கண்காணிப்பிற்குள் வைப்பதற்கான தந்திரம் என்னும் போது, அதனை சட்டமாக்க தந்திரம் செய்த மோடி அரசைக் கண்டித்து என்ன பயன்?

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சுமார் 1000 பக்கங்களுக்கும் மேலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிப்பதால், இதில் இன்னும் என்னென்ன ஓட்டைகள் இட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெரிய இன்னும் சில நாட்கள் பிடிக்கலாம்.

சிக்ரியின் தீர்ப்பில் ”ஆதார்” என்ற மக்கள் மீதான கண்காணிப்புப் பொறியை வெகு எளிதாக ”பெரும்பான்மையினரின் நலன்” என்ற போர்வையின் கீழ் கடந்து சென்றுவிட்டார். மேலும் வங்கிகளில் ஆதார் கேட்கக்கூடாது எனக் கூறிவிட்டு, ’பான்’ அட்டைகளுக்கு, பி.எஃப். போன்றவற்றிற்கு, நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்று நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

பி.எஃப் தகவல் பதிவு செய்ய உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டும். ’பான்’ அட்டை மூலம் ஆதார் எண் வங்கிக்கு இணைக்கப்படும். ஆக உங்கள் நிறுவனங்களும் உங்கள் வங்கியும் இனி உங்களைக் கட்டாயப்படுத்தி ஆதார் எண் கேட்கத் தேவையில்லை. உங்களுக்கு பி.எஃப் பணம் வேண்டுமெனில், உங்கள் வங்கியில் ரூ. 50,000க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில் நீங்களே உங்கள் நிறுவனத்திடம் நேரடியாகவும், வங்கியிடம் மறைமுகமாகவும் உங்கள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.

இதற்கு மேல் மோடி அரசு இன்னின்ன துறைகள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தும் இணைக்கலாம். இப்படி ஆதார் உருவாக்கிய அபாயங்கள் தொடரவும் இத்தீர்ப்பு வழிவகுத்திருக்கின்றது. மேலும் ஆதார் தகவல்கள் மலிவாக கசிய முடியும், வாங்க முடியும் என்பதை சில பத்திரிகையாளர்கள் சுலபமாக நிரூபித்திருக்கின்றனர். ஆனால் மத்திய அரசின் டிஜிட்டல் துறை ஆதார் தகவல்களை பத்திரமாக பாதுகாப்பதாக நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்தியாவில் ஆதார் திட்டம் என்பது உலக அளவில் ஒரு முன்னோடித் திட்டமாகும். உலக முதலாளித்துவத்தின் கீழ் மக்களை கண்காணித்து பொருளியல் ரீதியில் சுரண்டவும், அரசியல் ரீதியில் அச்சுறுத்தவும் இத்திட்டம் ஒரு பரிசோதனை என்ற பெயரிலும் வல்லரசு நாடுகளுக்கு பயன்படும்.

பெரும்பான்மை மக்களின் நலன் என்ற பெயரில், மக்களின் அந்தரங்க உரிமை பறிப்பு சமூக யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் இந்த தீர்ப்பின் அபாயகரமான பகுதி. பெரும்பான்மையினரின் மனசாட்சிக்காக அப்சல் குருவுக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத்தண்டனையைப் போன்றதொரு அபத்தத்தையே தமது தீர்ப்பில் அழுத்தமாக பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம். அன்று தூக்கில் தொங்கியது அப்சல் குரு. இன்று நமது உரிமைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.