23.10.2023

புதிய கல்விக் கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண்: திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!

கண்டன அறிக்கை

சில தினங்களுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கையின் வழியே மாணவர்களுக்கு நாடு முழுவதும் ஒரே அடையாள எண்  வழங்கப் போவதாகவும் அதை ”தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு” (Automated Permanent Academic Account Registry – APAAR) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்காக அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் பெற்றோர்கள் மத்தியில் விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பையும் கொடுத்திருந்தார்கள்.

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த அடையாள எண் வழங்கப்படும் என்றும் இந்த அடையாள எண்ணில் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து தடுப்பதற்குத் தான் இதைக் கொண்டு வருகிறோம் என்று கூறுவதைக் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.


படிக்க: ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி


இதுகுறித்து பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றபடியான கல்விக் கட்டமைப்பையும் சூழலையும் உருவாக்கித் தருவது தான் இடைநிற்றலை குறைக்குமே தவிர வெறும் அடையாள எண் வழங்குவதால் பிரச்சனை தீரப்போவதில்லை என்பதை முன்வைத்தார்.

இடைநிற்றலைக் குறைப்பது அரசின் நோக்கமல்ல என்பது எதார்த்தமாகத் தெரிகிறது. அப்படியானால், இந்த அடையாள எண் எதற்காக கொண்டுவரப்படுகிறது.

ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்த்தால் பொருத்தமாக இருக்கும். மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மானியங்கள் எல்லாம் நேரடியாக அவர்களின் கையில் போய் சேர்வதில்லை; அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முறைகேடு செய்கிறார்கள்; அதை தடுப்பதற்கு தான் ஆதார் எண் என்றார்கள். ஆனால் இன்று மானியங்கள் என்ற பெயரில் அதை குறைத்து ஒன்றும் இல்லாமல் செய்வதற்குத் தான் ஆதார் எண் பயன்பட்டுள்ளது. நாளை ரேஷன் கடை பொருட்களுக்கும் மானியம் நேரடியாக தந்து விடுகிறோம், வெளியில் அரிசி வாங்கிக் கொள்ளுங்கள்  என்று சொல்லி மானியத்தை நிறுத்தப் போகிறார்கள்.

ஆனால் ஆதார் எண்ணை வைத்து மக்களின் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அன்றாட பொருட்கள் வாங்குவது, மருத்துவம் வியாபாரம் வரை அனைத்தையும் இணைத்து மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் தகவல்களை சேர்த்து கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், மக்களின் எதிர்ப்புணர்வை நசுக்குவதற்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கும் தான் இந்த ஆதார் கணக்கு எண் பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மத்திய மோடி அரசு 250-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் கருவிழி ரேகையை வைத்தே  யார் ரயில் நிலையங்களில் நுழைகிறார்கள் என்பதை கண்டறியவும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவும் என்கிறார்கள்.

இப்படியான பாசிச நடவடிக்கைகள், மக்களுக்காக குரல் கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவரை ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை செய்ய, கைது செய்ய  அல்லது தடுத்து நிறுத்த அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும்.

மக்கள் அனைவரையும் வெறும் எண்களில் அடக்கி, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் தீவிரப் படுத்துவதே பாசிச மோடி அரசின் நோக்கம். அதை  மாணவர் மத்தியில் அமல்படுத்தத் தான் இந்த ”அபார்” திட்டம்.


படிக்க: ஒரு ஊடகவியல் மாணவனின் மனக் குமுறல்!


இதன் மூலம் மாணவர்களின் பண்புகள் செயல்பாடுகள் உட்பட அனைத்தையும் கண்காணிக்க முடியும். தனியார்மயமும் கார்ப்பரேட்மயமும் ஆக்கப்படும் கல்வியை, கட்டண கொள்ளைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் யார் என்பது உட்பட அனைத்தும் இந்த எண்களில் இணைக்கப்படும். சமீபத்தில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக உரிமை வேண்டும் என கேள்வி எழுப்பிய பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் (AISA) பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாணவர்கள் நாளை அரசு அலுவலகங்களிலோ வேலைகளிலோ அனைத்திலும் புறக்கணிக்கப்படலாம்.

ஒருவரின் மீது குற்ற வழக்கு பதிவு செய்து அது நிரூபணமாகி அவருக்கு வேலை கிடைக்காது என்பதெல்லாம் ஓரங்கட்டப்பட்டு, யார் ஜனநாயகம் சமூக சிந்தனை மக்கள் நலன் என்று சிந்திக்கிறார்களோ அவர்கள் அனைவரும் புறக்கணிக்கப்படுவார்கள். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை சேதப்படுத்திய ஏ.பி.வி.பி கும்பலை தட்டி கேட்ட தமிழ்நாட்டு மாணவருக்கு அவர் விரும்பிய துறையை மறுக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டார் என்பதையெல்லாம் இதனோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் இந்த எண்களை வழங்குவதை வைத்துக்கொண்டு சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்களை எளிமையாக நடைமுறைப்படுத்த முடியும். இஸ்லாமிய மக்களை இந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக்கி வஞ்சிக்க முடியும்.

நாடே ஒரு திறந்தவெளி சிறைசாலையாக மாற்றப்படுவதை நோக்கிப் போவது நம் கண்களுக்கு தெரிகிறதா?

தெரியவில்லை என்றால் நாம் அனைவரும் எண்களாக மாற்றப்பட்டு அடிமைகளாக வலம் வரப்போகிறோம் என்பதுதான் நிதர்சனம். சிறைக் கைதிகளுக்குக் கூட தண்டனைக் காலத்தில் மட்டும்தான் அடையாள எண்கள் வழங்கப்படும். தண்டனைக் காலம் முடிந்த பிறகு இருக்காது. ஆனால் பிறந்தது முதல் இறப்பது வரை அடையாள எண்கள் நிரந்தரமாக இருக்கும்  என்றால் நாம் எங்கு வாழ்கிறோம்?

பற்றி படர்ந்து வரும் ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்காமல் நமது அடிமை விலங்கை உடைக்க முடியாது.


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க