ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி

"ஹான்ஸ் ன்னா என்னடா?"... | "மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா...அது பாக்கு...சாப்பிட்டா போதை வரும். "...

Homophonesஉம் கூலிப் கதைகளும்

ழாம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடத்தில் Homophones என்ற பகுதி இருக்கிறது. அதை அன்று விளக்கிக் கொண்டு உதாரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தோம்.

அங்கே வகுப்பு மாணவர்கள் 59 பேரில் சிலர் மட்டுமே விடுப்பு மற்ற அனைவரும் இருந்தனர். அவர்களில் ஒரு சில மாணவர்கள் எப்போதும் கலாட்டா செய்யும் மனோபாவத்திலேயே வகுப்பிலிருப்பது மிக இயல்பாக இருந்து வருகிறது.

புத்தகத்தில் இருக்கும் சொற்களுக்கு விளக்கம் கூறிவிட்டு வேறு உதாரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். அந்த வகையில் மாணவன் வைஷந்த் கூடவே எதையோ சொல்ல… மீண்டும் நான் , திரும்ப சொல்லக்கேட்டேன்.

மிஸ்….ஹான்ஸ் – ஹேன்ட்ஸ் என்றான். அது சரியான உதாரணம் இல்லை, அது இங்கு பிரச்சனை இல்லை.‌

“ஹான்ஸ் ன்னா என்னடா?” எனக் கேட்டேன்.‌ (எனக்குத் தெரிந்த பொருள் தான் …அது பல வருடங்களாக மாணவர் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் அதை சாப்பிடும் பழக்கம் வைத்து  ஆரோக்கியம் அழிக்கும் ஒன்று தானே.)

உடனே குறும்புக் கொப்பளிக்கும் இன்னொரு மாணவன் ஜஸ்வந்த்…

“மிஸ் அவன் பாருங்க, ஹான்ஸ் பத்தி பேசறான்.”…

மீண்டும் நான்… “ஹான்ஸ் ன்னா என்னடா?”…

“மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா…அது பாக்கு…சாப்பிட்டா போதை வரும். “…

நிறைய குரல்கள்…

“உங்களுக்கு எப்படிடா தெரியும்?

மிஸ்…பெரியவங்க எல்லாரும் (அவங்க பார்க்கும் எல்லோரும்) அதை சாப்பிடுவாங்க ..”…

பெண் குழந்தைகள் பக்கம் திரும்பி…அப்படியாம்மா…?

மிஸ்… எங்களுக்குத் தெரியாது என்றனர்.

உடனே ஜஸ்வந்த்….மிஸ்…வைஷந்த் போய் அதை சாப்பிட்டு இருக்கான் மிஸ்…

டேய்…நிஜமாவா…

அவனிடமிருந்து கள்ளச்சிரிப்பு..

மிஸ்…இல்லமிஸ்…சத்தியமா மோந்து தான் வாசம் மட்டும் பாத்திருக்கேன்.

மீண்டும் நான்…

“ஏண்டா…கூலிப் பத்தி தெரியுமா டா?”

“மிஸ் …வைஷந்த் தான் அதற்கும் பதில் தருகிறான்…

“மிஸ் ..நல்லாத் தெரியும்”..

“எப்பிடிடா? அது மிட்டாயா?” இது நான்.

வகுப்பில் நிறைய பேருக்கு ஒரே சிரிப்பு…”இல்ல மிஸ். குட்டித்தலகாணி அது.”

“தலகாணியா? அப்படின்னா?”

“தலவாணி மாதிரி உப்பிக்கிட்டு இருக்கும்.‌ அது வாயில இப்படி வச்சுக்குவாங்க”. (செய்து காமிக்கின்றனர்)

“நீங்க யாராச்சும் வச்சு பாத்து இருக்கீங்களா?”

“மிஸ்..இவன்…இவன்…என சிலரை சிலர் சுட்டுகின்றனர்.”

“இல்ல மிஸ்…இப்பல்லாம் சாப்பிடறதில்லை..”

மிஸ்… மீண்டும் ஜஸ்வந்த்…

“நம்ம ஸ்கூல்ல அண்ணாங்க எல்லா…ம் போடுவாங்க.அதான் கிரவுண்டில் காலி பாக்கெட்டுங்க நெறயக் கிடக்குது.”

“வைஷாந்த்து அதை எடுத்து வாயில போடறான் மிஸ்…அவன உடாதீங்க…”

“டேய் … அதெல்லாம் சாப்பிடக்கூடாது டா”…

“அசோக் எழுந்து மிஸ்…எங்கூர்ல அல்லாக் கடையிலுமே தருவாங்க. ஊருக்குள்ள பெரிய ஆம்பளைங்க எல்லாம் அது வாயில போட்டு அடக்கிக்குவாங்க…”

“எல்லாருமா…?”

“மிஸ்.. ஆம்பளைங்க எல்லாரும் போடுவாங்க”..

“டேய்…அது எப்படி டா… நம்ம ஸ்கூல்ல கூட ஆசிரியர்கள் லாம் இருக்காங்களே…அவங்களுமா போடறாங்க..”

“மிஸ்..நான் அப்படி சொல்லல..நம்ம சாருங்க மாதிரி டீசன்ட்டானவங்கள்லாம் போட மாட்டாங்க.”

அதற்குள் ஜஸ்வந்த்…”மிஸ்… எங்கூர்ல” அந்தப் பாக்கெட்டப்  பிரிச்சு ஒரு எலைல போட்டு சுருட்டி பீடி பத்த வப்பாங்க…”

“அது ஏண்டா நீ பாக்குற…?!” அப்படி பண்றவங்கள விட்டு தூரமா போயிடு. (குழந்தைகளிடம் வேறு என்ன சொல்ல)

இதற்கு மேல் என்ன விளக்கம் கேட்பது அந்தக் குழந்தைகளிடம்?!

அது தவறான பழக்கம், புற்றுநோய் வரும் , இறந்து விடுவார்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளைக் கூறி அந்தக் குழந்தைகளைக் கவலையுடன் அனுப்பினேன்.

மூன்று பெண் குழந்தைகள் தனியாக வந்து, மிஸ் இவங்க எல்லாம் இந்த கூலிப்பை சாப்பிடறாங்க மிஸ்.. நாங்க சொன்னா அவங்க அக்கா வந்து என் தம்பியை ஏன் மாட்டி உடுறன்னு திட்றாங்க மிஸ். நாங்க சொன்னோம்னு சொல்லிடாதீங்க மிஸ்…என்று பெயருடன் சொல்லிவிட்டுப் போனார்கள்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர் சிலருடன் இது குறித்து பேசிய போது சிலருக்கு இது மிகப் பெரிய பழக்கமாகி விட்டது எனவும் , பெற்றோருக்கே தெரிந்து பயன்படுத்துபவர்கள் இருப்பதாகவும் கூறி வருந்தினர்.

எப்படி இது கிடைக்கிறது என்று கேட்ட போது , மிஸ் …கொரோனா வந்தப்ப தான் மிஸ் இந்தப் பழக்கம் பழகினான் இவன். நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். கொஞ்சம் மாறி வுட்டுட்டான். அவங்க அம்மாக்கிட்ட சொன்னா , புரிஞ்சுக்கவே மாட்டாங்க.உங்களால தான் என் பையன் கெடறான்னு சொல்வாங்க.பயமா இருக்கு மிஸ்…உண்மையாகக் கவலைப் பட்டனர்.

அதோடு ,   இன்னும் சிலரைப் பற்றியும் சொன்னார்கள். மிஸ் சின்னப் பசங்களுக்கும் தான் போடறாங்க…

உங்களுக்கு நான் அந்தப் பாக்கெட்டை எடுத்துட்டு வந்து காமிக்கிறேன் என்று கூறி, கொண்டு வந்து காமிக்கின்றனர்.

“எங்கேயிருந்து வாங்குறாங்க?”

“மிஸ்…இங்க சில பேக்கரியில் கிடைக்குது மிஸ்”. அது எப்படி டா குழந்தைகளுக்குத் தராங்க?”

“மிஸ்…என்னா மிஸ் பேசறீங்க… அவுங்களுக்கு காசு அதுதான் முக்கியம்.” எல்லாத்துக்கும் சப்ளை பண்றாங்க…

“சின்னப் பசங்க தானடா…இவனுங்களுக்கு காசு எப்படிடா கிடைக்குது?”….

ஒருவன் சொல்றான்…மிஸ் ஒரு குரூப்பா சேர்ந்துடுவாங்க… ஆளாளுக்கு பத்து ரூபா அஞ்சு ரூபா…. இப்படி காசு சேர்த்து வாங்குவாங்க மிஸ்.‌‌

எல்லாத்துக்கும் வழி கண்டு புடிச்சு வச்சு இருக்காங்க..

“ஸ்கூல்ல டீச்சர்ஸ்க்கு தெரியுமா டா?”

ஆங்… எல்லாத்துக்கும் தெரியும்.எப்படி மிஸ் தெரியாம இருக்கும்..? நீங்க தான் புதுசு. அதான் உங்களுக்கு  தெரியலை.

சொன்னது சில …சொல்லாதது பல.

ஆனால் பள்ளிகளில் உறுதிமொழியை எடுக்கக் கூறி வழங்கப்படுத்தி வைத்துள்ளது கல்வித்துறை.

எல்லா குக்கிராமங்களிலும் கூட இப்படி போதைப்பொருள் கலாச்சாரம் ஊடுருவி குழந்தைகளது வாழ்க்கையை நாசமாக்கும் செயல்பாடுகளைத் தடுக்க அரசு என்ன முயற்சி எடுக்கிறது?

காவல் துறையினருக்கு தெரியாமல் பள்ளி‌க்குள் கல்வி பயிலும் மாணவர் வரை இந்த போதைப் பொருள் வருவது எப்படி?

எங்கள் பள்ளியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அத்தனை பள்ளிகளிலும்  இந்தப் பழக்கம் பரவியிருப்பது கண்கூடு. இல்லை என்றால் அரசாங்கம் ஏன் சுற்றறிக்கை விடச் சொல்கிறது?

சுற்றறிக்கை

இதெல்லாம் கல்வித்துறைக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. நாங்க எமிஸ்ல தான் அப்டேட் பண்ணினா போதும். தலைமை ஆசிரியர்களுக்கும் அவங்க எமிஸ் ஆப்ல (EMIS APP) ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை அப்சர்வ்(observation) பண்ணினா போதும்.

விளையாட்டு ஆசிரியர்கள் இது பற்றியெல்லாம் மாற்றங்கள் கொண்டு வர முயற்சி எடுக்கிறார்களா என்று ஆய்வு செய்து பார்க்க எவருமில்லை. இருபாலரும் படிக்கும் பள்ளிக்கு இரண்டு விளையாட்டு ஆசிரியர்களாவது அதுவும் ஆண் ஆசிரியர் ஒருவராவது இருந்தால் தானே இவற்றைக் கண்காணிக்க இயலும்.

எந்தப் பாதுகாப்பும் வழிகாட்டலும் பள்ளிகளில் இல்லை என்பதுதான் நிஜம்.  ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள்  கேட்கணும்னா…கொஞ்சம் அதிகமாகவே பயப்படுகிறார்கள்.

இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வெறும் கூட்டம் போடுவதற்காக மட்டுமே போல.

இந்த ஆசிரியர்கள் சங்கத்தினர் இதையெல்லாம் எதிர்த்து அரசைக் கண்டிக்க வேண்டுமா? நம்ம குழந்தைகள் நம்ம கண்ணு முன்னாலேயே அழியறதப் பார்க்க முடியல.

கல்வி அமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா? இல்ல தெரிஞ்சும் பாலிஸ்டா (polished) போறாரான்னு எனக்குப் புரியலை.

நம்ம மாண்புமிகு முதல்வர் இது பத்தி போதைப் பொருள் ஒழிப்பு பத்தி பேசறாரேன்னு  மட்டும் நினைச்சு சந்தோஷப்படறதா அல்லது பள்ளி நிலவரம் தெரியாம இருக்காறேன்னு வேதனைப்படறதா?

இந்த மரியாதைக்குரிய கலெக்டர்கூட்டம்  மத்ததுக்கு ஆர்டர் போடறாங்களே…. ஊருக்குள்ள வர்ற போதைப் பொருளத் தடுக்க என்ன செய்யறாங்கன்னு தெரில.

சரி அரசாங்கம் தான் கண்டுக்கல, ஆசிரியர்களுக்கும் பொறுப்பில்லை , பெத்தவங்களுக்கும்  பெரிசா தெரியல…. இதெல்லாம் தாண்டி மாணவர் அமைப்புகளுக்கு இது தெரியாதா? தெரியும்னா அவங்க ஏன் இதுக்கு குரல் கொடுக்கல? தெரியாதுன்னா இது கூட தெரியாம என்ன அமைப்பு வச்சு இருக்காங்க?

குழந்தைகளுக்காக வேலை செய்யும் பலரும் ரொம்ப பாதுகாப்பா இதையெல்லாம் குறித்து கவனமா கடந்து போறது வருத்தமாக இருக்கு.

எல்லாம் தாண்டி இந்த ஊடகங்கள் இருக்கே.‌‌அப்பப்பா….நயவஞ்சகர்கள். எதை செய்தியாக்கணுமோ அதைக் கண்டு கொள்வதே இல்லை.

முக்கியமாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு கல்வி திட்டமிட்டு மறுக்கப்படுவதன் பல வழிகளில் இது இப்போதைய_டிரெண்ட்.

பள்ளிகளும் அமைதியாக இது போன்ற மாணவர்களின் கல்விக்கு கல்லறை கட்டி வருகின்றன.

(குழந்தைகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)


முகநூலில் : ஆசிரியர் உமா மகேஷ்வரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

disclaimer



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க