நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்பிலான `ஹெராயின்’ போதைப் பொருள் பறிமுதல்!

தனியார் துறைமுக அதானிகளும் போதைப் பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்பிலான `ஹெராயின்’ என்ற போதைப் பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் நவசேவா துறைமுகத்துக்கு கடத்தி வரப்படுவதாக டெல்லி போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததின் பேரில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் முந்திரா துறைமுகம் உட்பட பல தனியார் துறைமுகங்களில் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நமது நாட்டின் பல இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த தனியார் துறைமுகங்களும் போதைப் பொருள் மாஃபியாக்களும் அடங்கிய கூட்டணி. அதானியின் மீதோ முந்த்ரா துறைமுகத்தின் மீதோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது மோடி அரசின் கீழ் கூடுதல் சிறப்பு.

படிக்க : ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!

அதானியின் முந்த்ரா துறைமுகம் போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரம்!

போதைப்பொருள் கடத்தல் தொழிலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது குஜராத். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அங்கே 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பிடிபட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதிகூட அங்கே ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் சிக்கியிருக்கிறது.

ஆப்கன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து குஜராத்துக்குக் கடத்திவரப்படும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்படும் முக்கிய இடமாக இருப்பது அதானியின் முந்த்ரா துறைமுகம் உள்ளிட்ட தனியார் துறைமுகங்கள்தான். கடந்த ஜூலையில் முந்த்ரா துறைமுகம் அருகே சுமார் 376.5 கோடி ரூபாய் மதிப்பிலான 75.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஜவுளி சரக்குப் பெட்டகம் என்று மே மாதம் அனுப்பப்பட்ட ஒரு கன்டெய்னரை சோதித்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சரக்கு இருந்தது; அதுவும் ஜவுளி அல்ல…. போதைப்பொருள் மூட்டைகள்!

கடந்த ஆண்டு, செப்டம்பரில் சுமார் 21,000 கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் இதே துறைமுகத்தில் பிடிபட்டிருக்கிறது. அதே ஆண்டு, ஜூன் மாதம் இரானிலிருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பித்து வெளியில் சென்றிருக்கிறது. இதை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து ஆண்டுகளில், குஜராத்தில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கிறது. இது குஜராத்தின் ஆண்டு பட்ஜெட்டைவிட அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

அதானி குழுமத்துக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகம், போதைப்பொருள் கடத்திக்கொண்டு வர பிரதான நுழைவு வாயிலாக இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான போதைப்பொருளில் பெரும் பகுதி ஆப்கானிஸ்தானிலிருந்தே சப்ளையாகிறது. இப்படி ஆப்கனில் உற்பத்தியாகும் போதைப்பொருள்களை, இலங்கைக்குக் கடத்திச் சென்று, பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்குக் கடத்துவதைத்தான் கடத்தல்காரர்கள் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவந்தது இலங்கை அரசு. இதனால் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்தியாவின் மீது அதிகமாக கவனத்தை குவிக்க ஆரம்பித்து விட்டனர் போதைப் பொருள் மாஃபியாக்கள்.

இந்த மாஃபியாக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரானிலிருந்து போதைப்பொருளை நேரடியாக இந்தியாவுக்குள் கடத்திக்கொண்டு வந்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பிரித்து அனுப்புகின்றனர். குஜராத்துக்கு கப்பல்கள் மூலம் மட்டுமல்ல, நள்ளிரவு நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து படகு வழியாக போதைப்பொருள் கடத்திவரப்படும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்.

இப்படி போதைப்பொருள் சர்ச்சையில் தொடர்ச்சியாக சிக்கியதையடுத்து, ஆப்கன், இரான், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை கையாள மாட்டோம் என்று முந்த்ரா துறைமுகம் தெரிவித்தது. இருந்தாலும், போதைப்பொருளை இரானிலிருந்து அனுப்பாமல் துபாயிலிருந்து அனுப்ப ஆரம்பித்திருக்கின்றனர் மாஃபியாக்கள்.

மோடியின் குஜராத்திலோ போதைப் பொருள் தொழிற்சாலைகள் குஜராத் உள்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

படிக்க : பாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் || நாட்டை விற்றால் தேசியம்

இயல்பாகவே தனியார் துறைமுகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு தனியார் முதலாளிகளின் கையில் குவிந்திருக்கிறது. அதிலும் அதானி தான் ஒட்டுமொத்த துறைமுகங்களிலும் அதிகமான துறைமுகங்கள் வைத்துள்ள மிகப்பெரிய கார்ப்பரேட். இங்கு இவர்கள் வைத்தது தான் சட்டம் எனும் போது போதைப் பொருள்களை கடத்தி வருவதும் இங்கிருந்து பல நாடுகளுக்கு அனுப்புவதும் இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதிப்பதும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

முந்த்ரா துறைமுகத்தின் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதிலிருந்தே தெரிகிறது ஒட்டுமொத்த அரசமைப்பின் இலட்சணம். அங்கொன்றும் இங்கொன்றுமாக போதை பொருள்களை பிடித்து விட்டு கணக்கு காட்டும் அதிகாரிகளால் அதானியை இதுவரை ஒன்றும் கிழிக்க முடியவில்லை.

உலக அளவில் இரண்டாவது பணக்காரராக மாறி இருக்கும் அதானியின் சொத்தில் நமது நாட்டு இளைஞர்களின் பல பின்தங்கிய ஏழை நாடுகளின் இளைஞர்களின் சீரழிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் மோடிஅரசுதான் பொதுத்துறை நிறுவனங்களான துறைமுகங்களை அதானிகளுக்கு விற்று இன்று அதானிகளை உலக பணக்காரர் பட்டியலில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால் நமது மாணவர்களையும் இளைஞர்களையும் போதையில் ஆழ்த்தி வேலையில்லா திண்டாட்டம்,கல்வி பறிக்கப்படுவது, பசி, பட்டினி போன்ற எதைப் பற்றியும் கேள்வி எழுப்ப விடாமல் மழுங்கடித்து கொண்டுள்ளனர்.

போதையை ஒழிக்க வேண்டும் என்றால் இந்த காவி கார்ப்பரேட் பாசிச கும்பலையும் சேர்த்தே ஒழித்தாக வேண்டும்.

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க