கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று காலை தாம்பரம் அருகேயுள்ள கட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள விடுதிகளில் மாணவர்கள் மத்தியில் போலீசு கஞ்சா சோதனை செய்தது. இதில் 21 மாணவர்கள் கஞ்சா சாக்லேட்டுகள் உட்பட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளது.
ஆயிரம் போலீசாரை குவித்து அதிகாலையிலேயே இந்த சோதனையை நடத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி பயின்றுவரும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதாக போலீசு கூறுகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருட்களை “சப்ளை” செய்துவந்ததாக சொல்லப்படும் ஜி.செல்வமணி என்ற “ஏ ப்ளஸ்” ரவுடியையும் போலீசு கைது செய்துள்ளது.
படிக்க : பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கும் பா.ஜ.க கும்பல்!
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். ஒரு தனி நகரமாக பார்க்கப்படும் அளவிற்கு பல்கலைக்கழக-கல்லூரிகளை சுற்றியுள்ள விடுதிகளில் மாணவர்கள் தங்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் கும்பல் களத்தில் இறங்கி வேலை செய்துள்ளது. பொதுவாக நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்க பின்புலம் கொண்ட உயர்த்தட்டு பிரிவு மாணவர்கள் அதிகம் படிக்கக்கூடிய இப்பகுதி சீரழிவுக்கான கேந்திரமாக வளர்ந்துள்ளது.
போதைப்பொருட்களை சப்ளை செய்யும் ரவுடி கும்பல் இதுநாள்வரை மாணவர்கள் மத்தியில் எளிதாக வலம் வந்துள்ளதையே மேற்கண்ட நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதிகார வர்க்கம் இதனை வேடிக்கைப் பார்த்து வந்ததோடு பக்கபலமாகவும் இருந்து வந்துள்ளது. பணம் பறிக்கும் கும்பலாக செயல்பட்டுவரும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்கள் நலன் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. தற்போதும் கூட பல்கலைக்கழக-கல்லூரி நிர்வாகங்கள் போதைப்பொருள் பயன்பாட்டையும் புழக்கத்தையும் தடுத்துநிறுத்த எந்த நடவடிக்கையையும் முன்னெடுத்ததாக செய்திகள் வெளியாகவில்லை.
படிக்க : திருப்பூர்: தள்ளுவண்டி உணவகத்தைச் சூறையாடிய இந்து முன்னணி வழிபறி கும்பல்!
கார்ப்பரேட்மயத்தின் விளைவாக உருவான எஸ்.ஆர்.எம். போன்ற கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் நடுத்தரவர்க்க பெற்றோர்களை குறிவைத்துக் கொள்ளையடிக்கும் கேந்திரத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றால், அதன் அருகில் கஞ்சா போதைக் கும்பல் அவர்களுக்கான சாம்ராஜ்யத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சாம்ராஜ்யங்களைப் பாதுகாக்கும் போலீசுதான் ஏதோ நடவடிக்கை எடுப்பது போல் பம்மாத்துக் காட்டுகிறார்கள்.
எனவே, மாணவர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் கல்வி கார்ப்பரேட்மயத்திற்கு எதிராகவும் அதற்கு பக்கபலமாக இருக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுப்பது நம் முன்னுள்ள கடமையாகும்.
ரவி