தமிழ்நாட்டில் காலூன்ற தீவிரமாக முயற்சித்துவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமிழ் மக்களின் பண்பாடல்லாத விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முழுவதும் இந்துமதவெறி பிரச்சாரங்களையும் வசூல் என்ற பெயரில் வழிபறியையும் செய்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிரட்டி பண வசூலில் ஈடுபட்டிருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கும்பல் ஒன்று, கணபதி என்பவரின் தள்ளுவண்டி உணவகத்தை அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.
திருப்பூர் பி.என்.சாலை போயம் பாளையம் அபிராமி தியேட்டர் ரோடு, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. 52 வயதான இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 25 அன்று இந்து முன்னணியை சேர்ந்த ராசுக்குட்டி மற்றும் சிலர் விநாயகர் சதுர்த்தி வசூலுக்கு வந்துள்ளனர். அப்போது கணபதி ரூ.550 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்தத் தொகைக்கு இந்து முன்னணி பெயரில் ரசீது வழங்கியுள்ளனர்.
படிக்க : கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!
இந்நிலையில், மீண்டும் செவ்வாய் கிழமை (செப். 3) அன்று இரவு 10 மணி அளவில் இந்துமுன்னணியைச் சேர்ந்த ராசுக்குட்டி மற்றும் 7 பேர் உள்ளடங்கிய கும்பல் மதுபோதையில் கணபதியின் தள்ளு வண்டிகடைக்குச் சென்று விநாயகர் சிலை வைக்க கூடுதல் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளது. மேலும், அடாவடியாக மூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுக்க வேண்டுமென அக்கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது.
கூடுதல் பணம் தர மறுத்த தள்ளுவண்டி உரிமையாளர் கணபதி ஏற்கெனவே நன்கொடை கொடுத்து விட்டதாகக்கூறி, ரசீதைக் காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி குடிபோதைக் கும்பல், கணபதியின் தள்ளுவண்டிக் கடையை சூறையாடியது. கணபதியையும் தாக்க முயன்றது.
இதுகுறித்து கணபதி, அனுப்பர் பாளையம் போலீசு நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசு வழக்குப் பதிவு செய்து, இந்து முன்னணியைச் சேர்ந்த ராசுக்குட்டியை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
படிக்க : மகாராஷ்டிரா தேர்தல் தேதி: எஜமானின் உத்தரவுக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையம்!
இதனிடையே, இந்து முன்னணி அமைப்பு வழக்கம் போல, கடையைச் சூறையாடியவர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று ஓடி ஒளிந்து கொண்டுள்ளது. இன்னொருபுறம் ராசுக்குட்டி தி.மு.க-வை சேர்ந்தவன் என்ற பொய் பிரச்சரத்திலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ராசுக்குட்டி பெயர் அச்சிடப்பட்ட இந்து முன்னணி நோட்டீஸ் மற்றும் அவர் கொடுத்த ரசீது ஆகியவை அவர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்தான் என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.
திருப்பூர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்து முன்னணி கும்பல் மதக்கலவரங்களை உண்டாக்க தீவிரமாக முயற்சித்துவரும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப் பாரிவார கும்பலைச் சேர்ந்த குண்டர்களை ஊருக்குள் வரவிடாமல் விரட்டியடிக்க வேண்டும்.
சோபியா
நன்றி: தீக்கதிர்