சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிலகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று (22-11-2018) இரவு வளாகத்தில் திரண்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த தமது சக மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று (22-11-2018) மதியம் 2 மணியளவில் இரண்டாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திலிருக்கும் விடுதியில் லிஃப்ட் மூலமாக தனது அறை இருக்கும் தளத்திற்குச் சென்றார்.

அந்த மாணவி மட்டும் இருந்த லிஃப்ட்டில் ஏறிய புதிய நபர் ஒருவர் அந்த மாணவியின் முன்னர் வக்கிரத்துடன் “சுய இன்பம்” (Masterbation) செய்திருக்கிறார். இதனைக் கண்டு அலறிய அந்த மாணவி, பாதி தளத்திலேயே லிஃப்ட்டை நிறுத்தி தப்பி வெளிவந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி வார்டனிடம் புகாரளித்துள்ளார்.

படிக்க:
♦ பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை

அதற்கு அந்த வார்டன் முதலில் அந்தப் பெண்ணை அறைக்குச் சென்று வேறு உடை மாற்றுமாறு அறிவுரை கூறியிருக்கிறார். குட்டையான உடைகளை அணிவதால்தான் இது போல நடைபெறுகிறது என்றும், அந்தப் பெண்ணின் உடையின் காரணமாக அவளுக்கு இது நடந்திருக்கிறது என்றும் தத்துவம் பொழிந்திருக்கிறார் அந்த வார்டன். பாதிக்கப்பட்ட நபரையே அசிங்கப்படுத்தும் இழிவான நடைமுறையை பின்பற்றி அம்மாணவியின் வாயை மூடிவிடலாம் என முயற்சித்திருக்கிறார் அந்த வார்டன்.

ஒன்று திரண்ட மாணவியரின் போராட்டம்

இவ்விவகாரம் விடுதி வளாகம் முழுவதும் பரவி மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த பிறகுதான், விடுதி வளாகத்தின் சிசிடிவி பதிவை எடுத்துப் பார்த்து குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டியிருக்கின்றனர்.

அதன் பின்னர் அங்கு வந்த துணைவேந்தர், மாணவிகளை இவ்விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என மாணவிகள் கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றிருக்கிறார்.

I_revolt: டிவிட்டரில்

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்திலிருக்கும் விடுதி மாணவர்களுக்கும் தகவல் பரவி அவர்களும் மாணவிகளும் வளாகத்திலேயே முழக்கமிடத் தொடங்கியிருக்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணையே அவமானப்படுத்திய வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் மாணவிகள். நள்ளிரவிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்துள்ளது.

முதலில் மாணவிகளை வாய்மூட வைத்துவிடலாம் என நினைத்தும் போலீசின் மூலம் தவறான செய்திகளைப் பரப்பியது.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் போலீசிடம் கேட்டதற்கு நிர்வாகத்தின் தரப்பு வக்கீலாகப் பேசியிருக்கிறது போலீசு. வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் தேர்வை நிறுத்துவதற்காகவே மாணவர்கள் இவ்வாறு செய்வதாக வெட்கமற்றுக் கூறியிருக்கிறது.

இந்தப் பிரச்சினை சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்திய அளவில் பரவி விட்டபடியால் வேறு வழியின்றி சிசிடிவியில் அடையாளம் காட்டப்பட்ட நபரைத் தேட போலீசை முடுக்கிவிட்டது நிர்வாகம்.

ஒன்று திரண்ட மாணவிகளும், சிசிடிவியில் பதிவான இளைஞனின் படமும்

எஜமானர்களின் உத்தரவைத் தொடர்ந்து 26 வயதான அர்ஜீன் என்ற நபரைக் கைது செய்திருக்கிறது போலீசு. அர்ஜூன் விடுதி வளாகத்தில் பழைய உணவை அகற்றும் பணியில் இருப்பவர் என்றும் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விருப்பதாகவும் தெரிவித்துள்ளது போலீசு.

விடுதி வார்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதுவரையில் அவர் விடுதி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் எஸ்.ஆர்.எம் நிர்வாகம் கூறியுள்ளது.

படிக்க:
♦ பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் !
♦ எஸ்.ஆர்.எம் விருதுகளை புறக்கணியுங்கள் – ம.க.இ.க அறிக்கை

ஒரு பெண்ணின் மீது ஒரு பாலியல் வன்முறை நடத்தப்பட்டது என்றவுடன் அதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது, குற்றவாளியை எப்படிப் பிடிப்பது, இனி அது போல குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன செய்வது என்பதுதான் சாதாரண மனிதர்களின் சிந்தனையில் வரும்.

ஆனால் கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தின் தலையிலோ, அடுத்த ஆண்டு அட்மிசன் பாதிக்குமா, நன்கொடை பாதிக்குமா, இதை எப்படி வெளிவராமல் அமுக்குவது? என்றெல்லாம்தான் சிந்தனை ஓடுகிறது.

இந்த இழிசிந்தனையை தங்களது போராட்டத்தின் மூலம் சம்மட்டி கொண்டு தாக்கியுள்ளனர். இது முதல் அடிதான். இதனால் பாஜக-வின் கூட்டணியில் இருக்கும் பச்சமுத்துவுக்கு பெரும் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படித்தான் பணிய வைக்கவேண்டும் என்ற படிப்பினையை மாணவர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறது இந்த அடி!

மீ டூவிற்காக பல விவாத நிகழ்ச்சிகள் நடத்திய புதிய தலைமுறை தன்னுடைய ஓனரின் கல்லூரியில் நடந்த மாணவர்களின் போராட்டம் குறித்து விவாதம் நடத்துமா?  புதிய தலைமுறை தொலைக்காட்சியி அப்படி நடத்துவதற்கு மாணவர்கள் அந்த அடியை இன்னும் ஓங்கி இடி போல செய்ய வேண்டும்.

4 மறுமொழிகள்

  1. சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிவேந்தரை பாராட்டி பேசிய சீமான் இந்த விஷயத்தில் என்ன கருத்து சொல்வார்(ரா?) என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  2. முதலில் SRM நிர்வாகம் பெண்கள் விடுதியில் ஒரு ஆணை பணிக்கு அமர்த்தியது பெரும் தவறு, வீதி மீறிய செயல் .. குற்றம் செய்தவன் மட்டுமல்லாமல், நிர்வாகமும் இதற்க்கு சேர்த்து தண்டிக்க பட வேண்டும்

    • ஐயா குற்றம் செய்தவர் கே. ஷண்முகமாமே, அதுவும், தலித் விரோத – வினவு விரோத – ம.க.இ.க விரோத பற்றாளராமே, உண்மையா? என்று ஒரு வாட்சப் வதந்தி வைரலாகியிருக்கிறது.அதை நாங்கள் நம்பவில்லை. நீங்களும் அந்த செய்தியை நம்பி மனச்சோர்வு அடைய வேண்டாம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க