ந்தியப் பெண்கள் கல்வி கற்றிருந்தாலோ, பொருளாதார விடுதலை அடைந்திருந்தாலோ, தற்போதைய நிலையை விட குடும்ப வன்முறைக்கு குறைவாக ஆட்பட்டாலோ, பெண்களின் தற்கொலை விகிதமும் பெருவாரியாக குறைய வாய்ப்பிருக்கிறது என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 2018-ல் பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் “பாலின வேறுபாடு மற்றும் இந்தியாவின் தற்கொலை மரணங்களின் நிலைமாற்றம் : உலகளாவிய நோய் பெரும்சுமை குறித்த ஆய்வு (1990-2016)” வெளியானது.

உலகில் தற்கொலை செய்து கொள்ளும் 10 பெண்களில் நால்வர் இந்தியப் பெண்கள்

அந்த அறிக்கையில், கடந்த 2016-ல் மட்டும் ஒரு லட்சத்திற்கு 15 பேர் என்ற கணக்கில் இந்தியாவில் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது, உலக அளவில் பெண்கள் தற்கொலையின் சராசரியை விட 2.1 மடங்கு அதிகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா உலக அளவில் ஆறாவது இடம் வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலக அளவில் பெண்களை தற்கொலையிலிருந்து திருமணங்கள் தடுத்துவரும் நிலையில், இந்தியாவில் திருமணமான பெண்களே அதிக அளவில் தற்கொலை செய்திருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு.  குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், குழந்தைத் திருமணம், சிறுவயதில் தாய்மை அடைதல், தாழ்ந்த சமூக நிலை, குடும்ப வன்முறை மற்றும் பொருளாதார விடுதலையின்மை ஆகியவையே திருமணமான பெண்களின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

படிக்க:
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை
♦ பாலியல் வல்லுறவுக்கு காரணம் பெண்களே – அரியானா பாஜக முதல்வர்

பால்ய திருமணம் மற்றும் தாழ்ந்த சமூக நிலை:

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பில், இந்தியாவில், 27% பெண்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் முடிவடைவதும், அதில் 8% பெண்கள் 15 முதல் 19 வயதிற்குள்ளாகவே தாய்மையை அடைவதும் தெரிய வந்துள்ளது.

பெண்கள் மீதான குடும்ப வன்முறை அவர்களை தற்கொலைக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது

மேலும், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையானது அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதில் பெரும்பங்காற்றுகிறது. திருமணமான பெண்களில் சுமார் 29% பேர் தங்கள் கணவன்மார்களாலேயே வன்முறைக்குட்படுத்தப்படுகின்றனர். சுமார் 3% பேர் மகப்பேறு காலத்தில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட பெண்களில், வெறும் 36% பெண்களே 10-ம் வகுப்பிற்கு மேல் கல்வி பயின்றவர்கள் ஆவர்.  இத்தகவல் மூலம் நாம் தெரிந்துகொள்வ து என்னவெனில், குழந்தைத் திருமணம், சிறுவயதில் தாய்மையடைதல் மற்றும் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் கல்வி மற்றும் பொருளாதார விடுதலையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஸ்னேகா(SNEHA) இந்தியா மற்றும் வி.எச்.எஸ் (Voluntary Health Services), சென்னை ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான லக்ஷ்மி விஜயக்குமார் கூறுகையில், “ஆண்களைப்போல் அல்லாமல் கல்வி என்பது பெண்களை தற்கொலையில் இருந்து தடுக்கும் ஒரு கருவியாக உள்ளது” என்றார். மேலும், ஆண்கள் தற்கொலைக்கு கடன் தொல்லைகளே பொதுவான காரணமாக இருப்பதாகவும் பெண்களுக்கு திருமணப் பிரச்சினைகளே காரணமாகவும் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது மற்றும் வரதட்சணைக் கொடுமைகளை இல்லாதொழிப்பதன் மூலம்தான் இந்த தற்கொலைகளை தடுக்க முடியும் என்கிறார் லட்சுமி விஜயகுமார்.

ஆண்களின் மதுப் பழக்கம் பெண்களின் தற்கொலைக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும், பெண்களின் தற்கொலைக்கும் மற்றுமொரு நேரடி காரணமாக அமைவது ஆண்களிடம் நிலவும் மதுப் பழக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் ஆணாதிக்க வன்முறைகளை குறைப்பதன் மூலம் பெண்கள் தற்கொலையைக் குறைக்க முடியும். ஒரு தோராய மதிப்பீட்டின்படி, பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாமலிருந்தால் பெண்களின் மொத்த வாழ்நாள் பொழுதில் தற்கொலை முயற்சி வீதம் 28 %  குறையும்.

ஆண் பெண் வேறுபாடு

பெண்களின் தற்கொலை வீதம் குறைந்துள்ள அதே வேளையில் ஆண்களின் தற்கொலை வீதம் 30 வருடங்களாக குறையாமல் அதே நிலையில் உள்ளது.

பெண்களின் தற்கொலை வீதம் 1990-ல் 100,000-க்கு 20 பேர் என்றிருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு 100,000-க்கு 15 என்ற வீதத்தில் அது குறைந்துள்ளது. ஆனால் ஆண்களின் தற்கொலை வீதத்தில் எவ்வித வேறுபாடும் ஏற்படவில்லை. கடந்த 1990-ம் ஆண்டு 1,00,000-க்கு 22-ஆக இருந்தது 2016-ம் ஆண்டில் 21-ஆகவே இருக்கிறது.

உலக அளவில் ஆண்களின் தற்கொலை வீதம் பெண்களை விட 200% அதிகமாக உள்ளது. இந்தியாவில்தான் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களின் தற்கொலை வீதம் வெறும் 50% மட்டுமே அதிகமாக உள்ளது.

15 முதல் 3 வயதில் ஏற்படும் மரணங்களுக்கான காரணங்களில், தற்கொலைதான் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வயதுக்குட்பட்ட ஆண்களின் மரணங்களில் 58% மரணங்கள் தற்கொலையாகவும், பெண்களில் 71% மரணங்கள் தற்கொலையாகவும் அமைகின்றன.

படிக்க:
♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

கணக்கில் காட்டப்படாத பெண்களின் தற்கொலைகள்

இந்த கணக்கீடுகள் அனைத்தும் இந்தியாவில் நிகழும் தற்கொலைகளின் பரப்பை புரிந்து கொள்ள உதவினாலும், இந்தக் கணக்கீடுகளில் தற்கொலை முயற்சிகள் மற்றும் கணக்கில் வராத தற்கொலைகள் விடுபட்டுள்ளன.

குடும்ப அமைப்பில் திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்டால், கணவனின் குடும்பம் பொறுப்பேற்க வேண்டும் என்பதால், பல தற்கொலைகள் வெளியில் சொல்லப்படாமலேயே போகின்றன.

கல்வி, திருமணம் என எல்லாவற்றிலும் பெண்கள் பெற்றோர்களின் வன்முறையை சந்திக்கிறார்கள்

கடந்த 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி தேசிய குற்றப்பிரிவு ஆணையத்தில் பதியப்பட்ட பெண்கள் தற்கொலைகளின் எண்ணிக்கையை விட மதிப்பிடப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கை 37%  அதிகமாக உள்ளது.  இதே வேறுபாடு ஆண்களின் தற்கொலை வீதத்தில் 25% அதிகமாக ஆக உள்ளது.

CEHAT- என்ற அமைப்பின் ஒருங்கினைப்பாளரான சங்கீதா ரெஜெ கூறுகையில், விசமருந்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் பெரும்பாலும், எதிர்பாராதவிதமாக விஷமருந்திய சம்பவங்களாக காட்டப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

இவ்வாறு ’தற்செயலாக விஷம் குடித்த’ நிகழ்வு என்ற அடிப்படையில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 25 பெண்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் குறிப்பாக 15-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களின் மரணத்தில் 17%  மரணங்கள் தற்கொலையால் நிகழ்கிறது.

மேலும் ரெஜெ கூறுகையில், “ பெற்றோரின் தாக்குதல்கள் குறித்து பெருமளவில் பேசப்படுவதில்லை. ஆனால் பெற்றோர்கள் கடுமையாக தாக்குபவர்களாகவும், இவ்வயதினரை கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.  இந்த இளம்பெண்கள் தங்கள் பெற்றோர்களைத் தாண்டி தன்னிச்சையாக வும் சுதந்திரமாகவும் முடிவெடுக்க முடியாதவர்களாய் உள்ளனர்” என்றார். தேசிய சுகாதார கணக்கீட்டின் படி, பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டும், தாக்குதலில் 30%  தங்கள் பெற்றோர்களால் நிகழ்த்தப்படுகின்றது.

பிராந்திய வேறுபாடு

இந்தியாவின் 31 மாநிலங்களில் 26-ல் 15-29 வயதுடையவர்கள் மரணத்தில் தற்கொலையே பெரும்பங்கு வகிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், தற்கொலை வீதம் வளர்ந்த, வளரும் மாநிலங்களை விட பின் தங்கிய மாநிலங்களில் குறைவாக உள்ளது.

நன்றி : படம் – லான்செட் மருத்துவ இதழ்

தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், திரிபுரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தற்கொலையில் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

“வளர்ந்த மாநிலங்களில் நகரமயமாக்கலும் அதன் நீட்சியாக ஏற்படும் ஜன நெருக்கடி, சிறிய குடும்ப அமைப்பு முறை மற்றும் அதீத செலவுகள் முதலியன தற்கொலைக்கான அடிப்படை காரணங்களை கட்டியமைக்கின்றன” என்று இந்திய பொது சுகாதார மையத்தின் பேராசிரியர் ராக்கி டண்டொனா கூறுகிறார்.

1996-2016 காலகட்டத்தில் உத்திரகாண்ட் (45%), சிக்கிம் (43%), ஹிமாச்சல பிரதேசம் (40%) மற்றும் நாகாலாந்து (40%) ஆகிய மாநிலங்களில் தற்கொலை விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்தியாவில் தற்கொலைகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை:

15-39 வயதுக்குட்டவர்களின் மரணத்திற்கு தற்கொலை பிரதான காரணியாக உள்ளது. ஆனால் இது பற்றியான ஆய்வுகள் குறைவாக உள்ளன.  விவசாயிகள் மரணம் குறித்த பொதுமக்களின் கவனத்தைத் தவிர தற்கொலையிலிருந்து அவர்களை எப்படித் தடுப்பது என்பது குறித்த ஆய்வுகள் தேவை.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
♦ நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

கடந்த இருபது ஆண்டுகளில் ஆண்களின் தற்கொலை வீதம் குறையாதது குறித்து விரிவாகப் பார்க்க வேண்டியது இருக்கிறது. “இந்தியாவில் ஆண்களில் தற்கொலைகள் குறித்துப் பார்க்கையில் இளம் ஆண்கள் மிகவும் பாதிப்புக்க்குள்ளாகக் கூடியவர்களாக இருக்கின்றனர். மேலும் திருமணம் அவர்களை தற்கொலையிலிருந்து தடுக்கக் கூடியதாக இல்லை.” என்கிறது லான்செட் இதழின் ஆய்வு.

ஆண்கள் மன அழுத்தத்தை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளில் உதவி கேட்பதில் தயக்கம் கொள்கின்றனர். “பல சம்பவங்களில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்புவரை அவர்கள் பிரச்சினையில் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை.” என்கிறார் ராக்கி டன்டொனா.

கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலைகளை குற்றமற்றதாக்கியது, அதே போல தேசிய மனநலச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஆகிய நடவடிக்கைகள், மனநல சிகிச்சை கிடைப்பதற்கான வழிகளை மேம்படுத்தக்கூடும். மேலும் இது தற்கொலைக்கு முயன்றவர்களின் மீதான களங்கத்தையும் தற்கொலைகள் குறித்த முறையாக தெரிவிக்காமலிருப்பதையும் குறைக்கக்கூடும் என்கிறது லான்செட் ஆய்வு.

”தற்கொலையை தேசிய சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் அறிவிக்க வேண்டும்” என்கிறார் ஹார்வர்டு சான் பொதுநல கல்விநிலையத்தின் உலகளாவிய சுகாதார மற்றும் மக்கள்தொகைத் துறையின் பேராசிரியர் விக்ரம் பட்டேல் தெரிவித்துள்ளார். இவர் இந்தியாவில் தற்கொலைகள் குறித்து 2014-ம் ஆண்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை விகிதத்தைக்  குறைந்திருக்கும் சீனா மற்றும் இலங்கையிலிருந்து, எவ்விதமான தலையீடுகள் தற்கொலையை குறைத்திருக்கின்றன எனக் கண்டறிவதில் உத்வேகம் பெறவேண்டும் என்கிறார் விக்ரம் பட்டேல்.

*****

இந்த ஆய்வுகளில் பல்வேறு விசயங்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக நகரமயமான / நகரமயமாகும் மாநிலங்களில் தற்கொலை விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பப் பணியாக இருந்தாலும் சரி, ஆலைப்பணியாக இருந்தாலும் சரி, பிழிந்தெடுத்து சக்கையாக வெளியே அனுப்புகின்றன தனியார் நிறுவனங்கள். ஒரு பக்கம் வேலை அழுத்தமும் மறுபக்கம் பெரும் நுகர்வு வெறி உருவாக்கும் விரக்தியும் சேர்ந்து தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன. இதற்கு தோதாக இந்திய மக்களின் மனதை நோய்வாய்ப்பட்டதாகவே பார்ப்பனியம் வைத்திருக்கிறது.

இந்தியாவில் பெண்களை, பெற்றோர்களும், சுற்றமும் அவர்களைப் பெருமளவில் ஒடுக்குவதிலும் முடக்குவதிலுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்களின் படிப்பை நிர்ணயித்துக் கொள்வதிலும், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலும் முடிவுகளை பெற்றோரும் உற்றார் உறவினருமே முடிவெடுக்கின்றனர். பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக மட்டுமே பார்க்கும் பார்ப்பனியம் இந்திய சமூகத்தில் ஊறிப் போயிருப்பதன் வெளிப்பாடு இது.

இந்திய ஆண்களின் தற்கொலையில் பெரும்பங்கு வகிப்பவை கடன் தொல்லைகளே என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்று புகுத்தப்பட்டிருக்கும் தனியார்மயம் தாராளமயத்தின் காரணமாக விவசாயம், சிறு தொழில்கள் அனைத்தும் கடுமையான நட்டத்தையே சந்திக்கின்றன. கடன் வாங்கி வட்டி கட்ட முடியாத ஆண்கள், வேறுவழியின்றி தற்கொலை முடிவெடுக்கின்றனர். இதை அரசே நடத்தும் மதுக்கடைகள் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றன.

முதலாளித்துவத்தையும், பார்ப்பனியத்தையும் ஒழித்துக்கட்டாமல் மனித உயிர்களின் இழப்பை எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்தியாவில் தடுக்க முடியுமா என்ன?

நன்றி : IndiaSpend
சுருக்கப்பட்ட தமிழாக்கம்:
வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. சார வாள், மேகாலயா கவர்னர் மானனிய ஷண்முகநாதன் ஜின்னு ஒரு கவர்னர், RSS பிரச்சாரக் ஜல்சா வேலை பாத்தாரில்லியோ, அவாளப் போல ஜிக்கள் இருக்கச்சே பொம்மனாட்டிங்க ஏன் தற்கொலை செய்ய மாட்டாள்? இந்த சேதியையெல்லாம் ஏன் உங்க க்ட்டுரையில சேக்க மாட்டேங்கிறேள்! இல்லே பாஜக சார்வாள் யாராவது உங்கள இதெல்லாம் எழுதக் கூடாதுன்னு கவனிக்கிறாளா? போங்கோ லோகம் ரொம்ப கெட்டுடுத்து!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க