Monday, March 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஎஸ்.ஆர்.எம் விருதுகளை புறக்கணியுங்கள் – ம.க.இ.க அறிக்கை

எஸ்.ஆர்.எம் விருதுகளை புறக்கணியுங்கள் – ம.க.இ.க அறிக்கை

-

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

சென்னை,
20/8/2014

பத்திரிகைச் செய்தி

ஸ்.ஆர்.எம் எனப்படும் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் 2014-ம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழறிஞர்கள், படைப்பாளிகள் 11 பேருக்கு ரூ.1,50,000 லட்சரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை பணமுடிப்புடன் வழங்கப்படும் விருது இது.

மூன்றாவது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதின் 2014-ம் ஆண்டு பட்டியலின் படி எழுத்தாளர் பூமணி, மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம், மருத்துவர் சு.நரேந்திரன், கலை விமரிசகர் இந்திரன் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், வாழ்நாள் சாதனைக்குரிய தமிழ்ப் பேரறிஞராக – பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் பற்றுக் கொண்ட அறிஞர்கள் இவ்விருதினைப் புறக்கணிக்க வேண்டுமென்றும் திரு. பச்சமுத்துவின் தமிழ்மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கவுரவமும் அங்கீகாரமும் தேடித்தரக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

கல்வியை வணிகப்பொருளாக்கி நடுத்தர வர்க்க மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் உருவானதுதான் எஸ்.ஆர்.எம் குழுமம். ஐந்து வளாகங்களில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் 21 கல்லூரிகள், புதிய தலைமுறைபெயரில் தொலைக்காட்சிகள், பத்திரிகை, வேந்தர் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், எஸ்.ஆர்.எம் சொகுசுப் போக்குவரத்து, பார்சல் சர்வீஸ், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் என்று நம்ப முடியாத வேகத்தில் விரிந்து கொண்டே போகிறது. இவை போக, இந்த தொழில் சாம்ராச்சியத்தை பாதுகாத்து விரிவுபடுத்திக் கொள்வதற்காக, சாதிச்சங்கம் இந்திய ஜனநாயகக் கட்சி.

நாடாளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் நேரடியாகத் தமது தொழில் ஆதாயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மல்லையா, ஜின்டால், ரெட்டி பிரதர்ஸ், கட்காரி, தயாநிதி போன்ற தரகு முதலாளிகள் கூட்டத்தில் ஒருவர்தான் திரு.பச்சமுத்து. அதனால்தான் ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்த்து தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, இலங்கையில் கல்வி நிறுவனம் தொடங்க ராஜபக்சே அரசுடன் உறவாடினார். இன்று இனப்படுகொலைக்கான ஐ.நா விசாரணையைக் கூட அனுமதிக்க முடியாது என்று ராஜபக்சே கொக்கரித்துக் கொண்டிருக்கையில், அவரை நியாயப்படுத்தும் திரைப்படத் தயாரிப்பில் வஞ்சகமாக ஈடுபடுகிறார்.

அவரது புதிய தலைமுறைத் தொலைக்காட்சியோ, நடுநிலை தோரணையில், மிகவும் நயவஞ்சகமான முறையில் ஆர்.எஸ்.எஸ் இன் அதிகாரபூர்வமற்ற ஊடகமாகவே செயல்படுகிறது. பெரியார் பணியாற்றிய இந்த மண்ணில் பார்ப்பனியத்தையும் மதவெறியையும் பரப்புகிறது. மற்ற கட்சிகள் பாஜகவை சீந்த தயங்கிய காலத்திலேயே அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அவர்களுக்குப் புரவலராக இருந்து, ஒரு தொகுதியும் பெற்று போட்டியிட்டவர் பச்சமுத்து. இந்த சேவையை அங்கீகரிக்குமுகமாகத்தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, இந்தக் கல்விக்கொள்ளையை தேசிய அளவில் விரிவுபடுத்தவேண்டும் என்று கூறிப் பாராட்டினார் மோடி. அஞ்சல் அலுவலகங்களில் எஸ்.ஆர்.எம் சொகுசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யப்படும் என்ற அறிவித்திருக்கிறது மோடி அரசு. இதைவிட வெட்கங்கெட்ட முறையில் அரசு அதிகாரத்தை தனது தொழில் சாம்ராச்சிய விரிவாக்கத்துக்கு யாரேனும் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?

மோடியின் ஆட்சி இந்தி-சமஸ்கிருத திணிப்பை அரங்கேற்றுகிறது. சாதியக் கொடுங்கோன்மையை நமது தலைசிறந்த பாரம்பரியம் என்று கொண்டாடும் ஓய்.எஸ்.ராவ் இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக்கப்படுகிறார். தீனாநாத் பாத்ரா போன்ற அறிவுத்துறை அடியாட்கள் பெங்குயின் போன்ற சர்வதேச வெளியீட்டு நிறுவனங்களையே மிரட்டிப் பணியவைக்கிறார்கள். நாடெங்கும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. இது இந்து நாடு என்று பிரகடனம் செய்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர். இந்த வெளிப்படையான இந்துத்துவ வெறியர்களைக் காட்டிலும், தங்களை மதச்சார்பற்றவர்கள் போலக் காட்டிக்கொள்ளும் பச்சமுத்துவைப் போன்ற ஐந்தாம்படையினர்தான் ஆபத்தானவர்கள்

இந்த விருது மேற்கண்ட அறிஞர் பெருமக்களுக்கு கணிசமான பணத்தை மட்டுமே கொடுக்கும். ஆனால் தம் வாழ்நாள் உழைப்பின் மூலம் அவர்கள் ஈட்டியிருக்கும் கவுரவத்தை இது நிச்சயம் கெடுக்கும். இந்த விருதளிப்பு விழாவின் மூலம் கவுரவத்தைப் பெறவிருப்பவர், எந்தவித கவுரவத்திற்கும் தகுதியில்லாதவரான திருவாளர் பச்சமுத்து மட்டுமே. இத்தகைய விருதளிப்பு விழாக்களின் நோக்கமும் அதுதான்.

தமிழின் தனித்துவத்தை நிலைநாட்டிய கால்டுவெல், தமிழக மக்களின் சுயமரியாதை உணர்வை நிலைநாட்டிய பெரியார், இந்துத்துவம் எனும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையைத் திரைகிழித்த அம்பேத்கர் போன்றோரின் மரபை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிவதையே தமது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவரும் கூட்டத்தை அதிகாரத்தில் அமர்த்தியிருக்கும் திரு பச்சமுத்துவை கவுரவிப்பது நியாயமா என்பதை விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

ஏற்கெனவே இந்த விருதை அவர் பெற்றிருக்கிறார், இவர் பெற்றிருக்கிறார் என்ற பொக்கு வாதங்கள் வேண்டாம். மற்ற கட்சிகளும் தலைவர்களும் யோக்கியர்களா என்ற எதிர்க்கேள்விகள் வேண்டாம். வேறு யாரையும் புனிதப்படுத்துவதோ, நியாயப்படுத்துவதோ எமது நோக்கமல்ல. வேடதாரிகளையும் மக்கள் விரோதிகளையும் அவர்கள் எந்த முகாமில் இருந்தாலும் புறக்கணிக்க வேண்டும் என்பதே எம் நிலை.

எத்தகைய பாதகத்தையும் செய்துவிட்டு, பாமர மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கிவிட முடியும் என்பதை தேர்தல் அரசியல் கட்சிகள் பலமுறை தமிழகத்தில் நிலைநாட்டி விட்டார்கள். அறிஞர்களையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடுதான் எஸ்.ஆர்.எம் வழங்கும் இந்த விருது.

“நடுவூரில் நச்சுமரம் பழுத்தற்று” என்றார் திருவள்ளுவர். பச்சமுத்துவின் விருதுப்பணம் நச்சுமரத்தில் பழுத்த பழம். நச்சு மரங்களை வீழ்த்துவதற்கு நமக்கு நெடுநாள் பிடிக்கலாம். நச்சுப் பழத்தை உடனே புறக்கணிக்க முடியும். புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் அனைவரும் இந்த கோரிக்கையை ஆதரிக்கக்  கோருகிறோம்.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

SRM

  1. ஒன்றை கவனிக்கவேண்டும்….
    பாரிவேந்தர் மாதிரி ஆசாமிகளுக்கு
    பக்க பலமாக காவல் துறை/அரசியல் குருடுகள்
    (சமீபத்திய குருடு:சீமான்)
    “மத்தளம் ” வாசிப்பதால் தமிழினம் கீழே சாய்கிறது

  2. தமிழ் ஈழத்திற்காக பாடுபட்டதாகக் கூறிக்கொண்டு, சமூக நீதியைக்கூட சாகடிக்கத் துடிக்கும் R.S.S.இந்து பார்ப்பன கும்பலுக்கு தமிழகத்தில் சிவப்புக் கம்பளி விரித்து கலூன்டக் காரணமாயிருந்த கலிங்கப்…..[பட்டி] வை கோபால்சாமியே; மரவெட்டி மன்னிக்கவும் மருத்துவர் ராமதாசே இந்தக்கட்டுரையைப் படித்தாவது திருந்தப் பாருங்கள் தமிழ் மக்களின் நலனுக்காக !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க