privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஜேப்பியார் நிர்வாகத்திற்கு தரகுவேலை செய்யும் நீதிமன்றம் !

ஜேப்பியார் நிர்வாகத்திற்கு தரகுவேலை செய்யும் நீதிமன்றம் !

-

ஜேப்பியார் பொறியியல் கல்லூரிக்கு உடந்தையாக தொழிலாளர் வேலை உரிமையைப் பறித்த உயர்நீதி மன்றம் !

செம்மஞ்சேரி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் பணி புரிந்த தொழிலாளர்கள் 16 ஆண்டுகால நவீன கொத்தடிமைத் தனத்தை மாற்ற சங்கம் துவக்கினார்கள். தொழிலாளர் நலத் துறையில் தொழிற் தாவாவை எழுப்பி, பேச்சு வார்த்தைக்கு அழைத்த அன்றே ஒட்டுமொத்த தொழிலாளரையும் வேலை நீக்கம் செய்து, பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் பேருந்துகளை இயக்க முயற்சித்தது நிர்வாகம்.

இதற்கெதிரான, தொழிற்தாவாவில் வந்த நிர்வாகப் பிரதிநிதிகளிடம் தொழிற் தாவா நிலுவையில் உள்ளபோது, அந்தத் தொழிற் தாவாவில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்களை அவர்களின் சுய விருப்பத்திற்கு மாறாக, வேலைநீக்கம் செய்வது சட்டவிரோதம், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என விசாரணை குறிப்பில் பதிவு செய்து, நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அவர்கள்.

தொழிலாளர் துறை ஆய்வாளர் (காஞ்சிபுரம்) அவர்களிடம் எழுப்பப்பட்ட மனுவிலும் தொழிலாளி விருப்பத்திற்கு மாறாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போட்டு, வேலை நீக்கம் செய்து விட்டதாக நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்து, தொடர்ந்து வேலைக்கு வந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வழக்கமாக செய்து வந்த, வருகைப் பதிவேடுக்கான பயோ மெட்ரிக் சிஸ்டத்தை நீக்கியதும், மேலும் அவர்களை வேலை நீக்கம் செய்துவிட்டதாகக் கூறுவதும், தொழிற்தாவா நிலுவையில் உள்ளபோது செய்ய இயலாது எனவும், தொழிற் தகராறுகள் சட்டம் இதற்கு அனுமதிப்பதில்லை எனவும் பதிவு செய்ததோடு, தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவேட்டினைச் செய்ய பயோ மெட்ரிக் சிஸ்டத்தினைப் பொருத்தவும் உத்தரவிட்டு, அதன்படி வைக்கப்பட்டு, தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்து வந்தனர்.

நிரந்தரப் பணியாளரான தங்கள் பணியை, பர்வீன் டிராவல்ஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு செய்ய விடாமல், 15.09.2017 முதல் 25.10.2017 வரை 40 நாள்களுக்கும் மேல் போராடித் தங்கள் பணியைச் செய்து வந்தார்கள் தொழிலாளர்கள்.

25.10.2017 -ல் மாணவர்களுக்குத் தொழிலாளர்களால் பிரச்சினை வராமல் இருக்க, போலீசைத் தலையிடக் கோருவதற்காகவும் நிர்வாகத்தின் பணியைத் தொழிலாளர்கள் தடுக்காமல் இருக்கக் கோரியும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடையாணை கோரியது நிர்வாகம்.

நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர், நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சில நிர்வாகக் காரணங்களுக்காக தொடர்ந்து வேலை தர இயலாது என்பதால், அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வேலை தர இயலாமையைத் தெரிவித்து விட்டது. அத்துடன் பேருந்து இயக்குவதை பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் இயக்க, ஒப்பந்தமும் செய்து விட்டது. இதனைத் தொழிலாளர் தரப்பு ஏற்காமல், தொடர்ந்து தடுத்து பணி செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, போலீசை வைத்து, தொழிலாளரை வேலை செய்வதை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென, 3 நிமிடத்தில் வாதத்தை முடித்து விட்டார்கள்.

தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் அவர்கள், தடை வழங்கக்கூடாது, நிர்வாகம் சட்ட விரோத வேலைநீக்கம் செய்துள்ளது, இது சம்மந்தமான தொழிற் தாவா நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொழிற் தகராறுகள் சட்டம், 1947 அடிப்படையிலும் இப்படிச் செய்ய இயலாது என தொழிலாளர் நல உதவி ஆணையர் அவர்களின் விசாரணைக் குறிப்பிலும் பதிவு செய்து நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதையே வருகைப் பதிவேடை நீக்கியது சம்மந்தமாக, காஞ்சிபுரம் தொழிலாளர் ஆய்வாளர் அவர்கள் ஆய்வு செய்து, வருகைப் பதிவேட்டை வைக்க உத்தரவிட்டுள்ளார்கள். நிரந்தரப் பணியாளர்கள் இருக்க, அவர்களது வருகைப் பதிவைச் செய்யாமல் இருப்பதுடன், அந்த இடத்தில் ஒப்பந்தப் பணியாளர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று அதை மாற்ற உத்தரவிட்டு, வருகைப் பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் சிஸ்டத்தை வைக்கச் செய்தார்கள். மேலும் கடந்த 16 ஆண்டுகளாக இவர்கள்தான் மாணவர்களை பேருந்துகளில் ஏற்றி வருகிறார்கள். நிர்வாகத்தின் சட்டவிரோத வேலை நீக்கத்தை மறுத்து கடந்த 40 நாள்களாக, இவர்களே மாணவர்களை ஏற்றி வந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களுக்குத் தொழிலாளர்களால் பிரச்சினை வராமல் இருக்க, அதில் போலீசைத் தலையிடக் கோரியும், நிரந்தரப் பணியாளரை வேலைக்கு வராமல் தடுக்க வேண்டும் எனவும் நிர்வாகம் கோருவது தவறு எனத் தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்கள்.

தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் 10 நிமிடத்தில் தனது வாதத்தை முடித்தார். ‘மாண்புமிகு நீதியரசர்’ அவர்கள் வழக்கு உங்களுக்குச் சாதகமாகத்தான் உள்ளது. “நீங்கள் ஏன் தொழிலாளர் நீதி மன்றம் போகக்கூடாது. தொழிலாளர் நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதோடு, தொழிலாளர் வங்கிக் கணக்கில் நிர்வாகம் பணம் செலுத்திவிட்டது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வேண்டுமானால், மேலும் ஒரு நெகோஷேசன் (பேரம்) செய்து, கொஞ்சம் கூட்டி வாங்கிக் கொள்ளுங்கள்” என நிர்வாகத் தரப்பு வக்கீலாக 15 நிமிடங்களுக்கு மேல் தொழிலாளர் தரப்பைச் சம்மதிக்க வைக்க, ‘மாண்புமிகு உயர்நீதிமன்றத்து நீதிபதி’ திருவாளர். எம்.எஸ். ரமேஷ் அவர்கள் வாதாடுகிறார்கள்.

தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் : “தொழிற்சங்கம் துவங்கி, தொழிற்தாவா ஏற்படுத்தியமைக்காக, நிர்வாகம் தொழிற் தாவா நிலுவையில் உள்ளதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், தொழிற் தகராறு சட்டத்தைப் பொருட்படுத்தாமலும், சட்டவிரோத வேலை நீக்கம் செய்துள்ளது. எனவே, நிர்வாகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்” என்ற வாதத்தை வைத்துக்கொண்டிருக்கும் போதே, மாண்புமிகு நீதிபதி அவர்கள் பொறுமையில்லாமல், தான் நிர்வாகம் கோரியபடி, தடை வழங்குவதாகவும், ஒரு வாரத்திற்குப் பிறகு, மீண்டும் இதுபற்றி விசாரிப்பதாகவும், 1.11.2017 -க்கு வழக்கைத் தள்ளி வைப்பதாக தெரிவித்து, தான் முன் தயாரிப்புடன் செய்து வந்த உத்தரவைப் போட்டு, நிரந்தரத் தொழிலாளிகளின் வேலை உரிமையைப் பறித்து, நிர்வாகத்தின் முடிவுப்படி ஒப்பந்த முறையில் வேலை நடத்த, வாய்ப்புக் கொடுத்தார் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள். 1.11.2017 அன்று இவ்வழக்கு விசாரணை பட்டியலுக்கே வரவில்லை.

இதுவரை 3 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த வழக்கை அவர்கள், அவர்களாகவே தெரிவித்த படி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இது சம்மந்தமாக, தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் மென்சன் செய்வதன் அடிப்படையில் 8 முறை இந்த வழக்கை வழக்குப் பட்டியலில் இரண்டாவது பட்டியலின் இறுதியில் போட்டு, ஒரு நாளும் வழக்கு விசாரணைக்கு வராதபடி பார்த்துக் கொண்டது மாண்புமிகு உயர்நீதி மன்றம்.

நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை உரிமையை இழந்து, நீதிமன்றத்திடம் அலைந்து அலுத்துப் போய், இப்போது நாங்கள் என்ன செய்தால் இந்தச் சட்டமும் நீதியும் எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்கும் எனக் கொதிப்படைந்து கேட்கிறார்கள் தொழிலாளர்கள்.

முதலாளிகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட வந்தால், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் ஏன் தொழிலாளர் நீதிமன்றம் போகாமல், உயர்நீதிமன்றத்திற்கு வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி, தொழிலாளர் கோரிக்கையை ஏற்காமல் தள்ளுபடி செய்து வந்துள்ளனர் மாண்புமிகு உயர்நீதிமன்ற நாட்டாமைகள்.

முதலாளிகள் தரப்பு தொழிலாளர்களுக்கு எதிராக எதைக் கேட்டாலும் வாரி வழங்குவதோடு, தொழிலாளர்களின் வேலை உரிமையைப் பறித்து, ஒழித்துக் கட்டுவதற்கு உற்றத் தோழனாகச் செயல்படுகிறார்கள். முதலாளிகள் தரப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் மாண்புமிகு நீதியரசர்கள் தொழிலாளர் தரப்பு வாதத்தைக் கேட்கவே மறுக்கிறார்கள். முதலாளிகள் நடைமுறையில் இருக்கும் தொழிற் தகராறுகள் சட்டப்படி நடக்க மறுப்பதை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து துணிவோடு செயல்படுகிறார்கள் நீதிபதிகள்.

மேலும் தொடர்ந்து தொழிலாளர் தரப்பு வழக்கை மென்சன் செய்வதால், கண் துடைப்புக்கு இரண்டாவது பட்டியலில் கடைசியாகச் சேர்த்து விசாரணைக்கு வராமல் செய்வதன் மூலம் நிர்வாகத்தின் சட்டவிரோத செயல்களைத் தொடர்ந்து வழக்கப்படுத்திக் கொள்ள அனுமதித்து, தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது நீதிமன்றங்கள். இதன் மூலம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கான வேலை உரிமையைப் பறித்து, தொழிலாளர்கள் வாழ்வை அழிக்கிறது. இதையே காரணமாக்கி நீதிமன்ற உத்தரவை மீறி, தொழிலாளர் நலத்துறை செயல்பட முடியாது என நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, தொழிலாளர் நலத்துறை ஆணையகமும் நாசூக்காக ஒதுங்கிக் கொள்கிறது. பிறகு, தொழிலாளர் வர்க்கம் செய்வதறியாது கோபமும் அவமானமும் பொறுக்க முடியாமல் அடுத்த அடிமை வேலைக்குப் போய் மடிந்து விடுகிறார்கள்.

இந்த நாட்டின் தொழிற் தகராறு சட்டத்தை மதிக்காமல், தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தும் முதலாளிகள் இவர்களிடம் உரிமை கோரினால் இந்தக் கொத்தடிமை வேலையையும் பறிக்கும் முடிவை நீதிபதிகள் உடனே அனுமதிக்கிறார்கள். இதன்மீது எந்தக் கேள்வியும் கேட்காததோடு, தொழிலாளர்களைப் பணிய வைக்க, அறிவுரைக்கு மேல் அறிவுரையாக வழங்குகிறார்கள். கூடுதலாகப் பெற்றுக்கொள்ளும்படி இடைத்தரகரைப் போன்ற பேரம் பேசும் வழிமுறையைக் காட்டுகிறார்கள். இப்படித் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்தச் செயல்கள் எந்த வகை நீதியாகும்? இந்த நீதிமன்றங்கள் யாருக்கானவை? முதலாளிகளின் கருணை இல்லமாக செயல்படும் இந்த நீதிமன்றம், உழைக்கும் மக்களின் விரோதியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து கிளர்ந்து எழுந்து, போராடாமல் இருக்குமானால் உரிமை என்ற வார்த்தை கூட இனி உச்சரிக்கவே முடியாமல் ஒழிக்கப்படும்.

எனவே, நீதிமன்றம், முதலாளித்துவ பயங்கரவாதங்களை முறியடிக்க தொழிலாளர் வர்க்கம் மாற்றுப் போராட்ட வடிவங்களை கையாளவேண்டும். ஒன்றுபட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின்கீழ் இப்படியொரு புதிய அமைப்பைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இதனை சாதிக்க முடியும்.

– இல. பழனி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி