அன்றாடம் செய்தி ஊடகங்களில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து கடன் நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் இருக்கும் இளைஞர்கள் தம் உயிரை மாய்த்துக் கொள்வது, குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொள்வது, குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொள்வது போன்ற செய்திகளை காண்கிறோம்.
இதேபோல செப்டம்பர் 7-ஆம் தேதி சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்த பொறியாளர் ஒருவர் கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் வழிப்பறியில் ஈடுபட்ட செய்தி வெளியாகியுள்ளது.
கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 27) என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.37,000 மாத சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இவர் தன்னிடமிருந்த பணத்தை முழுவதமாக இழந்துள்ளார். மேலும் நண்பர்களிடம், வங்கியிடம் கடன் வாங்கி ஏழு இலட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல்போக வழிப்பறி செய்து கடனை கட்டிவிடலாம் என முடிவெடுத்துள்ளார். அப்படி ஒரு பெண்ணின் செயினை பறிக்க முயன்ற போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் என்பது இதுவரை பல்வேறு மக்களின் உயிரை பறித்து வந்ததோடு தற்போது சமூகத்தில் புது புது குற்றவாளிகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது.
படிக்க : ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசு!
நாடு முழுவதும் பல குடும்பங்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் நாசமாக்கப்படுகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களின் சதவீதம் நாடு முழுவதும் அதிகமானதால் மக்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்களை முடக்க வேண்டும் என்ற கருத்து வலுபெற்று, நிறைய பொது நல வழக்குகளும் போடப்பட்ட சூழலில் தமிழகத்தில் தவிர்க்கவியலாமல் 2020-இல் கடந்த அ.தி.மு.க அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஆன்லைன் சூதாட்டத்தை தற்காலிகமாக முடக்கியது. ஆனால் அதையும் சென்னை உயர்நீதிமன்றம் 2021-இல் வியாபர நோக்கத்தில் செயல்படுபவர்களை தடுக்கும் வகையில் அவசர சட்டம் இருக்கிறது என கூறி ரத்து செய்தது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வோம் என கூறிய திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் 28 பேர் இறந்துள்ளனர். ஆனால் இன்னும் சூதாட்டத்தை தடை செய்வதற்கான எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அக்கட்சி மேற்கொள்ளவில்லை. மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் சரி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பணம் செல்வதுமட்டும் தடைப்பட்டு விடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கவனமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஒரு மனிதனை போதை பழக்கம் (மது,கஞ்சா,அபின்) தவறான வழியில் கொண்டு சென்று கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்களை செய்ய தூண்டுகிறதோ, அதேபோல் இன்று இந்த ஆன்லைன் சூதாட்டமானது அந்த பொறியாளரின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டம் என்பதும் ஒரு போதையே! என்ற பார்வையில் நாம் பார்க்க வேண்டும்.
ஒரு நபர் தவறான வழியில் செல்கிறார் என்றால் அது ஏதோ தனிநபரின் தவறு என்று நாம் பார்க்கக் கூடாது. இந்த சமூகத்தில் நிலவும் நுகர்வு வெறி கலாச்சார சீர் கேடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
சட்டங்களை கடுமையாக்குவதன் மூலமாகவோ வரம்புக்கூட்பட்ட போராட்டங்கள் மூலமாகவோ இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது. குறிப்பாக இந்த சமூகத்தில் நிலவும் நுகர்வு வெறி கலாச்சார சீர் கேடுகளையும், அதை உயர்த்திப்பிடிக்கும் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவ கட்டமைப்பையும் தகர்த்தெறிவதே ஒரே தீர்வாக இருக்க முடியும்.
ஜீவா