“அவர் பள்ளி மாணவர் தலைவராக இருந்தாரா? பள்ளியின் கலைக்குழு தலைவராக இருக்கும் ஒருவரால் எப்படி இப்படியொரு முடிவை எடுக்க முடிந்தது?” என்று கேள்விகள் தொடுக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவி ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கெடுத்து திரும்பும் நபரிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகிறது. “இதுபோன்ற கேள்விகளை தயவுசெய்து கேட்காதீர்கள். நாங்கள் ஏற்கனவே துக்கத்தால் மனமுடைந்து போயிருக்கிறோம்” என்று சொல்லும் அவரை கேமராக்கள் இடைவிடாமல் துரத்துகிறது.
மேலும், மாணவியின் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸை கேமராக்கள் துரத்தியது, மகளை இழந்த தந்தையின் சோகமான முகத்தை பின்னணி இசையுடன் ஒளிபரப்பியது, மாணவிக்கு ஏதேனும் மனநலம் சார்ந்த பிரச்சினை இருந்ததா என்று இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த நண்பர்களிடம் ( அவர்கள் அனைவரும் 16 வயது சிறுவர்கள் தான்) கேட்டது போன்ற மிகவும் தரம் தாழ்ந்து இழிவான முறையில் ஊடகங்கள் நடந்துகொண்டன.
ஒரு தற்கொலை செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது “தற்கொலை தடுப்பு உதவி எண்கள்” பற்றியும் குறிப்பிட வேண்டுமென்ற அடிப்படை ஊடக விதிமுறைகளைக் கூட மதிக்காமல் நடந்துகொண்டன. ஊடகங்கள் இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது மட்டுமல்ல, தங்களுக்கென வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைக்கூட மதிக்காமல் நடந்துகொண்டன.
படிக்க: ஜெகதீஸ்வரனை மீண்டும் கொல்லும் ஊடகங்கள் !
இவையனைத்தும், இன்றைய ஊடகங்கள், செய்தி தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் எவ்வாறு அறமற்ற மனிதத்தன்மையற்ற முறையில் நடந்து கொள்கின்றன என்பதற்குச் சான்றாகும். இறந்துபோன மாணவி சினிமா பிரபலம் ஒருவரின் மகளாக இருப்பதாலே, செய்தி தொலைக்காட்சிகளும் யூடியூப் சேனல்களும் இப்படி மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்டன என்று நாம் பொதுவாக எடுத்துக்கொள்ள முடியாது.
இப்படி மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்டதற்கு செய்தியாளர்களையும் கேமராமேன்களையும் மட்டுமே நாம் குற்றம் சொல்லமுடியாது. அவர்கள் தங்கள் பிழைப்பிற்காக வேலை செய்யும் கூலியாட்கள் மட்டுமே. இந்த மனிதத்தன்மையற்ற செயல்களின் அடிப்படை, செய்தியை ஒரு சரக்காக விற்கும், அதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஊடக நிறுவனங்கள் தான். ஒரு தற்கொலை பற்றிய செய்தியை எப்படி வெளியிடவேண்டும் என்ற ஊடக விதிமுறைகள் பற்றி அனைத்து ஊடகங்களும் அறிந்துதான் இருக்கின்றன. இருப்பினும், தங்களது லாபவெறிக்காக இத்தனை கீழ்த்தரமாக நடந்துகொள்ளத் துணிகின்றன. இந்த முதலாளித்துவ ஊடகங்கள் லாபத்தை தவிர வேறு எதுவொன்றையும் நோக்கமாக கொள்வதில்லை. அவை இறந்தவரின் மாண்பையும், உயிர் ஒன்றை இழந்த குடும்பத்தினரின் மனநிலையையும் பற்றி மட்டுமல்ல, ஆபத்தான முறையில் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து செய்தியளிக்கும் தங்களது செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் பற்றியும் கவலைப்படுவதில்லை. உண்மையில், அப்படியான கீழ்த்தரமான ஆபத்தான முறையில் செய்தி சேகரித்தால் மட்டுமே வேலையில் நீடிக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தை ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்கள் தான் ஏற்படுத்துகின்றன.
நானும் ஒரு ஊடகவியல் மாணவன் என்ற முறையில்தான் இதை எழுதுகிறேன். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எங்களுக்கு ஊடக அறம் பற்றிய தனிப்பாடமே இருக்கிறது. அவை முழுக்க முழுக்க முதலாளித்துவ அறம் என்றாலும் ஒரு செய்தியை சிறிதேனும் நுண்ணுணர்வுடன் அணுக வேண்டும் என்ற அடிப்படையை கற்பிக்கும். ஆனால் அதை நாங்கள் வேலை செய்யும் ஊடக நிறுவனங்களில் கடைப்பிடிக்க முடியாது. அறமுடையவனுக்கு வேலையில்லை.
படிக்க: ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!
கொரானா காலத்தில் நண்பர் ஒருவர் வேலை செய்த ஊடகத்தில் அவரது பணியே எப்போதும் பரபரப்பு செய்திகள் கொடுப்பதுதான். இதற்காக அவர் எப்போதும் கொரானா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை இணையத்தில் தேடிக்கொண்டே இருப்பார். ஆனால் அவர் உடன் வேலைசெய்த மற்றொரு பணியாளர் கொரானா தொற்றால் இறந்துவிட்டார். தன்னுடன் இரத்தமும் சதையுமாக பழகிய ஒருவர் இறக்கும் வரை, லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றி இறந்துபோனதை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே அணுகும் வகையில் அவர் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். இதில் நாம் யாரை முதன்மையாக குற்றம் சாட்டவேண்டும்? தான் கல்லூரியில் கற்ற ஊடக அறத்தை மட்டுமல்ல தன்னுடைய குடும்பம், நடைமுறை வாழ்க்கை ஆகியவற்றின் மூலமாக கற்றுக்கொண்ட அடிப்படை நேர்மையுணர்ச்சி, சுயமரியாதை, மனிதத்தன்மை ஆகியவற்றையும் இழக்கும் போது மட்டுமே ஒரு ஊடக நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக்கொள்ளும். இந்த யதார்த்தம் எத்தனை கொடுமையானது. மோடி அரசை விமர்சனம் செய்ததற்காக பல பத்திரிகையாளர்களை அவர்கள் வேலை செய்யும் நிறுவனமே வெளியேற்றிய செய்தியை நாம் அறிந்துதான் இருக்கிறோம்.
இவையெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டுவது ஒன்றைத்தான். நேர்மையற்ற, மனிதத்தன்மையற்ற இழிவான முறையில் செய்திகள் வெளியிடப்படுவது ஏதோ தனிப்பட்ட ஊடக நிறுவனம் அல்லது செய்தியாளர்கள் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக, இது சமூக பிரச்சினையின் சிறிய வெளிப்பாட்டு வடிவம் மட்டுமே. பிறரது அந்தரங்கத்தையும் கூட செய்தியாக மாற்றி மக்களை கட்டற்ற நுகர்வு வெறிக்கு பழக்குவது, சில்லறை விசயங்களை பரபரப்பு செய்தியாக வெளியிடுவது, அரசியல் கட்சிகளிடம் விலை போவது என ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள கலாச்சார ரீதியான சீரழிவு என்பது இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க காலகட்டத்தின் அரசியல் சமூக சீரழிவின் உப விளைவு மட்டுமே. இவற்றையெல்லாம் சரி செய்யாமல் ஊடகங்களுக்கு அறத்தை பற்றி புத்திமதி சொல்வதும், புதிய விதிமுறைகளை உருவாக்குவதும் எந்த வகையிலும் ஊடகங்களின் இன்றைய சீரழிந்த நிலைக்குத் தீர்வாகாது.
சீனிச்சாமி