ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!

கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.

ண்மையில் வட அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற ஐந்து கோடீஸ்வரர்கள் இறந்த சம்பவமானது, ஒரு வாரத்திற்கும் மேலாக மிகப்பெரும் பேசுபொருளாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஊடகங்களிலும் சமூக வலைதளச் சானல்களிலும் இதையே நம் கண்முன் நிறுத்திக் காட்டி நமது கவனத்தைப் பறித்தார்கள் என்றே சொல்லலாம்.

கடந்த ஜூன் 18 அன்று, மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் பார்வையிட ஒஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானிய கோடீஸ்வரர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பால் ஹென்றி நர்கோலெட் ஆகியோரை ஏற்றிச் சென்ற ஒஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான “டைட்டன்” நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் காணாமல் போனது.

படிக்க : இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 194 பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்!

நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேரையும் மீட்கப் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டு இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான ஆழ்கடல் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகளின் கடலோரப் படைகள் இந்த மீட்புப்பணியில் இணைக்கப்பட்ட போதிலும் அவர்களை மீட்க முடியாமல் பின்னர் அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் இப்படியொரு விபத்தைச் சந்தித்தற்கு காரணமான, ஓஷன்கேட் நிறுவனம் செய்த தவறுகள் என்ன என்பது குறித்துப் பேசிய மரைன் டெக்னாலஜி சொசைட்டியின் (Marine Technology Society – MTS) உறுப்பினர் ஓட்டோ ஸ்கோஃபீல்ட், “செல்வந்தர்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐந்து கீழ்த்தட்டு மக்களைக் கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பும் மிக முக்கியமான கட்டத்தை நிறுவனம் சோதித்துப் பார்க்காமல் விட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

“ஓஷன்கேட், குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களை அரசாங்க நலத்திட்டத்தின் மூலம் பயன்படுத்திச் சோதிக்காமல், கோடீஸ்வரர்களை ஏற்றி சோதித்துள்ளது” என்று மேட்டுக்குடி வர்க்கத்தின் உச்சபட்சத் திமிரோடு பேசியுள்ளார்.

மேலும், “சில வீடற்ற மக்களை வைத்து சோதனை நடத்தியிருந்தால் அதிக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்; பல செல்வந்தர்களின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறியதோடு “ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருந்திருக்கும்” என்று அரக்கத்தனமான ஆலோசனைகளையும் சொல்லியுள்ளார்.

படிக்க : பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு

இந்த ஓஷன்கேட் நீர்மூழ்கி விபத்து குறித்து ஊடகங்களில் பேசிக் கொண்டிருந்த அதேநேரத்தில்தான் துனிசியாவில் இருந்து 46 புலம்பெயர் தொழிலாளர்களுடன் இத்தாலிக்குப் புறப்பட்ட கப்பல் விபத்துக்குள்ளாகி 37 பேர் மாயமானார்கள். பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வேலையில்லா திண்டாட்டம், பசிக் கொடுமை முதலியவற்றிலிருந்து தப்பிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் ஐரோப்பா போன்ற கண்டங்களுக்குக் கடல்வழியாகப் பயணிக்கின்றனர். விபத்துக்குள்ளான துனிஷியக் கப்பலில் இருந்து பெரும்பாலானோர் தப்பித்துக் கரை சென்றுசேருவதே அரிதுதான்.

ஆனால், கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.

சாவின் துயரத்தைச் செய்தியாக்குவதிலும் வர்க்க பாசத்தை வெளிப்படுத்துகின்றன இந்த ஆளும் வரக்க ஊடகங்கள்!

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க