பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்! இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு! | பு.மா.இ.மு

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று கட்டளையிடுகிறார் ஆர்.என்.ரவியின் கூட்டாளியாக செயல்படும் பல்கலைக்­கழகத் துணைவேந்தர். இந்தப் பாசிசக் கோமாளிகளின் கருஞ்சட்டை தடையை தமிழ்நாடு முறியடித்துள்ளது.

0

27.06.2023

பெரியார் பல்கலை: கருஞ்சட்டைக்கு விதித்த தடை நீக்கம்!
இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே வெளியேறு!

பு.மா.இ.மு பத்திரிகைச் செய்தி

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் ஜூன் 26 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

கருப்பை வெறுக்கும் காவியின் குரலுக்கு எதிராக, ஜனநாயக சக்திகளின் கண்டனக் குரல்கள் தீவிரமாய் ஒலித்தன. தீவிர எதிர்ப்பைக் கண்டு அரண்டு போன பல்கலைக்கழக நிர்வாகம் ஜூன் 27 (இன்று) மாலை வெளியிட்ட சுற்றறிக்கையில், கருப்பு நிற உடை அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், “மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனைக் கருத்தில் கொண்டு மேற்காண் சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது” என்று துளியும் பொருத்தமில்லாத காரணத்தை சொல்லியிருக்கிறது.

இதைவிட முக்கியமான இன்னொரு விசயத்தை அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருக்கிறது.

படிக்க : மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!

சேலம் மாநகரப் போலீசு கூறியதன் அடிப்படையில்தான், கருப்பு நிற உடை அணிந்து வர தடை விதித்தோம் என்று பல்கலைகழக நிர்வாகம் கூறியிருக்கிறது.

ஆனால், சேலம் மாவட்டக் காவல் துறை சார்பாக அவ்வாறு எதையும் சொல்லவில்லை என்று மறுப்பு செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பியுள்ளதாக அச்செய்தி உள்ளது.

போலீசு சொல்லித்தான் செய்தோம் என பல்கலைக்கழக நிர்வாகம் சொன்னது பொய் என்றால், சம்பந்தப்பட்ட துணைவேந்தர் – பதிவாளர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களாகவே செய்திருந்தாலும், போலீசு சொல்லி செய்திருந்தாலும், கருப்பு நிற உடை அணியத் தடை விதிப்பது அப்பட்டமாக காவி கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பதே ஆகும். எனவே, தமிழ்நாடு அரசு, இப்பிரச்சினையை தீவிரமாக அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

ஏற்கனவே, ஏப்ரல் மாதம் தஞ்சையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த் சாமியை ஆர்.என்.ரவியிடம் நெருங்க விடாமலும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள விடாமலும் தடுத்து நிறுத்தி சோதனை என்ற பெயரில் அராஜகத்தை அரங்கேற்றினர் நிர்வாகமும் போலீசும்.

தற்போது, சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று கட்டளையிடுகிறார் ஆர்.என்.ரவியின் கூட்டாளியாக செயல்படும் பல்கலைக்­கழகத் துணைவேந்தர். இந்தப் பாசிசக் கோமாளிகளின் கருஞ்சட்டை தடையை தமிழ்நாடு முறியடித்துள்ளது.

படிக்க : சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!

மாணவர்கள் அரசியல் பேசினால் பாசிச ஆர்.என்.ரவி-க்கு அச்சம் வருகிறது. கருஞ்சட்டையைக் கண்டாலோ கால் நடுக்கம் வருகிறது.

இது மட்டுமன்றி, காவி பாசிசத்தின் உளவாளியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்து, தனது ஆதரவாளர்களை துணை வேந்தர்களாக நியமித்து வரும் ஆளுநர் ரவியின் கொட்டத்தை அடக்கும் விதமாக, மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ள சங்கி கும்பலுக்கு ஆதரவான அனைத்து துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

“இது தமிழ்நாடு! ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!” என தொடர்ந்து முழங்குவோம்!


மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க