தகிக்கும் கோடைக்காலத்தில் காலையிலும் மாலையிலும் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் சென்னை பெருநகர மக்கள். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. அவைதான் மக்கள் நெடுநேரம் பேருந்துக்காக காத்திருப்பதன் காரணம். இது ஏதோ சாதாரண விசயமல்ல. பேருந்து இயக்க எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதில் தி.மு.க. அரசு மேற்கொள்ளும் அடுத்தடுத்த நடவடிக்கைகளே காரணமாகும்.
சென்ற மார்ச் மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வழித்தடங்களில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளிப்பதாக செய்திகள் வெளியாகின. அரசின் இந்த தனியார்மயாக்க முயற்சியை எதிர்த்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
எதிர்ப்புகள் வலுப்பெற்ற பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. உலக வங்கியின் அறிவுத்தல்படி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் பேருந்துகள் இயக்குவது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை மீதான சாதக பாதங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது” “… ஒருபோதும் போக்குவரத்துத்துறையை தனியார்மயாக்கும் திட்டம் இல்லை” என்று தெரிவித்தார்.
தனியார்மயமாக்கப் போவதில்லை என்பதுதான் கருத்தென்றால், அந்த டெண்டரில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது?
அமைச்சர் ஊடகங்களுக்கு அளித்த அதே பேட்டியில், “டெல்லி போன்ற பெருநகரங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. ஏன் கம்யூனிஸ்டுகள் ஆட்சிசெய்யும் கேரளாவில் இந்த திட்டம் நடைமுறையில்தான் உள்ளது. ஒருவேளை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டாலும் ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களைப் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் வாய்திறக்கவே இல்லை.
தற்போது போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மெல்ல மெல்ல முன்னேறிவருகிறது தி.மு.க. அரசு. ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் வேலையை ஆங்காங்கே கமுக்கமாக செய்துவருகிறது.
படிக்க: திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!
கடந்த ஏப்ரல் மாதம், தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சென்னை, நாகை, கும்பக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுநர்கள் 400 பேரை நியமிக்க இருப்பதாகவும், இவர்கள் 12 மாதங்கள் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதை கண்டித்தும், தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அதிகாரிகள் மீது நடவடடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த மே 5 அன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 29ஆம் தேதி அரசின் இத்தனியார்மயமாக்கப் போக்கைக் கண்டித்து மாலை ஐந்து மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பேருந்து ஓட்டுநர்கள் தன்னெழுச்சியாக வேலைநிறுத்தம் செய்துள்ளனர். அதன்பிறகு அமைச்சர் மேற்கொண்ட சமாதனப் பேச்சுவார்த்தையால் பணியைத் தொடர்ந்தனர்.
ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் இதேவேளையில், சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநர் பற்றாக்குறையை ஏற்படுத்தி நடத்துநர்களுக்கு பணி வழங்க மறுத்துவருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
ஓட்டுநர்கள் கணிசமான அளவு இருந்தும், ஒரு பணிமனையில் 15 பேர் வீதம், 24 பணிமனைகளில் 350க்கும் கூடுதலான ஊழியர்களுக்கு பணி மறுக்கப்பட்டுவருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 350 பேருந்துகள் மக்களின் போக்குவரத்துக்காக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணி மறுக்கப்படும் ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
ஓட்டுநர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதையே காரணமாகக் காட்டி நடத்துநர்களை பணிக்கு எடுக்காததன் மூலம் ஒப்பந்தப் பணியை திணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.
படிக்க: மக்களின் உழைப்பில் உருவான போக்குவரத்துத் துறையை விழுங்கவிருக்கும் கார்ப்பரேட்டுகள் | தோழர் பரசுராமன்
ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் பணிவழங்கப்படாத நடத்துநர்களிடம், ஒப்பந்தமயமாக்கலை எதிர்க்கும் ஓட்டுநர்களால்தான் தங்களுக்கு இந்த நிலைமை என்ற கருத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களை தங்களுக்குள் மோதவிடுவதும், மக்களிடையே போராடும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதும் திட்டமிட்டு நடைபெற்றுவருகின்றன.
பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு அரசின் இந்த சதி நடவடிக்கைகளை ஊடகங்கள் கொண்டுசேர்க்கவில்லை. பேருந்துக்காக கால்கடுக்க நிற்கும் மக்கள், பேருந்துப் பற்றாக்குறையை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் காலதாமதப் பிரச்சினையாகக் கருதி ஆங்காங்கே சண்டபோட்டு வருகிறார்கள். மைய ஊடகங்கள்தான் இப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்கின்றன என்றால், மக்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதாகக் கருதும் யூடியூப் சானல்களும் டிரெண்டிங்கான விசயத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பு பேசும் பெரும்பான்மையான ஊடகங்களோ, தி.மு.க. மீது விமர்சனத்துக்குரிய விசயங்கள் ஏதேனும் வந்தால் அதைத் திட்டமிட்டே விவாதப் பொருளாக்காமல் தவிர்க்கின்றனர்.
இது ஆபத்தான போக்காகும். காவி மட்டுமல்ல, கார்ப்பரேட்டும் மக்களுக்கு எதிரானதாகும். தனியார்-கார்ப்பரேட்மயமாக்க சதியால் மக்கள் பாதிக்கப்படும்போது அதை எதிர்த்துக் குரல்கொடுப்பதுதான் மக்களுக்காக வேலைசெய்யும் ஊடகங்களது பணியாகும். இதை உணர்ந்து இப்பிரச்சினையை விவாதப் பொருளாக்க முன்வருமாறு மக்கள் மீது அபிமானமுள்ள அனைத்து ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
000
போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் இந்த திட்டம் என்பது சராசரியான ஒன்றல்ல. ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கும் சதித்திட்டமாகும். இதுகுறித்து எமது மே மாத இதழில் “கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை, இன்று போக்குவரத்துத் துறை, நளை?” என்ற தலைப்பில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.