கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை ?…

போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான தற்போதைய காரணங்கள் எந்தவகையிலும் குறைந்துவிடப் போவதில்லை. இதில் நடக்கப் போகும் ஊழலின் பரிமாணங்கள் மட்டுமே மாறப்போகின்றன. இத்திட்டம் மூலம் நேரடியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.

ண்மையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பேருந்துகளை, ஒப்பந்த அடிப்படையில் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தி.மு.க. அரசின் இந்நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் ஜனநாயக இயக்கங்களும் கண்டனங்களைத் தெரிவித்தன, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தி.மு.க.வின் தொழிற்சங்கமான  தொ.மு.ச.வும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கும் அரசின் நடவடிக்கையானது தொழிற்சங்கங்கள் மத்தியில் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் விமர்சனங்களை  தெரிவித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  “சென்னை மாநகரப் பேருந்துகள் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க  டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது” என தெரிவித்தார். அதேவேளையில், “உலக வங்கியின் கருத்துகள் அடிப்படையில் தனியார் மூலமாக கூடுதல் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்” எனவும் கூறினார்.

அதாவது, போக்குவரத்துத் துறையில் தனியார் பேருந்துகளை இயக்கவில்லையாம், ஆனால், தனியார் மூலமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமாம். தனியார்மயத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டே, அது இதுவல்ல என்று ‘விளக்கெண்ணெய்’ விளக்கம் கொடுப்பதன் மூலம் மக்கள் எதிர்ப்பை மடைமாற்ற முயற்சித்து தோற்றுப்போயுள்ளார் அமைச்சர்.

கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம்

சென்னை மாநகராட்சியில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம்  625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக இதில் தினசரி 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை, 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

தற்போது கூட்ட நெரிசலைக் காரணமாக கூறி, கூடுதலாக 1,000 பேருந்துகளை “மொத்த செலவு ஒப்பந்தம்” (Gross Cost Contract) முறையில் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 500 பேருந்துகளையும், 2025 ஆம் ஆண்டுக்குள் 500 பேருந்துகளையும் இயக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் எந்தவகையில் இயக்கப்படும் என்பதில்தான் தற்போது தனியார்மயமாக்கம் பற்றிய பிரச்சினை எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னை பெருநகரப் போக்குவரத்துத் துறையில், “தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சென்னை மாநகரத்தில் 2,300 பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. 900 பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” எனக் கூறுகிறார் சி.ஐ.டி.யு அமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயனார்.


படிக்க: மக்களின் உழைப்பில் உருவான போக்குவரத்துத் துறையை விழுங்கவிருக்கும் கார்ப்பரேட்டுகள் | தோழர் பரசுராமன்


ஆகையால், புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது, இருக்கும் பேருந்துகளை சீர்படுத்தியோ, புதிய பேருந்துகளை வாங்கியோ போக்குவரத்துத் தேவையை ஈடு செய்வது குறித்து தி.மு.க. அரசு சிந்திக்கவில்லை என்பது முதன்மையான பிரச்சினையாகும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் சில வழித்தடங்களில் நேரடியாக தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தி.மு.க. அரசு இந்தவகையில் சென்னை மாநகரப் போக்குவரத்துத் துறையில் தனியார் அனுமதிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

ஆனால், பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த முறையில் இயக்கப் போவதாக அமைச்சர் கூறுவதன் பொருள் என்ன? இதுதான் தீவிரமான தனியார்மயமாக்கமாகும். இது போக்குவரத்துத் துறையையே கபளீகரம் செய்யும் வடிவமாகும். அதாவது, போக்குவரத்துத் துறையில் சில வேலைகளை அயல்பணி (அவுட்சோர்) செய்வதைத்தான் அமைச்சர் இங்கு குறிப்பிடுகிறார்.

அரசானது மொத்த செலவு ஒப்பந்த முறையில், ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு கட்டணம் என்பதை நிர்ணயித்து  ஒப்பந்த காலம் முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிக்கான (தினந்தோறும் கூட) குறிப்பிட்ட தொகையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பேருந்துகளை ஏற்பாடு செய்வது, பராமரிப்பது, ஓட்டுநர்களை நியமிப்பது தனியார் நிறுவனங்களின் பணி.

பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களை தீர்மானிப்பது, நடத்துனர்களை நியமிப்பது அரசின் பணி. வசூலாகும் பயணக் கட்டணம் அரசினுடையது.

இதன் மூலமாக, பேருந்துகளைச் சொந்தமாக வாங்குவது, அவற்றைப் பராமரிப்பது என்ற பெரிய பணி அரசிடமிருந்து தனியார் கைகளுக்குச் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்களும் நடத்துனர்களை அரசும் நியமிக்கும் இந்த முறையானது போக்குவரத்துத் தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையிலானதாகும்.

தற்போது பின்பற்றப்படும் முறையில் அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் எந்த ஒப்பந்தமும் கிடையாது. அரசுப் பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். இந்த வழித்தடங்களில் எத்தனை தனியார் பேருந்துகளை இயக்குவது என அரசு தீர்மானித்து அதற்கு அனுமதி வழங்குவதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. இதன் மூலம், ஒரு பேருந்தை மட்டும் வைத்திருக்கும் பேருந்து உரிமையாளர் கூட, தன்னுடைய பேருந்தை அரசு நிர்ணயிக்கும் வழித்தடங்களில் இயக்க முடியும்.

ஆனால், மொத்த செலவு ஒப்பந்த முறையில் இது போன்ற சிறிய பேருந்து உரிமையாளர்கள் போட்டியிட முடியாது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை மூலதனமாகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளிகள் தான் பேருந்தை  இயக்க முடியும்.

முக்கியமாக, மொத்த செலவு ஒப்பந்த முறையில் மின்சாரப் பேருந்துகளைத்தான் அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 500 மின்சாரப் பேருந்துகளை வாங்க வேண்டுமென்றால், 1,000 கோடி ரூபாய் மூலதனமாவது தேவைப்படும். இவ்வளவு அதிக செலவில் பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்தங்கள் இயல்பாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்குத்தான் செல்லும். எனவே இத்திட்டமானது, மக்களின் சேமிப்பில், உழைப்பில் உருவாக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படும் போக்குவரத்துத் துறையை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு தொடக்கமாக அமையும்.

நட்டத்தைக் காரணம்காட்டி மக்களைப் பட்டவர்த்தனமாகக் கொள்ளையடித்தல்

பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் மொத்த செலவு ஒப்பந்த முறைக்கு வக்காலத்து வாங்குபவர்கள்  போக்குவரத்துத்துறை நஷ்டமடைந்து உள்ளதை காரணமாக கூறுகின்றனர். நாளொன்றுக்கு ஏறக்குறைய எட்டு கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசு இருக்கும் நிதிச்சுமையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து  பேருந்துகளை வாங்குவது தற்போது சாத்தியமில்லாத ஒன்று என்றும் கூறுகின்றனர். ஆனால் இவை எவையும் உண்மையல்ல. பல ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமிட்டு பல தொழில்களுக்கு செலவு செய்யும் அரசினால் போக்குவரத்துத் துறையை நட்டமில்லாமல் இயக்கவும் முடியும்; சொந்தமாக மூலதனமிடவும் முடியும்.

போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 50 ரூபாய் செலவாகிறது. அதில் 30 ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. 20 ரூபாய் பற்றாக்குறை ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பற்றாக்குறை பல காரணங்களால்  ஏற்படுகிறது. அவற்றில் முதன்மையானது, அதிகார வர்க்கத்தின் முறைகேடுகளும் ஊழலும்தான். இந்தப் பிரச்சினைதான் போக்குவரத்துத் துறையில் இருக்கும் நட்டத்திற்கு அடிப்படையாகும்.

போக்குவரத்துத் துறையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த நெருக்கடியைக் காரணம் காட்டி போக்குவரத்துத் துறையையே  கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்ல வழிவகுக்கிறது தி.மு.க. அரசு.

தற்போது பேருந்துகளை இயக்க ஒரு கிலோமீட்டருக்கு செலவாவதை விட, மொத்த செலவு ஒப்பந்த முறையில் அதிகப்படியான கட்டணமே  நிர்ணயிக்கப்படும். இத்திட்டம்  சென்னையில் செயல்படுத்தப்படுவதற்கு முன்னால், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநில அரசுகள் ஒரு கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்குவதற்கு 125 ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. சென்னையிலும் அதற்கு நிகரான ஒரு தொகையே கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான தற்போதைய காரணங்கள் எந்தவகையிலும் குறைந்துவிடப் போவதில்லை. இதில் நடக்கப் போகும் ஊழலின் பரிமாணங்கள் மட்டுமே  மாறப்போகின்றன. இத்திட்டம் மூலம் நேரடியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலதனமிட்டு பேருந்துகளை இயக்கும் போது, அவர்களுக்கு இலாபத்தை உத்தரவாதம் செய்து கொடுப்பதும் அரசின் கடமையாகிவிடுகிறது.

ஓட்டுநர்களும் நடத்துனர்களும் இருவேறு நிர்வாகங்களின் கீழ் வருவதால், போக்குவரத்து மூலமாக அரசு வசூலிக்கும் கட்டணங்கள் குறைவதற்கான காரணங்கள் அனைத்தும் நடத்துனர்கள் மேலேயே சுமத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. இவையெல்லாம், இத்துறை மேலும் நட்டமடையவும் அதனைத் தொடர்ந்து முழுவதும் கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதுதான் சரி என்ற முடிவுக்கு மக்களைத் தள்ளுவதையும் நோக்கமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ள திட்டமாகும்.


படிக்க: திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!


அதுமட்டுமல்ல, இனிவரும்காலங்களில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் மொத்த செலவின ஒப்பந்த முறைக்கு மாற்றப்படும். வளர்ச்சிப் போக்கில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாகப் புதிய பேருந்துகள் வாங்குவது நிறுத்தப்பட்டு, மொத்த செலவு ஒப்பந்த முறைக்குள் கொண்டு செல்லப்படும். இந்தவழியிலும் போக்குவரத்துத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் முழுமையாக்கப்படும்.

ஆகையால், தற்போது சென்னையில் மாநகரப் பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த முறையின் மூலம் கார்ப்பரேட்டுகளை இயக்க அனுமதிப்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட் மயமாக்குவதற்கான தொடக்க நடவடிக்கையாகும்.

ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் தனியார்மயமாக்கும் இந்நடவடிக்கையை தி.மு.க. அரசானது திட்டமிட்டு செய்கிறது. மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துகிறது . தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதும் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.

போக்குவரத்துத் துறைகளில் மட்டுமல்ல, கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளிலும் தி.மு.க. பாணி கார்ப்பரேட் மயமாக்கம் அமல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அமல்படுத்தப்படும் “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்”  “வானவில் மன்றம்” போன்ற திட்டங்கள் இதற்குச் சான்றுகளாகும்.

ஆகையால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மேற்கண்ட கார்ப்பரேட் சார்பு திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவேண்டும். தி.மு.க. அரசின் கார்ப்பரேட் சார்பு திட்டங்களை எதிர்ப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்கு பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலுக்கு இடமளித்துவிடக் கூடாது. இதற்காக, தி.மு.க.வில் இருக்கும் ஜனநாயக சக்திகள், போக்குவரத்துத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைக் கொண்டுவரும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு தங்களது தலைமைக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.

அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க