சென்னை மாநகரில் 500 தனியார் பேருந்துகளுக்கு அனுமதியளிப்பது, அதாவது பல்வேறு ஒப்பந்தங்கள் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு தனியார் பங்களிப்புடன் மாநகர பேருந்துகளை இயக்கபோவதாக அறிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள பல்வேறு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்து போராடி வருகின்றனர். பல அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக ஆளும் கட்சி திமுக-வின் போக்குவரத்து சங்கமே தங்களுடைய கண்டனத்தை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பொதுப்போக்குவரத்து பேருந்துகளை பொறுப்பேடுத்து இயக்கி வருகிறது. (குறிப்பாக கன்னியாகுமரி, நீலகிரி, சென்னை) போன்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு பல்வேறு சட்ட விதிமுறைகளை வகுத்து அனுமதியளித்துள்ளது. அதன்படி சென்னையில் சில ஆண்டுகளாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயங்கி வருகிறது.
ஏன் குறிப்பிட்ட வழிதடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதிப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி, தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களுடைய பேருந்துகளை நீலகிரி, குன்னூர், ஊட்டி போன்ற மலை பகுதிகளில் இயக்க முன்வருவதில்லை. மேலும் கன்னியாகுமரி போன்ற சிறிய மாவட்ட எல்லை பகுதிகளில் லாபத்தை கணக்கிட்டு தனியார் பேருந்துகள் இயக்க முதலாளிகள் முன் வருவதில்லை. இப்படி பல்வேறு இயற்கை சூழ்நிலைகள், லாபம், பாதுகாப்பு போன்றவைகளை எல்லாம் கணக்கில் கொண்டே தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பேருந்துகளை இயக்க முன்வருகின்றனர். ஆனால் சேவை நிறுவனமாக செயல்படக் கூடிய அரசு போக்குவரத்துக்கழகம் இதுபோன்ற சாதகபாதகங்களை சிந்தித்து பேருந்துகளை இயக்க முடியமா?. மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பதுதானே ஒரு அரசின் கடமை.
இன்று பல்வேறு வழிதடங்களில் அரசுபேருந்துகள் இயங்கி வருவதன் மூலம் உழைக்கும் மக்களாகிய நமக்கு சில சலுகைகள் கிடைக்க பெறுகிறது. (குறிப்பாக மாணவர்கள், மாற்றுதிறனாளிகள், முதியோர்கள் என) இவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் தனியார் பேருந்து நிறுவனங்கள் இவற்றையேல்லாம் அங்கிகரிக்குமா.? ஏற்குமா.? என பல்வேறு கேள்விகள் எழுகிறது. அதுமட்டுமல்ல தனியார் பேருந்து நிறுவனங்கள் குறிப்பிட்ட சில லாபகரமான வழித்தடங்களை தேர்ந்தேடுத்து தங்களுடைய பேருந்துகளை இயக்கி லாபம் சம்பாதிக்குமே அன்றி மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாது. அதை பொறுப்பேற்று செய்ய வேண்டிய கடைமை அவர்களுக்கு கிடையாது. இது நிதி சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக்கழகத்தை மூழ்கடிக்கும். மக்கள் பயன்பட்டிற்காக -அடிப்படை தேவைக்காக- லாபமற்ற வழிதடங்கள் ஆனாலும் அரசு தன்னுடைய பேருந்துகளை இயக்கும். இலாபகரமான வழிதடங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவதும். அரசுப்போக்குவரத்து கழகம் போண்டியாகி மேலும் நஷ்டம் அடைவதும் ஒரே நேரத்தில் நடக்கும்.
அதே வேளையில் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திற்க்காக போட்டி போட்டுக்கொண்டு ஏற்படுத்திய விபத்துக்கள் கணக்கிலடங்காதவை. அரசு போக்குவரத்து பேருந்துகள் ஒரு நபர் இருந்தாலும் அவர்கள் என்ன பொருட்களை எடுத்து வந்தாலும் சாதாரண கட்டணத்தில் ஏற்றிச்செல்லும், தனியார் பேருந்து நிறுவனங்கள் இவ்வாறு மக்களின் சுமையை நிலைமைகளை கணக்கில் கொண்டு செயல்படுமா.?
இதுபோன்ற பல்வேறு குளறுபடி சிக்கல்களையும் மீறி அரசு போக்குவரத்துத்துறை தனியாரிடம் ஒப்பந்தம் செய்ய துணிவது ஏன்.? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் அரசு போக்குவரத்து ஊழியர்கள்.
பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேலையில் இக்கேள்விகளுக்கு செய்திகள் வழியாக பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்பாபு, “உலக வங்கியின் பரிந்துரை அடிப்படையில் சென்னை மாநகரில் 500 பேருந்துகளை இயக்க 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தான் தற்போது நாங்கள் அமல்படுத்துகிறோம். மேலும் தனியார் பேருந்துகளை அனுமதிப்பது பற்றி குழு ஒன்று அமைத்து சாதகபாதகங்களை அறிந்த பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும், அப்படி தனியார் பேருந்துகளை அனுமதிப்பதால் பொதுமக்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார்.
இது ஏதோ தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துக்கொண்டு அமல்படுத்தும் மக்கள் நலத்திட்டம் அல்ல. 1990-களில் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட தனியார்மயம், தாரளமயம், உலகமயக் கொள்கைகள் அடிப்படையில் இந்தியாவில் இருக்கும் அத்தனை பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்த உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் உலகவங்கி அவர்கள் வகுத்தளிக்கும் கார்ப்ரேட் நலத்திட்டம். இவற்றை மீறி செயல்பட அல்லது முடிவெடுக்க இந்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு அப்படியே அமல்படுத்த வேண்டும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
படிக்க : சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!
அரசின் அனைத்துத் துறைகளும் தற்போது ஒழுங்கமைக்கப்பட்டு ஆதார் எண் இணைப்பு போன்றவை மூலம் கணிணிமயமாக்கப்பட்டு, உடனே அவற்றை தனியார்மயப்படுத்துவது என்பது தற்போது வேகமாக அரங்கேறி வருகிறது. அதன் வெளிப்பாடுதான் அண்மையில் வெளிவந்த மின்சாரவாரிய அறிவிப்பு. தனி தனி வீடுகளின் மின் இணைப்பை ஒரே இணைப்பாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். மானிய மின்சாரங்களை ஒழித்துக்கட்டும் என்று இதற்கெதிராகவும் தற்போது மின்வாரிய தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
ஒரு பக்கம் தனியார் முதலாளிகளின் கடுமையான உழைப்பு சுரண்டல். மற்றொரு பக்கம் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தனியாருக்கு தாரைவார்க்கப்படவிருக்கிறது தமிழ்நாடு அரசு. இப்படி நிரந்தர வேலை, உழைப்புக்கேற்ற கூலி, நிம்மதியான வாழ்க்கை என அனைத்தும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் வேளையில் இதற்கெதிராக பேசாமல் எதிர்த்து குரல் எழுப்பாமல் மௌனம் காப்பது என்பது தற்போதைய நிலைமைகளை அபாயகரமான கட்டத்தில் கொண்டுபோய்விடும்.
பொதுத்துறை என்பதன் பொருள் உழைக்கும் மக்களின் வரியால் உழைப்பால் உருவானது என்பதே. எனவே அதை முதலாளிகளுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! இதுவே தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் திராவிட(கார்ப்பரேட்) மாடல் அரசுக்கு எதிரான குரலாக இருக்கமுடியும்.
டேவிட்