பா.ஜ.க. தலைவர்களுக்குப் பிறகு தமிழக மக்களால் மிகவும் வெறுக்கப்படும் நபராக ஒருவர் இருப்பாரென்றால், அவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியாகத்தான் இருக்கும். சமீபத்தில் பண மோசடி வழக்கில், சிறையிலடைக்கப்பட்ட அவரை உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணையில் விடுவித்துள்ளது.
ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை பண மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவர் உதவியாளர்கள் உட்பட நால்வர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 32 பேர் இதுவரை போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக, ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யபட்டது.
அன்று முதல் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கிரிமினல்களின் துணையுடன் தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. அவரைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைத்து போலீசு தேடி வந்த நிலையில், 19 நாட்கள் கழித்து கர்நாடக மாநிலத்தில் பிடிபட்டு, திருவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மக்களோ ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.
படிக்க :
♦ மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
♦ அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த, ஊழல் பேர்வழியான ராஜேந்திர பாலாஜியை அடித்து இழுத்துச் செல்லாமல் எல்லாவிதமான மரியாதையுடன் போலீசு கைது செய்தது என்பதே உண்மை. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி ‘கைது செய்யப்பட்ட விதம்’ தொடர்பாக தமிழ்நாட்டு அரசின் மீது தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
“முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அரசின் உள்நோக்கம் உண்டா? மேலும் அவரின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம், அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம், உச்ச நீதிமன்றம் உறங்குவதாக நினைக்கிறீர்களா! உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். நாங்கள்தான் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஒருநாள் அவகாசம் இருக்கும்போது அவரை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா? இதனை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம்” என்று அந்த அமர்வு கூறியது.
