திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் சமீபத்தில் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியிலேயே எதிர்கட்சிகள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாலும், தற்போது திமுக ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்னர், அதிமுக ஆட்சிகாலத்தில் நிகழ்த்தப்பட்ட ஊழல்கள் ஆதாரங்களோடும் அதிக விவரங்களோடும் அம்பலமாகி வருகின்றன.

கடந்த ஜூன் 23, 2021 அன்று நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் அதிமுக ஆட்சியில் பல கோடி மோசடி நடந்திருக்கிறது என்று சட்டபேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி விவசாயிகளுக்கு ரூ.12,100 கோடி அளவுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் மட்டுமல்லாமல், பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் பெயரில் முறைகேடுகள் நடத்துள்ளன. 136 சங்கங்களில் ரூ.203 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ரூ.108 கோடி அளவுக்கும், 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

படிக்க :
♦ விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !
♦ 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,350 கோடியும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.1,080 கோடியும் தள்ளுபடி செய்யப்படுள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 300 பவுன் நகை காணாமல் போயுள்ளது. ரூ.11,60,000 கடன் திருப்பி தரப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த நடவடிக்கைகள் ஏதுமில்லை.

இதேபோல், போலி ஆவணங்களை உருவாக்கி வேளாண்மைத் துறையில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இவற்றை பற்றி ஆய்வு நடத்தவிருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

தரம் குறைவான உர விற்பனையில் ஊழல், ஆத்ம திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனத்திற்கான பொருட்கள் அதிகவிலை கொடுத்து வாங்கியது, விவசாயிகளுக்கு வழங்கும் உணவை கூடுதல் விலைக்கு வாங்கியதில் முறைகேடு, நுண் உரம், ஜிங்க் சல்பேட், தானிய விதைகள் மானியம் வழங்குவதில் முறைகேடு, விவரங்களை சேமிப்பதற்காக தரம் குறைந்த டேப்லெட்கள், கணினிகள் வாங்கியதில் முறைகேடு, என பல முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

திருச்சி, மனப்பாறையில் உள்ள மானாவரி மற்றும் இறவை பாசனதாரர்கள் விவசாயிகள் சங்க தலைவர் அப்துல்லா தாக்கல் செய்த பொதுநல வழக்கில், “விவசாயிகளிடமிருந்து விதைகளை கொள்முதல் செய்யாமலேயே செய்ததாக போலி பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. சொட்டுநீர் பாசன கருவிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றது குறித்து 2018-ல் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசன உபகரணங்களை விவசாயி அல்லாதோருக்கு வழங்கி மோசடி செய்திருப்பதாகவும் கூடுதலாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் கிசான் திட்டத்தில் வருடத்திற்கு 6 ஆயிரம் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதில், சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தனியார் கணினி மையத்தில் அரசு பயன்படுத்தும் கடவுச்சொல், பயனர் குறியீடு போன்றவற்றை பயன்படுத்தி விவசாயிகள் அல்லாதோர் இதில் சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேளாண் துறையில் திரும்பும் இடமெல்லாம் முன்னாள் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல், லஞ்சம், முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் பயிர்க் கடன், விவசாய எந்திரங்கள் வாங்கிய கடன் என கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் விவசாயிகளின் பெயரில் போலியான தரவுகளை உருவாக்கி வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தில் ஊழல் முறைகேடு செய்துள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

மக்களின் வரிபணத்தில் ஊழல் செய்யும் அமைச்சர்கள், அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும்.


சந்துரு
செய்தி ஆதாரம் : தினகரன் ஜூன் 23-24

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க