சுமைப் புரட்சிக்குப் பின்னர் இந்திய விவசாயத்தில் உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள நிலையில் உரத்தின் விலையை அதிகரித்திருக்கிறது மோடி அரசு.

விவசாயிகள் நிலத்தில் அடி உரமாகப் பயன்படுத்தும் 50 கிலோ கொண்ட டி.ஏ.பி உரம் ரூ.1,200-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.1,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.1,160-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.1,775-ஆக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.975-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.1350-ஆக உயர்ந்துள்ளது. என்.பி.கே-2 மூட்டையின் விலை ரூ.1,185 லிருந்து ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது என இந்தியாவின் மிகப்பெரிய  உர உற்பத்தி நிறுவனமான IFFCO தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு ஜூன் மாதம் நடவு நடவிருக்கும் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். இந்த உர விலை உயர்வை பல்வேறு விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கண்டித்து, உர விலை ஏற்றத்தை திரும்பிப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் வருகின்றனர்.

படிக்க :
♦ உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!

கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய அரசு உர விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை தனது கட்டுபாட்டில் இருந்து கைவிட்டு சௌமித்ரா சௌத்திரி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உரங்களின் விலைகளை உரக் கம்பெனிகளே தீர்மானித்து கொள்ளலாம் என்று அறிவித்தது அன்றைய காங்கிரஸ் அரசு. உரங்களுக்கு ஒரு நிலையான மானியத்தை வழங்குவதாகவும் தெரிவித்தது.

தற்போது கேஸ் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பில் எரிவாயு நிறுவனங்களை வைத்துவிட்டு, வெறும் 24 ரூபாயை மானியமாக கொடுத்து, நமக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான மானியங்களை நைச்சியமாக  ஒழித்துவிட்டது போலத்தான், அன்று உர நிறுவனங்களே நிர்ணயம் செய்யும் பொறுப்பைக் கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசு.

அதனை அப்படியே பயன்படுத்திக் கொண்ட மோடி அரசு, இன்று வரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மானியத்தைக் குறைத்து வருகிறது. நடப்பாண்டுக்கான பட்ஜெட்டிலும் உரத்திற்கான மானியத்தை 40.62% அளவிற்குக் குறைத்துள்ளது மோடி அரசு.

2021 – 2022-ம் ஆண்டு மத்திய அரசின் நிதி அறிக்கையில் உரத்திற்கான மானியமாக ரூ.79,530 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 40.62 சதவீதம் குறைவு. இதன் மூலம் விவசாயத்தை அரசு கைகழுவுகிறது என்பது மேலும் தெளிவாகிறது.

உர விலையை உரம் தயாரிக்கும் நிறுவனங்களே நிர்ணயம் செய்வதுதான் இந்த உர விலையேற்றத்திற்கு காரணம் என உர விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சிறு விவசாயிகளுக்கோ ஏற்கனவே, விவசாயத்திற்கு தேவையாக இடுபொருட்கள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், அறுவடை எந்திரம் மற்றும் உழவு எந்திரத்தின் வாடகை, விவசாய தொழிலாளர்களின் கூலி என அனைத்து விலையும் உயர்ந்துள்ள நிலையில் தற்போது 60 சதவீதம் உர விலை உயர்வு என்பது விவசாயிகளுக்கும் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த உர விலையேற்றம் என்பது விவசாயத்தை அழிப்பதோடு , உணவுப் பொருட்களின் விலையையும் ஏற்றமடைய செய்யும். உணவு பொருட்களின் விலை அதிகரித்தால் உழைக்கும் மக்களுக்கான ரேசன் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் விவசாயம் கார்ப்பரேடுகளின் பிடிக்குச் செல்வதற்கே இது வழிவகுக்கும். இதன் காரணமாக, சந்தையிலும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும். ஏழை எளிய மக்கள் உணவு பொருட்களை வாங்கவியலாத ஓர் அபாய கட்டத்தை சென்றடைய இது வழிவகுக்கும்.

படிக்க :
♦ 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !
♦ விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என கடந்த 2016-ம் ஆண்டு வெறும் வாயில் வடை சுட்டார் மோடி. ஆனால், விவசாயிகளை விவசாயத்தை விட்டே துரத்தும் நடவடிக்கைகளை மட்டுமே செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயத்தையே அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இதை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளதோடு, அவர்களது பிரச்சினையில் பாராமுகமாகவே இருந்து வருகிறது.

“விவசாயிகளின் நலனுக்காக”, “இடைத்தரகர்களுக்கு பணம் சென்று வீணாவதைத் தடுப்பதற்காக” என்று விதவிதமான கதைகளை அள்ளிவிட்டு நம்மை ஏமாற்றி மானியங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம், ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கான களமாக மாற்றியமைத்திருக்கிறது மோடி அரசு. விவசாயிகளின் உரத்திற்குக் கொடுக்கப்படும் மானியம் என்பது அவர்களது உணவுக்காக அல்லது பிழைப்பிற்காகக் கொடுக்கப்படும் மானியம் அல்ல.

ஒப்பீட்டளவில் குறைவான விலையில் நாம் இன்று உணவு உண்பதற்கான அடிப்படைக் காரணமே, விவசாயத்திற்கு வழங்கப்படும் இந்த வகையான மானியங்கள்தான் !

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க