ரிவாயு சிலிண்டர் விலை நேற்று (15-12-2020) ரூ. 50 ஏற்றப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்திலேயே இது இரண்டாவது முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை ரூ. 610 -ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, டிசம்பர் மாதம் 2-ம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் ரூ. 50-ஐ உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.

இனி எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டுமெனில் சுளையாக ரூ.710-ஐ எடுத்து வைக்க வேண்டும். ரூ.100 உயர்வு என்பது நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் மாற்றமாகத் தெரிய வாய்ப்பில்லை என்றாலும், சாதாரண மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

எரிவாயு விலை உயர்வு ஒருபுறமிருக்க ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.90-ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு நேரடியாக நடுத்தரவர்க்கத்தினரைப் பாதிக்கும் அதேவேளையில், விலைவாசி உயர்வு மூலம் சகல வர்க்கத்தினருக்குமான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

படிக்க :
♦ பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !
♦ இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆளும் அரசாங்கம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு சில பைசாக்கள் உயர்த்தினாலும், நாடெங்கும் நடைபெறும் போராட்டங்கள், இன்று அன்றாடம் விலை உயர்வு நடைபெறும் போது நடக்கவில்லையே ஏன் ?

எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 கூடினாலும், பெருவாரியானவர்களுக்கு அது மிகப்பெரும் பாதிப்பாகத் தெரிந்துவந்த நிலையில் ஒரே மாதத்தில் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்ட பிறகும் வெறும் முனங்கல்களோடு கடந்து போகிறதே ஏன்?

ஏனெனில் இவை அனைத்தும் நமக்கு இயல்பாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இயல்பாக்கல் என்பது பாஜகவின் ஆட்சிக் காலத்தில் கையாளப்படும்  நடைமுறையல்ல. மாறாக காங்கிரஸ் காலத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகும்.

பெட்ரோல், டீசல் விற்பனை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ள முக்கியமான பாத்திரத்தைக் கருதிதான், பெட்ரோல், டீசல் விலையின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடும், மானியமும் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக நாடெங்கும் சரக்குப் போக்குவரத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்கவும், விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்தவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

கேஸ் விலை உயர்வைக் கண்டித்து 2014-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம் – கோப்புப்படம்

அதன் பின்னர், தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளின்படி இதனை சந்தையின் கட்டுப்பாட்டில், அதாவது பெட்ரோல் டீசல் சுத்திகரிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் விட்டது காங்கிரஸ் கட்சி.

கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் –  சேவைத் துறையிலிருந்து இலாபம்சார்ந்த துறையாக – அரசின் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட துறையாக மாற்றி சந்தையின் கைகளில் விடவேண்டும் என்பதுதான், தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் அடிப்படை.

இந்த வகையில் மானிய விலையில் விற்கப்பட்டு வந்த பெட்ரொல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர் துவங்கி ரேசன் பொருட்கள் வரை அனைத்துக்கும் அளிக்கப்பட்டு வரும் மானியத்தை படிப்படியாக நிறுத்தி ஒளித்துக்கட்டும் வேலையை கடந்த காங்கிரஸ் ஆட்சியும், தற்போது மோடி ஆட்சியும் சிரமேற்கொண்டு செய்து வருகின்றன.

இதற்கான அடித்தளமிட்ட திட்டங்கள்தான் ஆதார் மற்றும் ஜன்தன் யோஜனா. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற வகையில், மானிய விலையில் கொடுக்கப்படும் எரிவாயு சிலிண்டர், ரேசன் பொருட்கள், ஆகியவற்றை முழு விலை கொடுத்துவிட்டு வாங்கினால், உங்களது வங்கிக் கணக்கிற்கு மானியத்திற்கான தொகை வந்துவிடும்.. இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள் தொல்லை கிடையாது என்றெல்லாம் விளம்பரம் செய்தும், ஆதார் இல்லையெனில் ரேசன் பொருட்கள் கிடையாது என மிரட்டியும், மானிய ஒழிப்பை படிப்படியாக நடைமுறைப்படுத்தின காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள்.

மக்களை முதலில் சந்தை விலை கொடுத்து வாங்கச் செய்வது – அதாவது சந்தை விலைக்கு வாங்குவதற்கு மக்களின் சிந்தனையை பழக்கப்படுத்துவது – என்பதை வெற்றிகரமாகச் செய்து முடித்த பிறகு, வங்கியில் போடப்படும் மானியத்தையும் படிப்படியாக ஒழித்துக் கட்டுவது என்ற வகையில் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது பாஜக.

தற்போதைய விலை உயர்வை மிகத் தெளிவாக “மானியமில்லா” எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு எனப் போடுவதன் மூலம், மானியமுள்ள எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது போன்ற தோற்றத்தை அரசும் ஊடகங்களும் ஏற்படுத்துகின்றன.

நடைமுறையில் மானியமுள்ள எரிவாயு சிலிண்டர்களை வாங்குபவர்கள், மானியமில்லா  எரிவாயு சிலிண்டருக்கான விலையைக் கொடுத்துதான் வாங்க வேண்டும். அப்படி வாங்கிய பின்னர் மானியத்தொகையை அரசு அவர்களது வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்திவிடும் என்று சொல்லப்பட்டது. அதற்காகத்தான் ஆதாரோடு எரிவாயு இணைப்பு பெறுவது இணைக்கப்பட்டது. ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது ?

கடந்த மாதத் துவக்கத்தில்  610 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு நடுத்தரவர்க்கத்தவருக்கு அவரது அக்கவுண்டில் அரசால் போடப்பட்ட மானியத்தொகை ரூ. 23.95. அவர் இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் ரூ. 660 கொடுத்து வாங்கிய சிலிண்டருக்கும் அவருக்கு வங்கியில் அரசால் போடப்பட்ட மானியத் தொகை ரூ.23.95.  இதுதான் மானிய விலை சிலிண்டரின் இலட்சணம்.

மானியமில்லா சிலிண்டருக்கும், மானிய விலை சிலிண்டருக்கும் உள்ள விலை வித்தியாசம் ரூ. 23.95. மானியமில்லா சிலிண்டரின் விலை உயரும் ஆனால் மானியம் மட்டும் உயராது. இதுதான் எதார்த்தம். இங்கே மானியம் என்று எதுவும் அளிக்கப்படவில்லை; படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல் விலை, டீசல் விலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சர்வதேச சந்தையில் ஏறினாலும், இறங்கினாலும்  உள்ளூர் சந்தையில் ஏறுவது மட்டுமே பிரதானமாக நடக்கிறது.

படிக்க :
♦ ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

தொழில் வளர்ச்சிக்காகவும், விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும், மக்கள் நலனை குறைந்தபட்சமாகப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட மானியத்தை இலவசம் என்பது போலவும், இழிவானதாகவும் சித்தரித்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதிலும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் அனைத்தும் அரசுக்கு ஏற்படும் சுமைகள் என்பது போலவும் திட்டமிட்டு ஒரு சித்திரத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கியது.

அதன் விளைவுதான்,  பாஜகவின் முந்தைய ஆட்சிக்காலத்தில்,  எரிவாயு சிலிண்டர் மானியத்தை தாமாக முன்வந்து கைவிடும்படி மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க, பல்வேறு நடுத்தரவர்க்க “கனவான்கள்” தாமாக முன்வந்து கைவிட்டனர். பாவம் அடிமட்ட ஏழையான அம்பானி கூட தனக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை கைவிட்டார் தெரியுமா ?

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்கும் மானியங்கள் அனைத்தும், வளர்ச்சிக்கானவையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

பெட்ரோல் விலை – டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு , ரேசன் கடை மானியம் ரத்து ஆகியவை சிறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வை படிப்படியாக முடக்குகின்றன. அவர்களை வாழமுடியாத நிலைக்குத் தள்ளுகின்றன.

இவை அனைத்தும் படிப்படியாக, நமக்கு இயல்பானதாக, மாற்றப்பட்டு அமல்படுத்தப்படும் போது எவ்வித எதிர்ப்பும் இன்றி மேற்கண்ட வர்க்கப் பிரிவினர் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த மானியங்கள் ஒழிக்கப்படுவதன் மூலமும், அரசாங்கத்தால் அதிகரிக்கப்படும் பெட்ரோல் டீசல் கலால் வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள் மூலமும் கிடைக்கும் பணத்தால் ஆதாயம் அடையப் போவது ஆத்மநிர்பார் மூலமும் இன்னபிற அரசு மானியங்கள் மூலமும், வரிவிலக்குகள் மூலமும் பயனடையும் கார்ப்பரேட்டுகள் தான்.

இப்போது புரிகிறதா ? வறுமைக் குறியீட்டில் இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுக்கு அருகாமையில் இருக்கும் அதே நிலையில், அம்பானிகளும் அதானிகளும் செல்வச் செழிப்பில் அமெரிக்காவிற்குப் போட்டியாக இருப்பதன் ரகசியம் என்னவென்று ?

சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க