உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?

“மற்ற பிரச்சினைகளெல்லாம் காத்திருக்கலாம். ஆனால், விவசாயம் காத்திருக்க முடியாது” என நாடு ’சுதந்திரமடைந்த’ சமயத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினாராம். ஆனால், எழுபத்தொரு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட விவசாயிகள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாடெங்கும் அவர்கள் நடத்திவரும் போராட்டங்களே எடுத்துக் காட்டுகின்றன.

விவசாயிகள் ஆட்சியாளர்களிடம் சொர்க்கத்தையெல்லாம் கோரவில்லை. தங்களின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துமாறுதான் கோருகிறார்கள்.

இப்பிரச்சினையோடு தொடர்புடைய வேறொரு விடயத்துக்கு வருவோம். ஜார்கண்டு மாநிலத்தில் செயல்பட்டு வரும் உணவு உரிமைக்கான இயக்கம், அம்மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்குள்ளாகவே 17 பழங்குடியினர் பட்டினியால் இறந்துபோயிருப்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பழங்குடியினர் இறந்து போனதற்குக் – பட்டினிபோட்டுக் கொல்லப்பட்டதற்கு என்றுகூடச் சொல்லலாம் – காரணம், உணவுப் பொருட்களை வாங்க முடியாத

ஏழ்மை.

ரேஷன் அட்டைகளோடு ஆதார் இணைக்கப்பட்ட பிறகு, ஜார்கண்டு மாநிலத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் நேரடிப் பணப்பட்டுவாடா முறை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகுதான் இவர்கள் இறந்துபோனார்கள்.
இப்பட்டினிச் சாவுகளைத் தடுக்க நேரடிப் பணப்பட்டுவாடா முறையைக் கைவிட்டு, அனைவருக்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் முறைமையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரி வருகிறது, உணவு உரிமைக்கான இயக்கம்.

படிக்க:
♦ ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
♦ கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை என்ற விவசாயிகளின் கோரிக்கையும் அனைவருக்கும் உணவு மானியம் என்ற அடித்தட்டு மக்களின் கோரிக்கையும் தனித்தனியான தீவுகளல்ல. விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்க வேண்டும் என்றால், நெல், கோதுமை, பயறு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை உற்பத்திச் செலவுக்கு ஏற்ப இலாபம் தரக்கூடிய வகையில் உயர்த்தி அளிக்க வேண்டும். அவ்விலை சந்தையில் கிடைப்பதற்கு ஏற்ப அரசு தனது கொள்முதல் கொள்கையை, நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

அனைவருக்கும் பொது விநியோக முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், அரிசி, கோதுமை, பாமாயில் மட்டுமின்றி, மற்றைய முக்கிய உணவுப் பொருட்களையும் ரேஷனில் விநியோகிக்கும் வண்ணம் கொள்முதலையும் விநியோக முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளுக்கு மோடி அரசின் எதிர்வினை என்ன என்பதைப் பார்க்கும் முன், மோடி அரசின் எஜமானர்களான ஏகாதிபத்திய முதலீட்டாளர்களும், பன்னாட்டு ஏகபோகத் தொழில் நிறுவனங்களும் இந்திய அரசு விவசாயத்திற்கும் ரேஷன் விநியோகத்திற்கும் அளித்துவரும் மானியங்கள் குறித்துக் கருதுவதைப் பார்த்துவிடலாம்.

கடந்த மே மாதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக வர்த்தகக் கழகத்திடம் இந்திய அரசுக்கு எதிரான மனுவொன்றை அளித்திருக்கிறது. அதில், இந்திய அரசு 2011-12 முதல் 2013-14 முடியவுள்ள நிதியாண்டுகளில், நெல்லுக்கும் கோதுமைக்கும் அதிக மானியம் அளித்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பதாகவும், இது உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளுக்கு எதிரானதென்றும் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படி அதிக மானியம் அளித்துவருவதைக் கைவிடாவிட்டால் இந்தியா மீது வழக்குத் தொடுப்போம் என்றும் எச்சரித்திருக்கிறது.

உலக வர்த்தகக் கழகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் (Agreement on Agriculture) உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் விவசாய விளைபொருட்களுக்கு எவ்வளவு மானியம் அளிக்க வேண்டும் என வரையறுக்கிறது. இதன்படி, விவசாயத்திற்கு அளிக்கப்படும் மானியங்கள் மூன்று பிரிவுகளாகப் (நீலம், பச்சை, பழுப்பு மஞ்சள் – Blue box, Green box, Amber box ) பிரிக்கப்பட்டு, அவற்றுள் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் மானியத்திற்கு (பழுப்பு மஞ்சள்) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்திய – முதலாளித்துவ நாடுகள் 1986-88-ம் ஆண்டுகளில் உற்பத்தி செய்த விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 5 சதவீதம் வரையிலும், இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அதே ஆண்டில் உற்பத்தி செய்த விளைபொருட்களின் மதிப்பில் 10 சதவீதம் வரையிலும் மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

2010-11-ம் ஆண்டு தொடங்கி 2013-14-ம் ஆண்டு முடியவுள்ள நிதியாண்டுகளில் இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் குறித்து உ.வ.க.விற்கு அறிக்கை அளித்துள்ள இந்திய அரசு, அவ்வாண்டுகளில் அரிசிக்கு முறையே 7.22%, 7.44%, 7.68%, 5.45%; கோதுமைக்கு -0.73%, 0.48%, -2.5%, -3.53% என்ற அளவில், 10 சதவீதத்திற்குள்ளாகத்தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இப்புள்ளிவிவரப்படி 2010-11, 2012-13, 2013-14-ம் ஆண்டுகளில் இந்திய அரசு கோதுமைக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை, அதற்கு முந்தைய ஆண்டுகளைவிடக் குறைவானதாகும்.

ஆனால், அமெரிக்க அரசோ, உ.வ.க.விற்கு அளிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் தவறென்றும், இந்திய அரசு அக்குறிப்பிட்ட ஆண்டுகளில் அரிசிக்கு முறையே 74%, 80.1%, 84.2%, 76.9% என்ற அளவிலும், கோதுமைக்கு முறையே 60.1%, 60.9%, 68.5%, 65.3% என்ற அளவிலும் சந்தை ஆதார விலை அளித்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது.

மலைக்கும் மடுவுக்குமான இவ்வேறுபாடு எப்படிச் சாத்தியமானதென்றால், அமெரிக்க அரசு உ.வ.க.வின் விவசாய மானிய விதிகளைத் தனது கெடுமதி நோக்கத்திற்கேற்ப வளைத்து, இந்திய அரசு விவசாயிகளுக்கு அளித்திருக்கும் நேரடி மானியம் 10 சதவீதத்திற்கு அதிகமானது என மோசடியானதொரு கணக்கை அளித்திருக்கிறது.

அமெரிக்காவின் மோசடிக் கணக்கு

2013-14-ம் ஆண்டில் இந்திய அரசு கோதுமைக்கு நிர்ணயித்திருந்த குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) 1,386 ரூபாய். 1986-88-ம் ஆண்டுகளில் கோதுமையின் சர்வதேச சந்தைவிலை சராசரியாக 354 ரூபாய்.

2013-14-ம் ஆண்டின் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும், 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த கோதுமையின் சர்வதேச விலைக்கும் இடையிலான வித்தியாசம் சராசரியாக 1,032 ரூபாய் எனக் கணக்கிட்டு, ஒரு குவிண்டால் கோதுமைக்கு 1,032 ரூபாய் நேரடி மானியம் அளிக்கப்பட்டிருப்பதாக வாதிடுகிறது, அமெரிக்கா. இதுபோல, அதே ஆண்டில் அரிசிக்கு அளிக்கப்பட்ட மானியம் 1,019 ரூபாய் எனக் குறிப்பிடுகிறது.

இந்திய அரசு தனது விவசாயிகளுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் அளிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசு இரண்டு மோசடிகளை நடத்தியிருக்கிறது. 2010 முதல் 2014 வரை நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையை, 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த சர்வதேச விலையோடு ஒப்பிடுவதே முட்டாள்தனமானது. அப்படியே அச்சர்வதேச விலையை எடுத்துக்கொள்வதென்றால், அவ்விலை 2010-2014 கால பணவீக்கத்தின்படி எவ்வளவு உயர்ந்திருக்கும் எனக் கணக்கிட வேண்டும்.

குறிப்பாக, அமெரிக்க டாலரோடு இந்திய ரூபாயை ஒப்பிட்டால், இந்த ஆண்டுகளில் இந்திய ரூபாய் கிட்டத்தட்ட நான்கு மடங்குக்கு மேல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அமெரிக்கவோ, 1986-88-ம் ஆண்டுகளில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (அன்றைய மதிப்பு ரூ.12.50) எவ்வளவு இருந்ததோ, அதுவே 2010 தொடங்கி 2014 வரை இருந்தது போல எடுத்துக்கொண்டு, அவ்வாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையையும் 1986-88-ம் ஆண்டின் சர்வதேச விலையையும் ஒப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக, 2013-14-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் அரிசிக்குத் தரப்பட்ட சராசரி குறைந்தபட்ச ஆதார விலை இந்திய ரூபாயில் சராசரியாக ரூ.1,348. 1986-88-ம் ஒரு குவிண்டால் அரிசிக்குக் கிடைத்த சர்வதேச சந்தை விலை 26.3 அமெரிக்க டாலர்கள். இதனை 2013-14-ம் ஆண்டில் இருந்த பரிமாற்ற மதிப்பின்படி (ஒரு அமெரிக்க டாலரின் அன்றைய மதிப்பு ரூ.60.50) இந்திய ரூபாய்க்கு மாற்றினால், சர்வதேச சந்தை விலை ரூ.1,592. இவையிரண்டுக்குமான வித்தியாசம் ரூ.244 தான்.

ஆனால், அமெரிக்க அரசோ 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த சர்வதேச சந்தை விலையை 2013-14-ம் ஆண்டுகளில் இருந்த பரிமாற்ற மதிப்பின்படி (ரூ.60.50) மாற்றாமல், 1986-88-ம் ஆண்டுகளில் இருந்த பரிமாற்ற மதிப்புதான் (ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.12.50) 2013-14-லும் இருப்பதைப் போல அனுமானித்துக்கொண்டு, இந்திய ரூபாய்க்கு மாற்றி (ரூ.329/-), இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு 1,019/- என வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறது.

இரண்டாவது மோசடி என்னவென்றால், இந்திய அரசு பரிசீலனைக்குரிய ஆண்டுகளில் விளைந்த மொத்த நெல்லையும், கோதுமையையும் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் பரிசீலனைக்குரிய ஆண்டுகளில் எவ்வளவு அதிகமாக மானியம் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத்தை உ.வ.க.விடம் அளித்திருக்கிறது.

படிக்க:
♦ வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

இந்திய அரசு எந்தவொரு ஆண்டிலும் விளைச்சல் முழுவதையும் கொள்முதல் செய்வது கிடையாது. அப்படிச் செய்வதாகக் கூறுவது அடுக்கமாட்டாத பொய். விளைச்சலில் பாதியளவைகூட இந்திய அரசு கொள்முதல் செய்வதில்லை என்பதே உண்மை.

எடுத்துக்காட்டாக, 2013-14-ம் ஆண்டுகளில் மொத்த நெல் உற்பத்தி 10.66 கோடி டன். அந்த ஆண்டில் இந்திய உணவுக் கழகம் 3.4 கோடி டன் அளவிற்குத்தான் கொள்முதல் செய்தது. இதுபோல 2017-18-ம் ஆண்டில் 9.71 கோடி டன் கோதுமை விளைந்ததில், 3.2 கோடி டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தமது விளைபொருட்களுக்கு அளித்துவரும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நெருக்கடி கொடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தியா மீது அமெரிக்கா கொடுத்திருக்கும் புகார்.

ஏகாதிபத்தியங்களின் நயவஞ்சகம்

நேரடி விவசாய மானியத்தைக் குறைக்குமாறு இந்தியாவிற்குக் கட்டளையிடுவதற்கு அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு நியாய உரிமையும் கிடையாது, தார்மீக உரிமையும் கிடையாது. ஏனென்றால், இந்த நாடுகள் பல இலட்சம் கோடி ரூபாய் மானியங்களைப் பல்வேறு பெயர்களில் அந்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட பயிரின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில்கூட அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் விவசாய மானியம் வழங்கப்படுகிறது. உ.வ.க.வில் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் மானியங்களில், பச்சைப் பெட்டியின் கீழ் வரும் மானியங்களைக் குறைக்கத் தேவையில்லை எனக் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு இத்தகைய மானியங்களை ஏகாதிபத்திய நாடுகள் வாரிவழங்கிவருகின்றன. வர்த்தகத்தைப் பாதிக்காத மானியங்கள் என்ற முகாந்திரத்தின் கீழ் இந்த வகை விவசாய மானியங்களை நியாயப்படுத்தியும் வருகின்றன.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க அரசு 2000-ம் ஆண்டில் தனது விவசாயிகளுக்கு வழங்கிய நேரடி மானியம் (பழுப்பு மஞ்சள் மானியம்) 1,684.30 கோடி அமெரிக்க டாலர்கள். இதனை 2010-ம் ஆண்டில் 411.9 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைத்துவிட்டாலும், பச்சைப் பெட்டியின் கீழ் வரும் மானியங்களை விண்ணைமுட்டும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. அம்மானியம் 2000-ம் ஆண்டில் 9,700 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2010-ம் ஆண்டில் 24,200 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

2015-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் அந்நாட்டு அரசு அளித்திருக்கும் மொத்த மானியம் 7,860 அமெரிக்க டாலர்கள். ஒரு பிரிட்டிஷ் விவசாயி பெறும் மானியம் 28,300 பவுண்டுகள், ஜப்பானிய விவசாயி பெறுவது 14,136 அமெரிக்க டாலர்கள். இந்தியாவிலோ, நேரடி மற்றும் மறைமுக மானியங்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு விவசாயி பெறுவது 417 அமெரிக்க டாலர்கள்தான்.

உத்சா பட்நாயக்

மேற்குலக ஏகாதிபத்திய-முதலாளித்துவ நாடுகளின் தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு நான்கு சதவீதத்திற்கும் குறைவானது. ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மக்கட்தொகையினர்தான் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுகின்றனர். அமெரிக்காவிலோ இந்த சதவீதம் மற்ற மேற்குலக நாடுகளைவிடக் குறைவு. இதனால், அந்நாடுகளுக்குத் தமது மொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் ஏறத்தாழ 50 சதவீதத்தை மானியமாக வழங்குவது எளிதாக உள்ளது. அந்நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும்போது விவசாய மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை 2 சதவீதத்திற்கும் குறைவானது. வருடாந்திர பட்ஜெட் செலவில் இம்மானியங்களின் பங்கு 8 சதவீதத்திற்கும் குறைவு” எனச் சுட்டிக்காட்டுகிறார், மார்க்சியப் பொருளாதார வல்லுநரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பொருளாதாரப் பேராசிரியருமான உத்சா பட்நாயக்.

விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தை எந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு குறைப்பது, எவ்வளவு குறைப்பது, எந்த மானியத்தைக் குறைப்பது, எதனை அதிகரிப்பது என உ.வ.க.வில் உருவாக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்துமே ஏகாதிபத்திய நாடுகளின் நலனை முன்னிறுத்தியும், அவர்களின் ஆலோசனைகளின்படிதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் வகுத்து வைத்திருக்கும் விதிகளுக்கு ஏற்ப இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை ஆடச் சொல்லுகின்றன.

சுதந்திர வர்த்தகமா, சுருக்குக் கயிறா?

குறைந்தபட்ச ஆதார விலை, உணவு மானியம், ரேஷன் விநியோகம், தனியார் கொள்முதல் மற்றும் ஏற்றுமதி -இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் ஆகிய இவையனைத்தும் சுதந்திரமான வர்த்தகத்துக்குத் தடை போடுவதாக ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ்சுமத்துகின்றன.

இவற்றை ஒவ்வொன்றாக, படிப்படியாக ஒழித்துக்கட்டுவதன் மூலம் இந்திய உணவுச் சந்தையை பன்னாட்டு ஏகபோக உணவுக் கழகங்களும், அவர்களது அடிவருடிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கவ்விக்கொள்ளத் திட்டமிடுகின்றனர்.

இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்கா உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியா மீது புகார் கொடுக்கிறது. அதனது உள்நாட்டு அடிவருடிகளோ உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் ரேஷனில் விநியோகிப்பது மக்களைச் சோம்பேறிகளாக்குகிறது எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள்.

உணவுப் பயிர்களைப் பயிரிட்டு ஏன் கடனாளியாகிறீர்கள், ஏற்றுமதிக்கான பணப் பயிர்களைப் பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார்கள். இந்திய அரசோ, ஒருபுறம் மானியங்களை வெட்டுகிறது, இன்னொருபுறம் ஆதார் இணைப்பு, நேரடி பணப் பட்டுவாடா என்ற போர்வையில் அரசு கொள்முதல், ரேஷன் கடைகளை ஒழித்துக்கட்டத் திட்டமிடுகிறது.

உணவுப் பயிர்களுக்குப் பதிலாக ஏற்றுமதிக்கான பணப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிடத் திட்டமிடுகின்றன. ஒன்று, உணவுப் பொருட்களுக்குத் தம்மை அண்டிப் பிழைக்குமாறு இந்தியாவை மாற்றுவது. மற்றொன்று, தமக்குத் தேவையான பயிர்களைப் பயிரிடுவதற்கு ஏற்ப இந்திய விவசாயத்தை மாற்றியமைப்பது.

”சோவியத் யூனியனின் சிதைவும், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் உணவுப் பொருள் நுகர்வு 1990-களுக்குப் பின் குறைந்து போனதும் பன்னாட்டு ஏகபோக உணவுக் கழகங்களைப் புதிய சந்தையைப் பிடித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளின. இந்த நோக்கில்தான் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்டவுடனேயே, அதில் ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமான விவசாய ஒப்பந்தம் திணிக்கப்பட்டது” எனக் கூறுகிறார், உத்சா பட்நாயக்.

மேலும், “வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைவிட, மேற்குலக நாடுகளில்தான் விவசாய உற்பத்தி அதிக அளவில் நடந்துவருவதைப் போலச் சித்தரிக்கப்பட்டு வருவது ஒரு மாயத் தோற்றம். தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மூலம் மேற்குலக நாடுகள் தமது விவசாய உற்பத்தித் திறனைப் பல மடங்கு அதிகரித்திருக்கலாம்.

ஆனால், அந்நாடுகளில் நிலவும் பருவ நிலை காரணமாக, அந்நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைப் போல பலவிதமான பயிர்களைப் பயிரிடும் வாய்ப்பை இயற்கையாகவே பெற்றிருக்கவில்லை. இந்தியா போன்ற ஏழைநாடுகளின் விவசாயிகள் ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்றுவிதமான பயிர்களைப் பயிரிடும் இயற்கை வாய்ப்புகளைப் பெற்றிருக்கும்போது, குளிர் பிரதேசங்களைச் சேர்ந்த மேற்குலக நாடுகள் ஆண்டு முழுவதும் ஒரே பயிரை மட்டுமே பயிரட முடியும்.”

இதன் காரணமாகவே, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் அவுரி உள்ளிட்ட மூலப்பொருட்களை ஆண்டு முழுவதும் பயிரிடுமாறு இந்திய விவசாயிகளைக் கட்டாயப்படுத்தினர். இப்பொழுது மூலப்பொருட்களுக்குப் பதிலாக, மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மேட்டுக்குடி வர்க்கம் விதவிதமாக நுகர்வதற்கு ஏற்ற உணவுப் பொருட்களை ஏழை நாடுகளில் பயிரிடச் செய்து இறக்குமதி செய்துகொள்ள விழைகின்றன.”

படிக்க:
♦ ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
♦ ஆதாரில் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளை : ஏர்டெல் ஆதாரம் !

“இப்படியாக ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகள் மீது இரண்டு நுகத்தடிகளைச் சுமத்துகின்றன. ஒன்று, தமது நாடுகளில் அதீதமாகவும் அராஜகமாகவும் உற்பத்தி செய்து குவிக்கப்படும் தானியங்களை விற்பதற்கான சந்தையாகவும், தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் கேந்திரமாகவும் ஏழை நாடுகளை மாற்றியமைக்க முயலுகின்றன. இந்த அடிப்படையில்தான் விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் அற்பமான மானியத்தையும் கைவிடவும், ஏற்றுமதி மதிப்பு கொண்ட பயிர்களைப் பயிரிடுமாறும் ஏழை நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் நிர்பந்திக்கின்றன” என அம்பலப்படுத்துகிறார், உத்சா பட்நாயக்.

இந்திய விவசாயிகள் மத்தியில் கடன் சுமையும் தற்கொலைச் சாவுகளும் அதிகரித்து வரும் வேளையில், ஏறத்தாழ 19 கோடி இந்திய மக்கள் அரைகுறை பட்டினியில் காலந்தள்ளிவரும் வேளையில், மானியங்களைக் குறைக்குமாறு ஏகாதிபத்தியங்கள் நெருக்கடி கொடுத்துவரும் வேளையில், மோடி அரசோ விவசாய மானிய விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. உ.வ.க.வில் ஏகாதிபத்திய நெருக்கடிகளுக்கு எதிராக நிற்பது போலக் காட்டிக்கொண்டு, உள்நாட்டிலோ மானிய வெட்டைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

2011-12-ம் ஆண்டில் மின்சாரம், பாசன வசதிகள், உரம் ஆகியவற்றுக்கு 2,910 கோடி அமெரிக்க டாலர்கள் மானியமாக வழங்கப்பட்டிருந்த நிலையில், 2014-15-ம் ஆண்டில் இதனை 2,280 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைத்துவிட்டது, மோடி அரசு. 2,450 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த பச்சைப் பெட்டி மானியங்கள், 1,830 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைக்கப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் 1.13 இலட்சம் கோடியாக இருந்த உணவு மானியம், 2015-16-ம் ஆண்டில் 1.35 இலட்சம் கோடி உயர்ந்து, 2016-17-ம் ஆண்டுகளில் 1.05 இலட்சம் கோடியாகச் சரிந்துவிட்டது.

இந்நிலையில் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக் கொடுக்கக் கோரி நடந்துவரும் விவசாயிகளின் போராட்டங்கள்தான் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகின்றன. இப்போராட்டங்கள்தான் நகர்ப்புற ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்துக்கும்கூட உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

ரஹீம்

(சி.பி.எம். கட்சியின் அதிகாரப்பூர்வ தத்துவார்த்த இதழான மார்க்சிஸ்டு (ஆங்கிலம்) ஏப்ரல்-ஜூன் 2018 இதழில் மார்க்சியப் பொருளியல் வல்லுநரான உத்சா பட்நாயக், Destroying Public Provisioning of Food in India எனும் தலைப்பில் எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.)

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க