விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 1
முன்னுரை
மத்திய மாநில அரசுகள் பல்வேறு மக்கள் “நலத்” திட்டங்களை கொண்டுவருகின்றன. அந்தத் திட்டங்களுக்காக விவசாயிகளின் விளைநிலங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. வாங்கிய நிலங்களில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்கள் முளைக்கின்றன.
பல ஆயிரம் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்விழக்கின்றனர். சிலநூறு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆண்டு இறுதியில் அந்த கார்ப்பரேட்டுகளின் லாபம் நம்மை மலைக்க வைக்கிறது. சில வருடங்களில் அந்த கார்ப்பரேட்டுகளின் பங்குச் சந்தை மதிப்பு பல கோடி வளர்கிறது.
இதை வைத்து “நமது நாடு வளர்கிறது, வல்லரசாகப் போகிறது, உலக அரங்கில் வீறுநடை போடுகிறது” என்று பத்திரிகைகளும் ஊடகங்களும் எழுதுகின்றன.
இதற்கிடையில் தேர்தல்கள் வருகின்றன, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் அரசியல்வாதிகள். ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் நிலம் கையகப்படுத்துவது, முதலாளிகளுக்கு வரி தள்ளுபடி செய்வது, வங்கிக் கடன்கள் தருவது, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்று பிசியாகிவிடுகிறார்கள்.
நிலத்தை நம்பி வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான விவசாயிகளின் நிலை என்ன?
- “என்ன செய்வது? விவசாயமும் கைகொடுக்கவில்லை, விளைவித்ததற்கு சரியான விலையும் கிடைப்பதில்லை, இயற்கையும் சோதிக்கிறது” என்று நிலத்தை கொடுத்துவிட்டு, “குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்காவது வேலை கிடைக்காதா?” என்று காத்துக் கிடந்து ஏமாந்து போகின்றனர், ஒரு பிரிவினர்.
- “பரம்பரை பரம்பரையாக நாங்கள் உழுது பயிரிட்ட நிலத்தை யாருக்கும் தரமாட்டோம்” என்று போராடி சிறை செல்கின்றனர் இன்னொரு பிரிவினர்.
- வலுக்கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும் என்று காவல்துறை புடைசூழ பறித்துச் செல்லும் சூழலில் செய்வதறியாது கையறு நிலையில் கண்ணீர்சிந்தி ஆண்டவன் விட்ட வழியென்று வாழ்க்கையை ஓட்டுபவர்களும் உள்ளார்கள்.
இதைப் பார்க்கும் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்திலிருந்து வந்துள்ள ஐ.டி ஊழியர்களுக்கு இந்த சம்பவங்களுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று உணர முடிவதில்லை.
“அரசு என்ன ஓசியிலா நிலத்தை வாங்குகிறது? பணம் கொடுக்கிறார்களே, விவசாயமும் நட்டத்தில் தானே உள்ளது, கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே?” என்றும் சிலர் நினைக்கிறார்கள்.
“நாட்டின் வளர்ச்சிக்காக என்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கொண்டு வருகிறார்கள். ஆனால் சில திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். ஏன் போராடுகிறார்கள்” என்ற கேள்விக்கு விடை தேடும் முன்பே, அதே போன்று அடுத்து ஒரு திட்டம் வந்துவிடுகிறது, அதற்கு எதிரான போராட்டங்கள் துவங்கி விடுகின்றன.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
♦ நெடுவாசல்-ஹைட்ரோகார்பன் : மோடி அரசு திணிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசு !
உதாரணமாக தொடர்ச்சியாக நடந்து வரும் பல்வேறு விவசாயிகளின் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், 8 வழி சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன.
அதேநேரம் சிலர்எதற்காக இந்த மக்கள், விவசாயிகள் இந்தத் திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்பதை ஐ.டி துறையை சார்ந்த நாம் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான். ஒரு பக்கம் விவசாயிகள் சொல்லும் காரணங்களும், மறுபக்கம் அரசுதரப்பு நியாயங்களும் என்று மாறி மாறி நம்மை குழப்பி, எது சரியானது என்ற முடிவுக்கு வரமுடியாமல் உள்ளது.
- நிவாரணத் தொகை கொடுக்கிறார்களே பிறகு ஏன் எதிர்க்கிறார்கள்?
- விளை நிலங்களை ஓசியாகவா அரசு கேட்கிறது?
- விவசாயத்தில் நட்டம் என்று சொல்கிறீர்களே, பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள்? நிலத்தை கொடுத்தால் என்ன? நாட்டுக்காகத்தானே கேட்கிறது அரசு?
போன்ற வாதங்களை முன் வைக்கிறனர். இவை அனைத்தையும் பற்றி பேசும் பதிவு இது.
*****
வணக்கம்.
நான் ஐ.டி யில் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்; NDLF-ல் உறுப்பினராக இருக்கேன். எனக்கு சில தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலமாக சில நல்ல விஷயங்களை செய்வேன்; தவறுன்னு படக்கூடிய சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பேன்.
எனவே நான் முழு நேர தொண்டு செய்யும் நபர் அல்ல.
இந்தப் பதிவில் அரசின் செயல் திட்டங்கள், அவற்றின் குறைகள், அதன் விளைவாக நடக்கக் கூடிய குற்றங்கள், அந்தக் குற்றங்களில் சில தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி பேசப் போகிறேன்.
திரைகடலோடி தேடிய திரவியம்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர், திருச்சியை சேர்ந்த இரண்டு பேர். இவங்க ஆறு பேரில் நான்கு பேர் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இரண்டு பேர் சமையல், பிளம்பிங், மெக்கானிக் போன்ற தொழில்களை செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் டிப்ளோமா முடித்தவர்கள்; அனைவரும் 35, 36 வயதை கடந்து, திருமணமாகி குழந்தை உள்ளவர்கள்.
இவர்கள் ஆறு பேரும் போலி ஏஜென்ட் மூலமாக டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு அனுப்பப் படுகிறார்கள். இது எப்படி நடக்குதுன்னு பலருக்குத் தெரியும். சுருக்கமா பார்க்கலாம்.
“உங்களிடம் ஒரு லட்சம் ரூபாயும் டிராவலுக்கு தனியாக காசும் பெற்றுக் கொண்டு மலேசியா விற்கு அனுப்பி வைப்போம். அங்கு போன பிறகு என்னுடைய நண்பர் வந்து அழைத்துக் கொள்வார். அவர் உங்களுக்கு வேலை வாங்கி தருவார். டூரிஸ்ட் விசா காலாவதி ஆவதற்குள் ஒர்க் பெர்மிட் போட்டு கொடுத்திடுவாங்க” என்று ஏஜென்டு மூலம் உறுதியளித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்த வாக்குறுதிகளை நம்பி அங்கு போன பிறகு, ஒருவர் வந்து அதேபோல் அழைத்துச் செல்கிறார். சொன்ன வேலை வேறு; கொடுத்த வேலை வேறு. 6 மாதங்களாக கொத்தடிமைகளை போல் நடத்தப்படுகிறார்கள். சம்பளம் கிடையாது, தங்குவதற்கு இடமும், சாப்பாடும்தான். உணவும் 3 வேளை தரப்படுவதில்லை; வேலை நேரம் 10 மணி நேரத்திற்கும் மேல். சம்பளம் கேட்டால், வேலை செய்ய முடியாது என்று சொன்னால், “உங்களை கொலை செய்தால் கூட இங்கு கேட்க நாதி இல்லை” என்று மிரட்டப்படுகின்றனர்.
“நீங்கள் எல்லோரும் டூரிஸ்ட் விசாவில் வந்த நாய்கள், நீங்கள் செத்தா கூட அனாதை பொணமாத்தான் இருப்பீர்கள்” என்று மிரட்டப்படுகின்றனர்.
இந்த நிலையில் இருந்த இந்த 6 பேரும் வெவ்வேறு இடங்களிலிருந்து ஓடி வந்து ஒன்று சேர்ந்து அங்குள்ள உலக மனித நேய கழகத்தை அணுகுகிறார்கள். போலீசுக்கு தகவல் தரப்பட்டு சட்ட விரோத நுழைவு, சட்ட விரோத தங்கல் இதற்காக அபராதம் கட்டிவிட்டு, தொண்டு நிறுவனம் மூலமாக குடும்பத்தினருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சொல்லப்படும் 6 பேரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசும்போது, இவர்கள் விவசாய பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்று தெரிந்தது.
படிக்க :
♦ ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்
♦ சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !
விவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.
– சரவணன்
(தொடரும்)
நன்றி : new-democrats
விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்திய மத்திய அரசு மூன்று மடங்காக ஓட்டு கேட்க்கிறது