Sunday, July 21, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!

-

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம் : நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி !தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடியின மக்களும் போராடி வரும் வேளையில், 1894ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதோடு, நிலத்தை இழக்கும் விவசாயிகளை மீளக் குடியமர்த்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டத்தையும் இம்மழைக்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகவும் மைய அரசு கூறியிருக்கிறது.

ஆங்கில ஏகாதிபத்திய எஜமானர்களால் 117 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, இன்று வரை நடைமுறையில் இருந்துவரும் இந்நிலக் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் அபகரிக்கப்படுவதைப் பொது நோக்கம் என்ற அடிப்படையில் நியாயப்படுத்துகிறது. மைய அரசு கொண்டுவரவுள்ள திருத்தங்கள் இப்‘பொது நோக்கத்தை’க் கைகழுவவில்லை. கிராமப்புறங்களை மேம்படுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது, ஏழைகள் மற்றும் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பது, அரசின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது முதலானவற்றுக்காக நிலங்களைக் கையகப்படுத்தலாம் என வரையறுக்கப்பட்டிருந்த இடத்தில், அவற்றுக்குப் பதிலாக, தந்திரோபாய நோக்கங்களுக்காகவும் (Strategic purpose), பொது மக்களின் பயன்பாட்டிற்கான அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காகவும் நிலங்களைக் கையகப்படுத்தலாம் என இரண்டு பூடகமான திருத்தங்களை முன்மொழிந்துள்ளது, காங்கிரசு கூட்டணி அரசு.

போஸ்கோ நிறுவனம் ஒரிசாவில் வனப்பகுதி நிலங்களைக் கையகப்படுத்த, வன உரிமைச் சட்டத்தை மீறி அனுமதி அளித்த சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம், தந்திரோபாய நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்ததாகக் கூறியது. உ.பி. மாநிலத்திலுள்ள நொய்டா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்த அம்மாநில அரசு, மக்களுக்குக் குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்காகவே நிலங்களைக் கையகப்படுத்தியதாகக் கூறி, நில அபகரிப்பை நியாயப்படுத்தியது.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடெங்கும் நடத்திவரும் சட்டவிரோத நில அபகரிப்புகளைச் சட்டபூர்வமாக்கிவிடும் நோக்கத்தோடுதான் இந்த இரண்டு திருத்தங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன என உறுதியாகச் சொல்லிவிடலாம். மேலும், மேட்டுக்குடி கும்பல் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுச் செல்வதற்காக உருவாக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காகள், “மசாஜ் பார்லர்கள்சுகளும், சுற்றுலா துறையும் இத்திருத்தத்தில் அடிக்கட்டுமானத் திட்டங்களாக வரையறுக்கப்பட்டிருப்பது அரசின் நோக்கத்தைப் பச்சையாகவே புட்டு வைக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தமது தொழில் திட்டங்களைச் செயற்படுத்த தேவைப்படும் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதத்தை மட்டுமே அரசு கையகப்படுத்தித் தரும்; அதுவும்கூட, கார்ப்பரேட் நிறுவனங்கள் அம்மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதத்தைப் பொது மக்களிடமிருந்து வாங்கியிருக்க வேண்டும்; மேலும், அந்நிறுவனங்கள் கொண்டுவரும் திட்டம் பொது மக்களுக்கும் பயன்தரக் கூடியது என அரசு கருதினால் மட்டுமே, இந்த 30 சதவீத நிலப்பரப்பை அரசு பொது மக்களிடமிருந்து கையகப்படுத்தித் தரும் என்றொரு திருத்தத்தையும் மைய அரசு முன்மொழிந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிவைக்கும் நிலங்கள் அனைத்தையும் தானே விவசாயிகளிடமிருந்து அபகரித்துக் கொடுத்து வந்த அரசு, இனி அந்தப் ‘பொறுப்பை’ கார்ப்பரேட் நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுதான் இது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்க இந்த நடைமுறையைதான் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் பின்பற்றி வருகிறார். நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்க துப்பாக்கிச் சூடு நடத்திய மாயாவதியும்கூட, இதே போன்ற ஒரு சட்ட திருத்தத்தைத் தனது மாநிலத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்தத் திருத்தம் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் புரோக்கராகச் செயல்படவில்லை எனக் காட்டிக் கொள்ளுவதற்குப் பயன்படுமேயொழிய, விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பாதுகாப்பும் கிடைத்துவிடாது. இப்பொழுது அரசின் அதிகாரிகளாலும், போலீசாரலும் தமது நிலத்திலிருந்து விசிறியெறியப்படும் விவசாயிகள், இச்சட்டத் திருத்தத்தின் பின் கார்ப்பரேட் நிறுவனங்களின் குண்டர் படையால் துரத்தப்படும் மாற்றம்தான் நடக்கும்.

விவசாயிகளை ஆசை காட்டி மயக்கவே, “கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நிலத்தைச் சந்தை விலைக்கு வாங்க வேண்டும்; நிலத்தை இழக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை தர வேண்டும்; தமக்கு நிலத்தை விற்கும் விவசாயிகளைத் தமது திட்டத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலம் விற்கப்படுவதால், வேலையிழக்கும் விவசாயக் கூலிகள், கைவினைஞர்கள் ஆகியோருக்கும் நட்ட ஈடு வழங்க வேண்டும்சு என்றெல்லாம் பலவிதமான பொறிகள் இச்சட்டத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தின் சந்தை விலை என்னவென்பதை விவசாயி தீர்மானிக்கப் போவதில்லை. இன்னொருபுறமோ, ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் தீர்மானிக்கப்படும் சந்தை விலைக்குத் தமது நிலத்தை விற்க மறுக்கும் உரிமையையும் விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறித்துவிடும்படி இச்சட்டத்தில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டத்திற்கு மிகவும் அவசரமாக நிலத்தைக் கையகப்படுத்துவது அவசியம் என அரசு கருதினால், திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த 15 நாட்களுக்குள் நிலத்தைக் கையகப்படுத்தும் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும். இந்த அவசர நிலை உத்தரவுக்கு எதிரான விவசாயிகளின் கருத்துக்களை அரசு கேட்க வேண்டிய அவசியமில்லை எனத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம் : நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி !கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து 70 சதவீத நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏதேனும் தடங்கல்கள், சிக்கல்கள் ஏற்பட்டால், அரசு, தான் ஏற்கெனவே கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலத்திலிருந்து 70 சதவீதத்தை அளித்துவிட்டு, மீதி 30 சதவீத நிலத்தை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திக் கொடுக்கவும் இச்சட்டத்திருத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகப் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைய அரசு கொண்டுவரவுள்ள மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டத்தின்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டுவரும் திட்டங்கள் பழங்குடியினப் பகுதிகளில் 200  க்கும் மேற்பட்ட குடும்பங்களையும், சமவெளிப் பகுதிகளில் 400  க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் பாதித்தால்தான், அவர்கள் இச்சட்டத்தின்படி நிவாரணம் கோர முடியும். ‘வளர்ச்சி’த் திட்டங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் நிவாரண உதவிகள் வழங்கும் பொறுப்பிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களைத் தப்ப வைக்கும் ஏற்பாடுதான் இது.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிலத்தை விற்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அக்கார்ப்பரேட் நிறுவனம்தான் செய்து கொடுக்க வேண்டும். அரசு, இந்தப் பிரச்சினையில் தலையிடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் இம்மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைக் குறிப்பிட்ட கால இலக்கிற்குள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது; வேண்டுமென்றே இழுத்தடித்துத் தாமதமாக மறுவாழ்வு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தால்கூட, திட்டத்தால் பாதிப்படைந்தவர்கள் கொடுப்பதை வாயை மூடிக் கொண்டு வாங்கிக்கொண்டு போக வேண்டுமேயொழிய, தாமதத்திற்காக நட்ட ஈடு கோர முடியாது.

இந்நிவாரணம் குறித்து எழும் பூசல்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. அரசு நியமிக்கும் உயர் அதிகார வர்க்க கமிட்டிதான் இப்பூசல்களைத் தீர்த்து வைக்கும். இதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டுவரும் திட்டங்கள் பொது மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடியதா, இல்லையா என்பதையும் அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள்.

1947 தொடங்கி 2004 முடிய, அரசு தனியாகவோ அல்லது தனியாருடன் கூட்டுச் சேர்ந்தோ நடைமுறைப்படுத்திய ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்காக ஏறக்குறைய 2.5 கோடி ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ‘வளர்ச்சி’த் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 6 கோடி பேரில், 40 சதவீதம் பேர் பழங்குடியின மக்கள்; 20 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த 6 கோடி பேரில் வெறும் 18 சதவீதம் பேருக்குதான் பெயரளவுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 கோடி பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மைய அரசு கொண்டு வரவுள்ள புதிய மறுவாழ்வுச் சட்டம் இந்த அகதிகளைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளை நசுக்கும் இயந்திரமாக உள்ளது என்பது இப்பொழுது தெள்ளத்தெளிவாக அம்பலமாகிவிட்டது. எனவே, நரியைப் பரியாக்கிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில்தான் காங்கிரசு கும்பல் இச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய முன்வந்திருக்கிறது. மேலும், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களால் 5 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பல திட்டங்களை அரசாலும் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் செயற்படுத்த முடியவில்லை. அடுத்த பத்தாண்டுகளில் அடிக்கட்டுமான துறையில் ஏறத்தாழ 1,70,000 கோடி அமெரிக்க டாலர்களை மூலதனமாக ஈர்க்க வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வம்பு, வழக்கு, வாய்தா எனச் சிக்கிக் கொள்ளாமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து எளிதாக நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கத்திற்காகதான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களும், மறுவாழ்வுக்கான புதிய சட்டமும் கொண்டு வரப்படுகிறதேயொழிய, விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கம் எதுவும் காங்கிரசு கும்பலுக்குக் கிடையாது.

போலி கம்யூனிஸ்டுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இந்த உண்மையை அம்பலப்படுத்தாமல், இந்தச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமென காங்கிரசுக்கு உபதேசித்து வருகிறார்கள். “ கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் உரிமை யாரிடம் இருக்க வேண்டும்? அரசிடமா, கார்ப்பரேட் நிறுவனங்களிடமா? விளைநிலங்களைக் கையகப்படுத்தும்பொழுது கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டுமா, கூடாதா? நிலத்தின் விலையை எப்படித் தீர்மானிப்பது? நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும், மறுகுடியமர்வு, மறுவாழ்வு குறித்த சட்டத்தையும் ஒன்றாக இணைப்பதா, கூடாதா?சு  இவை போன்ற இரண்டாம்பட்ச பிரச்சினைகளைப் பற்றிதான் மைய அரசு, போலி கம்யூனிஸ்டுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அறிவுஜீவிகள் ஆகியோருக்கு இடையே மயிர்பிளக்கும் வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம் : நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி !விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும்படி நிலம் கையகப்படுத்தும் சட்டம் திருத்தப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அச்சட்டத்தை இம்மி பிசகாமல் மதித்து நடப்பார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? கிராம சபையின் ஒப்புதலின்றி பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை, வனப் பகுதிகளைக் கையகப்படுத்தக் கூடாது என்கிறது வன உரிமைச் சட்டம். ஆனால், போஸ்கோவிற்கு அனுமதி அளிப்பதற்காக, கையகப்படுத்த வேண்டிய வனப் பகுதி நிலங்களில் பழங்குடியின மக்களே வசிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் சான்றளித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப் பகுதி நிலங்களைக் கையகப்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த கிராமப் பஞ்சாயத்துகள் கலைக்கப்பட்டு, அவை அருகிலுள்ள நகராட்சியோடு இணைக்கப்பட்டு, வன உரிமைச் சட்டம் மீறப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் விதிகளை மீறிதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதற்கும் ஓராயிரம் உதாரணங்கள் உள்ளன.

இதுவொருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் தனியாகவோ அல்லது அரசுடன் கூட்டுச் சேர்ந்தோ செயல்படுத்த முனையும் தொழில் திட்டங்கள், வேலை வாய்ப்பை உருவாக்கவும், பொது மக்களின் நன்மைக்காகவும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும்தான் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுவது மிகப்பெரிய பொய், மோசடி, இத்திட்டங்கள் அனைத்தும் நமது நாட்டின் இயற்கை வளங்களை, மக்களின் உழைப்பை மிகவும் மலிவான விலையில் உள்நாட்டை மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. ஆங்கிலேய ஏகாதிபத்திய முதலாளிகள் நாட்டை அடிமைப்படுத்திக் கொள்ளையடித்துச் சென்றதைப் போல, இப்பொழுது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிற்கழகங்கள் நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்கின்றன. ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளையை, மறுகாலனிய சுரண்டலை வளர்ச்சி என்ற பெயரில் மூடிமறைத்து வருகின்றன.

இந்நிலையில், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவாறு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக் கோருவது புண்ணுக்குப் புனுகு தடவும் மோசடித்தனம் தவிர, வேறெதுவுமில்லை; நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகளும், பழங்குடியின மக்களும் நடத்திவரும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரம் தவிர, வேறெதுவுமில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கோருவதற்கு மாறாக, இந்த வளர்ச்சியையும், இதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதையும் எதிர்த்துப் போராட வேண்டும். அது ஒன்றுதான் நமது நாட்டின் விவசாயத்தையும், வனப் பகுதிகளையும், இயற்கை வளங்களையும் காப்பாற்றுவதோடு, நாடு மறுகாலனியாவதையும் தடுத்து நிறுத்தும்.

_________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க