Thursday, July 18, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

-

வன உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது, மன்மோகன் சிங்  சோனியா காந்தி கும்பல்.  சோனியா காந்தியின் தலைமையில் செயல்பட்டு வரும் தேசிய ஆலோசனை கவுன்சில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாதங்களை நடத்தி, உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தயாரித்து, அரசிடம் அளித்தது; அதனை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, ஆய்வு செய்து, சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, கழிக்க வேண்டியதைக் கழித்துத் தள்ளிவிட்டு, மைய அரசிடம் அளித்தது.  அதனை மைய அமைச்சரவை ஆய்வு செய்து தனது ஒப்புதலை அளித்து, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் அரிசியைப் பட்டினி கிடந்து வரும் ஏழை மக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ விநியோகம் செய்யுங்கள் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டபொழுது அதனை மறுத்து, “அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என முகத்தில் அடித்தாற் போலப் பதில் சொன்னவர், மன்மோகன் சிங்.  உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு திரியும் கொள்கைக் குன்று அவர்.  அப்படிபட்டவரின் ஆட்சி உணவுப் பாதுகாப்பிற்கெனத் தனியொரு சட்டத்தைக் கொண்டு வரப் போகிறதென்றால், நம்மைக் கொஞ்சம் கிள்ளித்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடாதே!

நமது நாட்டில் தனியார்மயம்  தாராளமயத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, பல்வேறு குற்றங்குறைகளோடு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் (Universal Public Distribution System) நடைமுறையில் இருந்து வந்தது.  அதன் பின்னர், இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டத்தை(Targeted Public Distribution System) 1990களின் இறுதியில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது, மைய அரசு.  இதற்கேற்ப, குடும்ப அட்டைகள் வழங்குவதில் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர் என்ற பிரிவினை கொண்டுவரப்பட்டு, பல வண்ண அட்டைகள் வழங்கப்பட்டன.  இன்று, தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து, பெரும்பாலான மாநிலங்களில் இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம்தான் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்திய உணவுக் கழகத்தின் திறந்தவெளிக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் உணவு தானியம்
இந்திய உணவுக் கழகத்தின் திறந்தவெளிக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் உணவு தானியம்

உணவு மானியத்தை வெட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரிவினையை, உணவுப் பொருட்கள் ஏழைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டதாக ஆளுங் கும்பல் பூசி மெழுகியது.  ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதைக் குறிக்கும் குடும்ப அட்டைகள் பெரும்பாலான ஏழைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதையும் இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பட்டினியால் வாடும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சமீபத்தில் வெளியாகியுள்ள அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்கூட ஒப்புக் கொண்டுள்ளன.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, “உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள 88 நாடுகளில் இந்தியா 66  ஆவது இடத்தில் இருக்கிறது.”  உலகெங்கிலும் சத்தான உணவின்றி அரைகுறைப் பட்டினி நிலையில் வாழும் மக்களில் ஏறத்தாழ 27 சதவீதத்தினர் (23 கோடி பேர்) இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்; இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 75,000 குழந்தைகள் சத்தான உணவின்றி இறந்து போகின்றன; உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 15 இலட்சம் குழந்தைகள் அரைகுறைப் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுகின்றன என இந்தியாவின் பட்டினிப் பட்டாளத்தைப் பற்றிப் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.

இப்படிபட்ட நிலையில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து, உணவுப் பொருட்கள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும்படியும்; பொது விநியோகத் திட்டத்தில் நடக்கும் ஊழலைத் தடுத்து நிறுத்தும்படி, அதில் மாற்றங்களைக் கொண்டு வருவதுதான் நியாயமான திட்டமாக இருக்க முடியும்.  ஆனால், மைய அமைச்சரவையால் ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவோ, ஏழைகளுக்கு ஏற்கெனவே கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் பறித்துவிடும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நாடெங்கும் 11 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதைக் குறிக்கும் குடும்ப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்த அட்டைகள் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளையும், மோசடிகளையும் தடுக்க முன்வராத தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா, இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்துவிடும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.  இம்மசோதாவின்படி, கிராமப்புறங்களில் வாழும் மக்களில் 90 சதவீதப் பேருக்கும், நகர்ப்புறங்களில் வசித்துவரும் 50 சதவீதப் பேருக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுமென்றும்,  அதே சமயம், இவர்கள் அனைவருக்கும்கூடக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்க முடியாது என மசோதா தெளிவாக வரையறுத்திருக்கிறது.

அதாவது, கிராமப்புறங்களில் உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் 90 சதவீதப் பேரில், 44 சதவீதப் பேர் முன்னுரிமை தரத்தக்கவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.  மீதி 46 சதவீதப் பேர் பொதுவானவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையைவிடக் கூடுதலான விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.  நகர்ப்புறங்களில் இத்திட்டத்தின் கீழ் வரும் 50 சதவீதப் பேரில், 28 சதவீதப் பேர் முன்னுரிமை தரத்தக்கவர்களாகவும், 22 சதவீதப் பேர் பொதுவானவர்களாகவும் வகைப்படுத்தப்படுவார்கள்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே எனக் குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டிருப்பதற்கு, முன்னுரிமை தரத்தக்கவர்கள், பொதுவானவர்கள் எனப் புதிய நாமகரணம் சூட்டுகிறது, இம்மசோதா.  மேலும், பொது விநியோக முறையிலிருந்து விலக்கி வைக்கப்படுபவர்கள் என்ற புதிய பிரிவையும்  இப்படி விலக்கி வைக்கப்படுபவர்கள் கிராமப்புறங்களில் 10 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 50 சதவீதமாகவும் இருப்பர்  உருவாக்கியிருக்கிறது. இப்படி விலக்கி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிகிறது, இம்மசோதா.

இந்தியாவிலேயே நகரமயமாக்கத்தில் முன்னணியாகத் திகழுகிறது, தமிழகம்.  தமிழக மக்கட் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வசித்து வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இவர்களுள் வெறும் 28 சதவீதப் பேருக்குதான் ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி கிடைக்கும் என்றால், இம்மசோதா ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கப் போவதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் பம்மாத்துதான்.

வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கு நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு நபரின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.20/க்குள்ளும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவரின் வருமானம் நாளொன்றுக்கு ரூ.15/க்குள்ளும் இருக்க வேண்டும் எனத் திட்ட கமிசன் முதலில் வரையறுத்தது.  எனினும், இந்த அளவுகோலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், தற்பொழுது திட்ட கமிசன் வறுமைக் கோட்டைக் கணக்கிடுவதற்கான வருமான அளவுகோலை ரூ.25/ என உயர்த்தியிருக்கிறது.

இந்த அளவுகோலின்படி பிச்சையெடுப்போர் கூட ஏழை என்ற ‘தகுதி’யைப் பெறமுடியாது.  இரண்டு கிளாஸ் டீ, பொரை, ஒரு கட்டு பீடி வாங்குவதற்குக்கூட இந்த ‘வருமானம்’ தாங்காது எனும்பொழுது, திட்ட கமிசன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மூன்று வேளை சாப்பாடு, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இந்த வருமானம் போதுமானது என உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.  அவரின் வாதப்படி ஒருவன் வயிறார உண்டு வாழ்வதற்கு 25 ரூபாய் போதுமென்றால், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பல பத்தாயிரம் ரூபாய் சம்பளமும், படிகளும் ஏன் அள்ளிக் கொடுக்க வேண்டும்?

கிராமப்புற விவசாயிகள் உணவு உரிமை கேட்டு கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்
கிராமப்புற விவசாயிகள் உணவு உரிமை கேட்டு கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

தற்பொழுது ஏறத்தாழ 11 கோடி குடும்ப அட்டைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இதனை 6 கோடியாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டம் போட்டுள்ள மன்மோகன் சிங் கும்பல், அதற்குத் தகுந்தபடி வருமான அளவுகோலை நிர்ணயம் செய்ய முயலுகிறது.  சுருக்கமாகச் சொன்னால், செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டியிருக்கிறார்கள்.

தற்பொழுது தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.  சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படுகிறது.  உணவு பாதுகாப்பு மசோதாவோ, “முன்னுரிமை குடும்ப அட்டை பெற்றவர்களுக்குக்கூட ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் விலையில்தான் வழங்கப்படும்; ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகள் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும்” என்று கூறுகிறது.  இதுவொருபுறமிருக்க, முன்னுரிமை குடும்ப அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை அவ்வப்பொழுது வறுமைக் கோடு பற்றி எடுக்கப்படும் கணக்கீட்டின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும் என்றும் இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், ஏழைகளுள் ஒருபகுதியினருக்குக்கூட உணவுப் பாதுகாப்பு கிடைக்கும் என்றோ, அவர்களுக்கு மலிவான விலையில் அரிசியும் கோதுமையும் கிடைக்கும் என்றோ எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.  இந்த மசோதா தற்பொழுது ஏழைகளுக்குக் கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பை மட்டுமல்ல, பொது விநியோகத் திட்டத்தையும், பொதுக் கொள்முதலையும் ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடுதான் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி “இந்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்” குறித்துத் தயாரித்துள்ள அறிக்கையில்,  “பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக இந்திய அரசும் பொருளாதார நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர்.  இதனைக் களையெடுக்கக் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்குப் பதிலாக, பணத்தைக் கொடுத்து வெளிச் சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.  இந்த மாற்றத்தை ஏற்கெனவே ஓரளவு உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியுள்ள மாநிலங்களில் அல்லது மாவட்டங்களில் கொண்டு வர வேண்டும்.  இதற்கு ஏற்ப உணவுக் கொள்முதலில் தனியாரையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கியின் இந்த ஆலோசனையில் முதல் வரியல்ல, கடைசி வரிதான் நம் கவனத்துக்குரியது. ரேசன் கடை ஊழல் என்று பேசத் தொடங்கி, உணவுக் கொள்முதலில் தனியாரை நுழைப்பது என்று முடிகிறது உலகவங்கி அறிக்கை. உலக வங்கி கூறுவதற்கு முன்னாலேயே கொள்முதலில் ஏற்கெனவே தனியார் மண்டிகள் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உலக வங்கி கூறும் தனியார் என்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள். ரேசன் கடைகளும், அரசாங்கத்தின் தானியக் கொள்முதலும் அவர்களுடைய ‘சுதந்திரமான’ வர்த்தகத்துக்கும், கொள்ளை இலாபத்துக்கும் தடையாக இருக்கும் என்பதனால்தான், ரேசன் கடைகளை ஒழித்துவிட்டு பணத்தைக் கொடுக்கச் சொல்கிறது உலகவங்கி.

இதைத்தான் உணவுப் பாதுகாப்பு மசோதாவின் வழியாக சட்டமாக்கிவிட முயலுகிறது, மைய அரசு.  இம்மசோதாவின் 13 ஆவது அத்தியாயம், “முன்னுரிமைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக பணப் பட்டுவாடாவிற்கு மாறுவது” பற்றிப் பேசுகிறது.    இம்மாற்றம் பையப்பைய அமல்படுத்தப்படும்பொழுது, அரசிற்கு ரேஷன் கடைகளை நடத்த வேண்டிய அவசியமோ, அரிசி, கோதுமையைக் கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டிய தேவையோ இல்லாமல் போய்விடும்.

மளிகைப் பொருட்கள் சில்லறை விற்பனையில் ஏற்கெனவே இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துவிட்ட நிலையில், இப்பொழுது அத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதிக்க முடிவெடுத்திருக்கிறது, மைய அரசு.  இன்னொருபுறம், குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக பணத்தைக் கொடுத்து, அவர்களைச் சந்தையின் சூதாட்டத்தில் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இம்மாற்றம் குறித்து டெல்லியில் ஒரு மோசடியான கருத்துக் கணிப்பையும் நடத்தி முடித்திருக்கிறது, மைய அரசு.  அக்கம்பக்கமாக நடந்துவரும் இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள், அரசின் உண்மையான நோக்கம் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு கொடுப்பதல்ல, மாறாக, வர்த்தகச் சூதாடிகளின் இலாபத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுதான் என்பது தெளிவாகிவிடும்.  ரேஷன் கடைகளில் நடைபெறும் ஊழலைவிட, பணப்பட்டுவாடாவிற்கு மாறுவதுதான் மிகப் பெரிய ஊழல், பகற்கொள்ளையாக இருக்கும்.

தேசிய ஆலோசனைக் கவுன்சில் தயாரித்து முன்வைத்த வரைவு மசோதாவை ஆய்வு செய்த ரங்கராஜன் கமிட்டி, இம்மசோதா சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றுதான் கவலைப்பட்டிருக்கிறது.  மைய அமைச்சரவையோ அரிசி, கோதுமையைத் தவிர்த்து, வேறெந்த உணவுப் பொருளையும் இம்மசோதாவோடு இணைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்திருக்கிறது.

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் தற்பொழுது 6.5 கோடி டன்னுக்கும் மேல் அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கும் நிலையிலும், அச்சேமிப்பை விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்க மறுத்து வருகிறது, மைய அரசு. அவ்வாறு செய்தால், தானிய விற்பனையில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபம் படுத்துவிடும். ஏழைகளின் வயிற்றைக் காட்டிலும் முதலாளிகளின் பணப்பெட்டியைப் பற்றி பெரிதும் கவலைப்படும் பொருளாதார வல்லுநரல்லவா மன்மோகன் சிங்!

சத்தான உணவு கிடைக்காமலும் அரைகுறைப் பட்டினியாலும் நோஞ்சானாகி, நோயில் வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை: 'வல்லரசு' இந்தியாவின் மறுபக்கம்
சத்தான உணவு கிடைக்காமலும் அரைகுறைப் பட்டினியாலும் நோஞ்சானாகி, நோயில் வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை: 'வல்லரசு' இந்தியாவின் மறுபக்கம்

பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் தேவையான உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் 2001  இல் ஒரு வழக்கு தொடரப்பட்டது. “வறுமைக் கோட்டைத் தீர்மானிக்கும் அளவுகோல் எது?” என்பது பற்றி அரசாங்கத்தால் ஒரு முடிவுக்கு வர முடியாததால் அவ்வழக்கு முடியவில்லை.

என்ன செய்வது? தனியார்மய  தாராளமயக் கொள்கைகள் விலைவாசி உயர்வைத் தீவிரப்படுத்துகின்றன. விவசாயத்தை அழித்து விவசாயிகளின் நிலவெளியேற்றத்தை தீவிரப்படுத்துகின்றன. தாராளமயக் கொள்கைகள் சிறு தொழில்களை அழிக்கின்றன. வறுமைக்கு ஒரு அளவுகோலை நிர்ணயிக்கலாமென்றால், அதற்குச் சற்றும் அவகாசம் தராமல் ஒவ்வொரு கணமும் விலைவாசி மேலே செல்கிறது. வாழ்க்கைத் தரம் கீழே செல்கிறது. வழக்கும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

எனவேதான் கைக்குப் பிடிபடாத வறுமையை ஒழிப்பதற்குப் பதிலாக, முதலில் பட்டினியை ஒழித்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. அந்த முயற்சியின் முதல் கட்டம்தான் ரேசன் கடை ஒழிப்பு. அடுத்த கட்டம் உணவுப் பாதுகாப்பு  அதாவது கார்ப்பரேட் முதலாளிகளின் உணவு தானிய வணிகத்தைப் பாதுகாப்பது! இந்த அயோக்கியத்தனத்தைத் தேசிய அளவில் செய்யத்திட்டமிட்டிருப்பதால் இதற்கு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. இது போன்ற கட்டுரைகளுக்கு ஏனோ யாரும் அதிகமாக எதிர்விவாதம் செய்வதில்லை.

  • உண்மைதான். வரும் பதிவர்கள் எல்லாம் ரேசன் வாங்காத உயர் நடுத்தர வர்க்கம்.

   மலை முழுங்கிகள் முட்டையை முழுங்குவது பெரிய விசயம் இல்லை என்ற நிலைமைக்கு நம்மில் பெரும்பாலோர் மழுங்கிப் போனதாலும்தான் சோனியா-சிங் கூட்டணி புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

 2. வரும் பதிவர்கள் எல்லாம் ரேசன் வாங்காத உயர் நடுத்தர வர்க்கம்…..ஆமாம் அதனால் தான் இங்கே வெகு ஜன உணர்வுகளுக்கு மாற்றான கருத்துக்களே பெரும்பாலான பின்னூட்டங்களில் இடம் பெறுகிறது இலவச மடிக்கணினி போய் சேர்ந்த பின் மாணவர்கள் கருத்துக்கள் நமக்கு நிறைய கிடைக்கலாம்.

  • மடிக்கணினி மூலம் ஆன் லைன் வர்த்தகத்தை தீவிரப்படுத்துவது அரசின் திட்டத்தில் ஒன்று. எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்காகதான். அது நம் மாணவர்களின் அறிவை ஒளிர செய்ய வந்திருக்கிறது என்றால் அபத்தம்.

  • னாங்கள் வைத்து இருப்பது (புடுச்சேரியில்) மங்சல் அட்டை…எங்களின் அட்டைகளுக்கு
   ஒரு புண்ணாக்கும் தருவதில்லை அன்பரே

 3. உணவு பாதுகாப்பு என்பது சோனியா மற்றும் மன்மோகன் என்கிற 2ஜி களுக்கு மட்டுமே. இந்த மசோதா, பொது மக்களுக்கானது என்று யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

  • வேறு யாருடைய உணவுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்தவே இந்த மசோதா.

  • உணவு பாதுகாப்பு என்பது சோனியா மற்றும் மன்மோகன் என்கிற 2ஜி களுக்கு மட்டுமே. இந்த மசோதா, பொது மக்களுக்கானது என்று யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

   சாரி

   மன்மோகன் மற்றும் சோனியா இருவரும் 2ஜீ இல்லை கலைஞரோட சேர்த்து 3ஜீ

 4. இவங்க இந்த ஜென்மத்துல உணவு பாது(ஆப்பு)காப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரவே மாட்டாங்க
  அப்புறம் தேர்தல் வேற வருதுதுதுதுது!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க