தேர்தல் வாக்குறுதிகள் உண்மையும் பொய்யும் – 2

தேர்தல் கட்சிகள் தந்துள்ள விவசாயம் சார்ந்த வாக்குறுதிகளை  உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அமல்படுத்த முடியும் .

தேர்தல் வரும்பொழுதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் விவசாயிகளின் நண்பர்களாக மாறிவிடுகின்றன. ‘தங்கள் கட்சி இருப்பதே விவசாயிகளுக்காகத்தான்’ என்பது போல கட்சித் தலைவர்களும் பேசுகின்றனர்.

ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு உதவாதது மட்டுமல்லாமல், வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்குவது, விவசாய மூலப் பொருட்களுக்கான மானியத்தை நிறுத்துவது, மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விதை விற்கும் உரிமத்தை கொடுப்பது, உணவுப் பயிர்களை ஊக்குவிக்காமல் பணப்பயிர்களை ஊக்குவிப்பது என பல வேலைகளை ஓட்டுக் கட்சிகள் செய்கின்றன.

இருந்தாலும் அடுத்த தேர்தல் வரும்பொழுது நாங்கள் விவசாயிகளை கோடீஸ்வரர்களாக மாற்றாமல் ஓய மாட்டோம் என்பது போல அறிக்கைகளை விடுகின்றனர்.

2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிஜேபி-யை பொறுத்தவரை, 2014-ல் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினார்களா என்று நமக்கு தெரியும், அதை பற்றி எதிர்க்கட்சிகளும் மற்றவர்களும் பேசி  வருகின்றனர்.

விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பு ஆக்க போவதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பிஜேபி சொல்லி வருகிறது. அதையே இந்த தேர்தல் அறிக்கையிலும் சேர்த்துள்ளது. வருமான இரட்டிப்பு என்பது பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகா? அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ளாமலா? என்ற   கேள்விக்கு  பிஜேபி தலைவர்கள் பதில் சொல்வதாக இல்லை.

பண வீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், எதுவுமே செய்யாமலே வருமானம் இரட்டிப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, 10 வருடங்களுக்கு முன் 5 ரூபாயாக இருந்த தேனீரின் விலை, இப்போது 10 ரூபாய் ஆகிவிட்டது, இதற்கு யாரும் காரணம் அல்ல. பண வீக்கத்தின் காரணமாக விலை அதிகமாகி உள்ளது. இரட்டிப்பைத் தவிர, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP – minimum support price), பயிர்க்காப்பீட்டு திட்டம் போன்ற வழக்கமான பல்லவிகளும் பிஜேபி தேர்தல் அறிக்கையில் உள்ளன.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை விவசாயக் கடன் தள்ளுபடி என்பது முக்கியமான அம்சமாக கூறப்படுகிறது.  இது போக MSP அதிகரிப்பு, பயிர்க் காப்பீட்டை சீர் செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளைத் தவிர திமுக, CPI(M) போன்ற கட்சிகளின் அறிக்கைகளும் MSP அதிகரிப்பு பற்றியும், விவசாயக் கடன் தள்ளுபடி பற்றியும் பேசுகின்றன. குறிப்பாக MSP அதிகரிப்பும் விவசாயக் கடன் தள்ளுபடியும் பொதுவாக அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ள வாக்குறுதிகளாக தெரிகிறது.

விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP), உற்பத்திக்கான உள்ளீடு செலவின் (input cost) 150%-ஆக உயர்த்துவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிஜேபி அறிவித்தது. ஆனால் உள்ளீடு செலவு என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்பதில் அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

விவசாய சங்கங்கள் M.S. சாமிநாதன் குழு கூறிய அடக்க விலையை பின்பற்ற வேண்டும் என்று கூறிவருகின்றன. இதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. ஏதாவது ஒரு விளக்கத்தை ஏற்று MSP-யை அதிகரிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், மத்திய மாநில அரசுகளின் கடந்த கால நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது இந்திய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் விவசாயப் பொருட்களுக்கான MSP -யை அதிகப்படுத்துவதற்கான முழு அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சில சமீபத்திய உதாரணங்களைப் பார்ப்போம்.

கோதுமை மற்றும் அரிசி பொருட்களுக்கான  குறைந்தபட்ச ஆதார விலையை உலக வர்த்தக கழக ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட அளவை விட அதிகமாக தன் நாட்டு விவசாயிகளுக்கு இந்தியா வழங்வதாகக் கூறிய அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவின் மீது வழக்கு தொடுக்கப் போவதாக 2018 ஜீலை-ல் செய்திகள் வந்தன.

மேலும் சுண்டல் உள்ளிட்ட ஐந்து பயிர்களுக்கு இந்தியா தனது விவசாயிகளுக்கு அதிக MSP கொடுத்துவிட்டு உலக வர்த்தகக் கழகத்தில் (WTO) தவறான தகவல் கொடுத்ததாக கனடாவும் அமெரிக்காவும் இந்தியாவின் மீது குற்றம் சாட்டின. அதனடிப்படையில் WTO-வில் இந்தியாவின் மீது வழக்கு தொடர்வதாக இவ்விரு நாடுகளும் அறிவித்துள்ளன.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஒன்பது நாடுகள்  இந்தியாவின் மீது கரும்பு விவசாயிகளுக்கு WTO-ல் ஒப்புக்கொண்ட அளவை விட அதிக மானியம் கொடுத்ததற்காக WTO-ன் சர்ச்சைகளை தீர்க்கும் அமைப்பில் (Dispute settlement panel) வழக்கு தொடுத்துள்ளன. இம்மூன்றும்  கடந்த ஒரு வருடத்திற்குள் விவசாய மானியம் தொடர்பாக  WTO-வின் உறுப்பு நாடுகள் இந்தியாவின் மீது WTO-வில் அளித்துள்ள புகார்களாகும்.

இந்திய விவசாயம் முதலாம் உலக நாடுகளின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறதென்பதையே இது காட்டுகிறது.

இந்த செய்திகளை பார்த்தவுடன் நமக்கும் இயல்பாக எழும் கேள்வி – ‘இந்திய அரசாங்கம் தனது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையின் (MSP) மீது அந்நிய நாடுகள் WTO-வில் எப்படி புகார் கூற முடியும்?’ என்பதுதான். அவ்வாறு புகார் கூறும் உரிமையை இந்திய அரசாங்கம் மற்ற நாடுகளுக்கு  வழங்கியிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

இந்தியா கையெழுத்திட்டிருக்கும் விவசாயம் தொடர்பான உ.வ.கழக ஒப்பந்தத்தின்படி (Agreement on Agriculture – AoA) இந்திய அரசு விவசாயத்திற்காக தரும் மானியத்தின் அளவு மொத்தம் உற்பத்தியாகும் விவசாய பொருட்களின் மதிப்பில் 10 சதவிகதத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

அதாவது ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் மொத்த மதிப்பு 500 கோடி என்றால் அதில் 50 கோடிக்கு மேல் மானியமாக இந்திய அரசு தனது விவசாயிகளுக்கு  வழங்கக்கூடாது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த 10% மானிய அளவையும் படிப்படியாக குறைக்க வேண்டும்.

இதனை மீறும் பட்சத்தில் WTO-AoA-ல் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகள் இந்தியாவின் மீது வழக்குத் தொடர முடியும்.  இதனடிப்படையிலேயே பிற நாடுகள் இந்தியாவின் மீது வழக்கு தொடுத்துள்ளன. இவ்வழக்கின் தீர்ப்புகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு அமல்படுத்த வேண்டும். முன்னமே WTO-ன் சில தீர்ப்புகள் இந்தியாவிற்கு பாதகமாக வந்துள்ளது. அதை இந்திய அரசு ஒப்புக்கொண்டு அமல்படுத்தியும் உள்ளது.

கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக விவசாயம் சார்ந்த அனைத்து முடிவுகளும் இதனடிப்படையிலேயே எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதே உண்மையாகும். எனவே இந்திய விவசாயிகள் கோருகின்ற விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஆட்சியாளர்களால் ஒருபோதும் கொடுக்க இயலாது என்பதே எதார்த்தம்.

தேர்தல் கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதிகளையும் இந்திய அரசு WTO உடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மற்றும்  மேலே குறிப்பிட்ட செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் உள்ள முரண் நமக்குப் புரியும். ஒருபுறம் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் MSP-யை குறைக்க, பிறகு நிறுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு WTO-வின் மூலம் அழுத்தம் தருகின்றன. இன்னொருபுறம் இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உள்ளீட்டு விலையில் 150% உயர்த்தப் போவதாக ஓட்டு கட்சிகள் கூறுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் WTO ஒப்பந்தங்களைப் பற்றி தெரிந்திருந்தும் தேர்தல் பிரச்சாரத்தின் போது எந்த கட்சியும் மறந்தும் கூட இது பற்றி மூச்சு விடுவது இல்லை.

படிக்க:
பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto
♦ ”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய்

பாஜக தவிர பெரும்பாலான கட்சிகளின் அறிக்கைகளில் இருக்கும் இன்னொரு முக்கியமான வாக்குறுதி, விவசாயக் கடன் தள்ளுபடி பற்றியது. விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி பேசுவதற்கு முன்பு மொத்த விவசாயக் கடன் எவ்வளவு உள்ளது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2016-ம் ஆண்டு மத்திய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கொடுத்த கணக்கின்படி நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன் ரூபாய் 12 லட்சம் கோடியாகும். இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி எந்தக் கட்சியும் பேசவில்லை. இந்நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி, ஏற்கெனவே அதிகமாக இருக்கும் அரசின் நிதிப் பற்றாக்குறையை(fiscal deficit) மேலும் அதிகப்படுத்தும் என்று வலதுசாரி பொருளாதார நிபுணர்கள்  எச்சரிக்கின்றனர்.

இந்திய அரசின் உயர் அதிகாரிகளோ விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதினால் கடனை செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற மனப்பாங்கு (Credit indiscipline) விவசாயிகளிடையே உருவாகும் என எச்சரிக்கின்றனர்.

மேலும் விவசாயம் தொடர்பான செலவுகளுக்கு நிதி ஒதுக்குவதில் மோடி அரசு மிகவும் அலட்சியமாகவே இருந்து வருகிறது. உதாரணமாக, இந்திய உணவுக் கழகம் (FCI – Food Corporation of India) என்ற அரசு நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை அரசு நிர்ணயித்த MSP விலையில் கொள்முதல் செய்கிறது.

இந்த தானியங்கள்  குறைந்த விலைக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. அதை மாநில அரசுகள் நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கின்றன.  MSP விலைக்கு உணவு தானியங்களை கொள்முதல் செய்து  மிகக் குறைந்த விலைக்குக் கொடுப்பதால் உண்டாகும் செலவை மானியமாக மத்திய அரசு FCI-க்கு வழங்குகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு, FCI-க்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 1.21 லட்சம் கோடியை தராமல் உள்ளது.  இந்திய உணவுக் கழகம், தனது நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தேசிய சிறு சேமிப்பு நிதியிடமிருந்து (National Small Saving Fund) FCI கடன் வாங்கியுள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) சமாளிப்பதற்காகவே மத்திய அரசு பட்ஜட்டில் ஒதுக்கிய நிதியை FCI-க்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை  எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது? அவ்வாறு தள்ளுபடி செய்யும் பட்சத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு, GDPயில் 3%-ஐ விட மிக அதிகமாகும். இதனால் உலக வங்கி, நிதியாதிக்க கும்பல்கள் மற்றும் பொருளாதார தர நிறுவனங்களின் (Rating Agency) கடுங் கோபத்திற்கு இந்திய அரசு ஆளாக நேரிடும்.

எனவே விவசாயக் கடன் தள்ளுபடி என்பது ஓட்டுக்காக கூறப்படும் கவர்ச்சி வாக்குறுதியே தவிர அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முழு அதிகாரம் இந்திய அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை.  நிலைமை இவ்வாறு இருக்க ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளும்  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவோம் என்ற தொனியில் பேசிவருகின்றன.

(தொடரும்)

இத்தொடரின் முந்தைய பாகத்துக்கு :

– அருண் கார்த்திக், சங்கர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க