பார்ப்பன பாசிஸ்டுகளின் ட்ரோல்களும், தற்போது அந்த திருப்பணியில் இணைந்துள்ள சச்சின் போன்ற கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் பலரும் தமது சமூக வலைத்தள பக்கங்களில் மோடிக்கும் பார்ப்பன பாசிச பிஜேபி கும்பலுக்கும் ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால் வெளிநாட்டினர் யாரும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற இவர்களது வாதம்தான்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் மூக்கை நுழைப்பது தவறு என்று பொங்கி எழும் இவர்கள், வேளாண் சட்டங்கள் அனைத்துமே 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வரைவாக உருவாக்கப்பட்டு தற்போது இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்

மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி நடந்த ஒரு விவசாய மாநாட்டில் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் மோடி பேசிய போது :

“25-30 ஆண்டுகளுக்கு முன்பு செய்யதிருக்க  வேண்டிய  காரியங்களை இப்போது செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்… விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் சில காலமாக செய்திகளில் உள்ளன.  இந்த விவசாய சீர்திருத்தங்கள் ஒரே இரவில் வரவில்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு அரசாங்கமும் கடந்த 20-22 ஆண்டுகளில் மாநில அரசுகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன”என்று கூறினார்.

ஆனானப்பட்ட மோடிக்கே நிர்பந்தமா! அதனால்தான் விவசாய திருத்த சட்டங்களைப் போட்டாரா? எங்கள் தலைவரை நிர்பந்தப்படுத்தும் ”தேச விரோதி” யார் என்று இந்த கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகர்களும் இந்நேரம் பொங்கியிருக்க வேண்டும்  அல்லவா ?

மோடி சொன்னது உண்மையா? அல்லது மக்களை திசை திருப்ப சொன்ன பொய்யா?
வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். 1991-லேயே உலக வங்கி இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தீர என்று சில கட்டளைகளை இந்தியாவிற்கு இட்டுள்ளது. அதற்குப் பெயர் “இந்தியா: நாட்டின் பொருளாதார ஒப்பந்தத் தொகுதி” பகுதி1, 2.

அந்த கால கட்டத்தில் அதாவது, 1990-1991-களில் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளின் பகாசுர சுரண்டல் மற்றும் பங்குச் சந்தை சூதாட்டங்களால் நாடு திவாலாகி, பெரும் அன்னியச் செலாவணி நெருக்கடியில் சிக்கியிருந்தது. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவென ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் உலகவங்கியுடன் இந்திய அரசு போட்டுக் கொண்டது.  யார் இந்தியப் பொருளாதாரத்தை படுகுழியின் தள்ளினார்களோ, அவர்களே அதனை ‘மீட்பதற்கான’ வழிமுறைகளையும் வகுத்துத் தந்தார்கள்.

அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்னர் வகுத்துத் தரப்பட்ட ’வழிமுறைகள்’ தான் இந்தியாவில் ஒவ்வொரு ஆட்சியாளர்களாலும் படிப்படியாக சட்டத் திருத்தங்களாகவும், புதுப் புது சட்டங்களாகவும் கொண்டுவரப்பட்டன. அப்படி நடைமுறைப்படுத்த ‘நிர்பந்திக்கப்பட்ட’ சட்டங்களைத் தான் தாம் இப்போது கொண்டுவந்திருப்பதாக மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பேசியிருக்கிறார் மோடி. (மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)

அப்படி, உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நிர்பந்திக்கப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான் இந்த வேளாண் சட்டங்கள்! இதே போல, தொழிற்சங்க சட்டத் திருத்தம், மின்சார சட்டத் திருத்தம், பொதுத்துறைகளை விற்பனை செய்யும் திட்டம், காப்பீட்டுத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம், உள்நாட்டுத் துறைகளில் அன்னிய மூலதனத்துக்கான ஒதுக்கீடு, வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம், கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான சட்டம் என தொடர்ந்து உலகவங்கியின் ஒப்பந்தத் தொகுதிகளை சட்டங்களாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.

இது குறித்து “கவுன்ட்டர்-கரண்ட்ஸ்” எனும் இணையதளம் விரிவாக ஒப்பிட்டு அம்பலப்படுத்தி எழுதியுள்ளது. இதனைப் படிக்கும் போதே நாட்டையும் மக்களையும் நேசிக்கும் யாருக்கும் ரத்தம் கொதிக்கும். ஆனால் மோடியோ எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, உலக வங்கியின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியமானது என்று கருதுகிறார்.

அப்படி உலக வங்கியின் ஓப்பந்தத் தொகுதியில் பரிந்துரைகள் என்ற பெயரில் போடப்பட்ட உத்தரவுகளில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

1. உரங்கள், நீர், மின்சாரம், வங்கிக் கடன்களிலான விவசாய மானியங்களை வெட்டு – விவசாயத்தை வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் திறந்து விடு

அ) நான்கு ஆண்டுகளில் உரத்திற்கான அனைத்து மானியங்களையும் அரசாங்கம் அகற்ற வேண்டும். இந்தியாவின் உரத் தொழிலுக்கான பாதுகாப்பைக் ஒழிக்க வேண்டும், மேலும் உள்நாட்டு உரங்களின் விலையை உலகச் சந்தை விலைகளுக்கு நிகராக்க வேண்டும்; உரத் தொழிற்சாலைகளை “மறுசீரமைத்தல்” (அதாவது, உர ஆலைகளை மூட வேண்டும்). உரங்களை விற்பனை செய்வதில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஒழுங்குபடுத்துதலை அகற்ற வேண்டும்.

ஆ) வங்கிக் கடனில் விவசாயத்திற்காக என்று ஒரு பங்கு ஒதுக்கி வைக்கப்படும் நடைமுறையை – அத்தகைய ‘முன்னுரிமைத் துறைக்கான’ கடன் ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும். மேலும் விவசாய கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். விவசாயத்திற்கான அனைத்து மானியங்களையும் ஒழிக்க வேண்டும்.

இ) நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் பிற விரிவாக்க சேவைகள் போன்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் எல்லா சேவைகளுக்கான கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டும். இவற்றில் அதிகளவில் தனியார் துறை ஈடுபாடு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க முன்னுரிமை தந்து பட்டியலிட வேண்டும்.

ஈ) இந்திய விவசாயத்தைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள வெளிநாட்டிலிருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடைகளை முற்றாக அகற்ற வேண்டும். ஒரு தொடக்கத்திற்காக சமையல் எண்ணெய் வித்துக்களின் இறக்குமதிக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். விவசாய விளைபொருள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளையும் அகற்ற வேண்டும்.

உ) விதைகளில் தனியார் ஆராய்ச்சியை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும், விதைகளை தனியார் விற்பனை செய்வதற்கான விதிமுறைகளை நீக்க வேண்டும், விதைகளுக்கான மானியங்களை அகற்ற வேண்டும்.

ஊ) விவசாயத்திற்கான மின்சார கட்டணங்களை வேளாண்மை அல்லாத மின் கட்டணங்களின் விலைக்கு உயர்த்த வேண்டும்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !

2. பொது கொள்முதல் மற்றும் உணவு விநியோகம் முழுவதையும் முற்றாக அகற்றுவதை நோக்கி முன்னேறுதல் :

அ) “இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) உரிமம் பெற்ற முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களுக்கு துணை ஒப்பந்தம் செய்வதன் மூலமும், தானியங்களை விவசாயிகள் சேமித்து வைப்பதற்கான விலை சலுகைகளை வழங்குவதன் மூலமும் தானியங்களை வாங்குதல், போக்குவரத்து மற்றும் சேமிப்பதில் இந்திய உணவுக் கழகத்தின் பெரிமளவிலான நேரடி பங்கைக் குறைக்க வேண்டும்.” (அதாவது கார்ப்பரேட் பதுக்கல்காரர்களுக்கும் (சேமிப்பாளர்கள்),  கார்ப்பரேட்  ‘விவசாயிகளுக்கும்’ சலுகைகள் வழங்கி எஃப்.சி.ஐ.யின் பணியை குறைக்க வேண்டும். சுருக்கமாக எஃப்.சி.ஐ.-ஐ ஒழிக்க வேண்டும் – மொழி பெயர்ப்பாளர் குறிப்பு).

ஆ) இந்தியா ஒரு சிறிய அளவில் மட்டுமே உணவு தனியங்களை சேமித்துப் பராமரிக்க வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் தேவையானவற்றை உலகச் சந்தையில் வாங்க வேண்டும். விளைச்சல் குறைந்து பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் உலக சந்தையில் வாங்குவதற்கு அந்நிய செலாவணியை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். (அன்னிய செலாவணி பற்றாக்குறை நெருக்கடியில் இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதை இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் – மொழிபெயர்ப்பாளர்)

இ) விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயித்து வேளாண் விளைபொருளை வாங்கும் திட்டமான பொதுக் கொள்முதல் திட்டம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.

ஈ) ஏழைகள் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டவர்களை மட்டுமே குறிவைத்து உணவு மானியங்களை குறைக்க வேண்டும். (வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் கடைகளில் பொருள் வழங்கும் திட்டம் – மொழி பெயர்ப்பாளர்)  “தேவையில்லாதவர்களுக்கு” அரசின் நலத் திட்டங்கள், ​​ரேசன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்படுவது மறுக்கப்பட வேண்டும். அரசாங்கம் “தனியார் துறை விநியோகம் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை அடைவதற்கான புதிய முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.” (குடும்ப அட்டையை ஆதாருடனும் வங்கிக் கணக்குடனும் இணைப்பது – அரசு உதவித் திட்டங்களுக்கான பணம் வங்கியில் நேரடியாக போடப்படுவது – எரிவாயு மானியம் ஆதார் மூலம் இணைக்கப்பட்டு வங்கியில் பணம் செலுத்தப்படுவது என சுற்றிவளைத்து செய்யப்படுபவற்றை இங்கு நினைவுகூரவும் – மொழி பெயர்ப்பாளர்)

உலக வங்கியின் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகையில், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரங்கள், பெரும்பான்மையான மக்களின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் இத்தகைய விரிவான தாக்குதலை செயல்படுத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் சிரமங்களை எல்லாம், உலக வங்கியின் பரிந்துரைக்கப்பட்ட கால அட்டவணை சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பொருளாதார இறையாண்மை குறித்து இம்மியளவும் கவலைப்படவில்லை. ஆயினும்கூட, இந்த வழிகாட்டுதல்கள் என்ற பெயரிலான உத்தரவுகளில் பெரும்பாலானவற்றை, அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் செயல்படுத்த முனைவதும், மக்களின் எதிர்ப்பு அதிகரித்து ஓட்டு போய்விடுமோ எனத் தயங்கி நிற்பதும், எஜமானனின் உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் சிக்கல் என மீண்டும் செயல்படுத்த முனைவதும், மக்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு அவ்வப்போது ஓரளவு பின்வாங்குவது எனவும் ஊசலாட்டமாகவே இருந்தன.

விவசாயம் சார்ந்த இத்தகைய ‘பரிந்துரைகளால்’ பின்வரும் விளைவுகள் ஏற்பட்டு, விவசாயிகளை அவை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கின்றன.

* பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் விலைகள் கட்டுப்பாடு அகற்றப்பட்டதானது, இவற்றை விவசாயிகளால் வாங்கி பயன்படுத்த முடியாமல் அவற்றின் பயன்பாட்டில் கூர்மையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் மண்ணின் ஊட்டச்சத்து சமநிலைக்கு தீங்கு விளைந்து விவசாயம் அழிகிறது. (விளைச்சல் குறைந்து விவசாயம் கட்டுபடியாகாமல் தற்கொலைகள் அதிகரிப்பதை இங்கு நினைவு படுத்துகிறோம். – மொ.பெ.)

* விவசாயத்திற்கு வங்கிகள் கடன் தருவது மிகப்பெருமளவு குறைந்து போனது. இதனால் விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப் போய் 1990-களின் பிற்பகுதியிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

* விவசாயத்திற்கான பொதுத்துறை விரிவாக்க சேவைகள் 1990-களின் நடுப்பகுதியிலிருந்து 2000-களின் நடுப்பகுதி வரையில் சரிந்தன; அதன்பிறகு ஒரு பகுதி மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த சேவைகள் இன்னும் போதுமானதாக இல்லை.

* விவசாய இறக்குமதிகள் மீதான அளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, விவசாய இறக்குமதிகள் மீதான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியா அதன் சமையல் எண்ணெய்களில் பாதி அளவை இறக்குமதி செய்கிறது. மற்ற உற்பத்திகளும் இறக்குமதி அச்சுறுத்தலை எதிர்கொண்டன. (இன்று சமையல் எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு இறக்குமதியும் ஒரு காரணம்).

* ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய பொதுத்துறை விதை நிறுவனங்கள் விதைகளுக்கான சந்தையில் இருந்து அரசாங்கத்தால் படிப்படியாக விலக்கப்பட்டன; தனியார் துறை விதை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. (விதைகளின் விலையை விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள். மயக்கமடைவீர்கள் – மொ.பெ)

* சமீபத்திய மின்சாரம் (திருத்தம்) மசோதா – 2020, அனைத்து மின்சார மானியங்களையும் ஒரேயடியாக அகற்ற முன்மொழிகிறது, இது ஏற்கெனவே நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் பெரும் சுமையாக மாறுகிறது. (இலவச மின்சாரம் ரத்தாகுவதன் காரணமும் இதுதான்)

இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தின் கடுமையான மறுசீரமைப்பை, இப்போது மோடி அரசாங்கம் கோவிட்-19 நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படுத்த வெறித்தனமான முறையில் இயங்கி வருகிறது. பொது கொள்முதல் மற்றும் உணவு விநியோகத்தை அகற்றுவதற்காகவே விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தால் ‘நிறைவேற்றப்பட்டன’.

நிச்சயமாக, உலக வங்கியின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் முன்பே தொடங்கிவிட்டது. 1997-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறை “வறுமைக் கோட்டுக்கு மேலே” உள்ளவர்களை பொது விநியோக முறையிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம் படிப்படியாக ரேசன் கடைகள் முழுவதையும் மூடுவதற்கு முனைகிறது. (ஆதார் இல்லாமல், குடும்ப அட்டையுடன் ஆதாரை இணைக்க முடியாமல், ரேசனில் பொருள் வாங்க முடியாமல் ஒரிசாவில் ஏழைகள் இறந்து போன செய்தியை இங்கு நினைவு கூரவும் – மொ.பெ)

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

செயல்படாத பிரதமர்! துடிப்பான முதல்வர் !

வாஜ்பாய் ஆட்சியில், கார்ப்பரேட்டுகளுக்கான கட்டுமானச் சேவையான தங்க நாற்கரச் சாலைகளை அமைத்து, அதையே ’ஒளிரும் இந்தியா’ என கூவிப் பார்த்தும் இருளில் தள்ளப்பட்ட விவசாயிகள் அந்த ஆட்சியை நம்பவில்லை. விளைவு! ஆட்சி போனது. பின்னர் வந்த காங்கிரசு, உலக வங்கி முன்தள்ளிய சீர்திருத்தங்களை தொடரப் பார்த்து, மக்களின், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக சற்று பின்வாங்கியது. இதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படாத பிரதமர் என மன்மோகன் சிங்கை சாடி நிராகரித்தன.

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தனது இசுலாமிய வெறுப்பை படுகொலைகளாக அரங்கேற்றிய அன்றைய குஜராத் முதல்வர் மோடி, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்  கொடுத்து வந்ததைக் கொண்டாடி, அவரை ‘துடிப்பான முதல்வர்” எனப் புகழ்மாலை சூட்டிய கார்ப்பரேட்டுகள் பிரதமர் பதவியில் அவரை அமரச் செய்தன. தனது கட்சியின் நிகழ்ச்சி நிரலான இசுலாமிய வெறுப்பையும் நடைமுறைப்படுத்தலாம், அதே நேரம் தனது எஜமானர்களுக்கும் சேவை செய்யலாம் என்பதைத்தான் தனது நடைமுறை மூலம் மோடி செய்து வருகிறார்.

எஜமானர்களின் விசுவாசமான அடியாள் !

உலக வங்கித் திட்டங்களை வரிக்கு வரி வெறித்தனமாக செயல்படுத்துவதில் மோடிக்கு நிகர் மோடிதான். பணமதிப்பழிப்பு நடவடிக்கை முதல் தற்போதைய வேளாண் திருத்த சட்டங்கள் வரை இப்படி வெறித்தனமாக செயல்படுத்தி தனது கார்ப்பரேட் எஜமானர்களை மகிழ்வித்து வரும் மோடிக்கு ஆதரவாகத்தான் சினிமாக் கழிசடைகளும் கிரிக்கெட் பிரபலங்களும் இருக்கின்றனர்.

மோடியின் பொய்கள், அவதூறுகளையே இம்மி பிசகாமல் இவர்கள் தமது சமூக வலைத்தள கணக்குகளில் எதிரொலிக்கின்றனர். விவசாயிகளால் எதிர்க்கப்படும் இந்த வேளாண் சட்டங்களைப் பற்றிய மேற்கூறிய உண்மைகளை கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா நாயகர்களும் பேசுவார்களா என்ன? அதை மூடி மறைக்கதான் சர்வதேச சதி! காலிஸ்தான் ஊடுருவல்! மாவோயிஸ்டுகள் ஊடுருவல்! என நாளொரு பொய்யும் பொழுதொரு அவதூறையும் கிளப்பி விடுகின்றனர்.

வரலாறு திரும்பும் !

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு ரொட்டியின்றி மக்கள் போராடிய போது ‘ரொட்டியில்லையென்றால் என்ன? கேக் சாப்பிடச் சொல்லுங்கள்!’ என்று அந்த ராணி கூறினாராம். அதற்கு பதிலாகத்தான் அந்த மக்கள் கில்லட்டினைக் கொண்டு வந்தார்கள்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பிறந்தது. எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற அமைதியாக கோரிக்கை வைத்து போராடி வருகின்றார்கள். சட்டம் போட்டது போட்டதுதான் என அரியணையிலிருந்து கொக்கரிக்கிறார்கள் ஆட்சியாளர்களான கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகள்.

வரலாறு திரும்பும்! அப்போதுதான் இங்கு ஜனநாயகம் பிறக்கும்.

இராமையா
ஆதாரம் : countercurrents.org

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க