privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !

பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !

-

த்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம், ஒரு முன்னோடித் திட்டமென்றும் விவசாயிகள் தற்கொலைக்கு ஒரு தீர்வு என்றும், அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு ஆதரவாக மாறி வருவதன் தொடக்கமென்றும் பலவாறாகப் பீற்றப்பட்டது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் துயரத்துக்கு முடிவு காணப்போகிறது என்று அரசாங்கம் கூறிக்கொண்டாலும், உண்மையில் இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் விவசாயிகளைக் காப்பாற்றுகின்ற பொறுப்பிலிருந்தும் அரசு தன்னை கழற்றிக் கொள்கிறது என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

ம.பி. மாநிலம், ஸெஹோர் எனுமிடத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில், பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தின் நடைமுறை விதிகளை வெளியிடும் நரேந்திர மோடி.

எந்தப் புதிய தாராளவாதக் கொள்கை விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்காதோ, அந்தக் கொள்கையை நோக்கி விவசாயிகளைத் தள்ளிவிடுவதும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கையில் விவசாயிகள் என்ற மிகப்பெரிய சந்தையைத் தங்கத்தட்டில் வைத்து வழங்குவதும், காப்பீட்டு தொழிலை மேலும் தனியார்மயமாக்குவதும்தான் இத்திட்டத்தின் நோக்கங்கள்.

2016 – 17 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கப்பட்டது. இதே அளவு தொகையை மாநில அரசுகளும் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மொத்தம் ரூ.13,420 கோடியை அரசு இதற்குச் செலவிட்டிருக்கிறது. நாட்டின் 50% விவசாயிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதுதான் தனது நோக்கம் என்று கூறியிருக்கிறார் பிரதமர்.

இத்திட்டத்தின்படி, விவசாயிகள் சம்பா பயிருக்கு 1.5%, குறுவைக்கு 2%, பணப்பயிர்களுக்கு 5% பிரீமியம் செலுத்த வேண்டும். மீதி பிரீமியம் தொகை முழுவதையும் அரசு செலுத்தும். பிரீமியத்தில் அரசின் பங்களிப்புக்கு முன்பு உச்சவரம்பு இருந்தது. இதன் காரணமாக, காப்பீடு செய்யும் தொகையின் அளவும் குறைந்தது. இப்போது அரசு பங்களிப்புக்கு இருந்த அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக விவசாயி மொத்த இழப்புக்கும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்று மோடி அரசு கூறுகிறது.

***

வழக்கமாக விவசாயிகளுக்கு மானியமோ, வங்கிக் கடனோ, மானிய விலையில் மின்சாரமோ வழங்கினால், உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள், இந்த காப்பீடு திட்டத்தை மட்டும் பெரிதும் வரவேற்றுள்ளன.

ஏனென்றால், காப்பீட்டு நிறுவனங்களைப் பொருத்தவரையில் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் முந்தைய திட்டங்களைவிட அவர்களுக்கு மிகவும் இலாபகரமானது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களாக 10 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அரசு அறிவித்திருக்கிறது. அவற்றோடு ஒப்புக்குச் சப்பாணியாக இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் என்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தையும் சேர்த்து அறிவித்திருக்கிறது.

சுயதம்பட்டம் : மோடி அரசில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மோடியின் நலம்விரும்பிகள் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட நடைபயணம்.

அது மட்டுமல்ல, புனிதமாய் போற்றிப் புகழப்பட்ட ”சுதந்திரப் போட்டி” என்ற சந்தைக் கோட்பாட்டுக்கு எதிராக, ஒரு வட்டாரத்தில் ”ஒரு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்” என்றும் அரசு அறிவித்துள்ளது. அதாவது, ”அரசு மானியத்தால் இலாபம் உத்திரவாதம் செய்யப்பட்ட ஒரு சந்தையை”த் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறது அரசு.

இந்தப் புதிய காப்பீடு இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புக்கு மட்டுமே பொருந்தும். மனிதர்களால் தோற்றுவிக்கப்படும் ”விளைபொருட்களின் விலை வீழ்ச்சி” என்ற பேரழிவுக்குக் காப்பீடு கிடையாது. ஆனால், இத்தகைய விலை வீழ்ச்சியின் விளைவாகத்தான் நல்ல விளைச்சலுக்குப் பின்னும் விவசாயிகள் நட்டமடையும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

விளைச்சல் குறைந்துவிட்ட நிலையிலும், விலை வீழ்ச்சியுறுதல் என்கிற முற்றிலும் வினோதமானதொரு சந்தை நடப்பை கடந்த இரண்டாண்டுகளாகக் கண்டுவருகிறோம். அதுவும் 2014 – 15 மற்றும் 2015 – 16 ஆகியவை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆண்டுகள். இந்த விலை வீழ்ச்சி மற்றும் சந்தை அராஜகங்களால் விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படாமல் அரசு காப்பீடு செய்திருக்க வேண்டும்.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கும் இலாப உத்திரவாதம் கொடுக்கும் அரசு, அத்தகைய உத்திரவாதத்தை விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கிறது. ஏனென்றால், அது உலக முதலாளித்துவம் வகுத்திருக்கின்ற சுதந்திரச் சந்தைக் கோட்பாட்டுக்கு எதிரானதாயிற்றே!

விரிவான பார்வையின் முக்கியத்துவம்

இன்று நாம் ”காப்பீடு” என்ற சொல்லைக் கேட்டதும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் ”பாலிசி” எடுப்பது என்றே சிந்திக்கப் பழகியிருக்கிறோம். ஆனால், காப்பீடு என்பது பணம் சார்ந்த ஒரு ஒப்பந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

உண்மையில் காப்பீடு என்பதுதான் என்ன?  ”இன்சூர்” (காப்புறுதி) என்ற சொல், ”ஷ்யுர்” (Sure – உறுதி) என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்ததே. இதன் பொருள், உறுதிப்படுத்துவது அல்லது பாதுகாப்பளிப்பது; ”இழப்பு, அழிவு, இன்னல், இன்னவற்றுக்கு இட்டுச்செல்லும் நிகழ்வைத் தடுப்பதற்கு முயற்ச்சிப்பது” மற்றும் ”காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒரு தொகையைச் செலுத்துவதன் மூலம் இழப்பு, திருட்டு அல்லது சொத்துக்கு ஏற்படும் அழிவு அல்லது விபத்தில் ஏற்படும் காயம், சாவு போன்ற நிகழ்வுகளுக்குப் பணவகையில் ஈடுசெய்யும் ஒரு ஏற்பாடு”  என்பதுதான் ஆங்கில அகராதி இந்தச் சொல்லுக்கு கூறுகின்ற பொருள்.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனத்தின் தலைமை அலுவலகம்.

ஆக, காப்பீடு என்பதன் சாரம், தனிநபரை அல்லது ஒரு குழுவினரை வரவிருக்கும் பாதக நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு முன்னேற்பாடு என்பதுதான். காடுகள் அழியாமல் தடுப்பதன்மூலம் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது, தீ விபத்துக்கான காரணங்களைக் களைவதன் மூலம் தீயினால் ஏற்படும் அழிவிலிருந்து பாதுகாப்பது என்பன போன்ற வருமுன் காக்கும் நடவடிக்கைகளும்கூட காப்பீட்டு நடவடிக்கைகள்தான்.

தனி நபர்கள் தங்களது வருமானத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நேரக்கூடிய பாதக நிகழ்வுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சேமிப்புகளும்கூட ஒருவகைக்  காப்பீடே.

ஒரு அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தனது குடிமக்களைத் தீங்கு இழைக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறது. லாக் போன்றவர்கள் முன்வைத்த, அரசு பற்றிய முதலாளித்துவக் கோட்பாட்டின்படி, அரசு என்பதே சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒருவகைக் காப்பீடுதான்: அரசானது தங்களைத் தீங்கு நேராவண்ணம் பாதுகாக்கும் என்ற அடிப்படையில்தான் குடிமக்கள் தங்களது உரிமைகளின் ஒரு பகுதியை அரசுக்கு விட்டுத்தருகிறார்கள்.

”அனைவருக்குமான இலவச மருத் துவம்” என்பது பணம் இல்லாததால் உடல்நலத்தைப் பேண முடியாதவருக்கும் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காப்புறுதி செய்யும் பொருட்டு ”தானியங்களின் பொதுக் கொள்முதல்” செய்யப்படுகிறது.

வறுமை காரணமாக குறைந்த பட்ச சத்துணவைப் பெறமுடியாத நிலையிலிருந்து ஏழைகளைக் காக்கும் பொருட்டு உணவுப்பொருள் பொதுவினியோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், உலக வங்கியேகூட இந்த பொதுவினியோக முறையை ”பாதுகாப்பு வலை” (Safety net) என்றுதான் கூறுகிறது. காப்பீடு என்பதன் பொருள் இதுதான்.

இருப்பினும், தனிமனிதனுக்கும் இலாப நோக்கில் இயங்கும் ஒரு நிறுவனத்துக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் என்ற பொருளில் மட்டும்தான் காப்பீடு என்ற சொல் இன்று புரிந்து கொள்ளப்படுகிறது. அது, காப்பீட்டின் ஒருவகை மட்டுமே என்பதோடு, சிறப்பானதொரு வகையும் அல்ல. மொத்த சமூகத்தின் நலன் கருதி எடுக்கப்படும் அனைவருக்குமான பாதுகாப்பு  நடவடிக்கையோடு ஒப்பிடும்போது தனி நபருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் காப்பீடு என்பது தரம் தாழ்ந்ததுதான்.

கணிசமான நபர்கள் காப்பீட்டு வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டிருக்கிறார்கள் என்பதே காப்பீட்டின் செயல் திறனை மதிப்பிடுவதற்கான அளவுகோல் ஆகிவிடாது. (அப்படித்தான் மோடி அரசு கூறிக் கொண்டிருக்கிறது) மாறாக, தேவைப்படும் தருணத்தில் அது மக்களை இழப்புகளிலிருந்து உண்மையிலேயே பாதுகாக்கிறதா என்பதில்தான் அதன் செயல் திறன் அடங்கியிருக்கிறது.

பகைநிலை உறவு

காப்பீடு நிறுவனங்கள், ”நம்பிக்கை”, ”பாதுகாப்பு”, என்ற சொற்களைப் போட்டு விளம்பரம் செய்தாலும் நடைமுறையில் பாலிசிதாரர்களுக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையிலான உறவு பகைத்தன்மையுடையதேயாகும். ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் இலாபம் எப்படிப் பெறப்படுகிறது? பிரீமியம் மூலமான வரவு மற்றும் அந்தப் பணத்தைக் கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து, அதன் மூலம் பெறப்படும் தொகை ஆகியவையே ஒரு நிறுவனத்தின் வரவு ஆகும்.

பாலிசிதாரர்களின் இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்காக அளிக்கப்படும் தொகை மற்றும் நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகள் ஆகியவையே செலவுகள். வரவிலிருந்து செலவுகளைக் கழித்தால் கிடைப்பது அந்த நிறுவனத்தின் இலாபம்.

ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட நபருக்கு காப்பீடு வழங்கலாமா, வழங்கலாமெனில் அதற்கு எவ்வளவு கட்டணம் தீர்மானிப்பது என்பதை இலாப நோக்கில்தான் கணக்கிட்டு முடிவு செய்யும். மேலும், இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கான செலுத்துகைகளையும் இயன்ற அளவுக்குக் குறைக்கவும் கோரிக்கைகளை நிராகரிக்கவுமே முயற்சி செய்யும்.

எடுத்த பாலிசியால் ஒரு பயனும் இல்லை எனும்படியான பாலிசிகளை காப்பீடு நிறுவனங்கள் மக்களுக்கு விற்கின்றன. கட்டணப் பிறழ்வால் காலாவதியாகி பாலிசிதாரர்கள் அடையும் இழப்பில் காப்பீட்டு நிறுவனங்கள் இலாபம் பார்க்கின்றன. இழப்பு நேர்வதற்கான வாய்ப்பு கூடுதலாய் இருப்பின், அவ்வாறான நபர்களுக்கு காப்பீடு வழங்குவதைக் காப்பீட்டு நிறுவனங்கள் தவிர்க்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை, 2005 – 2012 காலப்பகுதியில் காப்பீட்டுத் துறையில் நுழைந்த ஏராளமான தனியார் நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் செய்த மோசடி வியாபாரம் காரணமாக, மிகப்பெரும் அளவில் பாலிசிகள் காலாவதி ஆயின. இதனால் பாலிசிதாரர்களுக்கு ரூ.1.5  1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்த மாபெரும் மோசடியில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவனங்கள் எந்த ஒரு தண்டனைக்கும் ஆளாகவில்லை. மேற்படி அனுபவங்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கும் பகைநிலை உறவையும், மோசடி நடைமுறையையும் நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

நட்டம் மக்களுக்கு, இலாபம் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு !

உண்மை இப்படி இருப்பினும், விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு காப்பீட்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக அரசு கூறுகிறது. இது நம்பத்தக்கதாக இருக்கிறதா? தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க அரசு விழைகிறது என்பதுதான் உண்மை.

மகாராட்டிராவில் நடந்தது என்ன? 2016 குறுவைப் பருவத்தில் பிரீமியமாக ரூ.4,000 கோடி வசூல் செய்யப்பட்டது. காப்பீட்டுச் செலுத்துகையாக ரூ.2,000 கோடி ரூபாய்தான் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

பருவமழை பொய்த்துவிடும் என்று தெரிந்தால், அந்த குறிப்பிட்ட ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ஏலமெடுப்பதற்கே வருவதில்லை. அல்லது வேண்டுமென்றே பிரீமியம் தொகையைக் கடுமையாக உயர்த்தி வைப்பதன் மூலம் ஏலத்தில் தம்மைத்தாமே தோற்கடித்துக் கொள்கிறார்கள்.

இத்தகைய வழிமுறையின் மூலம் இலாபம் கிடைக்கத்தக்க பகுதிகளை தனியார் நிறுவனங்கள் ஒதுக்கிக் கொள்கின்றன. நட்டம் தரும் பகுதிகள் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் தலையில் கட்டப்படுகின்றன. அவர்களும் ஒதுங்கிக் கொண்டால், விவசாயிக்கு காப்பீடே கிடையாது. இதுதான் பிரதமரின் புதிய திட்டம்.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு செலுத்தும் பிரீமியத் தொகை குறித்த சில விவரங்களைப் பாருங்கள். பீகாரில் நெல்லுக்கு 35%, குஜராத்தில் பருத்திக்கு 25%, கர்நாடகாவில் துவரம்பருப்புக்கு 46.7%, மகாராட்டிரத்தில் பருத்திக்கு 22%, மத்திய பிரதேசத்தில் சோயாவுக்கு 30%, ராஜஸ்தானில் கொத்தவரைக்கு 48%. காப்பீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் மேற்கண்ட அளவிலான தொகையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு பிரீமியமாகச் செலுத்துகிறது.

பயிருக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்யும் காப்பீடு நிறுவன அதிகாரிகள். (கோப்புப் படம்)

மொத்த காப்பீட்டுத் தொகையில் பாதியளவுக்கும், அதற்குச் சற்று குறைவாகவும் பிரீமியமாகவே செலவழிக்க அரசு தயாராக இருக்கும்போது, இந்தப் பணத்தை எதற்காகத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதே கேள்வி. இழப்பீட்டைத் தானே மதிப்பீடு செய்து அரசே விவசாயிக்கு நிவாரணம் வழங்கலாம். அல்லது பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களைக்கூட இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே.

அரசு அல்லது பொதுத்துறை ஊழியர்களைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் வேகமாகவும் திறமையாகவும் வேலை செய்யும் என்று தனியார்மய ரசிகர்கள் நம்புகிறார்கள். காப்பீட்டுத் தொகையைக் கொடுக்காமல் நிராகரிப்பது எப்படி என்பதுதான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் அணுகுமுறை. இலாபம் தான் அவர்களது நோக்கம். இந்த இலாப நோய் பொதுத்துறை நிறுவனங்களையும் பற்றிக் கொண்டு விட்டதைத்தான் இப்போது நாம் கண்டு வருகிறோம்.

எனவே, பிரதமரின் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பொருளாதார ரீதியில் அரசுக்கோ  விவசாயிகளுக்கோ ஆதாயம் தரக்கூடியது என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

அப்படியானால், எதற்காக இந்த காப்பீட்டுத் திட்டம் ?

இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதோ, அத்தகைய பாதுகாப்பை வழங்குவதற்கான பொருளாதார ரீதியில் பாதுகாப்பான ஏற்பாட்டை உருவாக்குவதோ அல்ல என்பதை இதுவரை பார்த்த விவரங்களின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள இயலும். மாறாக, விவசாயிகளை அவர்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களிலிருந்து பாதுகாக்கின்ற தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளவும், கைகழுவவும் இந்த திட்டம் பயன்படுகிறது என்பதுதான் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கின்ற மிக முக்கியமான ஆதாயம்.

விவசாயிகளின்பால் எவ்வளவுதான் இரக்கமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்த போதிலும், அவர்களுடைய துயரத்தை துடைக்கும் பொறுப்பை இந்த அரசால் முற்றிலுமாகத் தட்டிக்கழிக்க இயலவில்லை. கொள்முதலும் நிவாரணமும் கேட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை இந்த அரசு தவிர்க்கவியலாமல் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு பெங்களூரில் நடந்த முற்றுகைப் போராட்டம். (கோப்புப் படம்)

எடுத்துக்காட்டாக, 2004 -ல் விவசாயிகளின் அதிருப்தியும் கொந்தளிப்பும்தான் வாக்குகளாக மாறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பதவியில் அமர்த்தியது. அரசுக் கொள்முதல், விவசாயிகளுக்கு வங்கிக்கடன், விவசாயத்துறையில் முதலீடு போன்ற விசயங்களில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட கொள்கைகளை ஒரளவுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஐ.மு.கூட்டணி அரசுக்கு ஏற்பட்டது. சமீபத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தினைக் கிண்டல் செய்த மோடி அரசு, அதற்கான ஒதுக்கீட்டைக் குறைத்தது. பின்னர், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது.

2015 -ல் பருத்தி விவசாயிகளின் நீண்ட போராட்டத்தை பஞ்சாப் சந்தித்தது. மார்ச், 2016 -ல் பல்லாயிரக்கணக்கான கர்நாடக விவசாயிகள் பெங்களூருவை முற்றுகையிட்டார்கள். ஏப்ரல் 2016 -ல் நாசிக்கில் மராட்டிய விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டு போராடினார்கள். இந்த போராட்டங்கள் அனைத்தும் நியாயமானவை. ஏனென்றால் விவசாயிகளைப் பாதுகாப்பது, அதாவது அவர்களுக்கு காப்பீடு வழங்குவது அரசின் பொறுப்புதான்.

பிரதமரின் இந்தப் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், விவசாயிகளைக் காப்பீட்டு கம்பெனிகளிடம் கைகாட்டி விட்டுவிட்டு, தனது பொறுப்பை நிறைவேற்றி விட்டதாக கூறிக்கொள்ள அரசு முயற்சிக்கிறது. எனவே, பயிர் காப்பீடு என்பது மக்களின் கோபத்திலிருந்து புதிய தாராளவாதக் கொள்கைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் ரீதியான காப்பீடு. அதே நேரத்தில் இது தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புதிய தாராளவாத மானியமும்கூட.

பொது சுகாதாரத் துறையின்பால் அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறையுடன் இது ஒப்பிடத்தக்கது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கால் சதவீதம் ஒதுக்கினால் போதும், இந்திய மக்கள் தொகையில் கீழ்நிலையில் உள்ள 50% பேருக்கு ஓரளவு மருத்துவக் காப்பீடு வழங்கிவிட முடியும். இதைக் கொடுத்துவிட்டால், எல்லோருக்கும் இலவச மருத்துவம் என்ற கோரிக்கையே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் நிதி ஆயோகின் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா.

மொத்தத்தில் இவையனைத்தும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் பயிர் காப்பீட்டு நிறுவனங்களும் கொள்ளை இலாபம் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் என்பதே உண்மை.

இந்திய வேளாண்மைக்குத் தேவைப்படும் காப்பீடு எத்தகையது?

இந்திய வேளாண்மைக்குக் காப்பீடு தேவை. ஆனால், அது நிதி வடிவிலான காப்பீடு அல்ல. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமே விவசாயம்தான் என்று பார்க்கின்ற, வேளாண் தொழிலுக்கு முக்கியமாக, அதில் பாடுபடும் விவசாயிகள் நலனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கின்ற ஒரு அரசு நமக்கு வேண்டும்.

அதாவது, நீடித்து நிற்கக்கூடிய முறையிலானதும், போதுமான அளவிலானதுமான உற்பத்தியை அடைவதன் தேவைக்கேற்ப விவசாயிகளுடைய ஜனநாயகபூர்வ அமைப்புகளின் ஒத்துழைப்போடு திட்டமிடும் அரசு ந

மக்கு வேண்டும்;

நீர்ப்பாசனம் மற்றும் நிலவள முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பொதுத்துறை முதலீடு, விவசாயப் பணிகளுக்கு நிதியுதவி, பொதுத்துறை விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணியாளர்கள், கட்டுப்படியான விலையில் உள்ளீட்டுப் பொருட்கள், நியாய விலையில் உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் ஆகியவை வேண்டும்.

இதுதான் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த காப்பீடாக இருக்கும். விளைச்சலோ வருவாயோ வீழ்ந்தால் வழங்கப்படும் காப்பீடு என்பது இந்த ஒருங்கிணைந்த காப்பீட்டின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அணுகும்பட்சத்தில், காப்பீடு என்பது தண்டச் செலவாக இருக்காது. மாறாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் தொழில்துறைப் பண்டங்களின் உள்நாட்டு சந்தை விரிவடைவதையும் உறுதிப்படுத்துகின்ற தேசிய வளர்ச்சித் திட்டத்தின் அங்கமாக இருக்கும்.

ஆனால், இவையெதுவும் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இல்லை. விவசாயிகளுக்கு எஞ்சியிருக்கும் சில பாதுகாப்புகளையும் ஒழித்துக்கட்டுவதே அரசின் இலக்காக இருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளால் மட்டுமல்ல, மனிதர்கள் உருவாக்கும் திட்டமிட்ட பேரழிவுகளாலும் விவசாயிகள் கடுமையாகத் தாக்கப்படவிருக்கிறார்கள். இத்தகையதொரு சூழலில் ஏழை விவசாயிகளுக்கு காகிதப் பத்திரங்களை விநியோகித்து விட்டு, அவர்களுக்குக் காப்பீடு வழங்கி விட்டதாகக் கூறுவதென்பது, குரூரமானதொரு நகைச்சுவை.

மொழியாக்கம்: சூரியன்

 ”ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” (எண் 6667) இதழில்  ”விவசாயிகளிடமிருந்து அரசைக் காப்பீடு செய்து கொள்ளுதல்” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

– புதிய ஜனநாயகம்s, ஆகஸ்ட் – 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி