தேர்தல் வாக்குறுதிகள் : உண்மையும் பொய்யும் !

ஓட்டுக்கட்சிகளின் கல்விசார்ந்த வாக்குறுதிகள் அனைத்தும் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

17 -வது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பண்டிகைக் கால விற்பனைக்காக நகைக் கடைகள் தள்ளுபடிகளை அறிவிப்பதைப் போல ஓட்டுக் கட்சிகளோ மக்களிடம் பல வண்ணமயமான வாக்குறுதிகளை வீசி வருகின்றனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, சிபிம், சிபிஐ, லிபரேசன் ஆகிய கட்சிகள் பல வாக்குறுதிகளை முன்வைத்திருந்தாலும் அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் ஒருசில வாக்குறுதிகள் பொதுவாகவே உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சலுகைகள் ஆகியவைகளை குறிப்பாக சொல்லலாம்.

பிஜேபி-யின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் கடந்த ஐந்தாண்டுகளின் நீடிப்பாகவே உள்ளது. மூகமூடிகள் ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகள் ஆதரவு என்றிருப்பதால் அதனைக் கணக்கில் கொள்ளவில்லை.

கல்விக்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் ஆகியவை திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ளவை. காங்கிரசோ நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, பொதுப்பட்டியலிலிருந்து பள்ளிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது (உயர்க்கல்வி பொதுப்பட்டியலிலேயே இருக்கும்) கல்விக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrollment Ratio-GER) 25.8%-லிருந்து 40%-மாக உயர்த்துவது போன்றவைகளை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.

எந்த கட்சியும் தங்களுடைய ஐந்து வருட ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கேள்வி கேட்பதற்கான எந்த சட்டப்பூர்வமான வழிமுறைகளும் குடிமக்களுக்கு இல்லை. இருந்தாலும் கடவுள் நம்பிக்கையை போல கட்சிகளின் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்களும் நம்பவைக்கும் வேலையை செய்கின்றன. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறை என்ன? அவற்றை நிறைவேற்றுவதற்கான உண்மையான அதிகாரம் ஆட்சியாளர்களுக்கோ / நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? வாக்குறுதிகளுக்குள் ஒழிந்துள்ள வர்க்க நலன் என்ன? என்பது பற்றியான விவாத்திற்குள் யாரும் செல்வதில்லை.

படிக்க:
பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto
♦ வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

உதாரணமாக கல்விக்கடன் தள்ளுபடியை எடுத்துக்கொள்வோம். ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி 2018 நிதியாண்டில் (மார்ச் 2018 வரை) ரூ. 82,600 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் வழங்கப்பட்டவை. மொத்த கல்விக்கடனில் 20 சதவிகிதக் கடன் தமிழ்நாட்டில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கல்விக்கடன் வழங்கப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சார்ந்தவர். அதேவேளையில் கல்விக்கடனை திருப்பி செலுத்தாதவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் உள்ளனர். மொத்த கல்வி வாராக்கடனில் 36% வாராக்கடன் தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மட்டும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 17,000 கோடி ரூபாய் கல்வி வாராக்கடன் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அரசு தள்ளுபடி செய்யவேண்டியிருக்கும். இத்தொகை கடந்த நான்கு ஆண்டுகள் உயர்கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட அதிகமாகும்.

ஆண்டு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு(கோடியில்) கல்வி – வாராக்கடன்   (கோடியில்)
2015-16 3696.2 4777
2016-17 3679.01 5191
2017-18 3680 6434

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 2015-16 லிருந்து 2017-18 உயர்கல்விக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி மற்றும் கல்வி வாராக்கடன் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் உருவான கல்வி வாராக்கடன்களின் மொத்த மதிப்பு 16,402 கோடி ரூபாய். மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் வாராக்கடன்களின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலையின்மை காரணமாக வரும் ஆண்டுகளில் வாராக்கடனின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பது உண்மை.

இக்கல்விக் கடன்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம், நர்ஸிங், மேலாண்மை போன்ற படிப்பிற்கான கல்வி கட்டணங்களை செலுத்துவதற்காக பெறப்பட்டவை. இந்த 17,000 கோடி வாராக்கடனில் பெரும்பான்மை பகுதி தனியார் கல்வி முதலைகளின் பைகளுக்கே சென்றுள்ளது. மேலும் கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை பொது மக்களின் சேமிப்பு பணத்தைக் கொண்டு ஈடுகட்டுவார்கள்.

இந்நிதியை கொண்டு 60 -க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த அரசுக்கல்லூரிகளை (பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரிகள்) உருவாக்கியிருக்க முடியும். ஆனால் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் புதிய அரசு கல்லூரிகள் ஆரம்பிப்பதைப் பற்றி பேசவில்லை கல்விக் கடன் தள்ளுபடி பற்றியே பேசுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் GER தற்போதுள்ள 25.8% லிருந்து 40% உயர்த்தப் போவதாக கூறியுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் 40% மாணவர் சேர்க்கை எவ்வாறு அடையப் போகிறார்கள் என்பதை பற்றிய விளக்கங்கள் சொல்லப்படவில்லை.

2017-18-ம் ஆண்டிற்கான அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின் படி 3.66 கோடி பேர் உயர்கல்வி படிக்கின்றனர். இது 18-23 வயதிற்குட்பட்ட இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையில் 25.8% ஆகும். அதாவது 100 இளைஞர்களில் 26 பேர் மட்டுமே கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதன் அளவை 40 ஆக உயர்த்துவதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இவ்வாறு அதிகரிப்பதற்கு, 2017-18 கணக்கின் படி, ஏற்கெனவே உள்ள எண்ணிக்கையை விட 2.01 கோடி இளைஞர்கள் உயர்கல்வியில் புதியதாக சேர்க்க வேண்டும். அதற்காக 5,000 -க்கும் மேற்பட்ட புதிய கல்லூரிகளையும் அதற்கான உள்கட்டுமான வசதிகளையும் தகுதிவாய்ந்த பேராசிரியர்களையும் உருவாக்க வேண்டும்.

எவ்வாறு இதனை உருவாக்கப்போகிறார்கள்? இதற்கான பணம் எங்கிருந்து வரபோகிறது? 5000 கல்லூரிகளும் அரசு கல்லூரிகளா? அல்லது தனியார் கல்லூரிகளா? போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது. ஆனால் பிஜேபி, காங்கிரஸின் கடந்த கால ஆட்சியிலிருந்து இதற்கானப் பதிலை ஓரளவிற்கு ஊகிக்க முடியும்.

ஆண்டு பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் GER% தனியாரின் பங்கு %
2000-01 256 12806 12.59 (2004-05)  25
2011-12 642 34852 20.08 70
2017-18 903 39050 25.8 78

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து, 2004-05 ல் 12.6% உள்ள GER 2017-18 ல் 25.8% ஆக அதிகரித்துள்ளது. கூடவே உயர்கல்வியில் தனியார்மயத்தின் அளவும் 25% லிருந்து 78% அதிகரித்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் தனியார்மயத்தின் பங்களிப்பு மிக அதிகமாக வளர்ந்துள்ளதையே இது காட்டுகிறது. உலகவர்த்தகக் கழகத்தின் காட், காட்ஸ் – ஒப்பந்தங்களின் வழிகாட்டுதல் படியே கல்வி சார்ந்த கொள்கை முடிவுகளை இந்திய அரசு எடுத்துவருகிறது.

படிக்க:
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
♦ நூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், UGC, AICTE, MCI போன்ற அமைப்புகளும் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமான திட்டங்களை அமல்படுத்துகின்றன. அதன் விளைவாகவே கடந்த 18 ஆண்டுகளில் 50% அளவிற்கு தனியார் கல்லூரிகள் பெருகியுள்ளன. தற்போது காங்கிரஸ் உறுதியளித்துள்ள 40% GER என்பதும் பல ஆயிரக்கணக்கான புதிய தனியார் சுயநிதி கல்லூரிகளை அனுமதிப்பதன் மூலமே சாத்தியமாக்க முடியும் அல்லது மோடி அரசு அமல்படுத்திய இணையவழி பாடங்கள் மூலம் (Massive Open Online Courses – MOOCs) உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த முடியும்.

SWAYAM, NPTEL ஆகியவை இந்திய அரசு நடத்துகிற MOOCs. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இணைய வழியில் பட்டப்படிப்புகள் (online degrees) வழங்குவதற்கான ஒப்புதலை சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளது. MOOCs வாயிலாக பட்டம் பெறுவதற்கு ஆசிரியர்களோ, ஆய்வகங்களோ, கட்டிடங்களோ தேவையில்லை. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடங்களை இணையத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கொடுத்தால் போதும். தேர்வும் இணையத்தின் வழியே நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் மேலும் கொள்ளையடிப்பதற்கான வழிமுறையை மோடி அரசு உருவாக்கியுள்ளது எனக் கூறலாம். தற்போது NEET, JEE தேர்வுகளுக்கான பயிற்சி கூட இணையவழியில் வந்துவிட்டது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுமென தேர்தல் வாக்குறுதிகள் கூறுகின்றன. கல்வித்துறையில் நெருக்கடிகளுக்கு காரணம் தனியார்மயம் தான்.

ஆனால் கட்சிகளோ கொள்கையளவில் தனியார்மயத்தை ஒப்புகொண்டே வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இவை நம்மை மேலும் கடனாளிகளாகவும் வேலையில்லாதவர்களாகவும் ஆக்குமே ஒழிய அனைவருக்கும் தரமான கல்வியை ஒருபோதும் தராது. கல்வி மட்டுமல்ல விவசாயம் சார்ந்த வாக்குறுதிகளும் இதே தன்மையிலானவைதான். இதை விரிவாக பார்ப்போம்.

(தொடரும்)

உதவிய தரவுகள் :

– அருண் கார்த்திக், சங்கர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க