ந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம், 1956 திரும்பப் பெறுதல்) சட்டம்-2018 ஜீன் 28, 2018 அன்று தனது (MHRD) வலைதளத்தில் வெளியிட்டு அதன் மீது reformofugc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது. (பின்னர் ஜூலை 20, 2018 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது).

இதை படித்தவுடன் “எனது நாடி நரம்பெல்லாம் நடுங்குகிறது” என தனது அதிர்ச்சியை தெரிவித்தார் இந்தியாவின் மிக முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் அனில் சத்கோபால்,

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் படி என் கடமைகளை செய்வேன் என உறுதி ஏற்று பொறுப்பு வகிக்கும் இந்திய அரசின் அமைச்சர்களும், ஆட்சிப்பணி அதிகாரிகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, அதிலும், அரசமைப்புச் சட்டத்தின் மாற்ற இயலாத அடிப்படைத் தன்மை என உச்சநீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்தையே மாற்றிடும் படியான வரைவு மசோதாவை தயார் செய்து, இந்திய மொழிகளில் எதிலும் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு, குறுகிய காலத்தில் கருத்துக் கேட்பார்கள் என யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா?

அதுதான் “வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம், 1956 திரும்பப் பெறுதல்) சட்டம்-2018”.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை காத்திடவும், உயர்கல்வி முழுமையாக சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுவிடாமல் தடுத்திடவும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது. அதன் ஒரு பகுதி தான் இந்த வெளியீடு.

… மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சியே மக்களாட்சி, அத்தகைய மக்களாட்சியை கொண்ட இந்தியாவில் மக்கள் முன் இந்த மசோதா குறித்த செய்தியை முன் வைக்கின்றோம். இறையாண்மைக் கொண்ட இந்திய மக்கள் தீர்மானிக்கட்டும். (நூலிலிருந்து பக்.3)

இந்த முன் வரைவுச் சட்டம் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் எதிலும் வெளியிடப்படவில்லை. வங்காளம், குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் இதர இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இந்த முன்வரைவுச் சட்டத்தைப் படித்துக் கருத்துச் சொல்வது சாத்தியமற்றதாகும். இதன் தாக்கங்கள் மிக ஆழமானதாக இருக்கும் என்ற நிலையில் பிரச்சனையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் ஒருவர் கருத்துச் சொல்ல வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 வது பிரிவுக்கு எதிரானதாகும். (நூலிலிருந்து பக்.5-6)

கல்வி என்பது வரலாற்றுப் பூர்வமாக ஒரு சமூகப் பண்பாட்டு செயல்முறையாகும். அது சமுதாயத்தின் மிகப் பரந்த கூட்டு நலன்களின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் படைப் பாக்கத்திறனையும் மனித ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. சமுதாயத்தை ஒரே நிலையில் அப்படியே வைத்திருக்காமல் குடியரசுத் தன்மை , சுதந்திரம், சமத்துவம், நீதி, மானுட மாண்பு, பன்முகத்தன்மை, சமூக நல்லிணக்கம், சமூக அமைதி ஆகிய நாகரிக சமுதாய இலட்சியங்களை நிறைவேற்று வதற்கான சமூக மறு கட்டமைப்பு, சமூக மாற்றத்திற்கான பங்கினை ஆற்றுகிறது கல்வி.

படிக்க:
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

இதற்கு நேர் மாறாக, இந்த முன்வரைவுச் சட்டம், சந்தைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ‘தகுதி மட்டுமே’ என்ற ஒரு கருத்தாக்கம் பற்றித்தான் பேசுகிறது. ‘தகுதி’ என்றால் என்ன என்று வரையறுக்காமலே அதைப் பற்றிப் பேசுகிறது. இத்தகைய அணுகுமுறை சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள வர்க்கங்களின் விடுதலைக்கு உதவாது. இப்படிப்பட்ட ‘சந்தைத் தேவை இலக்கு’ சமுதாயத்தின் மேல்தட்டினர் மட்டுமே உயர் கல்விக்களத்தை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொள்வதற்குத்தான் உதவும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் இந்த நிலைமைதான் இருந்தது. இந்த முன் வரைவுச்சட்டம் நம்மை இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு இட்டுச் சென்றுவிடும். பாகுபாடுகளை மேலும் விரிவுபடுத்தவே இந்தச் முன்வரைவுச் சட்டம் உதவும். கல்வியை ‘உலக வர்த்தக அமைப்பு’ ராஜ்யத்தின் கீழ் கொண்டுசெல்லும் பாதைதான் இந்த சட்ட முன் வரைவு.

… அரசுப் பல்கலைக்கழகத்தையும் தனியார் பல்கலைக்கழகத்தையும் இந்த முன்வரைவுச்சட்டம் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இது உட்டோ – காட்ஸ் வற்புறுத்தும் கோட்பாடாகும். சம ஆடுகளம் வேண்டும் என உட்டோ – காட்ஸ் வற்புறுத்துகிறது. இந்த முன்வரைவுச் சட்டம் அதனை சாத்தியமாக்குகிறது. இந்த முன் வரைவுச் சட்டம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை. மாறாக, உட்டோ நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக உள்ளது.

கேலிச்சித்திரம் : ஓவியர் முகிலன்.

உட்டோ மாநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை – குறிப்பாக கல்வித்துறை சம்பந்தமான விவரங்களை – அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இச்சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றால், ஒரு அறுபதாண்டுகால சட்டப்பூர்வ நிறுவன அமைப்பை, அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பை, அதன் மூலம் கல்வி ஒரு சமூகப் பொருளாக இருப்பதை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பைக் கலைத்து விட வேண்டும் என்பதில் இவ்வளவு அவசரம் காட்டப்படுவது எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அதற்கான ‘மசோதா’ ஒன்று தாக்கல் செய்யப்படும். எந்தவொரு மசோதாவும் அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் சட்டமாக மாறும். மசோதாவாக தாக்கல் செய்யப்படும் முன்பு அது “வரைவு மசோதா” என்றே அழைக்கப்படும். வியப்பளிக்கும் வகையில் இந்த ஆவணம் ‘முன் வரைவு சட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்வரைவுச் சட்டத்தின் பிரிவு 19 துணைப்பிரிவு (1) ல், பிரிவு 20-ல் துணைப்பிரிவு (7) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரிவு 20-ல் இருப்பதோ 5 துணைப் பிரிவுகள்தான். எவ்வளவு அவசர கதியில் இந்தப் பிரச்சனை கையாளப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு இது ஒரு சான்றாகும். (நூலிலிருந்து பக்.11-12)

நூல்:கல்வி : சந்தைக்கான சரக்கல்ல
தொகுப்பு: பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
இணையம்:thamizhbooks.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: udumalai

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க