தராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புற குழந்தைகள் பாதி நாளை பள்ளியிலும் மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.

அதாவது, கோவிலில் பணியாற்றுபவர் குழந்தை கோவிலிலும் விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும் தோட்டியின் மகன் அந்தக் கலையைக் கற்பதிலும் மீதி நாளை செலவிடலாம்.

‘குலக்கல்வித் திட்டம்’ என இதனைப் பெயரிட்டு, தி.க., தி.மு.க. போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இது மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது. இந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான, மிகப் பெரிய போராட்டங்கள் மாகாணத்தில் நடக்க ஆரம்பித்தன.

இதற்கு ஒரு வருடத்திலேயே ராஜாஜியின் அரசு வீழ்ந்தது. அதற்குப் பிறகு அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவே முடியவில்லை. ஆனால், இந்தச் சர்ச்சையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணரல்லாதோர் எழுச்சிக்கான காலம் துவங்கியது. இதன் உச்சமாக காமராஜர், கட்சியின் தேசியத் தலைவராக, கிங் மேக்கராக உயர்ந்தார்.

ராஜாஜி ஜாதியைக் காப்பாற்றத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாரா எனச் சிலர் கேட்கக்கூடும். அவர் என்ன நினைத்தார் என யாருக்குத் தெரியும்? அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வைத்துத்தான் இது குலக்கல்வித் திட்டம் எனக் குறிப்பிடப்பட்டது.

படிக்க :
கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !
“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

பெரும் ஆதாரங்களைத் திரட்டி இந்த வரலாற்றை, ஒரு சிறிய புத்தகமாக முன்வைத்திருக்கிறார் டி. வீரராகவன். புத்தகத்தின் தலைப்பு Half a Day for Caste: Education and Politics in Tamilnadu (1952-55). நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிகாட்டுகிறது நூல்.

புத்தகத்தின் ஆசிரியர் டி. வீரராகவன் (1958-2009) சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர். சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு என்ற அற்புதமான ஆய்வுநூலை எழுதியவர். வீரராகவன் ஒரு இடதுசாரி என்பதை மனதில் வைத்து, இந்த நூலை அணுக வேண்டும்.

இந்த நூலை எடிட் செய்திருப்பவர் வரலாற்றாசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி. ஒரு விரிவான, அட்டகாசமான பதிப்புக் குறிப்பையும் எழுதியிருக்கிறார். முன்னுரை எழுதியிருப்பது கோபால்கிருஷ்ண காந்தி.

இவை எல்லாம் சேர்ந்தே 165 பக்கங்கள்தான். விலை ரூ. 250 ரூபாய். இப்போதே பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து புத்தகங்களை அனுப்புவார்களாம்.

நூலை பதிவு செய்வதற்கான இணைப்பு : Half a Day for Caste: Education and Politics in Tamilnadu (1952-55)

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன் முகநூல் பதிவிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க