ந்துமத புராண புரட்டுகளை அறிவியல் என மேடை போட்டு முழங்கிய மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு, புராண புரட்டுகளை கற்பிப்பதற்கென்று ‘வேத கல்வி’ என்ற  குழுமத்தை ஏற்படுத்தப்போவதாக அறிவித்தது.  ஆயுர்வேத மோசடி சாமியார் ராம்தேவை இதன் தலைவராக மோடி அரசு தேர்வு செய்ய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வேத கல்வியை பிரபலப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ‘மகரிஷி சந்திபானி ராஷ்டிரிய வேதவித்யா பிரதிஷ்தான்’ என்ற குழு அமைக்கப்பட்டது.  ஐந்து நபர்கள் அடங்கிய இந்தக் குழுவின் தலைவராக பிரகாஷ் ஜவடேகர் உள்ளார்.  இந்தக் குழு தனியார் ஸ்பான்சர்களிடம் ‘வேத கல்வி’ பொறுப்பை ஒப்படைக்கும் பணியைச் செய்யும்.

நண்பேண்டா….!

மேற்கண்ட குழு வெளியிட்டிருந்த விண்ணப்பத்துக்கு ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம் உள்ளிட்ட மூன்று அமைப்புகள் ஆர்வம் தெரிவித்திருந்தன.  மூவரில் பதஞ்சலி யோகா பீடம் ரூ. 21 கோடி தரவிருப்பதாகவும், கட்டமைப்பு மற்றும் தலைமை இடத்துக்காக அடிப்படை வேலைகளை செய்யத் தயாராக உள்ளதாக விண்ணங்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்த நேஷனல் புக் டிரஸ்டின் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளார்.

மூவரில் ராம்தேவ் மட்டுமே அதிகத் தொகையை வேத கல்விக்காக செலவிட ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. பதஞ்சலி யோகா பீடத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,  “வேத கல்வி குழுமத்தை அமைப்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.  கல்வி என்பது உயிர் எழுத்துக்களை கற்பதல்ல. மாணவர்கள் இந்திய நெறியையும் கலாச்சாரத்தையும் மதிப்பையும் கற்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே இதுபோன்ற ஆச்சாரியகுலத்தை நடத்திவருகிறோம்” என்கிறார்.

வேத கல்வி, சமஸ்கிருத கல்வி, சாஸ்திரங்க, தரிசனங்கள் உள்ளிட்ட ‘இந்திய பாரம்பரிய அறிவை’ தரத்துடன் அளிக்கும் பொருட்டு மோடி அரசு ’பாரதிய சிக்‌ஷா போர்டு’ என்ற திட்டத்தை அறிவித்தது.  பாடத்தை உருவாக்கி, தேர்வுகளை வைத்து, சான்றிதழ்களை இது வழங்கும். வழக்கொழிந்துபோன குருகுலங்கள், பாடசாலைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்துத்துவத் திணிப்புகளை செய்யும் நவீன ‘ஆஷ்ரம்’ பள்ளிகளிலும் இந்தத் திட்டம் செயலுக்கு வரும்.

படிக்க:
வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் !
புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ? தோழர் கணேசன்

இது நடைமுறைக்கு வரும்போது, ஹரித்துவாரில் உள்ள ராம்தேவின் ஆச்சார்ய குலம், ஆர்.எஸ்.எஸ்.-ன் வித்யா பாரதி பள்ளிகள், ஆர்ய சமாஜம் இயக்கும் பள்ளிகள் பயன்பெறும். அதாவது, பனிரெண்டாம் வகுப்பு ‘வேத கல்வி’ பாடத்திட்டம் படிப்பதை அங்கீகரிக்கும்!

ஐந்தாண்டு காலமும் மோடி கும்பல் அவிழ்த்துவிட்ட புராண புரட்டு அறிவியல் கதைகளை உலகமே காறித் துப்பியது.  அடிப்படைவாதிகளுக்கு அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லை. இந்நிலையில், எந்த சாஸ்திரங்கள் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படித்தால் தீட்டு என சொன்னதோ அதே ‘பாரம்பரியத்தை’ மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறது இந்துத்துவ அரசு. உடனடியாக இவர்களை அகற்றாவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குலக்கல்வி முறை நடைமுறைக்கு வரும் சாத்தியங்களும் இருக்கின்றன.


கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்


இதையும் பாருங்க…
நாமக்கட்டி ஆளப் போகுது, ஏ உசாரு… நாட்டப் புடிச்சி ஆட்டப் போகுது!