privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் !

வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் !

-

மஸ்கிருதத்தை முதன்மையான மொழியாக முன்னிறுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 13 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. அதன் தலைவராக என்.கோபால்சாமியை (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், தே.மு.கூ-வின் முந்தைய ஆட்சியில் கலாச்சாரத்துறை, உள்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர்) நியமித்திருந்தனர்.

மோடி
சி.பி.எஸ்.இ.-க்கு இணையான வேதக் கல்வி வாரியம் என்ற அமைப்பை உருவாக்கிய நரேந்திர மோடி.

இக்கமிட்டி தனது அறிக்கையை பிப்ரவரி மாதம் 17ம் தேதி ”சமஸ்கிருத வளர்ச்சிக்கான நோக்கு மற்றும் திட்டவரைவு – பத்தாண்டு கால முன்னோக்குத் திட்டம்” (Vision and Roadmap for the Development of Sanskrit – Ten year Perspective Plan) என்ற தலைப்பிலான அறிக்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்தது. இதில் சமஸ்கிருதத்தையும் வேதங்களையும் வளர்ப்பதற்கும், அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்குமான வழிமுறைகளையும் திட்டங்களையும் தொகுத்தளித்துள்ளது.

இக்கமிட்டியின் நோக்கம்:

1. தற்போது நடைமுறையிலுள்ள சமஸ்கிருத மற்றும் வேதக் கல்வியை ஆய்வு செய்வது.

2. பள்ளிக்கல்வியிலும் உயர் கல்வியிலும் பயிற்றுவிக்கப்படும் சமஸ்கிருத பாடத்தின் தன்மையில் என்னென்ன வழிகளில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்று ஆராய்வது.

3. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சமஸ்கிருத மொழி வளர்ச்சி அடைவதற்கான தொலைநோக்குத் திட்டம் மற்றும் செயல் திட்டங்களைப் பரிந்துரைப்பது.

4. நவீன தொழில்நுட்பம் மற்றும் வழிகளின் துணையோடு சமஸ்கிருத கல்வியைப் பரப்புவதற்கான வழிகளைப் பரிந்துரை செய்வது.

கமிட்டி உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் சிலர்:

1. என். கோபால்சாமி: முன்னாள் தேர்தல் ஆணையர். 1992-2004 காலத்தில் கலாச்சாரத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவின் அங்கமான விவேகானந்தா கல்விச் சங்கத்தின் (Vivekanandha Educational Society) தலைவராக உள்ளார். விவேகானந்தா கல்விச் சங்கம் சென்னையை சுற்றிய பகுதிகளில் சுமார் 20 பள்ளிகளை நடத்தி வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ்-இன் கல்விப் பிரிவான வித்யா பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமைப்பாகும். மேலும் இவர் ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் எனும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார். சமஸ்கிருதம் மற்றும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதே / வெளிக்கொணர்வதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். சமஸ்கிருத வளர்ச்சி அறக்கட்டளையின்(Sanskrit Promotion Foundation) அறங்காவலர் (Trustee). வேதங்கள் மற்றும் பழைய இந்து இலக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ – UNESCO) 50 மில்லியன் டாலர் (300 கோடி ரூபாய்கள்) தொகையை வழங்கியது. உதவித் தொகை பெறுவதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

education-policy-sanskrit-committee
மைய அரசால் அமைக்கப்பட்ட சமஸ்கிருத வளர்ச்சிக்கான குழுவின் உறுப்பினர்கள் (இடமிருந்து) முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, டி.சி.எஸ். நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமதுரை, முனைவர் பிபேக் தேப்ராய், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் வேத் பிரகாஷ், சிறீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வ.குடும்ப சாஸ்திரி, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் முனைவர் அனில் சகஸ்ரபுத்தே, நரேந்திர மோடியின் யோகா குரு நாகேந்திரா.

2. வ.குடும்ப சாஸ்திரி: ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். சமஸ்கிருத ஆய்வுகளுக்கான சர்வதேச சங்கம் (International Association of Sanskrit Studies) அமைப்பின் தலைவராக உள்ளார். தேசிய சமஸ்கிருத நிறுவனம் (ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான்) என்ற அமைப்பின் முன்னாள் துணைவேந்தர்.

3. ராமதுரை: தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill Development Corporation – NSDC), மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை (National Skill Development Agency – NSDA) ஆகியவற்றின் தலைவர். டி.சி.எஸ் (Tata Consultancy Services) என்ற ஐ.டி. நிறுவனத்தின் துணைத்தலைவர்.

4. முனைவர் பிபேக் தேப்ராய்: நிதி ஆயோக்(NITI AAYOG)-கின் உறுப்பினர். விவேகானந்தா சர்வதேசஅறக்கட்டளை (Vivekananda International Foundation – VIF) பொருளாதார ஆய்வு மையத்தின் (Centre for Economic Studies) புலத்தலைவர் (Dean).விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை (VIF) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு சிந்தனைக் குழாமாகும்; இந்த சிந்தனைக்குழாம், விவேகானந்தா கேந்திரத்தின் வழிகாட்டலின் கீழ் இந்தியாவின் முன்னணி பாதுகாப்புத்துறை நிபுணர்கள், தூதரக அதிகாரிகள், தொழிலதிபர்கள், கொடையாளிகள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்டது

5. நாகேந்திரா: மோடியின் யோகா குருவான நாகேந்திரா என்பவரின் மாமா, கர்நாடக மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவர். ஸ்வாமி விவேகானந்தா யோக அனுசந்தான சம்ஸ்தான் (Swami Vivekananda Yoga Anusandhana Samsthaan – SVYASA) நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர். வியாஸா (VYASA) என்பது விவேகானந்தா யோக அனுசந்தான சம்ஸ்தான் (Vivekananda Yoga Anusanthana Samsthana) என்ற பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோயிலில் பதிவு பெற்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். வியாஸாவின் (VYASA) அலுவலகங்கள் பெங்களூருவில் (Eknath Bhavan in Bengaluru city) உள்ளது. தங்கும் விடுதியுடன் கூடிய கல்வி வளாகம் (Residential Campus – Prashanthi Kutiram) பெங்களூரிவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் விவேகானந்தா கேந்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

ஸ்மிருதி இராணி
மத்திய அரசின் பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாகத் திணித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி.

6. சாமு கிருஷ்ண சாஸ்திரி: மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மொழி ஆலோசகர். சமஸ்கிருத பாரதி அமைப்பின் பொதுச்செயலாளர். இவர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மானிய மற்றும் உதவிக்குழு (Grant and Aid Committee) உறுப்பினராக இருந்துள்ளார். மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (Central Board of Secondary Education – CBSE) கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலிலும் (NCERT), மாநிலக் கல்விக்குழுக்களிலும் சமஸ்கிருதக் கல்வி தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

7. பேராசிரியர் வேத் பிரகாஷ்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் (Chairman)

8. முனைவர் அனில் சகஸ்ரபுத்தே: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் (AICTE) தலைவர்

சமஸ்கிருத வளர்ச்சி அறக்கட்டளை (Sanskrit Promotion Foundation), என்ற அமைப்பில் பொறுப்பு வகிப்பவர்கள்தான் இக்கமிட்டி அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.

கமிட்டியின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

சமஸ்கிருதம் இந்தியாவின் ஆன்மா மற்றும் அறிவு. இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் வெளிப்பாடு. சமஸ்கிருத மொழி மற்றும் அதன் இலக்கியங்கள், அறிவியல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, மருத்துவம், கணிதவியல், மேலாண்மை, விவசாயம், வாணிபம், வானவியல் என அனைத்துத் துறைகளின் அறிவையும் உள்ளடக்கிய அறிவுத் தொகுப்பாகும் என்ற அடிப்படையிலேயே இவ்வறிக்கை ஆரம்பிக்கிறது.

கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளுள் சில:

சமஸ்கிருத மேம்பாட்டிற்கான திட்டங்கள் மற்றும் வழிமுறைகளாக பள்ளிக்கல்வி, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சி என அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதத்தை பாடமாக்குவது, குறிப்பாக 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்குவது, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சமஸ்கிருத ஆசிரியரை நியமிப்பது, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கொடுப்பது, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.இ.ஆர் (Indian Institute of Scientific Education Research – IISER), மத்திய பல்கலைக்கழகங்கள், என்.ஐ.டி. (National Institute of Technology – NIT), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் சமஸ்கிருதத்திற்கான தனிப்பிரிவுகள் துவங்குவது

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), இந்திய தத்துவஞான ஆராய்ச்சிக் கழகம் (ICPR), இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் (ICHR), இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ICSSR), இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU), போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்திற்கான தனிப்பிரிவை உருவாக்கி, அதன் வாயிலாக சமஸ்கிருதத்தை வளர்ப்பது, அதற்காக நிதி ஒதுக்குவது, இந்தியா முழுமைக்கும் உள்ள சமஸ்கிருத மற்றும் வேதக் கல்வியை நிர்வகிப்பது, சான்றிதழ் வழங்குவது, பாடத்திட்டத்தை தயாரிப்பது என மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ – CBSE) போன்ற ஒரு நிறுவனத்தை ”வேத மற்றும் சமஸ்கிருத இடைநிலைக் கல்விக்கான மத்திய கல்வி வாரியம்” (Central Board of Veda and Sanskrit Secondary Education) ஒன்றை உருவாக்குவது, சமஸ்கிருத மற்றும் வேத பள்ளி, கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, தேர்வு நடத்துவதற்கு உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி சந்திபனி ராஷ்டிரிய வேத சமஸ்கிருத வித்யா பரிஷத் நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்குவது, சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பது, சமஸ்கிருத பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் (என்.ஜி.ஓ-க்களுடன் சேர்ந்து) நவீன முறைகளைக் கொண்டு எளிமையாக்குவது, பாடங்களை மின்னணு (electronic) வடிவில் மாற்றுவது (வீடியோ, ஆடியோ, டிஜிட்டல்), பாரிய இணையவெளி திறந்தநிலை கல்வி (Massive Onlne Open Cources – MOOCS) வாயிலாக சமஸ்கிருத கல்வியை வழங்குவது, குருகுல முறையைக் கடைப்பிடிப்பது, குரு-சிஷ்ய உறவுகளைப்பற்றி சொல்லிக் கொடுப்பது, பி.எட்., (B.Ed) மற்றும் எம்.எட்., (M.Ed)பட்டயப் படிப்புகளை சமஸ்கிருதத்தில் வழங்குவது என ஏராளமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இந்தப் பரிந்துரைகளை மோடி அரசு அமுல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

education-policy-rsyf-demo
வேதக் கல்வி வாரியம் அமைக்கும் மைய அரசின் முடிவைக் கண்டித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விருத்தாசலத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

1. ஆரம்பக் கல்வி முதல் ஐ.ஐ.டி.வரை சமஸ்கிருதத் திணிப்பு

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மனிதவள மேம்பாட்டு ஆணையம் அனைத்து ஐ.ஐ.டி.க்களுக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியது. அனைத்து ஐ.ஐ.டி. நிறுவனங்களிலும் சமஸ்கிருதத்தை ஒரு விருப்பப் பாடமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டுமென்று அந்த அறிக்கை கூறுகிறது. ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப் பாடம் படிப்பதற்கான காரணமாக ”சமஸ்கிருத நூல்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்” என்று அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பரிந்துரை கோபால்சாமி அறிக்கையில் பக்கம் 15-ல் உள்ளது.

வரும் கல்வியாண்டு (2016-17) முதல் மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும். மேலும், வரும் ஆண்டுகளில் 8-ம் வகுப்பிற்கு மேல் 12-ம் வகுப்புவரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம்” என்று ஏற்கெனவே ஸ்மிருதி இரானி கூறியிருக்கிறார். இந்தக் கருத்தே கோபால்சாமி அறிக்கையின் பரிந்துரையாக பக்கம் 10-11ல் உள்ளது.

2. வேதக்கல்விக்கு தனி கல்வி வாரியம்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சூழ்ச்சி

வேதக்கல்வி வாரியம் (Vedic Education Board) போன்ற அமைப்பை உருவாக்க பாபா ராம்தேவ் மார்ச் மாதம் ஒரு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியிருந்தார். ஏப்ரல் மாதத்தில் மோடி தலைமையில் நடைபெற்ற அவ்வறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டத்தில் தனியார் கல்வி வாரியம் துவங்குவதற்கு பதிலாக அரசே வேதக்கல்வி வாரியம் (Vedic Education Board) நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மே மாதம் இறுதி வாக்கில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த வாரியம் சி.பி.எஸ்.இ போன்றே இயங்கும் என்று கூறியது.

வேதக்கல்வி வாரியம் (Vedic Education Board) தொடர்பான பரிந்துரை கோபால்சாமி அறிக்கையில் பக்கம் 21ல் உள்ளது.

3. எங்கும், எதிலும் சமஸ்கிருதம்-வேத கலாச்சாரம்

ஜூன் மாதம் 8-ம் தேதி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில் இந்தியை அரசு அலுவலகங்களில் பயன்பாட்டு மொழியாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்துவருகிறது. வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்தி வழக்கு மொழியாக இல்லை. இந்தியை வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் வழக்கு மொழியாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனக் கூறியிருந்தார். மேலும் இந்தியை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்வதாக ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கூறியிருந்தனர்.

ஆரிய-பார்ப்பன கட்டுக்கதைகளே அறிவியல் தத்துவங்களாய்; ‘அவாளே’ அறிவியல் அறிஞர்களாய்…:

இவர்கள் முன்னிறுத்தும் இந்தி மொழி, உழைக்கும் மக்கள் பேசுகின்ற இந்தி கிடையாது. இது சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியாகும். மேலும் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள் அனைத்துமே சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலம் மட்டுமல்லாது, இந்தியிலும் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்விப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், அந்த மாணவர் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற நிர்வாக நடைமுறையை பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். மீண்டும் இப்போது சமஸ்கிருதம், ஐ.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைகிறது. இனி, ஐ.ஐ.டி.யில் விண்ணப்பிப்பதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை கூட உருவாகலாம். ஏற்கனவே கல்விக் கட்டணத்தை 8 லட்சமாக உயர்த்தியதன் மூலம் பெரும் பணக்காரர்கள் மட்டுமே ஐ.ஐ.டி.யில் படிக்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது; தற்போது சமஸ்கிருதமும் ஒரு அளவுகோலாகச் சேர வாய்ப்புள்ளது.

3. புதிய கல்விக் கொள்கை 2016 (NEP 2016): இந்துத்துவத்தின் கள்ளக் குழந்தை

மத்திய மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையும் (NEP 2016) மேற்கொண்ட நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள பொருத்தமான சில பகுதிகள்:

6.13.19 மக்களின் வாழ்க்கை, சடங்குகள், விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் பிரிக்க இயலா வண்ணம் சமஸ்கிருத மொழி இணைந்துள்ளது; இந்தியாவின் வளமான கலாச்சார, தத்துவ, கலை மற்றும் அறிவியல் மரபுகளை அறிந்து கொள்ளும் ஒரு சாதனமாக சமஸ்கிருதம் உள்ளது; ஆகையால் சமஸ்கிருதக் கல்வியை (ஆய்வை) மிக அழுத்தமாக வலியுறுத்த வேண்டியுள்ளது

6.13.20 பிற இந்திய மொழிகளின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் சமஸ்கிருதத்திற்குரிய சிறப்பு முக்கியத்துவத்தையும், நாட்டின் கலாச்சார ஒற்றுமைக்கு சமஸ்கிருதம் ஆற்றியுள்ள தனிச்சிறப்பான பங்கினையும் கருத்தில் கொண்டு, பள்ளி – கல்லூரிகளில் சமஸ்கிருதம் கற்பித்தலுக்கான வசதிகள் மிகவும் தாராளமாக வழங்கப்படும்.

6.13.21 சில மாநிலங்களில் சமஸ்கிருதம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் ஏற்கனவே கட்டாயப் பாடமாக கற்றுத் தரப்படுகிறது. தொடக்க அல்லது மேல்நிலைப் பள்ளிகளில் பொருத்தமான கட்டத்தில் சமஸ்கிருதத்தை ஒரு தனிப்பாடமாக அறிமுகப்படுத்தலாம். சமஸ்கிருதத்தை இடைநிலைக் கல்வியில் கூடுதல் விருப்பப் பாடமாகவும், மேல்நிலைக் கல்வி அளவில் பொருத்தமான தேர்வுப் பாடமாகவும் விருப்பப்படும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் திறந்தநிலைப் பாடமாகவும் சமஸ்கிருதக் கல்வி வடிவமைக்கப்பட வேண்டும்.

(புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வெளியிட்டுள்ள “தமிழையும் தமிழின அடையாளங்களையும் துடைத்தொழிக்கப் படையெடுத்து வரும் ஆரிய – பார்ப்பனியத்தை முறியடிப்போம்!” – என்ற பிரசுரத்திலிருந்து…)
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க