இங்கே இவ்வளவு பெரிய கூட்டத்தில் பேசுவதென்றால், சற்றே பதற்றமாக உணர்கிறேன். ஆனால், உங்கள் எதிரில் நிற்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தூத்துக்குடியில் வீரஞ்செறிந்த ஒரு போராட்டத்திற்குப் பிறகு மக்கள் அதிகாரம் இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறது. நீங்கள் உயிர் கொடுத்துப் போராடியிருக்கிறீர்கள். இன்றும் பலருக்கு எதிரான வழக்குகள் தொடர்கின்றன.
நீங்கள் ஸ்டெர்லைட் குழுமத்தை எதிர்த்துப் ? போராடினீர்கள். அதன் தாய்க் குழுமம் வேதாந்தா என்பது இந்துத் தத்துவத்தின் தொன்மையான ஒரு மரபின் பெயரில் அமைந்திருக்கின்ற ஒரு பன்னாட்டுக் குழுமமாகும். அந்தப் பெயரேகூட இன்று நாம் எப்பொருள் குறித்துப் பேசப் போகிறோமோ, அந்தப் பொருளை நமக்கு நினைவுபடுத்துகிறது. கார்ப்பரேட் முதலாளித்துவமும் இந்து தேசவெறியும் இணைந்த ஒரு பெயர்தான் வேதாந்தா என்பது.
நாம் ஓர் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். முறைப்படி இந்த நாட்டை கார்ப்பரேட் இந்து தேசம் என்று அறிவிக் கக்கூடிய ஆபத்து எழுந்திருக்கிறது.
1950-ஆம் ஆண்டு நமது அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். கூறியது: “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அயல்நாட்டுத் தன்மையுள்ளது; மனுஸ்மிருதி தான் இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும்.” அந்த ஆர்.எஸ்.எஸ். தான் இப்போது உண்மையில் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்று அவர்கள் அந்தக் கனவை மெய்ப்படச் செய்யும் நிலையை நெருங்கி வந்திருக்கிறார்கள். இது நமக்கு வந்திருக்கின்ற பெரிய ஆபத்து. நம்மில் ஒவ்வொருவரும் வரவிருக்கும் தேர்தலில் ஒன்றுபட்டு நின்று, அந்த ஆபத்து மெய்ப்பட்டுவிடாமல் தடுக்கவேண்டிய கடமை இருக்கிறது. (தேர்தல் குறித்த மக்கள் அதிகாரத்தின் அறிக்கை தனியே வெளியிடப்பட்டிருக்கிறது.)
இந்துத்துவ ஆற்றல்கள் தேர்தல்களில் தோற்றாலும்கூட, இந்த ஆபத்து தொடரும். ஏனென்றால், அவர்கள் இந்த நாட்டில் அநேகமாக ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளேயும் ஊடுருவியிருக்கிறார்கள். நிறுவனங்களில் மட்டுமல்ல, பொதுமக்களின் சிந்தனைகளில், எண்ணத்தில் அவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். நம்மை கார்ப்பரேட் பெருங்குழுமங்களும் வன்முறைக் கும்பல்களும் மாறி மாறி ஆட்சி புரிகின்றன.
இந்த நிலை எப்படி வந்தது என்பது குறித்து ஒருசில வார்த்தை சொல்ல வேண்டும். இதற்கு ஒரு நீண்ட வரலாறு இருப்பது உண்மைதான். ஆனால், அண்மைக் காலத்தில் இது எப்படி வந்தது என்றால், 80-களின் பிற்பகுதியில், 90-களின் தொடக்கத்தில் காங்கிரஸ் அரசாங்கம் இரண்டு பூட்டுக்களைத் திறந்துவிட்டது.
படிக்க:
♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்
♦ தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் !
முதல் பூட்டு பாபர் மசூதியின் பூட்டு. சர்ச்சைக்குரிய இடம் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அதன் பூட்டைத் திறந்துவிட்டார்கள். இரண்டாவது பூட்டு, இந்தியச் சந்தைக்குப் போட்டிருந்த பூட்டு. பாதுகாக் கப்பட்டிருந்த இந்தியச் சந்தை திறந்துவிடப்பட்டது. பொருளியல் புதுத்தாராள அடிப்படைவாதம் தலையெடுத்தது. அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கையின் அடிப்படைவாதமாகவே இரண்டும் அமைந்தன. முதலாளித்துவத்தைப் பொருத்தவரை, அவர்களுடைய சந்தைக் கோட்பாடும் அவர்களுக்கு ஒரு மதக் கோட்பாடு போன்றதுதான். இதற்கு இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதம் என்ற ஒன்று புனையப்பட்டது. அந்தப் பயங்கரவாதம் ஒரு பக்கம் மாவோயிச பயங்கர வாதம் என்றும் மறுபக்கம் இசுலாமிய பயங்கரவாதம் என்றும் முத்திரையிட்டு அழைக்கப்பட்டது.
இவற்றைக் காட்டி அரசே இராணுவமயமாக்கப்பட்ட போலீசு அரசாக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது இந்தியாவில் நாம் காண்பது என்ன? காஷ்மீரில் இராணுவமே ஒரு போலீசைப் போல ஆகிவிட்டது. அதாவது, அன்றாட நிர்வாகத்தையே அங்கு இராணுவம்தான் நடத்துகின்றது. இன்னொருபுறம் சத்தீஸ்கர் போன்ற இடங்களில் போலீசு படையே இராணுவம் போல மாறிவருகிறது. அது உள்ளூர் மக்களையே எதிரி நாட்டினரைப் போல நடத்துகிறது.
இந்து அடிப்படைவாதமும் புதுத்தாராளவாதப் பொருளியல் அடிப்படைவாதமும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதைப் பல ஆண்டுகளாகவே எங்களில் சிலர் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம். அவ்வப்போது இவ்விரு தரப்பினரும் முரண்பட்டு விவாதிப்பதைப் போலத் தோன்றியபோதிலும், இரு தரப்புமே நண்பர்கள்தான்.
மக்களுக்கு இதைப் புரிந்துகொள்வது இடர்ப்பாடாக இருந்தது. வெவ்வேறு வழிகளில் மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். தலித்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், ஆதிவாசிகள் என்று எல்லோரும் போராடினார்கள். கம்யூனிஸ்டுகள் சுரண்டலுக்கு எதிராகப் போராடினார்கள். சிறுபான்மையினர் பெரும்பான்மை ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடினார்கள். தலித்துக்கள் தீண்டாமைக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடினார்கள். ஆனால், இந்தப் போராட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இப்படி அனைவரும் தனித்தனியே பிரிந்து கிடந்ததன் விளைவாக பாசிஸ்டுகள் எளிதில் அதிகாரத்துக்கு வர முடிந்தது.
இன்று நாம் பொதுவாக பாரதிய ஜனதாவிற்கும், குறிப்பாக மோடிக்கும் நன்றி சொல்ல வேண்டும். சாதியம், வகுப்புவாதம், முதலாளித்துவம், பெருங்குழும ஆதிக்கம் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என அவர் நமக்கு உணர்த்தியிருக்கிறார். அந்த முறையில் அவருக்கு நாம் நன்றி சொல்லுவோம்.
இஸ்லாமியர்கள், தலித்துக்கள், ஆதிவாசிகள் ஆகியோர் மீதான தாக்குதல் மிக அப்பட்டமாகவும் கொடூரமாகவும் நேரடித் தாக்குதலாகவும் நடத்தப்பட்டுள்ளது. வன்கும்பல்கள் தெருவில் கண்டவர்களை அடித்துக் கொலை செய்கின்றன. இசுலாமிய பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் என்பதையும் தாண்டி, வேறு பலரையும் அவர்கள் மோதல்களில் சுட்டுக் கொல்கிறார்கள். ஆதிவாசிகள்கூட மாவோயிஸ்டுகள் எனக் குறிவைக்கப்படுகிறார்கள். இன்னமும் நூற்றுக்கணக்கானவர்கள் சத்தீஸ்கரிலும் ஜார்கண்டிலும் ஒடிசாவிலும் நாட்டின் பல பகுதிகளிலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது அந்தப் பட்டியலில் தலித்துக்களையும் இணைத்துவிட்டார்கள். பல செயல்வீரர்கள் அந்தப் பெயரைச் சொல்லிக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அறிவாளிகள், பத்திரிகையாளர்களைக் கொலை செய்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்கிறோம். நாம் என்ன புத்தகங்களை எழுத வேண்டும், என்ன திரைப்படங்களை எடுக்க வேண்டும், என்ன திருவிழாக்களைக் கொண்டாட வேண்டும் என்பதையெல்லாம் ஒரு வன்முறைக் கும்பல் தெருவிலே நின்று கொண்டு தீர்மானிக்க முயல்கிறது.
படுகொலைகள், மோதல் கொலைகள், வன்முறைக் கும்பலைக் கொண்டு அடித்துக் கொலை செய்வது, சிறையில் அடைப்பது இவைகள் மட்டும்தான் தாக்குதல் வடிவங்கள் அல்ல. நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. நீதிமன்றங்கள் தாக்கப்படுகின்றன, மருத்துவமனைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.
பொருளாதாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். பணமதிப்பு நீக்கம், சரக்கு சேவை வரி என்பனவற்றின் தாக்குதல்கள், வங்கிகள் மீதான தலையீடு, ஆயுதப்படைகள், உளவுப்படைகள், ஊடகங்கள், உழவர்கள், நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பிரிவு மக்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் பல்கலைக்கழகங்களையும் கல்வித்துறைகளையும்கூட விட்டுவைக் கவில்லை. அவர்கள் அறிவாளிகளைக் கண்டு மட்டும் அஞ்சவில்லை, அறிவைக் கண்டும் அச்சப்படுகிறார்கள். ஆகவேதான், அறிவாளிகளைத் தாக்குவதோடு, அறிவையும் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். பாசிசத்தின் அடித்தளமே மக்களின் மந்த புத்திதான். மக்களை மடையர்களாக மாற்ற, அறிவில்லாதவர்களாக மாற்றுவதற்கென்றே அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். அதற்கான நிறுவனங்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்திய அறிவியல் பேராயம் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஊடுருவுகிறார்கள். பாசிசத்திற்கும் சாதியத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கல்வியைத் தனியார்மயப்படுத்துவது, வரலாற்றைத் திருத்தி எழுதுவது, கல்வியை மீள் பார்ப்பனியமாக மாற்றுவது, ஏற்கெனவே இடஒதுக்கீட்டினால் கிடைத்திருக்கிற நன்மைகளை இல்லாதொழிப்பது, இவையெல்லாமே இணைந்து வருகின்றன.
பாசிசம் இவை அனைத்தையும் தொடர்ந்து செய்கிறது. இதனால் பார்ப்பனர்கள், மேல் சாதியினர் கல்வியில் மீண்டும் முன்னுரிமை பெறுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வித் தாழ்வாரங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள். அகக்கட்டமைப்பைத் தனியார்மயப்படுத்துகிறார்கள், குடிக்கிற நீர், பயன்படுத்துகின்ற மின்சாரம், சுரங்கம் என்று எல்லாமே தனியார் கைக்குப் போகின்றன. இந்த வகையில் பார்ப்பனியம் புதுப்பிக்கப்படுகிறது, பிரபுத்துவம் மீள்கட்டுமானம் பெறுகிறது.
இந்திய அரசு எப்படிப்பட்ட குதர்க்கமான வழியில் செயல்படுகிறது என்பதற்கு அண்மையில் ஒரு சான்று கிடைத்திருக்கிறது. சூழலியல் அரசுசாரா அமைப்பு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கின் பெயரில் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு என்ன என்று பாருங்கள். கிட்டத்தட்ட இருபது இலட்சம் ஆதிவாசிகளை அவர்கள் வாழக்கூடிய இடங்களிலிருந்து உடனே வெளியேற்ற வேண்டுமென்று உச்சநீதி மன்றம் உத்தரவிடுகிறது.
இதற்கு அவர்கள் சொல்லியிருக்கிற காரணம் என்னவென்றால், நாட்டில் காடுகள் மிகக் குறைவாக இருக்கின்றன. காடு இல்லையென்றால் மழை பெய்யாது, மழையில்லை என்றால் தண்ணீர் கிடைக்காது. ஆகவே, இவர்களையெல்லாம் வெளியேற்றிக் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. ஆனால், இது எந்த வகையான தர்க்கம்? அணைகளையும் சுரங்கங்களையும் நீங்கள் அமைத்தபோது ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்தீர்களே, அப்போது உங்கள் புத்தி எங்கே போனது? தலித்துகளையும், ஆதி வாசிகளையும் அவர்களின் தாயகத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, அணைகளையும் சுரங்கங்களையும் அமைத்தீர்களே, அப்போது ஏன் இந்த எண்ணம் வரவில்லை?
உங்களுடைய அந்த வளர்ச்சிக்கு அன்று பழங்குடி மக்கள் தம் காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அந்த வளர்ச்சியின் விலை காடுகள் அழிப்பு. இப்போது காடுகளைக் காப்பாற்றும் பொருட்டும் அவர்களையே விலை கொடுக்கச் சொல்கிறீர்கள்.
எல்லாம் எதன் பெயரால்? வளர்ச்சி என்ற பெயரால்! என்ன வளர்ச்சி அது? அனைவரோடும் சேர்ந்த அனைவருக்குமான வளர்ச்சி (சப் கா சாத், சப் கா விகாஸ்) என்று கூறுகிறீர்கள். ஆனால், அதன் மூலம் நீங்கள் கொண்டுவந்து சேர்த்திருப்பது பேரழிவுதான். நர்மதை அணை கட்டப்பட்டபோது ஏற்பட்ட பேரிடரைப் போன்று பல பேரிடர்களைத் தோற்றுவித்துள்ளீர்கள்.
இருபது இலட்சம் பழங்குடி மக்கள் அவர்கள் தாயகத்திலிருந்து வெளியில் துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு வடகிழக்கு மாநிலத்தில் இருபது இலட்சம் மக்கள் நாதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள், அறிவிக்கப்பட இருக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகளைத் தோற்றுவிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அதற்கு மாறாக வேலையில்லாத் திண்டாட்டம் விண்ணில் சீறிப் பாயக்கூடியதாக உயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. சாதாரணத் தொழிலாளர்களுடைய கூலி குறைந்து போய் விட்டது, அதிகரிக்கவில்லை.
பணமதிப்பு நீக்கமும் சரக்கு சேவை வரியும் சிறு தொழில், வணிகம் அனைத்தையும் அழித்துவிட்டன. இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களான ஒரு விழுக்காட்டினரின் கையில் இருக்கிற செல்வமும் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினரின் கையில் இருக்கும் செல்வமும் சரிசமமாக இருக்கிறது.
2017-ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகிய இருவருடைய செல்வம் 125 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. பன்னாட்டு ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் அளித்திருக்கின்ற அறிக்கையின்படி, ஐம்பது கோடி மக்களின் செல்வம் ஒன்பது பேருக்குச் சொந்தம். இதுதான் இவர்களுடைய வளர்ச்சிக் கொள்கையின் விளைவு.
வாரிசு அரசியலைக் குற்றஞ்சொல்லிப் பேசுகிறார்கள். காங்கிரசின் வாரிசு அரசியலாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் காணப்படுகின்ற வாரிசு அரசியலாக இருந்தாலும் சரி, இந்த வாரிசு அரசியலை அவர்கள் குறைகூறுகிறார்கள். ஆனால், எந்த வாரிசு அரசியலானாலும் தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும்.
ஆனால், தேர்தலில் போட்டியிடாத ஒரு வாரிசு அரசியல் இருக்கிறது. அதுதான் உண்மையான முதலாளித்துவம். அது வாரிசு முறையில் செயல்படுகிறது. இந்தத் தொழிலதிபர்களின் வாரிசுகள் எந்த முயற்சியும் இல்லாமல், அந்தச் சொத்துகளுக்கும் தொழில்களுக்கும் வாரிசாகிறார்கள். செல்வம் மட்டுமல்ல, ஒவ்வொன்றையும் வாரிசுரிமையாகப் பெறுகிறார்கள். சுரங்கங்கள், அணைகள், பெட்ரோலியம், ஊடகங்கள் எல்லாமே அவர்களுக்கு வாரிசுரிமையாகக் கிடைக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, முகேஷ் அம்பானி கூறியதைப் போல, இன்றைக்குத் தரவுகள், நம்மைப் பற்றிய தகவல்கள் அவர்கள் கைக்குப் போகின்றன. அவைதான் இன்று எண்ணெய்க்கு நிகரான புதிய செல்வம். இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டுதான் அவர்கள் நம்மை உடைத்துப் பிளவுப்படுத்துகிறார்கள். நம்மை ஆள்கிறார்கள், நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள், நம்மைச் சிதைக்கிறார்கள்.
படிக்க:
♦ முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !
♦ Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் !
முகேஷ் அம்பானி என்ற ஒரேயொரு மனிதருடைய செல்வம் என்பது மத்திய, மாநில அரசாங்கங்கள் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவம், நலவாழ்வு, துப்புரவு, தண்ணீர் வழங்குவதற்கான முதலீட்டு, வருவாய்ச் செலவுக்கு சமம். ஒரு நீதிமன்ற உத்தரவைக் கொண்டு இந்தியாவின் இருபது இலட்சம் ஏழை எளிய மக்களுடைய தாயகங்களை உங்களால் பறிக்க முடியுமென்றால், மிகவும் நலிந்த மக்களை உங்களால் ஏமாற்ற முடியுமென்றால், ஏன் ஒன்பது பேரிடம் நீங்கள் இந்த வேட்டையை நடத்தக் கூடாது? ஏன் அவர்கள் மறைத்துவைத்திருக்கிற செல்வங்களை நீங்கள் வேட்டையாடி வெளியே கொண்டுவரக் கூடாது? என்று நான் கேட்கிறேன். ஆனால், அப்படி மனதால் எண்ணிப்பார்ப்பதுகூடத் தெய்வக் குற்றமாகவே கருதப்படுகிறது.
நாம் ஒரு புதிய உலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். தானியங்கி முறையும் செயற்கை அறிவும் இந்தப் புதிய உலகத்தின் அடையாளங்களாகும். மனித உழைப்பு தேவையற்றதாக்கப்பட்டு, எந்திரங்கள் மனிதர்களின் வேலைகளைச் செய்ய வருகின்றன. வேலைவாய்ப்புகள் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், என்ன நடந்தாலும் சரி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த நாட்டில் உயிர் வாழ்வதற்கு, அடிப்படையான ஊதியம் பெறுவதற்கு, உடல்நலம் பேணுவதற்கு, கல்வி பெறுவதற்கு, உணவு பெறுவதற்கு உரிமை வேண்டும். இது அடிப்படை உரிமை. இருப்பதை எடுத்துப் பிரித்துக் கொடு என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாகவே மாற வேண்டும். செல்வத்தைப் பிரித்துக் கொடு, நிலத்தைப் பிரித்துக் கொடு, செல்வாதாரங்களைப் பிரித்துக் கொடு, அனைத்து மக்களிடமும் பங்கிட்டுக்கொடு! இதையே நம் முழக்கமாக்குவோம்.
நாம் புரட்சி என்ற கனவில் இருப்பவர்கள், தொடர்ந்து நாம் அந்தக் கனவைக் கண்டுகொண்டிருப்போம். ஒருபோதும் அந்தக் கனவிலிருந்து வெளியே போகமாட்டோம். ஆனால், இப்போது நாம் சின்னஞ்சிறு கனவுகளையும் காண வேண்டியவர்களாக இருக்கிறோம். அடுத்த சில வாரங்களுக்குள்ளே இந்த பாசிஸ்டுகளைத் தூக்கியெறிவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வரப்போகிறது. அவர்களை நாம் தூக்கியெறிவோம்.
ஆனால், புதிய ஆட்சியும் ஒரு மனித முகத்தைப் மாட்டிக்கொண்டு, இதே தாராளவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும். அன்று அந்த ஆட்சியைப் பார்த்து நாம் சொல்வோம், கோடீஸ்வரர்களின் ராஜ்ஜியத்தைக் கலைத்துப் போடு! இந்த ஆட்சி எந்திரத்தை உடைத்துப் போடு! இதையே நீ தொடர முடியாது என்று புதிய ஆட்சியாளர்களுக்குச் சொல்லுவோம். நமக்கு வேண்டியதெல்லாம் இந்த நாட்டின் செல்வங்கள் அனைத்தும் மக்களுக்குரியவையாக வேண்டும். ஒரு உண்மையான சேமநல அரசு என்பது சொத்துக் குவியலைத் தடுக்க வேண்டும். அனைத்து மக்களிடமும் அனைத்துச் செல்வங்களையும் பகிர்ந்து கொடுப்பதற்காக நாம் தொடர்ந்து போராடவேண்டியுள்ளது, போராடுவோம்.
காஷ்மீர் என்கிற அந்தத் தொடர் சோக நாடகத்தில் கடைசியாக நிகழ்ந்திருப்பது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல். இந்தத் தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்திருக்கிறார்கள்.வருத்தற்குரிய செய்தி என்னவென்றால், பெருங்குழுமங்களின் கையில் இருக்கின்ற ஊடகங்கள் போரைத் தூண்டுகின்றன. நாம் போரின் விளிம்பில் நிற்கிறோம் என்கின்றன. போர் மனநிலையை அவர்கள் வளர்க்கிறார்கள். இந்தப் போர் பாகிஸ்தானுக்கு எதிரான போராக இருக்கலாம், அல்லது அதைவிடவும் அதிக வாய்ப்பு காஷ்மீர் மக்களுக்கு எதிரான போராக இது அமையக்கூடும். அப்படி நிகழுமானால், நாம் இந்த ஒடுக்குமுறை அனைத்தையும் மறந்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் மீது சுமத்தியிருக்கிற கொடிய ஒடுக்குமுறைகளையெல்லாம் நாம் மறக்க வேண்டும் என்பதற்காகவே போர் முழக்கம் எழுப்பப்படுகிறது.
நாம் இப்படி முழங்குவோம். உங்களுடைய கார்ப் பரேட் சமூகப் பொறுப்புணர்வு என்ற கதையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. உங்கள் தான தருமங்கள் தேவையில்லை. வெறும் மனித உரிமைகள் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்கு சமத்துவம் வேண்டும். கவுரவம் வேண்டும். நீதி வேண்டும்.
நன்றி, வணக்கம்.
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |