தீவிரவாத இந்து தேசியவாதத்தை கூர்மையாக்கும் சங்பரிவாரத்தின் பின்னணியில் ஐந்தாண்டுகளாக எதேச்சதிகார ஆட்சியை நடத்தி வரும் நரேந்திர மோடி அரசு, மதச்சார்பற்ற-பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா என்கிற கருத்தாக்கத்தை பலவிதங்களிலும் தீவிரமாக சவால் விடுத்துவருகிறது.

தனது ஆட்சியில் ‘பொருளாதார வளர்ச்சி’ இருக்கும் என வாக்குறுதி அளித்திருந்த மோடியின் ஆட்சியில் நாற்பதாண்டுகளில் இல்லாத கடுமையான வேலையில்லாத் திண்டாட்டமும் தேக்கமடைந்த வளர்ச்சியும் மட்டுமே மிஞ்சியதை இப்போது கண்டுவருகிறோம். ஆனால், எதேச்சதிகார ஆதரவு அலையில் மிதந்துகொண்டிருக்கும் பாஜகவை அசைக்குமா என்பது தெரியவில்லை.

செயல்பாட்டாளர், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனின் Reason என்ற சமீபத்திய ஆவணப்படம் தரும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, ஒரு தேர்தல் தோல்வியால் பாஜகவின் இந்துத்துவ அணிவகுப்பை நிறுத்திவிட முடியாது என்பது தெரிகிறது.

சமீப ஆண்டுகளாக இந்துத்துவத்தின் வளர்ச்சியை அதன் ரத்தம் தோய்ந்த பக்கங்களிலிருந்து ஐந்தாண்டு கால உருவாக்கத்தில், எட்டு பிரிவுகளாக விவரிக்கிறது இந்த ஆவணப்படம். பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரின் படுகொலைகளையும் அவற்றின் பின்னணியில் தீவிரவாத இந்து அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் பங்கையும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முசுலீம்கள் மற்றும் தலித்துகள் மீதான வன்முறை தாக்குதல்களையும் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலை, இன்னும் ஏராளமான  சிறியதும் பெரியதுமான தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள வன்முறைகளைப் பற்றிப் பேசுகிறது இந்த ஆவணப்படம்.

இந்த வன்முறைகள் இந்தியாவின் கூட்டு மனசாட்சியின் மீது செலுத்திய தாக்கத்தை இந்த ஆவணப்படம் தேடுகிறது. இந்துத்துவம் மற்றும் இந்து தேசியவாதம் மக்களிடமும் அரசிடமும் ஆழமாக ஊடுருவி உள்ளன. இதை ஒரே ஒரு தேர்தலால் அழித்துவிட முடியும் என்பதை கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்தின் கரு குறித்து பேசும்போது, பட்வர்த்தன் இப்படி சொன்னார் : “மனிதநேயம் இல்லாதவரைக்கூட இந்தப் படம் அசைத்துவிடும். இது சிறப்பான படமாக்கலால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையானவை; துயரமானவை”.

கேள்வி: படுகொலைகள், பசு தொடர்புடைய வன்முறை, இந்து தீவிரவாதம் மற்றும் தலித் உள்ளிட்டவர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற எட்டுக்கும் அதிகமான பிரிவுகளில் படம் உள்ளது. சிவாஜி மற்றும் வி.டி. சவார்க்கர் போன்ற வலது இந்து வழிபாட்டாளர்களையும்கூட மீளாய்வு செய்திருக்கிறது. பரந்திருக்கும் காவி சித்திரத்தின் பின்னணியில் இருக்கும் தத்துவம் என்ன?

ஆனந்த் பட்வர்த்தன்:  பிரிட்டீஷ் காலனியாளர்களின் ‘பிரித்தாளும்’ கொள்கையை ஒட்டி இன்று உருவாகியுள்ள மத ரீதியிலான பிளவு குறித்த தடயங்களை தேடுகிறது ‘விவேக் அல்லது ரீசன்’. சுதந்திரத்துக்குப் பின், ஏகாதிபத்திய பிரிட்டீஷ்-க்கு பதிலாக மற்றொரு வல்லரசான அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்தது. அது ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் தாக்கத்தை எதிர்த்து அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் இசுலாமிய ஜிகாதிகளை உருவாக்கியது.

இதன் மேற்பரப்பை மட்டுமே விவரிக்கிற இந்தப் படம், இந்தியா மற்றும் பாகிஸ்தான், இந்துகள் மற்றும் முசுலீம்கள் உண்மையில் எங்கோ உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி நடக்கின்றன. இப்போது, இங்கே நடந்துகொண்டிருப்பவற்றுக்கு நாம் பொறுப்பல்ல என சொல்லவில்லை. எனவே, இந்தப் படத்தின் முதன்மையான கவனம், இந்தியாவில் பாசிசத்தின் எழுச்சியை சொல்வதும் பாசிசத்துடனான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் போர் குறித்ததுமாகும்.

படிக்க:
புனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

கேள்வி: நீங்கள் ஏராளமான கோபம் கொண்ட ஆண்களை இந்தப் படத்தில் நேர்கண்டிருக்கிறீர்கள். வர்ணனையாளர் அவர்களைபுயல் துருப்புகள்என்கிறார். அவர்கள் பார்ப்பனியத்தால் வேலையற்ற வர்க்கமாக காட்டப்பட்டவர்கள். புயல் துருப்பு என்போர் யார்? அவர்களின் லட்சியங்கள் நோக்கங்கள் என்ன?

ஆனந்த் பட்வர்த்தன்: படத்தில் சொல்லப்பட்டது இதுதான், “இன்று பார்ப்பனியம் தேசிய கொடியை போர்த்திக்கொண்டிருக்கிறது, புயல் துருப்புகள் அதனால் கைவிடப்பட்டவர்கள், வேலையில்லாமல் ஆக்கப்பட்டவர்கள்”.

ஆனந்த் பட்வர்தன்

இந்தப் படத்தின் தொடக்கத்தில் பகுத்தறிவாளர் தோழர் பன்சாரே, பார்ப்பனராக பிறந்தவருக்கும் பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் உள்ள வேறுபாட்டை சொல்லியிருப்பார். பார்ப்பனர் தன்னுடைய பிறப்பின் அடிப்படையிலிருந்து வெளிவரலாம். ஆனால், பார்ப்பனிய சித்தாந்தம் என்பது விசத்தன்மையுள்ள மேலாதிக்க நோய். பன்சாரே அதை தொற்றுநோய் என்கிறார்.

ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த ரோஹித் வெமுலாவின் தூண்டப்பட்ட தற்கொலைக்குப் பிறகு, ஒன்றிணைந்த தலித் மற்றும் இடதுசாரி இயக்க இளைஞர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர் நச்சுத்தனமான இந்துத்துவ துஷ்பிரயோகத்தை செய்கிறார். இந்த வலதுசாரி புயல்துருப்புகள் வலுக்கட்டாயமாக தேசியக் கொடியை போர்த்திக்கொள்கின்றன. இவர்களுடைய தாய் அமைப்பு 1947-ல் இதே கொடியை எதிர்த்து, காவி இந்து கொடிதான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றது.

அவர்களுடன் நடந்த விவாதத்தில், காந்தியை கொன்றவர்கள் குறித்த அவர்களுடைய உண்மையான அறிதல் என்பது அவர்கள் மழுங்கடிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. நம்முடைய கல்வி அமைப்பு வர்க்க உணர்வுடனே உள்ளது. அதே நேரத்தில் வேலை சாதியைச் சேர்ந்த பெருவாரியான இளைஞர்களை இயந்திரத்தனமாக உருவாக்கித் தள்ளுகிறது. இவர்களுடைய ஒரே லட்சியம் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதும் தனிப்பட்ட ஆடம்பர நுகர்வு வாழ்வை வாழ வேண்டும் என்பதுவுமே ஆகும். மற்றவர்கள் இழப்பின் மீதும்கூட இதை பெறவே அவர்கள் விரும்புகிறார்கள்.

சிறந்த உலகத்துக்கான காரணம், மனிதநேயம் மற்றும் சில கொள்கைகளுக்கு நம் கல்வி அமைப்பில் இடமில்லை. எந்த விலை கொடுத்தாவது வெற்றியை பெற வேண்டும். இளைஞர்கள் கனவென்பது, கல்வி வளாகங்களில் உறுதி செய்யப்படும் வேலை வாய்ப்பிலும் அலுவலங்களில் சேர்வது குறித்தும்தான். நம்முடைய முன்மாதிரி திருபாய் அம்பானிதான், கன்னையா குமாரோ, ஜிக்னேஷ் மேவானியோ அல்லது மேதா பட்கரோ அல்ல.  ஏனென்றால் சிந்தனை குறித்தோ விமர்சனம் குறித்தோ பரிவுணர்வு குறித்தோ எந்தவித உரையாடல் இங்கே இல்லை. இந்த அமைப்பு படித்தவர்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அவர்கள் அறிவற்ற, நோக்கமற்ற, வேலை வாய்ப்பு பெற முடியாத உள்ளே தங்களுடைய எதிர்காலம் குறித்து சோகத்தாலும் கோபத்தாலும் அலைகழிக்கப்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள்- அதாவது மிகச் சிறப்பான புயல் துருப்புகள்.

கேள்வி: இந்துத்துவம் குறித்த உங்களுடைய முதல் படம்ராமின் பெயரால் Ram Ke Naam‘. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக வெளியானது. அப்போதிலிருந்து இந்துத்துவ இயக்கம் எப்படி பரிணாமம் அடைந்திருக்கிறது?

ஆனந்த் பட்வர்த்தன்: இந்து அடிப்படைவாதம் வளர்ந்துவருவதையும் அது நிலைகெட்டு ஓடிக்கொண்டிருப்பதையும் அதை கட்டுப்படுத்தாவிட்டால் மதச்சார்ப்பற்ற கலாச்சாரத்தால் அதை எதிர்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதம் நடக்கும் என்பதை அரசுக்கும் இந்திய மக்களுக்கும் சொல்வதாக ராம் கி நாம் இருந்தது.

இந்த எச்சரிக்கையை கேட்பதற்கு பதிலாக, ‘மதச்சார்பற்ற’ அரசுகள் தூர்தர்ஷனில் அதை ஒளிபரப்ப விடாமல் தடுத்தனர். ஐந்தாண்டுகால சட்ட போராட்டத்துக்குப் பிறகு, முதன்மையான நேரத்தில் அதை அரசு ஊடகம் ஒளிப்பரப்பியது. நம்முடைய மதச்சார்பற்ற அரசு, ராம் கி நாம்-ஐ ஒளிபரப்புவதற்கு பதிலாக ராமாயண டிவி சீரியலை ஒளிபரப்பி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரப்படுத்தினார்கள்.

1990 -ல் தொடங்கப்பட்டது, பொருளாதார தாராளவாதத்துடன் தற்செயலாக இணைந்தது அல்ல. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கலவையான பொருளாதாரமாக இருந்த நேருவிய பொருளாதாரம், முற்றிலும் சந்தை பொருளாதாரமாக மாறியது, உண்மையில் இது இந்தியாவின் சதையினை கடிக்கத் தொடங்கியது. ஆம், சுதந்திரத்துக்கு பிறகான ஆரம்ப கட்டத்தைக் காட்டிலும் இன்றைய இந்தியா, சிறுபான்மையினர் மீது மிகுந்த வெறுப்பை உமிழ்கிறது. வெறுமனே பாலிவுட் படங்களைப் பாருங்கள், கடந்த பத்தாண்டுகளில் நடந்திருக்கும் மாற்றங்களை உணர்வீர்கள்.

கேள்வி: பன்சாரே, தபோல்கர் மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகளில் தீவிரவாத இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா தொடர்புபடுத்தப்பட்டது. பாஜக அந்த அமைப்புடன் தொடர்பில்லை என்கிறகிறது. அதுபோல சனாதன் சன்ஸ்தாவும் கொலையாளிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்கிறது. கொலையாளிகள் பிற இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் என அது சொல்கிறது. அவர்கள் அனைவருக்குமிடையேயான கருத்தியல் இணைப்பு தெளிவாக உள்ளது. அந்த சித்தாந்தத்தின் மூலமான ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பொறுப்பும் இல்லை.

ஆனந்த் பட்வர்த்தன்: பல சனாதானிகள் பிடிபட்டார்கள். ஆனால், இந்துத்துவ வழக்கறிஞர்களின் துணையோடு அவர்கள் வெளியே வந்தார்கள். 2002 முதல் 2008 வரை தொடர் குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இந்த உண்மை பொருந்தும். இந்துத்துவ தீவிரவாதிகளை சிறையில் வைத்திருக்க முகாந்திரம் இல்லை என அரசியல் வர்க்கம் நினைக்கிறது. உறுதியான ஆதாரங்கள், பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலங்கள் இருந்தபோதும்கூட, அவர்களுடைய ஆழ்மனதில், அதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இந்த குறுங்குழுக்களுக்கும் அவர்களுடைய தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் உள்ள கருத்தியல் தொடர்பு வெளிப்படையானது. உண்மை என்னவெனில், இந்த அமைப்புகள் ஒருபோதும் தடை செய்யப்படாது. என்ன நடந்தாலும் அவர்கள் ஆதரவை ருசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேள்வி: மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே குறித்து முக்கியமான பகுதி ஒன்று படத்தில் வருகிறதுநவம்பர் 26-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானது, அவரை கொல்லும் வகையில் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என இந்தப் பகுதி உறுதியாக சொல்கிறது. ஏனென்றால் அவர் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதலில் இந்துத்துவ அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வந்தார். ஆனால், இது ஆவணப்படம் குறித்த செய்திகளில் ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை. படத்தின் மிக முக்கியமான பகுதியே இதுதான். இது குறித்து விவரிக்க முடியுமா? இது ஏன் ஊடகங்களின் கவனம் பெறவில்லை?

ஆனந்த் பட்வர்த்தன்:  கார்கரே-வின் மரணம் என்பது ஒரு பொறியாக இருக்கலாம் என நீதிமன்ற விசாரணைகளிலிருந்து ஏராளமான ஆதாரங்கள் இந்த விசயத்தில் மலை போல் குவிந்துள்ளன. ஆனால் அவை மூடி மறைக்கப்பட்டன.  தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல நூல்கள் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளன.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.எம். முசரீஃப் (இவர் Who Killed Karkare? : The Real Face of Terrorism in India, 26/11: Why Judiciary Also Failed என இரு நூல்களை எழுதியிருக்கிறார்) எழுதிய நூலும் அடங்கும். இந்த ஆதாரங்களுக்கு என்னால் நீதி பெற்று தரமுடியாது எனினும் பார்வையாளர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். முரண்பட்ட, நம்பமுடியாத விசயங்கள் நம் நாட்டில் நடக்கின்றன. உள்ளூரில் வளர்க்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் வெளிநாட்டு சக்திகள் கைகோர்த்துக்கொண்டு, நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுகின்றன. அவர்களுக்கு இந்திய குடிமக்களின் நிலைமை குறித்தோ பாதுகாப்பு குறித்தோ யாதொரு அக்கறையும் இல்லை.

கேள்வி: உனாவில் நடந்த தாக்குதல் மற்றும் வெமுலாவில் மரணத்துக்கு பின் தலித் மக்கள் வெகுண்டெழுந்ததை இந்தப்படம் சொல்லியிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கிடையே இது மட்டுமே நம்பிக்கைக்குரிய கணமாக உள்ளது. ஆனால், தலித் எழுச்சி என்பது பெரும்பாலும் மதசார்பற்ற உயர்சாதி கருத்திலிருந்து வேறுபட்டதாகவே உள்ளது. ஆனால், இதை புறந்தள்ளும்விதமாக இந்தப் படத்தில் பகுத்தறிவுக்கு எதிரான நம்பிக்கையாக நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது?

ஆனந்த் பட்வர்த்தன்: சில நேரங்களில் மதசார்ப்பற்ற, உயர்சாதி கருத்தாடல்கள், தலித் கோபத்தை அபரிகரிக்கும்விதமாக முடிந்துவிடுகிறது என்ற புகார் உண்மையானது. ஆனால், வாய் அசைப்பிற்கும் இணக்கத்தை சொல்வதற்கு உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். சாதியை விமர்சிக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் ஒரே சாயத்தை பூசுவது, இணக்கம் என்ற கருத்தாக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

மனிதர்கள் இதைவிட அதிக திறன் உடையவர்கள் என்பதை அங்கீரிக்காமல் எல்லோரும் தங்களுடைய பிறப்பின் அடையாளத்துக்காக போராடுகிறவர்களாக இருக்கும்போது, சாதியை எப்படி ஒழிக்க முடியும்? அந்த விசயத்துக்காகத்தான் பகுத்தறிவாளர்களும் மனிதநேயர்களும் படத்தில் காட்டியதுபோல் துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்து மடிந்தார்கள்.

என்னுடைய பணியைப் பற்றி தவறான கருத்துள்ளவர்களை நான் பாராட்டுகிறேன். ஆமாம். நான் சாதிய சிறப்புரிமையில் ஆணாக பிறந்தவன். சாதி மற்றும் பாலின வன்முறை குறித்து கேள்வி எழுப்புவதை இது தடுக்கிறதா? இது ஒருவகையான அமில பரிசோதனை; இது யார் செய்த பணி என்பதைவிட, இது மக்களுக்கு பயனுள்ள பணி, இது மொத்த சமூகத்தைப் பற்றியது; சமூகத்துக்கானது.

படிக்க:
காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !
♦ மோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக !

கேள்வி: இந்தியாவில் தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு மாற்றாக இளம் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானியும் கன்னையா குமாரும் முன்வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்துக்கொண்ட குமாரானாலும் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றும் மேவானியாக இருந்தாலும்சரி, அவர்களுடைய ஆரம்பகட்ட அரசியல் நகர்வுகள், தற்போதுள்ள அதிகார கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அரசியலாக நீங்கள் சொல்வது என்ன?

ஆனந்த் பட்வர்த்தன்: கன்னையா சிபிஐ-யில் இருக்கிறார். மேவானி சுயேட்சை; காங்கிரசுடன் தற்காலிகமாக கூட்டு வைத்திருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சா சிங் போல பல இளைஞர்கள் படத்தில் உள்ளார். தற்போது இவர் சமாஜ்வாதி கட்சியில் உள்ளார். ஷெக்லா ரஷீத் காஷ்மீரில் புதிய கட்சியுடன் உள்ளார். வெமுலாவின் நண்பர்கள் அம்பேத்கர் மாணவர் சங்கத்துடன் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்கள். அவர்கள் தற்போதுள்ள கட்சிகளில் சேர்ந்தாலும், அவர்கள் நிச்சயம், என்னுடைய கருத்து இது, தங்களுடைய தனிப்பட்ட மதசார்பின்மை, ஜனநாயகம் என்ற பார்வையில் உண்மையாக இருப்பார்கள்.

கேள்வி: பத்திரிகையாளர் சந்திப்பின்போது சனாதன் சன்ஸ்தா செய்தி தொடர்பாளர் ஊடகங்களிடம், ஆனந்த் பட்வர்த்தனின் எலும்புகளை உடைக்க வேண்டும் என சொல்வதாக இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. கேமரா அப்படியே திரும்பி நீங்கள் அந்த அறையில் இருப்பதை, அவரை எதிர்கொள்ள இருப்பதைக் காட்டுகிறது. இதுபோல சில சம்பவங்கள் நீங்கள் படமாக்கும் நபர்களை எதிர்கொண்ட விதமாக உள்ளது. மறைந்திருக்கும் தருணத்தை வெளிப்படுத்தும்போது உண்டாகும் சிந்தனை செயல்முறையின் பின்னணி என்ன? நீங்கள் ஏதோ ஒரு புள்ளியில் தாக்கப்படக்கூடும் என கவலைப்பட்டிருக்கிறீர்களா?

ஆனந்த் பட்வர்த்தன்: நான் இந்த ஆபத்தை தனிப்பட்டதாக எடுத்துக்கொள்வதில்லை. நாம் எல்லோரும் ஆபத்தில் இருக்கிறோம். பாசிச எழுச்சியின் சாட்சிகளாக உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ ஆபத்தில் இருக்கிறோம். உரக்க பேசுவதால் உங்களுக்கு உடல் அளவில் ஆபத்தை உண்டாக்கலாம் அல்லது  உண்டாக்காமலும் இருக்கலாம். ஆனால் உரக்க பேசாமல் இருப்பது உங்கள் ஆன்மாவை நிச்சயம் கொன்றுவிடும்.

கேள்வி: நான்கு மணி நேர ஆவணப்படம் என்பதால் பார்ப்பது கடினமாக உள்ளது. நீங்கள் காரணத்தின்’  பக்கம் நின்றால் அது உங்களை பாதிக்கும். ஒருவர்நம்பிக்கையின் பக்கம் நின்றால் அது உங்களை புண்படுத்தக்கூடும். இந்தப் படம் எத்தகைய பார்வையாளர்களுக்கானது? வலதை எதிர்கொள்ளும் வகையில் சராசரி இந்தியரிடம் சேர்க்கும் விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா; அல்லது எதிர்கால சந்ததியினருக்கான வெறுமனே ஒரு வரலாற்று ஆவணமாக இது இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

ஆனந்த் பட்வர்த்தன்: மனிதநேயம் குறைவாக உள்ளவர்களைகூட இது, அசைக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் சிறப்பான படம் என்பதால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்து உண்மையானவை; துயரமானவை.  நாம் விழித்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் இந்த துயரம் நிறுத்தப்படும். இதை இங்கேயே இப்போதே காணவேண்டும். அல்லது எதிர்கால சந்ததியே இல்லாமல் போகும் – வெறுமனே கரப்பான் பூச்சிகள்தான் அணுகதிர் வீச்சில் உயிர்வாழக்கூடும். நான் தீவிரமாகத்தான் கேட்கிறேன்… நாம் அணு போரை தவிர்த்தாலும்கூட அமித் ஷா, நரேந்திர மோடி, அஜித் தோவல், மசூர் அசாத் மற்றும் ஹபீஸ் சயது போன்றோர் சர்வாதிகாரம் செலுத்தும் உலகம் வாழத் தகுதியானதுதானா?


நேர்காணல் : விஷ்வக்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : கேரவன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க