குஜராத்தின் ‘வளர்ச்சி’ மாடலை முன்வைத்து கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக அறிவுஜீவிகள் சிலர் மோடிக்கு வாக்கு சேகரித்தார்கள். மோடி ஆட்சியை அனுபவித்த இரண்டே ஆண்டுகளில் வாக்கு கேட்டதற்காக மன்னிப்பும் கேட்டார்கள். மூன்று முறை மோடியை முதல்வராக்கிய குஜராத் மக்கள், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வுக்கு இழுபறியான வெற்றியை மட்டுமே தந்தனர்.

வரலாறு காணாத வறட்சியால் துவண்டிருக்கும் குஜராத் மக்கள், பட்டேல் சிலைக்காக ரூ.3000 கோடி செலவழித்தது, புல்லட் ரயில் திட்டத்துக்காக வளமான விவசாய நிலங்களை பறித்தது, குஜராத் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் என குஜராத் மக்கள் பலவகையிலும் பாஜகவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும் என ஊடகங்கள் வெளிப்படையாக எழுத ஆரம்பித்துள்ளன.

இந்தப் பதற்றத்தை மறைக்கும் வகையில் பாஜக விளம்பரங்களுக்கு பணத்தை வாரி இறைத்திருக்கிறது.  குஜராத்தில் மூளை முடுக்கெல்லாம் பாஜகவின் பேனர்கள் ஆக்கிரமித்துள்ளதோடு, ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் இணையத்திலும் குஜராத் பாஜக-வின் விளம்பரங்களே ஆக்கிரமித்துள்ளதை குஜராத் தேர்தல் ஆணையம் அளித்த தகவலே கூறுகிறது.

ஏப்ரல் 22-ம் தேதி வரை, தொலைக்காட்சி, ரேடியோ, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களில் வெளியான அரசியல் விளம்பரங்களில் 88% பாஜகவினுடையது என்ற விவரத்தை தெரிவித்திருக்கிறார் குஜராத் தேர்தல் அதிகாரி.

தேர்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் கமிட்டியின் ஒப்புதலுக்குப் பிறகே அனைத்து அரசியல் விளம்பரங்களும் வெளியாகும். ஏப்ரல் 22-ம் தேதி முடிய, தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதலுக்கு வந்த 200 விளம்பரங்களில், 173 பாஜகவுடையது. காங்கிரசின் விளம்பரங்கள் 27 மட்டுமே.

இதில், 112 பாஜக விளம்பரங்களுக்கும் 15 காங்கிரஸ் விளம்பரங்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது ஆணையம்.

படிக்க:
மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !
♦ மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?

“விளம்பரத்துக்குப் பெயர் போன கட்சி பாஜக. பாஜக-வின் ஒளிபரப்புத் துறை அமைச்சராக மோடி உள்ளார். பிரதமர் அதிகாரப்பூர்வமாகவே பல கோடிகளை விளம்பரத்துக்காக செலவழிக்கிறார்” என்கிறார் குஜராத் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் ஜோஷி.  “உண்மையில், மோடி அரசு ஐந்தாண்டு காலமும் உழைத்திருந்தால், விளம்பரத்துக்கு இத்தனை கோடிகளை செலவழிக்க வேண்டிய தேவை இல்லை” என அவர் விமர்சிக்கிறார்.

‘மீண்டும் மோடி அரசு’ என்னும் முழக்கத்துடன் மோடியின் படத்தை மட்டுமே தாங்கிய போஸ்டர்கள் குஜராத்தின் பல நகரங்களை ஆக்கிரமித்துள்ளன. விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் அரசுக்கு எதிரான விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் சினத்தைக் குறைக்கும் விதமாக பாஜக இத்தகைய திட்டமிடலை செய்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.

2014 மக்களவை தேர்தலில் குஜராத்தின் 26 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக. ஆனால், இம்முறை 20 இடங்களையாவது பிடிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறது.

குஜராத்தில் பாஜகவின் சரிவை சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளே வெளிப்படையாக தெரிவித்துவிட்ட நிலையில், மக்களவை தேர்தலிலும் நிச்சயம் அது எதிரொலிக்கும். ஆனால், குஜராத்தில் ஆழமாக ஊடுருவியிருக்கும் இந்துத்துவ சக்திகளை வேரறுக்கத் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே தீர்வு கிடையாது.


-கலைமதி
நன்றி : த பிரிண்ட் 

1 மறுமொழி

  1. அம்மா கலைமதி, எலக்ஷன் ரிஸல்ட் என்னம்மா ஆச்சு? நீங்க மக்கள் மனநிலையை துல்லியமாக கணித்த மாதிரி பாஜகவுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கலியா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க