வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து குஜராத் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி அரசு.

கடந்த டிசம்பர் 6 அன்று மோடி பிறந்த மண்ணாகிய குஜராத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்பாய் அம்பாலியா, யாக்கூப் குராஜி, ஜயேஷ் பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைத்து, குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதியை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டத்தில் டெல்லி சலோ போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்கத் திட்டமிட்டனர்.

கிட்டத்தட்ட அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது குஜராத் மாநில அரசு. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க குஜராத் விவசாயிகளும் விரும்புவதாகவும், மாநில அரசு அதனைத் தடுப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார் அம்பாலியா.

படிக்க :
♦ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

குஜராத் விவசாய சங்கத் தலைவர்களின் அழைப்புகள், வாட்சப் போன்றவற்றை போலீசு தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும், அவர்களை சந்திக்க வருபவர்களையும் கண்காணிப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் ஒரு பிரபல விவசாய சங்கத் தலைவர் தெரிவித்திருக்கிறார்,

கடந்த டிசம்பர் 11 அன்று டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை போலீசு கைது செய்து எவ்வித அடிப்படைக் குற்றச்சாட்டும் இல்லாமல், அன்று இரவு முழுக்க சிறையில் அடைத்து வைத்தது என்கிறார், மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான யாக்கப் குராஜி.

அவரை விடுவிக்கக் கோரி பிற விவசாயிகள் போராடத் துவங்கிய பின்னர், அவரது குடும்பத்தினரை அழைத்து கேள்விகளால் துளைத்துள்ளனர். பின்னர் மறுநாள் காலையில்தான் அவரை விடுவித்தது போலீசு.

கடந்த 15-ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் பெரிய மின் உற்பத்தி நிலையத் துவக்க விழாவில் பேசிய மோடி, இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களது பிரச்சினைகளை கவனிக்கும் என்றும் கூறி, தேசம் ஒரு வரலாற்று முன்னெடுப்பை எடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள், விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் அம்பாலியாவுடன் பேசியது கீழே சுருக்கித் தரப்பட்டுள்ளது.

முதலில், போலீசின் கண்ணில் சிக்காமல் எப்படித் தப்பினீர்கள் ?

டிசம்பர் 6 அன்று அகமதாபாத்தில் குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதி என்ற பெயரில் நடைபெற்ற எங்களது சந்திப்பை குஜராத் அரசு எப்படியோ கண்டுபிடித்து விட்டது. அந்த சந்திப்பில் “கிசான் சம்சாத்” நிகழ்ச்சியை டிசம்பர் 11 அன்று நடத்த வேண்டும் என அறிவித்திருந்தோம்.

அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னர், குஜராத் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அனுமதியளிக்கப்படவில்லை. எங்களது திட்டம் கிசான் சன்சத் நிகழ்ச்சியை நடத்திவிட்டு அங்கிருந்து 2000 விவசாயிகளும் தொழிலாளர்களும் பேரணியாக டெல்லி நோக்கிச் செல்வதுதான். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி மட்டும் பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் எங்களுக்கு அனுமதி தரவில்லை.

இவை அனைத்துக்கும் மேலாக, போலீசு, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யத் துவங்கியது.

இது தெரிந்தவுடன், நான் துவாரகாவில் இருக்கு எனது வீட்டிலிருந்து கிளம்பி, ஜுனாகர் பகுதிக்கு சென்றுவிட்டேன். எனது அலைபேசியை அணைத்து விட்டேன்., ஜுனாகர் பகுதிக்குச் சென்ற உடன் சிறிது நேரம் எனது போனை ஆன் செய்தேன். அதையும் உடனடியாகக் கண்டுபிடித்து தொடர்ச்சியாக என்ன அழைத்தது போலீசு. அங்கிருந்து செல்லக் கூடாது என்றும் என்னிடம் கூறியது.

ஆனால் நான் எனது தொலைபேசியை அணைத்துவிட்டேன். எனக்கு போலீசு எவ்வழியே என்னைப் பிடிக்க வருவார்கள் என்பது தெரியுமாதலால் அதற்கு எதிர்த் திசைஇல் பயணித்தேன். கட்ச்-க்கு சென்று அங்கிருந்து காந்திநகர் சென்றேன். போலீசு என்னைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்து நான் தப்பி வந்துவிட்டேன்.

குஜராத்திலிருந்து ’தப்பி’ வந்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்!

ஜுனாகரில் மாறுவேடம் அணிய முடிவெடுத்தேன். எனது முடியை மாற்றிக் கொண்டேன். பாரம்பரியமான வேட்டியையே நான் அணிவேன். ஆனால் இரண்டு ஜீன்ஸ் மற்றும் சட்டைகளை வாங்கி அவற்றை அணிந்து கொண்டேன். எனது காரை மற்றொருவருக்குக் கொடுத்துவிட்டு, நான் மற்றொரு காரை மாற்றிக் கொண்டேன். டிசம்பர் 12 அன்று உதய்பூரை அடைந்தேன்.

அதே போல, தஹ்யாபாய் கஜேரா மற்றொரு விவசாய சங்கத் தலைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். போலீசு அவரது வீட்டு முன்வாசலில் இருக்கையில், தனது மகனின் உதவியுடன் பின்வாசல் வழியாகத் தப்பிவிட்டார். அவரது மகன் அவரை அருகில் உள்ள பேருந்துநிலையத்தில் விரைவாக க் கொண்டு சென்று இறக்கிவிட்டுள்ளார். அங்கிருந்து உதய்பூருக்கு ரகசியமாக பேருந்து ஏறி வந்தார் தஹ்யாபாய்.

குஜராத்தில் 16 விவசாய சங்கத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசின் துரத்தலைத் தாண்டி வருவதற்கான பலம் அனைவரிடமும் இதேபோல கிடையாது. எங்களில் வெகு சிலரால் மட்டுமே இப்படிச் செய்ய முடிந்தது. எங்களைத் தவிர இதுவரை வெளியேற முடிந்தவர்கள் சுமார் 150 பேர் குஜராத்தை விட்டு வெளிவர முடிந்திருக்கிறது. எங்களில் சிலர் டெல்லி – ஜெய்ப்பூர் எல்லையில் இருக்கிறோம்; வேறு சிலர் சிங்கு எல்லையில் இருக்கிறார்கள்.

குஜராத விவசாயிகள் எப்போதிருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்?

குஜராத் விவசயிகள் முதல் நாளிலிருந்தே இந்த சட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து வருகின்றனர். அது வரைவாக இருக்கையிலும் அதனை நாங்கள் கண்டித்தோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் கண்டித்தோம். ஆனால் எங்களில் யாரும் எங்களது கண்டங்களை ஒன்றிணைந்து அறிவிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுப்பதற்கு முந்தைய நாளில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என குஜராத் வியாபாரிகளுக்கு அறிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து 144 தடையுத்தரவை பிறப்பித்தது குஜராத் அரசு. இவையனைத்தும் ஒரு அச்சமிக்க சூழலை உருவாக்குவதற்காகவே போடப்பட்டது.

குஜராத் அரசு ஏன் நீங்கள் டெல்லி போராட்டக் களத்திற்குச் செல்வதை விரும்பவில்லை

அவர்கள் கொண்டுள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்பதைக் கூறுகிறேன். அவர்கள் இயற்றிய புதிய சட்டங்களை அவர்கள் எந்த அளவிற்குப் புகழ்ந்து போற்றுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கிராமங்களில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களிடம் இச்சட்டங்களை ஏற்கச் செய்ய முயற்சிக்கிறார்கள். தற்போது இந்தச் சட்டங்கள் பாராட்டப்படுவது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர், பயிர் காப்பீட்டு திட்டத்தை அவர்கள் கொண்டுவந்த போதும் அச்சட்டத்தையும் புகழ்ந்து போற்றினார்கள்.

ஆனால் இன்று குஜராத்தில், அந்த மொத்த திட்டமும் மிகப்பெரிய தோல்வி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

காப்பீட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஊழல்மிக்கவை இந்தத் திட்டம் பிரதமந்திரியின் கனவுத்திட்டம் என்று வேறு அழைக்கப்பட்டது. பின்னர் ஏன் அது குஜராத்தில் நிறுத்திவைக்கப்பட்டது? நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.  

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

குஜராத்தில் இருந்து எத்தனை விவசாயிகள், டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கிறார்கள்?  

மேலும் சுமார் 200 பேர் தற்போது கிளம்பி டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களும் நான் ரகசியமாக கிளம்பியதைப் போல கிளம்புவார்கள். இப்போதைய நிலையில் குஜராத்தில் நீங்கள் டெல்லிக்குப் போகிறேன் என்று கூட சொல்ல முடியாது. குஜராத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தான் நீங்கள் இது குறித்திப் பேச முடியும். இதுதான் குஜராத் மாடல். எங்களது அனைத்து தொலைபேசிகளும், வாட்சப் உடையாடல்களும், எங்களது வாகனங்களும், அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.

இன்று (15-12-2020) பிரதம மந்திரி கட்ச் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்கிறாரே, அவர்களை சந்தித்து அவர்களது பயத்தைப் போக்குவதற்குச் சந்திக்கிறாரா ?    

கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, கட்ச் பகுதி வர்த்தகத்துக்குச் சுதந்திரமான இடமாக மாறியது. இச்சமயத்தில், பல சர்தார்கள் கட்ச் பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்தார்கள். கட்ச் பகுதியில் உள்ள சர்தார்கள் அனைவரும் வர்த்தகர்களே தவிர விவசாயிகள் அல்ல. கட்ச் பகுதியிம் மண் விவசாயம் செய்யும் அளவிற்கு வளமான மண் அல்ல.

பாஜகவின் நடைமுறைத் தந்திரம் எப்போதுமே, தங்களது மொழியைப் பேசும் நபர்களிடம் பேசுவதுதான். அவர்கள் சந்திக்கும் விவசாயிகள் அதைச் செயுவார்கள். அதற்காக பாஜகவில் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் விவசாயிகள் இல்லை என்ரு ஆகிவிடாது. பாஜகவிலும் அவர்களது கட்சியின் சித்தாந்தத்தை நம்பும் விவசாயிகள் இருக்கிறார்கள்.

கட்டுரையாளர் : பவன்ஜோத் கவுர்  

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : The Wire