ஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை இன்று (03-12-2020) மதியம் டிவிட்டரில் அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 31 அன்று கட்சி துவக்க நாளை அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி துவக்கம் என்றும் அறிவித்துள்ளார்.

அதன் பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் தற்போதைய அரசியல் பிரவேசம் குறித்து ஒரு சிறு விளக்கத்தையும் அளித்துள்ளார்.

தாம் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் இருந்தபோது, தமிழக மக்களின் பிரார்த்தனைதான் தம்மை உயிர்பிழைக்க வைத்ததாகவும் அதற்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக மக்களுக்கு மாற்று அளிக்க களத்தில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்களுக்காக தமது உயிரே போனாலும் தன்னை விட சந்தோஷப்படுவது யாரும்  இருக்க முடியாது என்றும் மக்களுக்கு மாற்று தேவை என்றும் அதைத் தாம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

படிக்க :
♦ ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்
♦ பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

மேலும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும் நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த 2020-ம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே, ஒருபுறத்தில் கொரோனா பரவலால், மோடி அரசால் போடப்பட்ட  திட்டமற்ற ஊரடங்கு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து மக்களைப் பசியிலும் பட்டினியிலும் தள்ளியது. மறுபக்கத்தில் மக்கள் விரோத சட்டங்கள் – குறிப்பாக விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், சுற்றுச் சூழலுக்கு எதிரான சூழலியல் மசோதா, தொழிலாளர் உரிமை பறிப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு மறுப்பு, ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுப்பு எனத் தொடர்ந்து மக்கள் மீதான தாக்குதலைத் தொடுத்தது மத்திய மோடி அரசு.

ரஜினி மோடி சந்திப்புஇதனை தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துப் போராடின. கொரோனா சூழலிலும் களத்தில் இறங்கி பல போராட்டங்களை நடத்தின. ஆனால் அப்போதெல்லாம் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடாமல், குறைந்தபட்சம் டிவிட்டரில் கூட குரல்கொடுக்காமல்  பண்ணை வீட்டிலும், “அண்ணாத்த” படப்பிடிப்பிலும் பிசியாக இருந்த ரஜினிகாந்த் அவர்கள், தற்போது மக்களுக்காக மாற்றை முன் வைக்க வருகிறாராம்.

ரஜினி ரசிகப் பெருமக்களும் ரஜினியின் “நல்ல மனிதர்” தோரணையை ரசிக்கும் நல்லவர்களும், வரும் தேர்தலில் ரஜினிக்காக தெரிந்தவர்களிடம் ஓட்டுக் கேட்பதற்கு முன்னர் சில விசயங்களை தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொண்டு பதில் தேடி முடிவெடுத்தால் சிறப்பாக இருக்கும்.

தூத்துக்குடி போராட்டம் துவங்கி, தற்போதைய விவசாயிகள் பிரச்சினை வரை அனைத்திற்கும் சாதாரண குடிமக்களாகிய நாம் மக்களின் பிரச்சினைகள் குறித்து பாதிக்கப்படும் மக்களின் சார்பில் நின்றும் பேசிவருகிறோம். ஆனால் இந்த அனைத்துப் பிரச்சினைகளிலும் மக்களை ஒடுக்கும் மத்திய பாஜக-வுக்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராகவே குரல் கொடுத்து வந்திருக்கிறார் ரஜினிகாந்த்.

தமிழகத்தை உலுக்கிய பல விசயங்களில் மவுனத்தையே பதிலாக அளித்திருக்கிறார். “அவர் ஒரு நடிகர் அவ்வளவுதான். அவரை கருத்துச் சொல்லவில்லை என்று குற்றம்சாட்டுவது தவறு” என்பது ரஜினி தரப்பின் வாதமாக வைக்கப்படுகிறது. நடிகர்கள் பலரும் கருத்துக்கூறிய விவகாரத்திலும் கூட ஒரு நடிகராக ரஜினிகாந்த் தமது கருத்தைக் கூறியதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், நாம் கேட்கும் கேள்விகள் எல்லாம், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று அரசியலில் ‘குதிக்கப்’ போவதாக ரஜினிகாந்த் அறிவித்ததற்குப்  பின் நடந்த சம்பவங்கள் குறித்துதான்.

படிக்க :
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்
♦கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அங்கு நலம் விசாரிக்கச் செல்வதை  முதல் அரசியல் நடவடிக்கையாக மேற்கொண்டார் ரஜினிகாந்த். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் மூக்கறுபட்ட கடுப்பில், சென்னை விமான நிலையத்தில் தீய சக்திகளும் விசக்கிருமிகளும் தான் அந்தப் போராட்டத்தை கலவரமாக்கியதாகவும், போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் பேசியது நினைவிருக்கலாம்.

களத்தில் இருந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தோ, அவர்களது உணர்வுகளைப் பற்றியோ துளியும் அக்கறையும் அறிவும் இல்லாத ஒரு மனிதரால், மக்களுக்காக ஏதேனும் குறைந்தபட்சமாகக் கூட சிந்திக்க முடியுமா?

தூத்துக்குடி விவகாரம் என்பது ஒரு உதாரணம்தான். சொந்த நாட்டு மக்களையே அகதிகள் போல நடத்தும் சி.ஏ.ஏ – என்.ஆர்.சி சட்டங்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்தார் ரஜினிகாந்த். இது போல இன்னும் பல.  தமிழகத்தில் பாஜக கொண்டு வரக் கூடிய அத்தனை மோசடித் திட்டங்களையும் வெளிப்படையாகவோ அல்லது மவுனித்து அமைதி காத்தோ ஆதரவு தெரிவித்திருக்கிறார், ரஜினிகாந்த்.

அவர் பாஜக- ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கையாள் என்பது பல தருணங்களில் வெளிப்பட்டிருந்தாலும், அவற்றை தங்களது தலைவனின் “வெள்ளந்தித்தனமான” நடவடிக்கைகளாகக் கடந்து செல்பவர்களாகவே இருக்கிறார்கள் அவரது அரசியலற்ற ரசிகர்கள்.

இன்று ரஜினிகாந்த் தமது கட்சிப் பணிகளுக்கு மேற்பார்வையாளர் பொறுப்பைக் கொடுத்திருக்கும் தமிழருவி மணியனின் கடந்த கால வரலாறு அனைத்தும் தமிழகத்தில் பாஜகவிற்கான “சுப்பிரமணியசாமி” வேலையால் நிறைந்திருக்கிறது.

ரஜினியின் முடியில் தொங்கிக் கொண்டு நுழையப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

ரஜினி இன்று அறிவித்த கட்சி ஒருங்கிணைப்பாளர், அர்ஜூன் மூர்த்தி, பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இன்று காலை வரை பணிபுரிந்தவர். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக காலையில் தொண்டர்களுக்கு அறிக்கை விட்டிருக்கிறார் பாஜக-வின் கரு. நாகராஜன்.  இதுவும் ரஜினிகாந்தின் “வெள்ளந்தித்தனமான” நடவடிக்கைதான் என்று கருதினால் ஜெயா ஆட்சி குறித்து ரஜினிகாந்தின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. “ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது.”

தமிழகத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல்கள் குறித்தும், உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் மோசடி நடவடிக்கைகள் குறித்தும் வாயே திறக்காமல் ஒரு அரசியல்வாதி  இருக்கமுடியுமா?

ரஜினியைப் பொருத்தவரையில் அரசியல் என்பது, முதல்வர் பதவியும் பணமும் அதிகாரமும்தான். மக்கள் பிரச்சினை குறித்து வாய்திறக்காமல், தேர்தலுக்கு 4 மாதங்கள் இருக்கையில் கட்சியை ஆரம்பித்திருப்பதே அதற்குச் சாட்சி.

அரசியல் – வாக்குரிமை என்பது நம் உரிமைகள், நம் நலன்கள், நம் வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு என்றுதானே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது ?

அப்படியெனில், மேற்சொன்ன உரிமைகளின் மீதான ஆட்சியாளர்களின் தாக்குதல்களின் போது மவுனித்து இருந்தவர், ஆட்சியில் அமர்ந்து நம்மைக் காப்பார் என எண்ணி வாக்கு எந்திரத்தில் கைவைப்பது பாம்புப் புற்றுக்குள் கையை விடுவதற்குச் சமானமானது. தற்சமயத்தில் ரஜினி அரசியலில் இறங்குவது பாஜகவுக்கு ஆதரவான வகையில் ஓட்டைப் பிரித்து தமிழகத்திற்குள் பாஜகவின் நுழைவை உறுதி செய்வதற்காகத்தான். இது ரஜினிக்கும் மிக நன்றாகவே தெரியும். ஆனால் ரஜினியின் பக்தர்களுக்கு ??

ஆகவே ரஜினி ரசிகர்களே, விழித்துக் கொள்ளுங்கள்! இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை

கர்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க